மனிதனைத் தேட மார்க்கம் என்ன? (1)

கறுத்த பகல்களில்
திசையறியத்
திணறும் என் கவிதை!

விடுமுறை
போட்டுள்ள விளக்குகளின்
விலாசமும் தெரியவில்லை.
மதம் மாறிய
பகல்களுக்கு இரகசியத்
தூதுகள்
இரவுகளிடமிருந்து.

இறைவனைத்
தேட மதங்கள் மார்க்கங்கள் என்றால்
மனிதனைத்
தேட என்ன மார்க்கம்?
தனது
சாயலில் மனிதனைப் படைத்தவன்
முகம் வெளிறிப் போனது.

ஓ!
விலங்கின் சாயலில் மனிதன்!

கர்ப்பூர நெடியில்
மூர்ச்சித்து விழுந்தான் கடவுள்…
மசூதி
மினாரட்டுகளிலிருந்து
புறாக்களை விரட்டிவிட்டுப் புறப்பட்ட
வாங்கொலியால்
அதிர்கிறது அல்லாவின் மார்புக்கூடு!

தொழுகைகள்,
தோத்திரங்கள், அர்ச்சனைகள்
கந்தகக் கிடங்குகளில்
கைகளை நீட்டுகின்றன…
இரத்தம் படிந்த வரங்களை
இவற்றுக்கு எந்த இறைவன் தந்தான்?

மனிதனை
மனிதனிடமிருந்து மறைக்க
எந்த மதம் திரை நெய்து கொடுத்தது?

குருதியில் – தனக்குத்
திலகம் இடச் சொல்லி
எந்தச் சமயக் கடவுள் சட்டம்
செய்தான்?

அன்று
ஆபேல் உடம்பிலிருந்து
பீறிட்ட இரத்தத்தால் கறைபட்டது
காயீன் சட்டை மட்டுமல்ல…
படைத்த தேவனின்
பளிங்கு மேனியும்தான்!

கறை,
மேலும் கறைபட்டேவருகிறது
கழுவப்பட்ட பாடாய்த் தெரியவில்லை!
கதவை இப்போது
கடவுள் வந்து தட்டுகிறான்…
திறக்க மறுக்கும் மனிதன்
சாத்தப்பட்ட அறைக்குள் சாத்தானோடு
விருந்துண்டு கொண்டிருக்கிறான்!
தட்டு நிரம்பத்
தடுக்கப்பட்ட கனிகள்!

இடமில்லை கோயிலில்,
இடமில்லை மனித
இதயத்தில் –
இறைவன், நடுத்தெருவில்!

சமயம் என்பதே
சமரசத்தின் மொழிதான்…
அது
கழுகின் அலகுகளில், இப்போது
உச்சரிப்பாகிறது.
நரிகளின்
கடைவாய் ஓரம் சிவந்து வழிகிறது.

இல்லை என்று தன்னை மறுத்தவர்கள்
சொன்னபடி – தான்
இல்லாமல் போயிருக்கலாமே என்று
எண்ணுகிறான் இறைவன்!

"உள்ளது ஒன்றே
உண்ர்ந்தவர் உரைப்பது பலவாறாய்"
"ஏகம் சத் விப்ரா பஹூதாவதந்தி"
சுலோகம்
கடப்பாறைகள் செய்த கரசேவையில்
உடைந்து நொறுங்கியது.

இராமன்,
இராவணர்களோடு கூட்டுச் சேர்ந்து
கொண்டான்
சரயூ வெள்ளத்தில்
தருமத்தின் பிணங்கள்.

தாயங்களில் – சகுனி
வெற்றிச் சரிதத்தின் அத்தியாயங்கள்
வளர்க்க வளர்க்க…
மாயக் கண்ணன்,
கட்சி மாறுகிறான்.

குருக்ஷேத்திரத்தில் – இன்று
கோடி அம்புகள் பாய்ந்து
கிழிபட்டுக் கிடக்கிறது கீதை!

சூது,
சூல் கொண்டது…
அரசியல் மேடை நிரம்பத்
துரியோதனர்கள்!

பூசாரிகளும் – அரசியல்
பொறுக்கிகளும்
கடவுளரை அப்புறப்படுத்திவிட்டுக்
கைப்பற்றிவிட்டனர் கோயில்களை!

About The Author