பித்ருக்கள்! (2)

"ஏன் அடுக்கு மாடி இல்லேன்னா புறா கத்தவே கத்தாதா!?"

அவர் விளக்கினார். "அடுக்கு மாடி இல்லேன்னாலும் புறா கத்தத்தான் செய்யும். ஆனா அடுக்கு மாடியா, நெருக்கமா ஃப்ளாட்ஸ் இருக்கறதுனால புறாவெல்லாம் மாத்தி மாத்தி ஒவ்வொரு ஃப்ளாட் ஜன்னலாப் பறந்து பறந்து விளையாடும். அதுக விளையாடறபோது போடற சப்தம்தான் நமக்கு இப்படிக் கொஞ்சம் அவலமாக் கேக்கறது."

எனக்கு அப்படியும் மனசு சமாதானமாகவில்லை. அடுத்த வாரம், இந்திரா நகரில் தமிழ்ச் சங்கக் கூட்டம் நடந்தபொழுது எல்லோரிடமும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். அது புறாவின் சப்தம்தான் என்றவுடன் எனக்குப் பயம் போய் விட்டது. மனது சட்டென்று மாறி விட்டது. எப்படி என்றே தெரியவில்லை, அந்தச் சப்தத்தைக் கேட்டு பயந்து கொண்டிருந்தவளுக்கு அன்றிலிருந்து அந்தச் சப்தம் கேட்காதா என்று ஆகி விட்டது. சீக்கிரம் வேலையை முடித்து விட்டு அந்தச் சப்தம் கேட்குமா என்று ஆவலாக ஜன்னல் அருகே உட்கார ஆரம்பித்தேன். என்ன பைத்தியக்காரத்தனம் இது? அப்படிச் சப்தம் கேட்கும்பொழுது, அந்தப் புறாவை அல்லது புறாக்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வேறு கூடி விட்டது. புறாக்கள் பறப்பதுவும் ஜன்னலின் மேல் சன் ஷேடில் உட்கார்வதுவும் தெரியுமே தவிர, அப்படிச் சப்தம் போடும் புறா எது என்று குறிப்பாகத் தெரியவே தெரியாது.

நாள் முழுவதும் தனியாகவே இருக்க வேண்டிய எனக்கு இது ஒரு பொழுது போக்காகவே ஆகிப் போனது. அந்தப் புறாவின் சப்தத்திற்கு நான் விதவிதமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு, அதை உற்று உற்றுக் கேட்க ஆரம்பித்தேன். ஓரோர் சமயம், அந்தச் சப்தம் ஒரு சோக கீதமாக எனக்கு ஒலித்தது. ஏன் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. அதைச் சோக கீதமாகக் கற்பனை செய்து கொள்வது எனக்குப் பிடித்திருந்தது. எதையோ அழுகையும் கதறலுமாக என்னிடம் சொல்ல வருகிறது புறா என்று நினைத்துக் கொள்வது எனக்கு மிகவும் செளகரியமாக இருந்தது. எதைச் சொல்ல வருகிறது அந்தப் புறா? என்னைப் பார்த்துவிட்டுதான் இப்படிக் கூவுகிறதோ?! எனக்கே எனக்கு என்று எதையோ பிரத்தியேகமாகச் சொல்ல நினைக்கிறதோ… எனக்குத்தான் புரியவில்லையோ என்று ஆயிரம் சிந்தனைகள்! நாள் செல்லச் செல்ல, அந்தப் புறா சப்தமே எனக்காக மட்டும்தான் கேட்கிறது என்று என் மனதிற்குள் நினைக்க ஆரம்பித்து விட்டேன். என்னவென்று தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் அந்தப் புறாவின் சோக கீதத்தைக் கேட்கும்போது எனக்குச் சட்டென்று பெரியக்காவின் நினைவு வேறு வந்து விடுகிறது!

கல்யாணம் ஆகி மறுநாளே, யாருமில்லாமல் புருஷனை மட்டுமே நம்பி ஹைதராபாத் சென்றவள் அக்கா. அவளது பிரிவைத் தாங்க முடியாமல் எங்கள் வீடு அடக்க மாட்டாத சோகத்தில் மூழ்கியது. அப்பாவும் அம்மாவும் படுத்த படுக்கையானார்கள். இரண்டு நாட்களுக்கு வீட்டில் சமையலே இல்லை. ஐந்தாவது நாளில், அக்காவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பார்த்தவுடன்தான் எங்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அப்படி ஒன்றும் அந்தக் கடிதத்தில் இல்லவும் இல்லை; இரண்டே வரிதான். ஆனால், அக்கா எழுதியிருக்கிறாள் என்பதே மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அத்திம்பேர் ஒரு மாதிரி. ஒரு மாதிரி என்றால், ஊரறிய உலகறியப் பெண்டாட்டியைக் கொடுமைப்படுத்துபவர் இல்லைதான். ஆனால், எல்லாமே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல அமைதியாக நடக்குமாம். முதல் பிரசவத்துக்கு வந்தபொழுது அக்கா சொல்லிக் கேட்டதுதான். தன்னுடைய அண்ணன் தம்பிகள் மேல் அதீதப் பாசம் கொண்டவராம் அத்திம்பேர். வாரம் ஒரு முறையாவது படையாக வந்து இறங்கி விடுவார்களாம். காபி மட்டுமே ஒவ்வொருவனுக்கும் ஒரு நாளைக்கு ஒரு குடம் வேண்டுமாம். மற்றதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரு வேளை சாப்பிட்ட சாப்பாட்டை மறுபடியும் சாப்பிடவே மாட்டார்களாம். ஒவ்வொரு வேளையும் புதிது புதிதாகச் சமைத்தே ஆக வேண்டுமாம். அதுவும், இரண்டு கறிகளும் ஒரு கூட்டும் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமாம். அக்கா, சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் சளைத்தவள் இல்லைதான் என்றாலும் தான் ஒரு வேலைக்காரி மட்டுமே என்றிருந்தால் எவளுக்குத்தான் சலிப்பு வராது?

நினைக்க நினைக்க என் மனசு கனத்தது. யாரிடம் சொல்லி அழுவது என்று தவித்திருப்பாள் அக்கா என்று எனக்குப் புரிந்தது. இப்படி உத்திரப் பிரதேசத்தில் நான் வந்து தவிப்பதைப் போலத்தானே அவளும் அங்கு தவித்திருப்பாள் என்று எண்ணிப் பார்த்தேன். வெளியே “ஹும்… ஹும்…!” என்று மறுபடியும் புறா கறுவிக் கொண்டிருந்தது. சொல்ல மாட்டாத சோகத்தை இப்படித்தான் சொல்லியாக வேண்டுமோ!… தன் மனத்தில் இருக்கும் சோகத்தைத்தான் இந்தப் புறா இப்படி வெளிப்படுத்துகிறதோ ! இல்லை… இல்லை ஒருவேளை… பெரியக்காவேதான் இப்படி என்னிடத்தில் தன் சோகத்தைக் கொட்டுகிறாளோ! எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. உடம்பில் தானாக ஒரு நடுக்கமும் பயமும் ஏற்பட்டன. வீட்டில் யாருமில்லை. நான் மட்டும் தனியாக இருக்கிறேன். அக்காவேதான் இப்படிப் புறாவாக வந்து என்னிடத்தில் பேச முயற்சிக்கிறாளோ என்று மறுபடியும் மறுபடியும் என் மனது எண்ணித் தவித்தது. ஒரு விதத்தில் ஆசையும் பாசமுமாக இருந்தாலும் மற்றொரு விதத்தில் பயமாகக் கூட இருந்தது. சொந்த அக்கா என்றாலும் கூட இறந்து போனவள்தானே!

"ஏன், என்ன பயம்? அக்காதானே!" என்ற சமாதானத்தைத் திரும்பத் திரும்ப மனதில் சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அக்கா பேச வருகிறாள். வரவேற்று நாமும் ஏதாவது பேசியாக வேண்டும் என்று வலுக்கட்டாயமாக நினைத்துக் கொண்டேன். உயிருடன் இருக்கும்பொழுது சொல்ல மறந்து விட்டுப் போனவற்றை என்னிடத்தில் சொல்லத்தான் அக்கா இப்பொழுது இப்படி முயற்சிக்கிறாளோ? இருக்கலாம். அக்கா சொன்னது பாதிதான் இருக்கும். அந்த மனுஷனிடம் தான் பட்ட அவஸ்தைகளைக் கதை கதையாகச் சொல்லலாம் என்று என்னிடம் முன்பு சொல்லியிருக்கிறாள். வேளா வேளைக்கு வடித்துக் கொட்டுவது மட்டுமில்லாமல் அவை அனைத்தும் சரியாகவும் இருந்தேயாக வேண்டுமாம். கொஞ்சம் உப்பு ஜாஸ்தி, கம்மி என்றாலும் உடனே அடி உதைதானாம். அதுவும், அவர்களுடைய கூட்டம் வந்து விட்டால் அவ்வளவுதான்! வேண்டுமென்றே, உப்பு கம்மி என்று சாதிப்பார்களாம். அக்கா அடி வாங்குவதைப் பார்த்துச் சிரித்து ரசிப்பார்களாம்!

என்னுடைய சிந்தனைத் தொடரை, சட்டென்று பறந்து வந்து என் ஜன்னலுக்கு வெளியே உட்கார்ந்த ஒரு புறா கலைத்தது. நான் கொஞ்சம் பயத்துடனே அதைப் பார்த்தேன். மெத்தென்ற மயில் நீலத்தில் கழுத்து. உடலிலும் இறக்கைகளிலும் பழுப்பு. இரண்டு பாசி மணிகளைப் பதித்தது போலக் கண்கள். என்னைச் சந்தேகத்துடன், கழுத்தைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே மெல்லத் தத்தித் தத்தி நடை பயின்றது. சப்தமெழுப்பாமல் எழுந்து சென்று ஒரு கைப்பிடி அளவு அரிசி எடுத்து வந்தேன். அதற்குத் தெரியும் போல! எனக்காகக் காத்திருந்தது. மெல்ல, ஜாக்கிரதையாக அரிசி மணிகளை ஜன்னலுக்கு வெளியே இலேசாக விசிறி விட்டேன். முதலில், பயத்தில் இறக்கை விரித்து விர்ரென்று ஓரடி உயர்ந்த புறா, பிறகு தோழமையுடன் என்னைப் பார்த்துக் கொண்டே கீழிறங்கியது. அரிசி மணிகளைக் கொத்தத் தொடங்கியது. எனக்குள் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம்! நெஞ்சம் விம்மி விம்மித் தணிந்தது! உள்ளுக்குள் பொங்கிப் பொங்கி வந்தது. தெய்வமாகி விட்ட என்னுடைய அக்காவிற்கே நான் உணவு படைப்பதைப் போல உணர்ந்தேன். அரிசியை அந்தப் புறா கொத்தக் கொத்த என் கண்களில் நீர் நிறைந்து வழிய ஆரம்பித்தது.

(தொடரும்)

About The Author