“நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்" என்றாள் வீட்டிற்குள் காலடி வைக்கும்போதே.
சரவணன் புன்னகைத்தான். பாபுவின் கன்னத்தில் தட்டினான். சாக்லேட் பட்டையை சட்டைப் பையில் சொருகினான்.
“இது எதுக்கு? ஒவ்வொரு தடவை வரும் போதும்.." என்றாள் நர்மதா.
இந்த வாரம் ஆர்டர் வந்துரும். “முதல்ல டெம்பரரி மாதிரி. அப்புறம் மேலே பேசி பர்மணன்டே பண்ணிரலாம்.."
நர்மதா தலை கவிழ்ந்திருந்தாள். வாடிய ரோஜா , ஆனாலும் ரோஜா. ஹால் சுவரில் சேகரின் புகைப்படம் போன வருஷம் விபத்தில் காலமானவன்.
"என்னால உங்க எல்லாருக்கும் சிரமம்.." நர்மதா முனங்கினாள்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே. சேகருக்கு நான் எவ்வளவோ விதத்துல கடமைப் பட்டிருக்கேன்.."
"உங்களைப் பக்தி அடிக்கடி பேசுவாரு. எங்கியாவது வெளியே போகணும்னா உங்க வீட்டுக்குப் போகலாமான்னுதான் கேட்பாரு" நர்மதாவின் குரல் லேசாய் உடைந்து ஒருவித சோகம் பரவியது.
சேகரும் நர்மதாவும் மூன்று தடவைகள் சரவணன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். இந்த வருடங்களில், இந்த நிமிஷம் சேகரின் இழப்பு பெரிதாய் உறுத்தியது.
"வேற என்ன உதவி வேணும்னாலும் சொல்லுங்க. ஆபிஸ்லயும் பிரச்னை இல்லாத சீட்டா தரச் சொல்றேன்."
"அதெல்லாம் எதுக்கு. என்ன வேலை தந்தாலும் சரி. எங்க ரெண்டு பேருக்கும் இப்ப ஏதாவது ஒரு வகையில ஆதாரம் வேணும்.."
"அப்படி இல்லீங்க. அப்பாவியா நீங்க மாட்டினீங்கன்னு, அவனவன் வேலையைத் தலையில கட்டிட்டுப் போயிருவான். நீங்க வாங்க பார்த்துக்கலாம்" என்றான்.
பெண்ணே.. எதற்கும் கவலைப்படாதே. அலுவலக எல்லைக்குள் உனக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கும் ஜீவன்.. தன் பார்வையில் அதை உணர்த்த முயற்சித்து நின்றான் சரவணன்.
"வரட்டுமா.."
நர்மதா நன்றியுடன் தலையசைத்தாள்.
வேலைக்கு வந்துவிட்டாள். முதல் தினம். இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு கற்றை காகிதங்களைக் கொடுத்து தேதிவாரியாக அடுக்கச் சொன்னார்கள்.
பாதி அடுக்கும்போது சரவணன் வந்தான். எழுந்திருக்க முயன்றவளைத் தலையசைப்பால் தடுத்தான். "வேணாம். ஒக்காருங்க. என்ன வேலை பார்க்கறீங்க..?"
"இதை அடுக்கச் சொன்னாங்க.."
"அடப்பாவிகளா! மூட்டையா ரெகார்ட் ரூம்ல போடற விஷயம். யாரு சொன்னது. சங்கரனா?"
"பேரு தெரியல."
அடையாளம் விசாரிக்க சங்கரன் என்று புலப்பட்டது.
“உங்க வேலையை பார்த்துட்டு போங்க" என்றான் சங்கரன்.
"அநியாயம்.. குப்பையை அடுக்கச் சொல்ற வெட்டிவேலை.."
"சூபர்வைசர்கிட்டே சொல்லிரவா.. நீங்க கலாட்டா பண்றதா.."
சரவணன் வாயடைத்து திரும்பிப் போக சங்கரன் நர்மதாவிடம் வந்தான்.
"இங்கே பாருங்க. உங்களுக்கு என்கிட்டே வேலை பார்க்கப் பிடிக்கலைன்னா வேற எடம் கேட்டுப் போயிருங்க.."
"சேச்சே. அப்படியெல்லாம் இல்லீங்க.."
"பின்னே. கண்டவன் வந்து கத்திட்டுப் போனா நல்லாவா இருக்கு. எனக்கும் பதினஞ்சு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. என்ன வேலை, எப்படித் தரணும்னு.."
நர்மதா சங்கடமாய்ப் பார்த்தாள். ”நான் எதுவுமே சொல்லலீங்க..”
"உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். அவன் சரியில்லே. அவனை வெட்டி விட்டிருங்க. எல்லை மீறி உள்ளே வரான். அது நல்லால்லே.." என்றான் சங்கரன் கோபமாய்.
விஷயம் சூபர்வைசருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. சரவணனைக் கூப்பிட்டு விசாரித்தார். தன்னை மடக்கியதில் எரிச்சலாகி கேட்டிருக்கிறான்.
"ஸார். உங்களுக்கே தெரியும். நாம் இதுவரை அந்த பேப்பர்ஸைக் கட்டித்தான் வச்சிருக்கிறோம்.."
"ஆமா. அதுக்குக் காரணம் ஆள் பற்றாக்குறை. இப்ப அடிஷனலா ஆள் வந்தாச்சு. ரூல்ஸ்படி அதை தேதி வாரியாக வச்சிருக்கணும்.."
சரவணனின் வாதம் எடுபடாமல் போனதோடு, அவனால் தேவையற்ற கலாட்டா என்று நிர்ணயிக்கப்பட்டு அனுப்பப்பட்டான்.
நர்மதாவின் வீட்டிற்கு வந்தான்.
”வாங்க.."
"ரொம்ப அநியாயம்.. வேஸ்ட் பேப்பர்.. அதைப் போயி.."
"நானும் ஆபீசுக்கு.. புதுசுதானே. ஒரு பழக்கத்துக்கு முதல் நாள் இந்த வேலையைக் கொடுத்திருக்கலாம். அதை நான் தப்பா எடுத்துக்கலை.." என்றாள் மெல்ல.
சரவணன் நிமிர்ந்து பார்த்தான். தன்னிடம் இருந்த பதற்றத்தில் நூறில் ஒரு பங்கு கூட அவளிடம் இல்லை என்று புரிந்தது.
”வரேங்க.."
நர்மதா ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு வாரம் பத்து நாட்களில் நர்மதாவிடம் எல்லோரும் பழகிவிட்டார்கள்.
"மேடம்.. நீங்க சட்டுனு புரிஞ்சுக்கிறீங்க.."
"கையெழுத்து நல்லா இருக்கு.."
"வந்தா ஆபீஸ் வேலை உண்டு.. நீங்க உண்டுன்னு இருக்கீங்க.."
"ஃபைலைக் காணோம்னு தேடறேன். சட்டுனு இதுவான்னு எடுத்து நீட்டறீங்க. சர்வீஸ் போட்டவங்க மாதிரி.."
பாராட்டுதல்கள் சரவணன் காதிலும் விழுந்தன.
நர்மதா சக அலுவலரிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க நேரிட்டது. “நீங்க டவுன்லேர்ந்துதானே வறீங்க.."
“ஆமா.. ஏன் கேட்கறீங்க.."
"ஒரு மருந்து வேணும். டவுன்லதான் கிடைக்குமாம்."
"சீட்டைக் கொடுங்க. நாளைக்கு வரப்ப வாங்கிட்டு வரேன்.."
நர்மதா பணத்தையும் சீட்டையும் தர அவர் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
இன்னொரு அலுவலர் தமிழ்ப்பாடப் புத்தகம் வாங்கிக் கொண்டு வந்ததை அடுத்த நாள் சரவணன் பார்த்தான்.
தன்னைக் தவிர்க்க விரும்புகிறாளா? ஏன் எதையும் கேட்பதில்லை? இதற்கு ஒரு நியாயம் வைத்திருப்பாள்.
சரவணன் சோர்ந்து போயிருந்தான். மனைவி கொண்டு வந்த காப்பி கூட, அவன் கவனத்தை ஈர்க்கவில்லை.
"என்னங்க யோசனை.?. எதுவும் உடம்புக்கு முடியலியா..?”
"ப்ச்.."
"என்னதான் சொல்லுங்க?.."
"மனுஷனைக் காரியம் ஆகிறவரை எல்லாம் யூஸ் பண்ணிக்கிட்டு கருவேப்பிலை மாதிரி வீசிடறாங்க.."
"என்ன புலம்பல் பலமா இருக்கு.."
"நர்மதாவுக்கு எப்படி அலைஞ்சு வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்ப பாரு.. ஆபீஸ்ல என்னைத் தவிர மத்தவன் கூடத்தான் ரொம்ப இழையறா.."
சட்டென்று ஒரு முகமூடி கழன்று விழுந்தது. சுயம் பளிச்சிட்டது.
மனைவி அவனை உற்றுப் பார்தாள். பெருமூச்சு விட்டாள். காபி டம்ளரை எடுத்துக்கொண்டு நகரப் போனாள்.
"என்ன.. பேசாம போறே..?"
"நான் என்னங்க சொல்றது.. நீங்க படிச்சவங்க..தப்பு எங்கேன்னு குழந்தையா இருந்தா சொல்லித் தரலாம்.."
"அப்ப.. தப்பு எம்மேலயா?.."
"நான் எதுவுமே சொல்லலையே!"
எதுவுமே சொல்லப்படாத அந்த நிமிடம், நிறைய யாரோ பேசிய உணர்வு கிளர்ந்து எழுந்தது. மனைவியின் முகம் பார்க்க சரவணன் வெட்கப்பட்டான்.
னல்ல கதை.