ஏதன்சில், ஓர் உணவகத்தில் இப்படி ஒரு வாசகம், ‘இந்த உணவகத்தைப் பற்றிய குறைகளைச் சொல்லும் நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை’ என்று.
அப்படியானால், வாடிக்கையாளர்கள் ஏதாவது குற்றம் கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா என்ன? அப்படியில்லை, குறைகள் என்பவை மோசமானவை என்று சொல்ல முடியாது. குறைகள் தெரிந்தால்தான் அவற்றைச் சரிசெய்ய முடியும். சில நேரங்களில், நமது அதிருப்தியைத் தெரிவிப்பது நியாயமானதுதான். மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஐந்து விரல்களும் ஐந்து விதமாய் அமைந்திருப்பது போலத்தான் ஒவ்வொரு மனிதரும் வேறுபட்டிருப்பார்கள். பாதி நிரம்பிய கோப்பையைப் பார்த்து ‘பாதி காலியாக இருக்கிறது’ எனச் சொல்பவர்களும் உண்டு; ‘பாதி நிரம்பியிருக்கிறது’ எனச் சொல்பவர்களும் உண்டு. சிலர், சின்னக் குறைகளைப் ‘பரவாயில்லை, ஏன் இதைப் பற்றியெல்லாம் புகார் செய்ய வேண்டும்’ என நினைப்பார்கள். சிலபேர், உப்புப் பெறாத விஷயத்திற்குக் கூடக் கோபப்பட்டு மல்லுக்கு நிற்பார்கள்.
அது புராதனப் பொருட்கள் விற்கும் கடை. அந்தக் கடைக்குப் பெண் ஒருவர் வழக்கமாக வருவார். வரும்பொழுதெல்லாம், "விலை சரியில்லை, தரம் சரியில்லை, கடை இருக்கும் இடம் சரியில்லை" என எப்போதும் ஏதாவது குற்றம் கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டிருப்பார். ஒருதரம், அவர் அந்தக் கடை முதலாளியிடம், "ஏன் எப்போதும் நான் கேட்கும் பொருள் உங்கள் கடையில் கிடைக்க மாட்டேன் என்கிறது" என்று உச்ச ஸ்தாயியில் சத்தம் போட்டார். அதுவரை பொறுமை காத்திருந்த அவர் சொன்னார், "ஒருவேளை நாங்கள் இதுவரை உங்களிடம் பொறுமையாக, கோபப்படாமல் பணிவாக இருந்ததுதான் நீங்கள் தொடர்ந்து குறை காணக் காரணமோ என்னவோ தெரியவில்லை" என்று.
இப்படி, மனதைச் சின்னச் சின்னக் குறைகளாலும் கோபங்களாலும் அடைத்து வைத்திருந்தால் மகிழ்ச்சிக்கே இடமில்லாமல் போய்விடும். தேவையில்லாமல் நமது சக்தியையும் அதனால் இழக்கிறோம். எதையும் பார்த்து ‘நன்றாயிருக்கிறது’ எனப் பாராட்டத் தோன்றுவதில்லை. எந்த விஷயத்தையும் முழுதாக அறிந்து கொள்ளவும் தவறி விடுகிறோம். மனது இதனால் குப்பைத்தொட்டியாகி விடுகிறது.
நான், என் வாழ்க்கையில் நான் நன்றி சொல்ல வேண்டியவர்களைப் பற்றி என் மனதில் ஒரு நீண்ட பட்டியலே வைத்திருக்கிறேன். நான் சோர்ந்திருக்கும் நேரங்களில், என் வாழ்க்கையின் சுக துக்கங்களில் பங்கெடுத்தவர்களை நினைத்துப் பார்க்கிறேன். இந்த உலகத்தில் அழகாக இருப்பவற்றையும் சரியாக இருப்பவற்றையும் மட்டுமே காண விரும்புகிறேன். என்னுடைய இருதயத்தையும் மூளையையும் சந்தோஷமான, நல்ல விஷயங்களால் மட்டுமே நிரப்ப எண்ணுகிறேன். அப்போதுதான் என்னால் நிம்மதியுடன் தூங்கச் செல்ல முடியும்.
தொலைக்காட்சித் தயாரிப்பாளர் பார்பரா கார்டன் ஒருமுறை சொன்னார், "உலகம், பெரும் சத்தத்தோடு முடியப்போகிறதா அல்லது முனகல்களோடு முடியப் போகிறதா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நான் விரும்புவதெல்லாம், நான் முனகல்களோடு உயிர் விடக் கூடாது என்பதுதான்."
இதை விடச் சரியாக யாரும் சொல்லிவிட முடியாது!
(ஆதாரம்: ஸ்டீவ் கூடியர்)
நன்றி: ‘தேவி’ வார இதழ்.
வாழ்க்கையில் குறைகளை மட்டும் பார்க்காதீர்கள்! வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பாருங்கள்!
“