பேரனின் வேண்டுகோளுக்கிணங்க கேட்க பாட்டியின் கதை ஆரம்பமாகியது.
மருங்காபுரி என்ற ஊரில் வசித்து வந்த அருணகிரி செல்வந்தராக இருந்தாலும் செருக்கு இல்லாத பண்பாளர். அவருக்கு இருந்த பண்ணை வீட்டில் நிறைய பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களை வேலைக்காரராக நினைக்காமல் தன் உயர்வுக்கு உதவும் நண்பர்கள் போல் நடத்தி வந்தார். அவர்களுடைய சுகதுக்கங்களில் பங்கு கொள்வார். பணியாளர்களும் சம்பளத்திற்காக வேலை செய்யாமல் முழுமனதுடன் தங்கள் உழைப்பைக் கொடுத்தார்கள். அன்பும் பண்பும் கலந்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
அந்த ஊரில் வரதராஜன் வட்டிக்கடை நடத்தி வந்தான். வட்டி வாங்கியே பணக்காரன் ஆனதால் வட்டி வரதன் என்றே அவனை அழைப்பார்கள். ஏழைகளுக்கு ஏதாவது பணக்கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். அது அவனுக்கு வரப்பிரசாதமாக இருந்தது.
தேவைகளை சமாளிக்க நகைகளை அடகு வைப்பார்கள். பலரால் வட்டி கூட கட்டமுடியாமல் போய்விடும். வட்டிக்கு வட்டி போடுவதால் நகைளை திருப்ப முடியாத நிலை உண்டாகும். அவர்களுக்கு புரியாத கணக்கைப் போட்டு கொஞ்சம் பணம் கொடுத்து நகைகளை எடுத்துக் கொள்வான். நகை இல்லாதவர்களுக்கு அதிக வட்டியில் கடன் கிடைக்கும்.
ஊரையே வளைத்துப் போட்டவனுக்கு அருணகிரி பண்ணையில் இருப்பவர்களிடம் தன் கைவரிசையை காட்ட முடியவில்லை. அவர்களுக்கு ஏற்படும் தேவைகளை எஜமானரே பூர்த்தி செய்து விடுவதால் வட்டிக்கடைக்குப் போகவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.
அவர்களையும் தன் வலையில் சிக்கவைக்க வட்டி வரது ஆசைப் பட்டான். அது நிறைவேறாததால் ஏற்பட்ட எரிச்சல் மனதை அரிக்க ஆரம்பித்து விட்டது. பணியாளர்களை அருணகிரியிடமிருந்து பிரிக்க சதித்திட்டம் தீட்டினான்.
மாயாண்டி வட்டி வரதனின் கையாள். படிப்பறிவும் பட்டறிவும் இல்லாத மூடன். வசூல் செய்வதுடன் வட்டி கட்ட முடியாதவர்களை மிரட்டி நகைகளை விற்க வைத்து விடுவான். முறுக்கு மீசையும் முரட்டுப் பார்வையும் பார்க்கவே பயமாக இருக்கும். அவனுக்கு நிறைய பணம் கொடுத்து தன் திட்டத்தை சொல்லி பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் வரது.
தினமும் காலையில் பணியாளர்கள் பங்களாவில் கூடுவார்கள். குசலம் விசாரித்த பின் அன்று செய்ய வேண்டிய வேலைகளை அருணகிரி சொல்வார். அந்த சமயம் பார்த்து ஒருநாள் மாயாண்டி அவர் காலில் விழுந்து தன்னை காப்பாற்றச் சொல்லி அழுதான். அவனை எழச் சொல்லி விவரம் கேட்டார். வட்டி வரதன் தன்னை மோசம் செய்து விட்டதாகவும், பிழைப்புக்கு அவரை நாடி வந்திருப்பதாகவும், எந்த வேலை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னான். முகம் காட்டாமல் குனிந்து நின்றவனை தோட்ட வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.
பிறகு தன் அடுத்த கட்ட வேலையை மாயாண்டி ஆரம்பித்தான். தானும் வேலை செய்யாமல் மற்றவர்கள் செய்வதையும் கெடுத்தான். அவனைப் பற்றி புகார்கள் கூறியும் அருணகிரிகண்டு கொள்ளாமல் புதிய வேலையை பொறுமையாகக் கற்றுக் கொடுக்கச் சொன்னார்.
முதலாளியைப் பற்றி துர்போதனை செய்ய ஆரம்பித்தான் மாயாண்டி. ‘ஏழைகளின் உழைப்பில் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான அன்பு கிடையாது. சொல்வதைத் திருப்தியாகச் செய்யும் வரைதான் இருக்க முடியும். தவறு செய்து விட்டால் தண்டனை கொடுத்து வாழவிடாமல் செய்து விடுவார்கள்” என்று சொல்லி சக பணியாளர்களின் நல்ல மனங்களை கலைத்தான். வேலையாட்கள் புரிந்தும் புரியாமலும் அவன் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். முதலாளிக்கு கோபத்தை வரவழைத்து அவர் முகத்திரையை கிழித்துக் காட்டப் போவதாக சவால் விட்டான். அதற்கு வேண்டிய சமயமும் விரைவில் வந்தது.
மருங்காபுரியில் கல்லூரி கிடையாது. பட்டப்படிப்புக்கு வெளியூர்தான் செல்லவேண்டும். இடம் கிடைத்தால் கல்லூரி வர வாய்ப்பு இருந்ததால் அருணகிரி கொடுத்தார். அதைப் பார்வையிட அதிகாரிகள் வர இருந்தார்கள். அவர்களுக்கு விருந்து தர ஏற்பாடுகள் செய்தார். அந்த விருந்தில் தானே எஜமானரின் சுய ரூபத்தை காட்டப்போவதாக மாயாண்டி சொன்னதும் அவன்மேல் மற்றவர்களுக்கு பயமும் கோபமும் சேர்ந்து கொண்டன.
விருந்து தடபுடலாக நடந்து முடிந்த சமயம் அனைவருக்கும் ஃப்ரூட்சாலட் தர மாயாண்டியிடம் சொன்னார். அழகான வேலைப்பாடுகள் இருந்த கண்ணாடிக் கிண்ணங்களை வெள்ளித் தட்டில் மாயாண்டி கொண்டுவந்த மாயாண்டி, விருந்தினர்களுக்கு அவற்றை எடுத்துக் கொடுக்காமல் தடாலென்று மேஜையில் வைத்து தட்டுகளையும் மற்ற பொருள்களையும் நொடிப் பொழுதில் தட்டிவிட்டான். கிண்ணங்கள் எகிறிக் குதித்து விருந்தினர்கள் மேல் பட்டு தரையில் விழுந்து உடைந்து சிதறின. அழகான இடம் அருவருப்பாக போனது. யாரும் எதிர்பாராத நிகழ்ச்சியை மாயாண்டி கச்சிதமாக செய்து முடித்து விட்டான்.
வேலையாட்களுக்கு கைகால்கள் உதறின. மாயாண்டி மட்டும் காரியம் பலித்ததென்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு மௌனமாக இருந்தான். அருகில் இருந்து விருந்தினர்களை அன்பாக கவனித்துக் கொண்டிருந்த அருணகிரியின் கண்கள் அகல விரிந்தன. அவர் பார்வை விருந்தினர்களையும் மேஜையையும் சென்று விட்டு கடைசியில் மாயாண்டிமேல் பதிந்தது. முதன்முதலாக அவனும் கேலியாக அவரைப் பார்த்து நடக்கப் போகும் விபரீதத்துக்காக காத்திருந்தான்.
மாயாண்டியை பார்த்துக் கொண்டிருந்த கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. அடுத்த வினாடி ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.
‘மாயாண்டி கண்ணா, நீ இங்கு வந்து சேர்ந்த நாளில் இருந்து உன்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அசுர மனத்தை கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். அதனுடைய உச்ச கட்டம் இப்பொழுது முடிந்து விட்டது. உனக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. நீ விரும்பினால் என்னிடம் வேலை செய், விருப்பம் இல்லாவிட்டால் இரட்டிப்பு சம்பளத்துடன் விலகிக் கொள். பத்து நாள் விடுமுறை தருகிறேன். பணத்தோடு சென்று சிந்தனை செய்து வந்து உன் விருப்பத்தை சொல்லலாம்’.
கோபத்தைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்க இருந்த மாயாண்டிக்கு அருணகிரியின் அன்பான பேச்சு அவனுள் குமுறிக் கொண்டிருந்த அசுர மனத்தை பொசுங்க வைத்து விட்டது. அடுத்த வினாடி அவர் காலில் தடாலென விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஆதுரத்தோடு இருகைகளாலும் அவனை அவர் தூக்கியபோது அவன் குலுங்கிக் குலுங்கி அழுததைப் பார்த்தவர்கள் அசந்து போனார்கள். அன்று முதல் மாயாண்டி திருந்தி வட்டி வரதனை விட்டு விலகி அவரிடமே வேலை பார்த்து வரலானான்.
பாட்டியின் கதை முடிந்ததும் ஆனந்தமான தூக்கம் அவர்களை சுகமாய் தழுவிக் கொண்டது.