ஸ்வர்ண லோகம் (20)-சோடோ பிரிவை நிறுவிய டோஜென்!

புத்தமதத்தில் ஜென் பிரிவு ஒரு தனிப் பிரிவாக எட்டாம் நூற்றாண்டில், சீனாவில் ஆரம்பித்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானிலிருந்து புத்தக் குருமார்கள் சீனாவுக்கு எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டில் சென்று பல தத்துவங்களை ஜப்பானுக்குக் கொண்டு வந்து பரப்பினர். ஜப்பானில் ஜென் பிரிவில் இருவகை உண்டு.

ஒன்று ரின்ஜாய். இதை நிறுவியவர் மையோயன் யோசை (Myoan Eisai) (1141-1215). இன்னொன்று சோடோ. இதை நிறுவியவர் பிரபல ஜென் மாஸ்டர் டோஜென் கிஜன் (1200-1253). இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகளும், சம்பவங்களும் உண்டு. இவரது உரையாடல்களும், மேற்கோள்களும், தத்துவ உபதேசங்களும் முறையாகத் தொகுக்கப்பட்டு, பல பாகங்களாக வெளி வந்துள்ளன. ஆரம்பக் காலத்தில் இவரை உலகம் நன்கு தெரிந்து கொள்ளாவிடினும் இப்போது மேலை நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இவரைப் போற்றாதார் இல்லை.

நல்ல ஒரு பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்த டோஜென் சீக்கிரமே முஜோ (நிலையற்ற தன்மை) பற்றி உணர்ந்து கொண்டார். இளமையிலேயே பெற்றோரை இழந்த இவர் பல குருமார்களையும் அணுகினார்; புத்தத் துறவியாக விரும்பினார். பெரும் குருவாக விளங்கிய மையோயனிடம் சீடராக இருந்து ஜென் தத்துவங்களை அறியத் தொடங்கினார். 24ஆம் வயதில் மையோயனுடன் சேர்ந்து அபாயகரமான கடல் பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்கு 1223ஆம் ஆண்டில் சென்றார். அங்கு எல்லா மடாலயங்களிலும் சென்று உண்மையைத் தேடலானார்.

ரூஜிங் என்ற குருவிடம் சீடராகச் சேர்ந்து உடலையும் மனதையும் விடுதலை செய்யும் அற்புதக் கலையை வெற்றிகரமாகப் பயின்றார். ஒரு நாள் டோஜென் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, ரூஜிங் துறவிகளைச் சுற்றி வந்தார். டோஜெனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த துறவியோ உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்! தியானத்தின் குறிக்கோள் உடலையும் மனதையும் விட்டுவிடுவதே என்று ரூஜிங் கூறினார். அரைத் தூக்கத்தில் இருந்த துறவியைப் பார்த்த ரூஜிங், "இப்படி அரைத் தூக்கத்தில் இருந்து நீ என்ன சாதிக்கப்போவதாக உத்தேசம்?" என்று கேட்டார். உடலையும் மனதையும் விட்டு விடுவதுதான் தியானத்தின் குறிக்கோள் என்பதைக் கேட்டவுடன் டோஜெனுக்கு ஞானம் உதயமாயிற்று. பின்னர், தனது உபந்நியாசங்களில் அவர் ‘உடலையும் மனதையும் விட்டு விடுவது’ என்ற சொற்றொடரை அடிக்கடிச் சொல்ல ஆரம்பித்தார்.

டோஜெனின் உயர்நிலையை உணர்ந்து கொண்ட ரூஜிங் அவருக்குக் குருமார் அணியும் ஆடையைக் கொடுத்து அவரைத் தனது ‘தர்ம வாரிசு’ என்று அறிவித்தார்.

ரூஜிங் இதற்குப் பின் ஒரு வருடமே உயிர் வாழ்ந்தார். மையோயனும் சீனாவிலேயே நிர்வாணம் அடைந்தார். அவரது அஸ்தியைச் சுமந்து கொண்டு டோஜென் தனது 28ஆம் வயதில் ஜப்பானுக்குத் திரும்பினார்.

ஜப்பானுக்குத் திரும்பியவுடன் ஒருவர் அவரை நோக்கி, "சீனாவிலிருந்து நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். உடனே அவர், "ஒன்றுமில்லை" என்றார். பிறகு, தொடர்ந்தார்: "ஏதாவது சொல்ல வேண்டுமென்பது அவசியம்தான் என்றால், நான் கொண்டு வந்ததாகச் சொல்ல விரும்புவது நெகிழ்ந்த, மிருதுவான மனத்தைத்தான் (flexible and soft mind)" என்றார்.

இயல்பாகவே ஒவ்வொருவரது மனமும் உடலும் ஒரு சமச்சீரான நிலையிலேயே உள்ளது. அதைப் புரிந்து கொண்டு, அந்த நிலையை அடைவதுதான் அனைவரது குறிக்கோளாகவும் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்!

ஆழ்ந்த பரந்த அறிவு, உலக இயலுக்குத் தகுந்த நடைமுறை, விசாலமான பிரபுத்துவ மனம் ஆகிய மூன்றும் அவரிடம் நன்கு கலந்திருந்ததால் அவரை அனைவரும் போற்றினர்.

அவர் இயற்றிய நூல் ‘ஷோபொஜென்ஸோ’ (Shōbōgenzō) என அழைக்கப்படுகிறது. இதில் 95 அத்தியாயங்கள் உள்ளன. அவரது உயர்ந்த எண்ணங்களும் போதனைகளும் இதில் அடங்கியுள்ளன. அந்தக் காலக் கட்டத்தில் இப்படிப்பட்ட அரிய நூல்கள் சீன மொழியிலேயே இயற்றப்படுவது வழக்கம். ஆனால், டோஜென் இதை மாற்றி ஜப்பானிய மொழியிலேயே எழுதத் தொடங்கினார். ஆகவே, அனைவராலும் இதைப் படிக்க முடிந்தது. அவரது தர்க்கரீதியான வாதமும், ஆழ்ந்த நுண்ணிய அறிவும் ஜென் பற்றிய சரியான விளக்கத்தைத் தந்ததால் அது மிகவும் பிரசித்தி பெற்றது. அதை இன்று மேலை நாடுகளும் போற்றுவதில் வியப்பில்லை.
டோஜெனின் இறுதியான அருளுரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. அவர் தனது இறுதி நேரம் நெருங்கி விட்டது என்று தெரிந்து கொண்டவுடன் அளித்த உபதேச உரை இது! சாந்தியை விரும்பும் அனைவரும் எட்டு குணநலன்களைக் கொள்ள வேண்டும் என்று அவர் அருளுரை பகர்ந்தார்.

1) ஆசைகளை மட்டுப்படுத்துங்கள். எல்லாவற்றிற்கும் பின்னால் அலைவதை விட்டுவிட்டுத் தேவையான சிலவற்றை மட்டும் கொள்வதற்கு ஆசைப்படுங்கள்!

2) நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு திருப்தி அடையுங்கள். நம்முடன் இருப்பதுடன் ஒன்றுங்கள்; அதில் லயத்துடன் இருங்கள்!

3) உலகின் கிளர்ச்சியூட்டும் பரபரப்பூட்டும் சூழ்நிலையை ஒதுக்கி விட்டு ஏகாந்தமாகத் தனிமையில் இருங்கள்! (மனத்தளவில் ஏகாந்தமாக எந்தச் சூழ்நிலையில் இருப்பதையும் இது குறிக்கும்.)

4) ஒரு துளித் தண்ணீராக இருந்தாலும் கூட அது சீராக ஒரு பெரும்பாறையின் மீது விழும்போது அந்தக் கற்பாறை கூட ஓட்டையாகி உடைந்து விடும். ஆகவே, இடைவிடாத சீரான முயற்சியுடன் தியானம் போன்றவற்றை மேற்கொண்டால் நமது வாழ்க்கையே மாறி விடும். உயர் ஞானத்தைப் பெறுவோம்! ஆகவே, இந்த ஒழுங்குக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்!

5) சரியான எண்ணங்களை எண்ணுங்கள். அதாவது, நம்மை ஏமாற்றும் மாயையான எண்ணங்களைத் தவிர்த்துச் சரியான எண்ணங்களை எண்ணப் பழகுங்கள்.

6) ஜென்னை முறைப்படிப் பயின்று அதில் நிலையாக இருங்கள்! அதாவது, உண்மையில் வாழுங்கள்!. (ஜென் நிலையில் சமாதி நிலை வரை உயர்வதை இது குறிக்கும்.)

7) இந்தத் தியானத்தால் பெறப்படும் உயரிய ஞான நிலைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்!

8) எதையும் விவாதிக்காதீர்கள்! அதிகப்படியாக, அனாவசியமாகப் பேசுவதை நிறுத்துங்கள்! மௌனம் ஜென் பயிற்சி முறையில் மிக மிக முக்கியமானது! வெறும் வாய்ப்பேச்சை நிறுத்தும் மௌனத்தை மட்டுமல்ல, உள்ளேயும் மௌனத்தைக் கடைப்பிடியுங்கள்.

இந்த எட்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதால் ஒன்று அடுத்ததற்கு வழி வகுக்கும்.

சின்ன உண்மை

மாஸ்டர் டோஜெனின் சபதம் பிரசித்தி பெற்ற ஒன்று. அதன் முதல் செய்யுள்: இந்த ஜென்மத்திலிருந்து கணக்கற்ற ஜென்மங்களில் அனைத்து உயிரினங்களுடனும் உண்மை தர்மத்தைக் கேட்கச் சபதம் பூணுகிறோம். அதைக் கேட்பதால் ஒரு சந்தேகமும் எழாது, நம்பிக்கை தளராது. அதை எதிர்கொண்டு பரிபாலிப்பதால் நமது உலக விஷயங்களைத் துறக்கிறோம். மற்ற எல்லா உயிரினங்களுடனும் புத்த வழியை உணர்கிறோம்.

–மின்னும்…

About The Author