என்ன சொல்லப் போகிறாய்?

"நர்ஸ் சித்ராவுக்கு என்மேல ஒரு க்ரஷ் தான், என்ன சொல்றே?" என்ற சங்கரைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தாள் நித்யா.

"நாப்பத்தஞ்சு வயசாச்சுய்யா உனக்கு. இந்தக் கிரேஸ் மட்டும் உனக்குப் போகவே மாட்டேங்குது…"

அது ஒரு அமைதியான ஞாயிறு காலை. படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனமில்லாமல் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. சங்கரும் நித்யாவும் மருத்துவக் கல்லூரி கலை விழாக்களில் அடிக்கடி சந்தித்துக் காதல் வயப்பட்டு, கல்யாணம் செய்து கொண்டவர்கள்.

"சொல்லுடி சித்ராவுக்கு என் மேல ஃபீலிங்ஸ் இருக்கா இல்லியா?" என்றான் அவள் முகத்திலிருந்து முடியை ஒதுக்கிக் கொண்டே.

"பையன் காலேஜ் படிக்கிறான். நர்ஸை லவ் பண்ண வெக்கமாயில்லை உனக்கு?"என்றாள் நித்யா பொய்க் கோபத்துடன்.

"நான் லவ் பண்ணலைடி, லூசு. நம்ம மேல யாருக்காவது க்ரஷ் இருந்தா நமக்கு ஒரு ஜாலிதானே, என்ன சொல்றே?" என்றான் சங்கர்.

அவள் பதில் சொல்லாமல் இருக்க, "உனக்கு அப்படி இருந்ததில்ல?" என்றான் ஆர்வமாய். அவள் அதற்கும் பதில் சொல்லாமல் கண்ணை மூடிப் படுத்திருக்க, "ஏய்… நீ எதையோ என்கிட்டர்ந்து மறைக்கறே. சொல்லு" என்று அவளை உலுக்கினான்.

"ஆல்ரைட். காலேஜ்ல ஒரு மூணு நாலு பேருக்கு என் மேல க்ரஷ் இருக்கோன்னு தோணிருக்கு. ஆனா முக்கியமா அதில ஒருத்தன் மட்டும் நிஜம்மா என்னதான் நெனச்சான்னு தெரிஞ்சுக்கணும்னு க்யூரியாசிட்டி இருக்கு" அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து,"அடிப்பாவி, யார்டி அந்த வில்லன்?" என்றான் அவள் காதைத் திருகி.

"கிருபானந்த்னு…"

"ஹே… உங்க காலேஜ் கிரிக்கெட் காப்டன் தானே?"

"ஆமா… உனக்கெப்படித் தெரியும்?"

"ஒரு மேட்சில மோதிருக்கோம்.. ம்ம் மேல சொல்லு" என்றான்

"எப்பவும் என்னை வெறுப்பேத்திட்டே இருப்பான். அநியாயத்துக்கு என்னை மட்டம் தட்டுவான். ஆனா நான் அவன் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசினதில்லை. அவன் வம்புக்கே போனதில்லை. பட் என்னை ரொம்பப் படுத்திருக்கான்"

"ம்ம்.. இன்ட்ரெஸ்டிங். அப்புறம்?"
 
"ஒரு தடவை ட்ரிப் ஃபோட்டோஸ் பார்த்திட்டிருந்தோமா – யார்டாது மார்ச்சுவரி ஃபோட்டோவை இங்கே மிக்ஸ் பண்ணதுன்றான் என் ஃபோட்டோவைப் பார்த்து. பசங்க எல்லாம் பயங்கரமா சிரிச்சாங்க. எனக்கு ரொம்ப எம்பராஸிங்கா இருந்தது".

"என்கிட்ட இவ்வளவு வாய் பேசறே, அங்க வாய் மூடிட்டு இருந்தியாக்கும்?"

"என்ன பண்ணச் சொல்றே? சிகரெட் பிடிச்சு வேணும்னே மூஞ்சில ஊதுவான். ஹார்ஷா கமென்ட் அடிப்பான். ஓபனா என்னைப் பிடிக்கலைன்னு காலேஜுக்கு அனௌன்ஸ் பண்ணாததுதான் குறை. ஏன் அவனுக்கு என் மேல இவ்வளவு வெறுப்புன்னுதான் புரியவே இல்லை."

"பையன் சும்மா ஸ்டண்ட் அடிச்சிருக்கான். அப்பத்தான் நீ அவனை நோட்டிஸ் பண்ணுவேன்னு"

"ம். பாலாவும் அப்படித்தான் என்கிட்ட சொன்னான். ஆனா கடைசி வரைக்கும் அவன் என்னதான் நெனச்சான்னு யாருக்குமே தெரியலை" என்று ஒரு பெருமூச்சோடு நிறுத்தினாள்.

"மை காட், என்னடி அதுக்கு இவ்வளவு வருத்தப்படறே? அவன் ஏதாவது சொல்லிருந்தா என்னை விட்டுட்டு அவன் பின்னாலே போயிருப்பே போலிருக்கு"

"சீச்சீ. நான் இளிச்சவாயனால்ல தேடிட்டிருந்தேன்" என்றாள் நித்யா குறும்பாக.

இந்த உரையாடல் நடந்து மூன்று மாதமிருக்கும். மருத்துவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்தாள் நித்யா. மாநாட்டு இடைவேளையில், "நித்தி?" என்ற பரிச்சயமான அந்தக் குரலில் அனிச்சையாக அடிவயிற்றில் ஒரு பேரலை எழுந்து அடங்கியது.

அவள் உள்ளுணர்வு அவதானித்தபடியே அது கிருபானந்த் தான். "எங்கே இப்படி?" என்றான்.நித்யா ‘இதென்ன கேள்வி’ என்பது போல தோளைக் குலுக்கினாள்.

"கான்ஃபெரன்ஸ் அட்டெண்ட் பண்ற அளவுக்கு நீ கேரியர் கான்ஸியஸா இருப்பேன்னு நான் நினைக்கலை. அதான் கொஞ்சம் சர்ப்ரைஸ்" என்றான் அதே பழைய அலட்சியத்தோடு.

தேடிவந்து வெறுப்பேற்றுகிறான். கொஞ்சமும் மாறவில்லை இவன் என்று நினைத்துக் கொண்டாள் நித்யா.

"மெட்ராஸ்ல தானே இருக்கே?" என்றான்.

"யெஸ்" ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

"நான் இங்கேதான் இருக்கேன். சென்ட்ரல் ஹெல்த் மினிஸ்டர் ராஜசேகர் என் மாமனார் தான்"

"ஓ"

"வீட்டுக்கு வாயேன்"

"இல்லை, நாளைக்கு கான்ஃபெரன்ஸ் முடிஞ்ச உடனே ஃப்ளைட்"

"இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ரீயா தானே இருப்பே? ஐ’ல் பிக் யூ அப் அட் ஃபைவ்" அவள் பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டான்.

‘என்ன மனிதன் இவன்? இன்னும் அதே அடாவடி. வயசுக்கேற்ற பக்குவம் வராதோ?’

அவனைத் தவிர்க்க விரும்பி ஐந்து மணிக்கு 10 நிமிடம் முன்னதாகவே வெளியேறி டாக்ஸியை நோக்கி நடக்க, அதனை எதிர்பார்த்தது போலவே காரில் அவளுக்காகக் காத்திருந்தான் கிருபானந்த்.

"ஐ நோ யு காண்ட் வெயிட் டு மீட் மை ஃபேமிலி" குரலில் கேலி வழிந்தது.

அவன் வீட்டில் செல்வச் செழிப்பு ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் மிளிர்ந்தது. அவன் மனைவி பகட்டாய் உடுத்தி இருந்தாள். மகள் சிக்கன உடையில் சூயிங்கம் மென்று கொண்டே வேண்டா வெறுப்பாக ‘ஹலோ’ என்றாள்.

தாயும் மகளும் ஷாப்பிங் என்று கழன்று கொள்ள, ரூப்ஃ கார்டனில் கையில் காஃபியை வைத்துக் கொண்டு கிருபாவிடமிருந்து விடுபட ஆர்வமாக இருந்தாள் நித்யா.

ஒரு அசௌகர்யமான மௌனம் அங்கு நிலவியது. அதைக் கலைக்கும் விதத்தில் ஏதாவது பேச எண்ணி, "ரிச்சி எப்படி இருக்கான்? நீங்க ரெண்டு பேரும் ரொம்ப திக் ஃப்ரண்ட்ஸ் ஆச்சே?" என்றாள்.

"ஆமா, ஹாஸ்டல்ல கூட எங்களை ட்வின் ஃப்ரெண்ட்ஸ்னுதான் சொல்வாங்க. வீ வேர் ரியலி க்ளோஸ்" அவன் அவர்களின் நட்பை இறந்த காலத்தில் குறிப்பிட்டதைக் கவனித்து, "ஏன் என்னாச்சு, இப்ப நீங்க கான்டாக்ட்ல இல்லையா?"

"ப்ச்சு" என்றான் வருத்தமாய்.

"ஓ சாரி" என்றாள் நித்தி உண்மையான வருத்தத்துடன்.

"அதுக்குக் காரணம் நீதான்" என்றான் திடுதிப்பென.

"வ்வாட்?" நித்யா அதிர்ந்தாள்

"யெஸ்.. ஒரு 10 இயர்ஸ் இருக்கும். மெட்ராஸ்ல ஒரு மினி கெட் டுகெதர் இருந்தது. விவேக், பாலா, சரண், வசந்த் இன்னும் ஒரு பத்துப் பேர் இருக்கும். கேஷுவலா ஹோட்டல்ல மீட் பண்ணினோம். இட் வாஸ் ஃபன். ஜாலியா தான் அரட்டை போயிட்டிருந்தது. பேச்சுவாக்கில ரிச்சி, காலேஜ் படிக்கும் போது எனக்கு உன் மேல ஒரு கண்ணுன்னு கமென்ட் பண்ணினான். எனக்கு பயங்கர கோபம் வந்திருச்சி",என்று சொல்லி சற்றே நிறுத்தினான்.

நித்யா இதனை எதிர்பார்க்கவில்லை. எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் திணறி அவன் பார்வையைத் தவிர்த்தாள்.

"அவன் ஏன் அப்படி சொன்னான்னு எனக்குப் புரியவே இல்லை. நான் எவ்வளவோ சொல்லியும் அவன் எடுத்துக்கவே இல்லை. எனக்கு ஒத்துக்க தைரியம் இல்லைன்னு கேலி பண்ணிட்டே இருந்தான். நான் எப்படி உன்னைப் போய்… ஓ காட் நினைச்சே பார்க்க முடியலை. என்னை எல்லார் முன்னாலேயும் ரொம்பக் கேவலப்படுத்திட்டான்."

நித்யாவுக்கு ஒரு மனிதன் இவ்வளவு கடுமையாய் நடந்து கொள்ள முடியுமா என்ற வியப்போடு கோபமும் வருத்தமும் பொங்கியெழுந்தன. ஏதோ ‘உன்னையெல்லாம் எவனாவது ஏறெடுத்துப் பார்ப்பானா’ என்கிற ரீதியில் இது என்ன பேச்சு?

நித்யா உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாமல், "ரொம்ப ஸில்லியா இருக்கு. இதுக்காக உங்க க்ளோஸ் ஃபிரண்ட் கிட்ட பேசாம இருக்கிறது சைல்டிஷ்ஷா தெரியுது" என்று சற்றே அவனை பதிலுக்கு வெறுப்பேற்றினாள்.

"நோ நோ. திஸ் இஸ் நாட் ஸில்லி. அவன் அப்படி என்னை அவமானப்படுத்தினப்புறம் அந்த ஃப்ரண்ட்ஷிப் தொடர்றதில எனக்கு இஷ்டமில்லை".அதன்பின் அவன் பேசியது எதையும் காது கொடுக்காமல் வாழ்க்கையில் இனி இவனை சந்திக்கிற வாய்ப்பை மட்டும் தராதே என்று மனதிற்குள் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

ஹோட்டலில் அவன் டிராப் பண்ணிவிட்டுப் போன பின் அவளுக்கு இரும்புச் சங்கிலிகளிலிருந்து விடுபட்ட சுதந்திர உணர்வு வந்தது. ஆனாலும் மனசின் ஆழத்தில் ஏதோ ஒரு வலி. வலுக்கட்டாயமாய்த் தேடி வந்து சிறுமைப்படுத்துமளவுக்குத் தான் அவனுக்கு என்ன துரோகம் செய்துவிட்டோம் என்று மட்டும் அவளுக்குப் புரியவே இல்லை.

மறுநாள் மாலை சென்னை வந்து சேர்ந்த பின்னும் மனம் பழைய நிலைக்குத் திரும்பாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. சங்கர் அவளைப் பார்த்த மாத்திரமே, "என்ன?" என்றான். அந்தக் கேள்வியின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தே இருந்தாலும், "என்ன?" என்று திரும்பக் கேட்டாள்.

"சொல்லு.. முகத்திலேயே எழுதி ஒட்டிருக்கே. என்ன பிரச்சனை?"

"கிருபானந்தைப் பார்த்தேன்"

சங்கர் ஹோவெனச் சிரித்தான். "ஓ.. உன் பழைய காதலன்?" என்று கேலி பேசியவனை "கொன்னுருவேன் ராஸ்கல்" என்று விலாவில் கிள்ளினாள்.

நித்யா கிருபாவுடனான தனது அனுபவத்தை ஆழமாக விவரித்துவிட்டு, "அவனுக்கு என்னைப் பிடிக்கவே இல்லைங்கறதில எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை, ஷங்கீ. ஆனா திரும்பத் திரும்ப ஏதோ என்னை லவ் பண்ணினா கேவலம்ங்கற மாதிரி அவன் பேசினதுதான் என்னவோ போலிருக்கு"

நிதானமாய் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "உனக்கு புத்தி கொஞ்சம் மந்தம்தான், இல்லை?" என்றான் சங்கர்.

அவள் திரும்பி அவனை முறைக்க, "கிருபா பற்றி யாருக்கு நல்லாத் தெரியும்? உனக்கா? ரிச்சிக்கா?"

"ரிச்சிக்குத் தான்"

"ஸோ… " என்று அவன் நிறுத்த.

"ஸோ?" என்றாள் அவள் விழித்து.

"இவ்வளவு மக்கா நீ? அவனுக்கு இன்னும் உன்னை விட்டு வெளில வரமுடியலைடி. அந்தக் காம்ப்ளக்ஸ்ல தான் உன்னைத் துரத்தித் துரத்தி உன்னை எனக்குப் பிடிக்கவே இல்லைன்னு சொல்றான்" என்று விளக்கினான் சங்கர்.

"ம்ம்ம்… " என்றவாறே சில நொடிகள் யோசித்துவிட்டு"ஆமா, நீ சொல்றது சரியாதான் படுது. ஓ யெஸ்" என்றாள் நித்யா வெகு திருப்தியாய் அழகான புன்னகையோடு.

"இப்ப சொல்லு. நம்ம மேல யாருக்காவது க்ரஷ் இருந்தா ஒரு ஜாலிதானே?" என்றான் சங்கர் அவள் தோள் மேல் கைபோட்டு.

பளிச்சென்று சிரித்தாள் நித்யா.

(கருவறைக் கடன் -மின்னூலில் இருந்து)
To buy the EBook, Please click here

About The Author

2 Comments

Comments are closed.