சிபி (44)

Back to future.

திரும்பவும் எதிர்காலத்துக்கு வந்து சேர்ந்து, பூந்தமல்லியில் ஒரு பொதுக்கூட்டத்தை முடித்து விட்டுப் பச்சை மாருதியில் தலைநகருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.

நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கிற பதினொண்ணே முக்கால் மணி.

பின் ஸீட்டில் ஜெகந்தாதன், தங்க தேவன் மற்றும் டாக்டர் பொன்குமார். அனைவரும் ஆழ்ந்த நித்திரையில்.

கார் ரேடியோ மிதமான வால்யூமில் பாடிக் கொண்டிருக்கிறது.

சூர்யன் எஃப் எம்மில் யாழ் சுதாகர் பொற்காலத் திரைப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்.

செடிமேல் படர்ந்த கொடிகளைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்

என்று பாடிக் கொண்டிருக்கிறார், ஏழிசை அரசர் டி எம் சவுந்தர ராஜன்.

ஸீட்டில் சரிந்து, கண்களை மூடிக்கொண்டிருப்பதாய் நான் நினைத்துக் கொண்டிருந்த மாநிலத் தலைவர், நிமிர்ந்து அமர்கிறார்.

"பெருந்தலைவரப் பத்தினபாட்டு! கருத்துள்ள பாட்டாயிருக்கே தம்பி!"

"கருத்துள்ள பாட்டு மட்டுமில்ல தலைவர், இப்ப நமக்குப் பொருத்தமான பாட்டும் கூட."

"ஆமா, ஆமா. எந்தப்படம்? யார் பாடினது?"

"டாக்டர் சிவான்னு ஒரு படம் தலைவர். பாடினது டி எம் எஸ். படத்ல சிவாஜி கணேசன். ஒங்களுக்கு முந்திக்கி முந்திக்கி முந்தி நம்ம மாநிலத் தலைவராயிருந்தவர்."

"அதான, பெருந்தலைவரப்பத்தி வேற யார் பாடுவா! பெருந்தலைவர்னவொடன எனக்கு 1969 நாகர்கோவில் இடைத்தேர்தல் தான் ஞாபகத்துக்கு வருது. அப்பவும் இப்டித்தான் அதிகாலைலயிருந்து நடு ராத்திரி வரக்யும் சுற்றுப் பயணம், பிரச்சாரம், பொதுக் கூட்டம். அப்ப ஒரு தொகுதில மட்டுந்தான் சுத்த வேண்டியிருந்தது. இப்ப, தமிழ் நாடு பூரால்ல தம்பி சுத்த வேண்டியிருக்கு. அப்பல்லாம் எனக்கு சோர்வே தெரியல. ஹ்ம்ம். அப்ப நா இளைஞனாயிருந்தேன்."

"அதாவது, என்ன மாதிரி."

சோர்வை மறந்து சிரிக்கிறார் தலைவர்.

"ஒங்கள மாதிரி வருமா தம்பி" என்று வாய்மொழியால் எனக்கொரு பாராட்டுப் பத்திரம் வழங்குகிறார்.

"நீங்க எக்ஸஸ்ஸைஸ் பாடியாச்சே தம்பி!"

"நீங்கக் கூட எக்ஸஸ்ஸைஸ் பாடி மாதிரி தான் ட்ரிம்ம்ம்மா இருக்கீங்க தலைவர்" என்று நான் அவரைக் குறித்துப் பெருமை கொள்கிறேன்.

"தொந்தி போடல, சதை போடல, கூன் போடல. வாசிக்கும் போது மட்டுந்தான் கண்ணாடி போடறீங்க. கதர்ப்பட்டு அங்கவஸ்திரத்தக் கழுத்ல சுத்திக்கிட்டு கம்பீரமா நிமிந்து நடக்றீங்க. ஆண்டவம் புண்ணியத்ல ஆரோக்யமாயிருக்கீங்க. இப்பவே இப்டின்னா, மெட்ராஸ் க்றிஸ்ட்டின் காலேஜ்ல படிச்சிட்டிருந்த காலத்ல நீங்க எப்டியிருந்திருப்பீங்க தலைவர்! ஜென்ட்டில் மென் ஆஃப் க்றிஸ்ட்டின் காலேஜ்னு ஒங்கள வச்சித்தான் பேர் வந்திருக்கும். ஜென்ட்டில் மேன்ங்கறதுக்கு மேல, நீங்க ஒரு ப்ரின்ஸ்ஸôஇருந்திருப்பீங்க, ஹாண்ஸம்மா இருந்திருப்பீங்க, ஹீரோவா இருந்திருப்பீங்க."

"ஹோ ஹோ" என்று தலைவர் வாய்விட்டு, மனம் விட்டு சிரிக்கிறார்.

அவர் சிரித்துக் கொண்டிருக்கும்போது, என் மனதிலொரு கேள்வி எழுகிறது.

"தலைவர், நீங்க படிச்ச காலத்லயும் க்றிஸ்ட்டின் காலேஜ்ல கோ எஜுகேஷன் தானே? அதுக்கப்புறம் நீங்க சட்டம் படிச்ச மெட்ராஸ் லா காலேஜ்ல கூடக் கோ எஜுகேஷன் தான். வந்து…. பொண்ணுங்கல்லாம் ஒங்கள சும்மா விட்ருக்க மாட்டாங்களே!"

ஐயே, இதையெல்லாம் தலைவரிடம் கேட்டால் மரியாதைக் குறைவாயிருக்கும் என்று, அவர் சிரித்து முடிக்கும் முன்பே கேள்வியை மனசுக்குள் போட்டு அமுக்கிக் கொள்கிறேன்.

"இந்த மாதிரியெல்லாம் சிரிப்பு மூட்டாதீங்க தம்பி" என்கிறார் தலைவர், சிரித்து முடித்து விட்டு.

"நா சத்தம் போட்டு சிரிச்சிருவேன், அப்புறம் பின் ஸீட்ல தூங்கிட்டிருக்கறவங்கல்லாம் எந்திரிச்சிருவாங்க. எல்லாரும் டயடாய்ட்டாங்க பாவம். நாங்கூட டயடாயிர்றேன் தம்பி. ஆட்சியப் புடிச்சிச் சீஃப் மினிஸ்டர் ஆகணும்னா, கடவுளே, எவ்ளோக் கஷ்டப்பட வேண்டியிருக்கு!"

திரும்பவும் ஸீட்டில் சரிந்து தலைவர், களைப்பாய்க் கண்களை மூடுகிறார்.

காரோட்டிக் கொண்டிருக்கிற எனக்கோ, களைப்பே தெரியவில்லை. குதூகலத்திலிருக்கிறது மனசு.

குதூகலத்திலிருக்கிற மனசுக்குள்ளே, குதர்க்கமாய்ப் பகிடிகள் ஒன்றிரண்டு குடி வரத்தானே செய்யும்!

அப்படிக் குடிவந்த பகிடி ஒன்றுக்கு நான் கமுக்கமாய் சிரித்தது தலைவருக்குக் கேட்டு விடுகிறது.

"என்ன தம்பி சிரிக்கிறீங்க?" என்று கண்விழிக்கிறார் தலைவர்.

"என்ட்ட சொன்னா, நானும் சிரிப்பேன்ல?"

"நீங்க சிரிச்சீங்கன்னா, பின்னாடி தூங்கறவங்க முழிச்சிக்குவாங்களே தலைவர்!"

"பரவாயில்ல. நா அடக்கமா சிரிக்கிறேன். சத்தமில்லாம சிரிக்கிறேன்.

"ஒண்ணுமில்ல தலைவர், சும்மா ஒரு பகிடி."

"பகிடின்னா?"

"சிரிப்புச் சமாச்சாரம்."

"அதத்தான் சொல்லுங்கங்கறேன்."

"அத ஒங்கக்கிட்ட சொன்னா, நல்லாயிருக்குமான்னு தெரியல தலைவர்."

"அட, சொல்லுங்க தம்பி. இங்க வேற யார் இருக்கா? நீங்களும் நானுந்தான் இந்த லோகத்ல இருக்கோம். மத்த மூணு டிக்கட்டும் கனவு லோகத்ல இருக்கு. சும்மா சொல்லுங்க."

சொல்லுகிறேன்.

சொல்லி நான் வாயை மூடும்முன் தலைவர் வாயைத் திறக்கிறார். அடக்கமாய் சிரிப்பதாய் உறுதிமொழி தந்தவர், அடக்கமாட்டாமல் சிரிக்கிறார்.

கண்ணயர்ந்திருக்கிற மூன்று பேரின் கனவுகள் கலைந்து விடுமே என்கிற கவலையே இல்லாமல் சிரிக்கிறார்.

களைப்பையெல்லாம் களைந்தெறிந்து விட்டுத் தலைவரைக் கலகலப்பாக்கிய அந்த சிரிப்புச் சமாச்சாரம் எது?

இது தான் அது:

"அதாவது தலைவர், ராவும் பகலும் ஊர் ஊரா சுற்றுப்பயணம் போய், மீட்டிங் போட்டு, மக்கள சந்திச்சி, பிரச்சாரம் பண்ணி, மற்றக் கட்சிகளோட பிரச்சாரங்கள முறியடிச்சி, தேர்தல்ல நின்னு, ஓட்டு வாங்கி ஜெயிச்சி, படாத பாடு பட்டுத்தான் சீஃப் மினிஸ்டர் ஆகணும்னு இல்லாம, ஐ ஏ எஸ், ஐ பி எஸ் மாதிரிப் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி, ரேங்க் வாங்கிப் பாஸ் பண்ணிச் சீஃப் மினிஸ்டரா ஆயிரலாம்னு இருந்தா, எவ்ளோ நல்லாயிருக்கும் தலைவர்!"


(தொடர்வேன்)

About The Author