தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (16)

தெய்வ உருவங்கள்

தெய்வ உருவங்களில் சைவ சமயச் சிற்ப உருவங்களைக் கூறுவோம்.

சிவபெருமானுக்கு முக்கியமாக இருபத்தைந்து மூர்த்தங்களைக் கூறுவார்கள். அந்த மூர்த்தங்களைக் கல்லிலும் செம்பிலும் அழகாகச் சிற்பிகள் செய்திருக்கிறார்கள். அவையாவன:

1. இலிங்கோத்பவ மூர்த்தம், 2. சுகாசன மூர்த்தம், 3. உமாமகேசம், 4. கலியாணசுந்தரம், 5. மாதொருபாகர் (அர்த்தநாரி) 6. சோமஸ்கந்தம், 7. சக்கரப் பிரசாதன மூர்த்தம், 8. திரிமூர்த்தி, 9. அரியர மூர்த்தம், 10. தக்ஷிணா மூர்த்தம், 11. பிக்ஷாடனர், 12. கங்காள மூர்த்தி,13. காலசம்மார மூர்த்தி, 14. காமாந்தகர், 15. சலந்தர சம்மார மூர்த்தி, 16. திரிபுராந்தகர், 17. சரப மூர்த்தி, 18. நீலகண்டர், 19. திரிபாத மூர்த்தி, 20. ஏகபாத மூர்த்தி, 21. பைரவ மூர்த்தி, 22. இடபாரூட மூர்த்தி, 23. சந்திரசேகர மூர்த்தி, 24. நடராஜ மூர்த்தி.

இவற்றில் தக்ஷிணாமூர்த்தி உருவத்தில் வீணாதர தக்ஷிணாமூர்த்தி என்றும், ஞான தக்ஷிணாமூர்த்தி என்றும், யோக தக்ஷிணாமூர்த்தி என்றும் பிரிவுகள் உள்ளன.

நடராஜ மூர்த்தத்தில் சந்தியா தாண்டவ மூர்த்தி, காளிகா தாண்டவ மூர்த்தி, புஜங்கத்திராச மூர்த்தி, புஜங்கலளித மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி முதலிய பிரிவுகள் உள்ளன.1

பைரவ மூர்த்தத்தில் பிக்ஷாடன பைரவர், லோக பைரவர், காள பைரவர், உக்கிர பைரவர் முதலிய பிரிவுகள் உள்ளன.

கொற்றவை, அம்பிகை, துர்க்கை, காளி, பைரவி முதலிய உருவங்களும் உள்ளன.

கணபதி உருவத்தில் பால கணபதி, நிருத்த கணபதி, மகா கணபதி, வல்லபை கணபதி முதலிய பலவகையுண்டு.

சுப்பிரமணியர் உருவத்தில், தண்டபாணி, பழனியாண்டவர், வேல்முருகர், ஆறுமுகர், மயில்வாகனர் முதலிய பல பிரிவுகள் உள்ளன.

பதஞ்சலி, வியாக்கிரபாதர், தும்புரு, நாரதர், நந்தி தேவர், நாயன்மார்கள் முதலியவர்களின் உருவங்களும் உள்ளன.

வைணவ சமயத் திருவுருவங்களில் நாராயணன், கேசவன், மாதவன், கோவிந்தன், அநந்தசயனன், கண்ணன், பலராமன், இராமன், திரிவிக்ரமன், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் முதலிய பலவிதங்கள் உள்ளன. இலக்குமி, கஜலக்குமி, பூதேவி,ஸ்ரீதேவி முதலிய உருவங்களும், ஆழ்வார்கள் முதலிய உருவங்களும் உள்ளன.

பௌத்த, ஜைனச் சிற்பங்கள்

பௌத்த சமயத்தில் பலவிதமான புத்தர் உருவங்களும், அவலோகிதர் உருவங்களும், தாரை முதலிய உருவங்களும் கணக்கற்றவை உள்ளன.

ஜைன சமயத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களும், யக்ஷன், யக்ஷி, சாத்தன் முதலிய பல உருவங்களும் உள்ளன.

இவ்வுருவங்களைப் பற்றிய விளக்கங்களையெல்லாம் விரிவாக இங்கு எழுதப் புகுந்தால் இடம் பெருகும் என்று அஞ்சி நிறுத்துகிறோம். இவ்வுருவங்களைப் பற்றித் தமிழில் நூல்கள் இல்லாதது குறைபாடு ஆகும். ஆதரவு கிடைக்குமானால் இந்நூலாசிரியரே இந்த மூர்த்தங்களைப் பற்றிய நூல் எழுத இருக்கிறார்.

இயற்கை உருவங்களில் ஆண், பெண் உருவங்களின் அழகிய சிற்பங்களைப் பற்றியும், இலை கொடி முதலிய கற்பனைச் சிற்பங்களைப் பற்றியும், விலங்கு, பறவை முதலிய சிற்ப உருவங்களைப் பற்றியும் விரிவஞ்சிக் கூறாது விடுக்கின்றோம். சமயம் வாய்ப்பின் இவைகளைப் பற்றித் தனி நூல் எழுதுவோம்.

பிரதிமை சிற்பங்கள்

பிரதிமை உருவங்களைப் பற்றிச் சிறிது கூறிச் சிற்பக் கலைச் செய்தியை முடிப்போம். பிரதிமை உருவங்கள்2 என்பது, தனிப்பட்ட ஆட்களின் உருவ அமைப்பை, உள்ளது உள்ளவாறு அமைப்பது. இந்தக் கலை, மேல் நாட்டு முறைப்படி நமது நாட்டில் வளரவில்லையாயினும், நமது நாட்டு முறைப்படி ஓரளவு வளர்ந்திருந்தது.

பிரதிமை உருவங்களில் பல்லவ அரசர் உருவங்கள் பழைமை வாய்ந்தவை. மாமல்லபுரத்து (மகாபலிபுரம்) வராகப்பெருமாள் குகைக்கோயிலில் இருக்கிற சிம்ம விஷ்ணுவும் அவன் மனைவியரும் ஆகிய பிரதிமை உருவங்களும், அதே மனைவியரும் ஆகிய பிரதிமை உருவங்களும், அதே இடத்தில் உள்ள மகேந்திரவர்மனும் அவன் மனைவியரும் ஆகிய பிரதிமையுருவங்களும், தருமராச இரதம் என்று பெயர் வழங்கப்படுகிற அத்யந்த காம பல்லவேசுவரக் கோயிலில் உள்ள நரசிம்மவர்மன் பிரதிமையுருவமும், அர்ச்சுனன் இரதம் என்னும் பாறைக் கோயிலில் உள்ள சில பல்லவ அரசர் அரசிகளின் பிரதிமை உருவங்களும் பல்லவ அரசர்களுடையவை.

–கலை வளரும்…

________________________________________
1.சிவபெருமானின் தாண்டவ மூர்த்தங்களைப் பற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள “இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்” என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.

2. Portrait images

About The Author