தயாசாகர வித்யாசாகர்
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் தாம் நடத்தி வந்த பள்ளியில் ஒரு நாள் ஒரு ஆசிரியர் பாடம் நடத்தாமல் தூங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்து அவரைக் கண்டித்தார். ஆசிரியர், ”நான் ஏழை. என் சம்பளம் குடும்பம் நடத்தப் போதாது. அதனாலே ரெண்டு, மூணு இடத்துக்குப் போயி பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்குறேன். அதுதான் பள்ளிக்கு வந்த பிறகு களைப்பா இருக்கு. எப்பவும் உட்கார்ந்தால் தூக்கம் வந்துரும்னு நினைச்சு நின்னுக்கிட்டேதான் பாடம் நடத்துவேன். இன்னிக்கு மறந்து உட்கார்ந்துக்கிட்டுப் பாடம் நடத்தினதாலே தூங்கிட்டேன். மன்னிச்சுக்குங்க..” என்றார். ”உங்களுக்கு டியூஷன்லே எவ்வளவு பணம் கிடைக்கும்?” என்று கேட்டார் வித்யாசாகர். ஆசிரியர் ஒரு தொகையைச் சொன்னார். வித்யாசாகர் சொன்னார், ”அந்தத் தொகையை நான் கூடுதலா உங்களுக்குத் தரேன். நீங்க அந்த டியூஷனை விட்ருங்க. இனிமே வகுப்புல ஒழுங்கா பாடம் நடத்துங்க..!”
வித்யாசாகர் ஒரு புத்தகக் கடை நடத்தி வந்தார். தமது பல்வேறு அலுவல்கள் காரணமாக அவரால் அந்தப் புத்தகக் கடையை நன்றாக நிர்வகிக்க இயலவில்லை. ஒரு நாள் தம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ”இந்த புத்தகக் கடை ஒரே தலைவலியா இருக்கு. யாராவது கேட்டால் இலவசமாகக்கூட கொடுத்துடுவேன்” என்றார். நண்பர் விளையாட்டாகக் கேட்டார், ”அப்ப எனக்கு கொடுத்துடுங்களேன்!” என்று. ”சரி; எடுத்துக்குங்க!” என்று சொல்லிக் கடையைக் கொடுத்துவிட்டார் வித்யாசாகர்!
தமது நண்பர்கள், உறவினர்களின் நன்றி கெட்ட நடத்தையால் வித்யாசாகர் மனம் நொந்து போயிருந்த சமயம். ஒரு நண்பர் அவரிடம் வந்து ”இன்னார் உங்களைத் தூற்றிக் கொண்டு திரிகிறார்”என்றார். வித்யாசாகர் வியப்புடன் கேட்ட கேள்வி:- ”அப்படியா? நான் அவருக்கு எந்த உதவியையும் இதுவரையில் செய்யவே இல்லையே..? பின் ஏன் அவர் என்னைத் தூற்ற வேண்டும்?”
சாந்தால்கள் என்னும் ”கீழ்ப்பட்ட” சாதியினரிடம் வித்யாசாகருக்கு ரொம்பப் பிரியம். அவர்களும் அவரிடம் ரொம்ப உரிமை எடுத்துக் கொள்வார்கள். ஒருமுறை ஒரு சாந்தால் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து, ”இவளுக்கு கட்டிக்க துணி இல்லை. ஒரு துணி கொடு” என்றான். வித்யாசாகர், ”என்னிடம் இல்லை” என்று சொல்லிவிட்டார். உடனே அவன், ”உன் பெட்டி சாவியைக் கொடு” என்றான். வித்யாசாகரும் அவனிடம் சாவியைக் கொடுத்து விட்டார். அவன் பெட்டியைத் திறந்து தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு சிரித்தான். அவரும் அவனுடன் சேர்ந்து கொண்டு சிரித்தார்!
சமகாலத்தவராக இருந்தபோதும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை தரிசிக்க வித்யாசாகர் சென்றது இல்லை. ஒரு முறை பரமஹம்ஸரே, வித்யாசாகரை சந்திக்க வந்துவிட்டார். வந்தபின் பரமஹம்ஸர் சொன்னார், ”இத்தனை நாள் குளம் குட்டைகளில் உழன்று கொண்டிருந்தேன். இப்ப சாகரத்துக்கே வந்து விட்டேன்!”
வித்யாசாகர் சொன்ன குட்டிக்கதை ஒன்று :
ஒரு தர்க்க நிபுணர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தமக்குப் புரிய வைப்பவருக்கு தமது சொத்து முழுவதையும் எழுதி வைத்து விடுவதாக அறிவித்தார். அவர் மனைவி ”நாம நடுத்தெருவுலே நிற்க வேண்டியதாய்ப் போயிருமே?” என்று பதறினாள். நிபுணர் நிதானமாக பதில் சொன்னார், ”கவலையே படாதே! நான் புரிஞ்சுக்கவே மாட்டேன்னு பிடிவாதமா இருந்தா யாரால எனக்குப் புரிய வைக்க முடியும்?”
ஒரு சமயம் ஒருவன் வித்யாசாகரிடம் வந்து, ”நான் வெளியூர்க்காரன். என்னிடம் இருந்த பணம் எல்லாம் திருட்டுப் போய்விட்டது.” என்று சொல்லிப் பண உதவி கேட்டான். அவர் தந்த உதவியைப் பெற்றுக் கொண்டு, வெளியில் வந்து தன் நண்பனிடம் பீற்றிக்கொண்டான், ”வித்யாசாகர் ஒரு ஏமாளி. அவரை சுலபமா ஏமாத்திட்டேன் பார்த்தியா?” என்று.. இதைக் கேட்டுக் கொண்டிருந்த வித்யாசாகரின் நண்பர் ஒருவர் வருத்தப்பட்டு அவரிடம், ”இப்படி ஏன் நீங்க இந்த மாதிரி எல்லாருக்கும் உதவி செய்து ஏமாந்து போறீங்க?” என்று கேட்டார். வித்யாசாகர் சொன்ன பதில்:-
”உதவி செய்றபோது சில சமயங்களில் இப்படித்தான் ஏமாற நேரிடும். இதுக்காக ஒருத்தருக்கும் உதவாமயே இருந்தால் உண்மையாகவே கஷ்டப்படறவங்களுக்கு நம்ம உதவி கிடைக்காமயே போயிரும். பிறரை நாம ஏமாத்தறதைவிட நாமளே ஏமாந்து போறது எவ்வளவோ மேல்!”
ஒரு சமயம் வித்யாசாகர் தன் கிராமத்திலிருந்து கல்கத்தாவுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு கிழவன் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் தவிப்பதைக் கண்டார். வேறு ஊரில் வேலை பார்க்கும் அந்தக் கிழவரின் பிள்ளை அந்த மூட்டையை அவரிடம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பியிருந்தான். அந்த ஊர் அங்கிருந்து ஐந்தாறு மைல். வித்யாசாகர் அந்த மூட்டையைத் தாமே சுமந்து கொண்டு போய் அந்தக் கிழவரின் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு பிறகு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
கல்கத்தாவில் விலைமாதர் வசிக்கும் பகுதியான சோனாகாச்சியில் ஒருநாள் நள்ளிரவில் வித்யாசாகர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அங்கு ஒரு விலைமாது வாடிக்கைக்காக தெருவில் காத்திருப்பதைப் பார்த்து அவருக்கு இரக்கம் ஏற்பட்டது. அவளிடம் சிறிது பணம் கொடுத்து, ”இனியும் காத்திருக்காதே அம்மா, வீட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துக்க!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
வித்யாசாகர் தயாசாகரராகவும் விளங்கினார் என்பதைத் தெரியப்படுத்தும் இந்தத் தகவல்கள் கிடைத்த நூல் : சு.கிருஷ்ணமூர்த்தி எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட அமைதிப் புயல்-ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
மறக்க முடியுமா?
கிழக்கிந்தியக் கம்பெனியை நினைவிருக்கிறதா? எப்படி மறக்க முடியும்? 1600 டிசம்பர் 31-ம் தேதி இந்தியாவில் கால் பதித்து 1947 வரை நம்மை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷ் வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள். அந்தக் கம்பெனியை சமீபத்தில் இந்தியத் தொழிலதிபரான சஞ்சீவ் மேத்தா என்பவர் விலை கொடுத்து வாங்கி விட்டார். மும்பையில் பிறந்த சஞ்சீவ் மேத்தா இங்கிலாந்துக்குக் குடி பெயர்ந்தவர். 15 மில்லியன் டாலர் முதலீட்டில் கிழக்கிந்தியக் கம்பெனியைத் தன் வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார் சஞ்சீவ். ”எனது நாட்டை அடிமைப்படுத்திய கம்பெனியை, இனி நான் கட்டுப்படுத்தப் போகிறேன் என்ற உணர்வே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது” என்கிறார் சஞ்சீவ்மேத்தா.
ஏனோ இந்த விஷயம் பத்திரிகைகளில் அதிக கவனத்தைப் பெறவில்லை.
(நன்றி : சுதேசி செய்தி – மார்ச் 2010 இதழ்)