ஒரு அடிமையின் கதை-9

இனி என் பயணக் கதையைத் தொடரலாம் என்று நினைக்கிறேன். தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த நான் வர்ஜீனியாவில் பயணம் செய்த இடங்களில் எல்லாம் பெரும்பாலும் புகையிலைதான் பயிரிடப்பட்டு வந்தது. கோதுமைப் பயிர் சில இடங்களில்தான் பயிரிடப்பட்டிருந்தது. குதிரைகளை வளர்ப்பதில் பிரியம் கொண்ட சிலரின் தோட்டங்களில் ஓட்ஸ் பயிரிட்டிருந்தார்கள். எனக்கு நான் சென்ற பகுதிகள் எல்லாம் ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரிதான் தெரிந்தது. ஆனால் ரோனோக் நதியைத் தாண்டியவுடன் ஒரு பெரிய பண்ணையைப் பார்த்தேன். அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தில் புகையிலை பயிரிடப்பட்டிருந்தது. அது ரான் டால்ப் என்ற பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமானது என்றும் அவர் வர்ஜீனியாவிலுள்ள பெரும் பண்ணைக்காரர்களில் ஒருவர் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கென்னவோ மாரிலான்டிலிருந்த பண்ணைகளைவிட இது ஒன்றும் பிரமாதமானது என்று நினைக்க முடியவில்லைதாகத் தெரியவில்லை. பண்ணை வீடும் பார்க்க சுமாராகத்தான் இருந்தது. மொத்தத்தில் அந்த இடமே பரிதாபகரமாகத்தான் காட்சி அளித்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த அடிமைகளின் நிலையோ படு மோசம். இந்த மாதிரி வர்ஜீனியாவின் எந்த இடத்திலும் மோசமாக உடைஅணிந்திருந்த அடிமைகளைப் பார்த்ததில்லை. பல ஆண் அடிமைகளும் சில இளம் பெண் அடிமைகளும் மேல் உடை உல்லாமல் இருந்தார்கள். பல இளவயதினர் வெறும் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்கள். அவர்கள் மேனி வறண்டு இருந்தது. சரியான உணவு அவர்க்ளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பது அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது. அவர்களுக்குப் பின்னால் ஒரு மேற்பார்வையாளன்- நான் ரான்டால்ப் தோட்டத்தில் பார்த்ததைப்போல நீண்ட சவுக்கால் அவர்களை விரட்டிக்கொண்டே வந்தான்.

நாங்கள் யாட்கின் நதியை அடைந்தபோது புகையிலைத் தோட்டங்கள் முற்றிலும் மறைந்திருந்தன. எங்கும் பருத்தித் தோட்டங்கள்தான். யாட்கின் நதியை ஒரு படகின் மூலமாகக் கடந்தோம். இரண்டு நாட்கள் கழித்து எங்கள் எஜமானர் நாங்கள் தெற்குக் கரோலினா மாகாணத்தை அடைந்திருப்பதாகக் கூறினார். நாங்கள் அன்றைய இரவை லன்காஸ்டர் என்னும் இடத்தில் கழித்தோம். சங்கிலிகளால் காட்டப்பட்டிருந்த அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை என்னால் இன்றும் மறக்க முடியாது. எனக்குத் தெரிந்து தெற்குக் கரோலினாவில் அடிமைகளின் வாழ்க்கை அதலபாதாளத்தில் விழுவதை விடக் கொடுமையானது. மாரிலான்டில் எஜமானர்கள் அடிமைகள் சரியாக நடந்து கொள்ளாவிட்டால், ‘உன்னை தெற்குக் கரோலினாவுக்கு அனுப்பிவிடுவேன்’ என்று பயமுறுத்துவார்கள். அங்கு மாரிலான்டில் இருப்பதைவிட நூறுபங்கு நிலைமை மோசமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். நான் தெற்குக் கரோலினாவில் அடிமையாயிருக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ரு பல சமயங்களில் பயந்து நடுங்கியிருக்கிறேன். நான் என் எஜமானர்களிடம் என்னை அங்கு விற்றுவிடவேண்டாம் என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சியிருக்கிறேன். ஆனால் கடைசியில் எந்தத் தவறும் செய்யாத நிலையில், நல்லவனாக, கீழ்ப்படிபவனாக நடந்து கொண்ட வேளையிலும் கூட இங்கு வந்து சேரும் நிலை ஏற்பட்டதை நினைத்தபோது அழுகையே வந்தது. அன்று இரவு நான் தூங்கவே இல்லை- வாழ்க்கையின் மேல் ஒரு பெரிய வெறுப்பு வந்தது. எனக்கு வேறு கதியே இல்லை- பருத்தித் தோட்டங்களில் இருக்கும் மேற்பார்வையாளர்களின் அந்த நீண்ட சாட்டையைப் பார்க்கும்போழுது எனக்கு உயிரை விட்டுவிடலாமா என்று தோன்றியது. ஆனால் அதற்குக்கூட எனக்கு ஒரு கயிறு கிடைக்க வழியில்லை. நிச்சயமாக அப்போது ஒரு வாய்ப்பு கிட்டியிருந்தால் தூக்குப் போட்டுக் கொண்டிருப்பேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்து தவறு என்று மதங்கள் கூடச் சொல்லாது. கடவுள்கூட தவறு என்று எண்ண மாட்டார்.

எனக்கு இப்போது சிறிது கூட நம்பிக்கையில்லை, இனி என் வாழ்நாளில் மறுபடியும் என் மனைவி குழந்தைகளை சந்திப்போமென்று. நான் உயிர் வாழ்ந்தால் பட்டினியால் மிகவும் கஷ்டப்படப் போகிறேன் என்று எனக்கு அச்சம் ஏற்பட்டது. ஏனென்றால் தெற்குக் கரோலினாவில் பஞ்ச காலங்களில் அடிமைகளுக்கு சாப்பிட எதுவும் கிடைக்காது- பருத்தி விதைகளைத்தான் சாப்பிடுவார்கள் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படப் போகும் துன்பங்களைப் பற்றிய பயம் இரவு முழுவதும் என்னை அலைக்கழித்தது. தெற்குப் பகுதிக்குச் செல்லும் அடிமைகளில் பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதில் அதிசயம் ஒன்றும் இல்லை- இத்தனை துன்பங்களுடன் பசியும் பட்டினியுமாக எத்தனை நாள் உயிர் வாழ முடியும்? யாராவது ஒரு அடிமை தற்கொலை செய்துகொண்டால் எஜமானர் அது வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவர் கொடுமைப்படுத்தி, பட்டினி போட்டதால்தான் அந்த அடிமை தற்கொலை செய்துகொண்டார் என்பது வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று நினைப்பார். அதுவே அவருக்குப் பெரிய அவமானமாக இருக்கும். உயிருடன் இருந்தபோது அடிமையின் திறந்த முதுகில் சாட்டை அடிகளினால் வெளுத்து வாங்கியவர் அந்த அடிமை இறந்தவுடன் அவனுக்கப் பரிதாபப் படுவதுபோல் நடித்து முதலைக் கண்ணீர் விடுவார்.

தற்கொலை என்பது ஒரு அபாயகரமான முன்னுதாரணமாகக் கருதப்பட்டது. அதனால் எஜமானர்கள் தற்கொலை நிகழாமல் பாதுகாத்துக் கொள்வார்கள்- அப்படி நிகழ்ந்தால் தாங்கள் பொறுப்பில்லை என்று மறுப்பார்கள். இறந்து போனவர்கள் பயங்கரக் குற்றவாளிகள் என்று முத்திரை இடப்பட்டு அவர்களுக்கான இறுதி மரியாதை கூட செலுத்த அனுமதிக்க மாட்டார்கள். தெற்குப் பகுதிகளில் பருத்தித் தோட்டங்களில் உழலும் அடிமைகள் தற்கொலை செய்து கொள்கிறார்களென்றால் அதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. பசி, பட்டினி, உடைகள்கூட இல்லாத நிர்வாண நிலை, சாட்டை அடிகள் இவற்றிலிருந்தெல்லாம் முற்றிலுமாக விடுபட அவர்களுக்கு வேறு வழியில்லை.

நான் உறங்கியபோது நள்ளிரவைத் தாண்டிவிட்டது. இந்தத் துன்பங்களையெல்லாம் கடந்து, நான் தப்பித்துப்போவது போலவும் பல இன்னல்களையும் தடைகளையும் தாண்டி மறுபடியும் மாரிலாண்டை அடைவது போலவும் கனவு கண்டேன். ‘நான் என் மனைவியுடன் சேர்ந்துவிட்டேன். என் இரண்டு குழந்தைகளும் என் மடியில் உறங்குகிறார்கள்- என் மனைவி எனக்காக எனக்குப் பிடித்த மீன் வறுவல் இரவு உணவிற்குத் தயாரிக்கிறாள்’- இப்படியெல்லாம் ஆனந்தமான கனவுகள். நான் விழித்து இதெல்லாம் கனவு என்று அறிந்தபோது எப்படியாவது எப்படியென்று தெரியாது- இங்கிருந்து தப்பித்துப்போய் மனைவி குழந்தைகளை மீண்டும் சென்றடையவேண்டும் அவர்களை அணைத்து மகிழவேண்டும் என்ற வைராக்கியம் மனதில் பிறந்தது.

காலையில் எங்கள் எஜமானர் எங்களை எழுப்பி சோளத்தினாலான கேக்கையும் சிறு துண்டு பன்றி இறைச்சியும் கொடுத்தார். நாங்கள் எங்கள் தெற்குக் கரோலினா பயணத்தின்போது மொத்தம் இருமுறைதான் சாப்பிட்டோம். இன்று காலை கொடுத்த உணவு எங்களை தெற்குக் கரோலினாவிற்கு வரவேற்பதற்காகக் கொடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

அவர் எங்களை சொந்த ஊருக்குப் போகும் எண்ணத்தை கைவிட்டுவிடுமாறு சொன்னார். ‘வடக்கு கரோலினாவையும் வர்ஜீனியாவையும் தாண்டி தப்பித்துச் செல்ல யாராலும் முடியாது- அப்படி முயன்றால் அவர்களை எப்படியாவது பிடித்துத் திருப்பிக் கொண்டுவந்துவிடுவோம்’என்றார். அவர் ‘எங்களை ஜார்ஜியாவிற்கு அழைத்துச் செல்வதாகவும் அது மற்ற மாகாணங்களைவிட உயர்வானது என்றும் அங்கே நாங்கள் வசதியாக வாழலாம்; என்று சொல்லி ஆசைகாட்டினார். கொலம்பியா செல்லும் பாதையில் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இதுவரை யாரிடமும் எங்களை விற்பதாகச் சொல்லவில்லை- அப்படிக் கேட்டவர்களிடம் அவர் பதில் கூறவில்லை. ஆனால் வழியில் ஒருவர் எங்களை அழைத்துச் சென்றவரை வழிமறித்து ‘இந்த அடிமைகளை விலைக்குத் தருவார்களா?’ எனக் கேட்டார். அதற்கு எங்களை அழைத்துச் சென்றவர் ‘இல்லை. ‘இந்த அடிமைகளை ஜார்ஜியாவிற்கு அழைத்துச் செல்கிறோம். அங்குள்ள பருத்தித் தோட்டங்களில் அடிமைகளுக்கு நல்ல தேவை இருக்கிறது’ என்றார்.

(தொடரும்)

About The Author