கல்விக்கும் அனுபவத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. கல்வி என்பது புத்தகங்களில், சிறிய எழுத்துக்களில் எழுதியிருப்பதைப் படிப்பது. அனுபவம் என்பது வாழ்விலிருந்து நாம் அறிந்து கொள்வது. கல்வியோடு அனுபவமும் சேர்ந்தால் நிச்சயமாக அது பெரிய வரம்தானே?
ஒரு சிறிய கதை!
இளம் ஆசிரியர் ஒருவர் கனவொன்று கண்டார். அந்தக் கனவில் ஒரு தேவதை வந்து, "உன்னிடம் ஒருநாள் உலகத்திலேயே பெரிய தலைவராகும் குழந்தை வந்து சேரும். அந்தக் குழந்தைக்கு எப்படிக் கல்வி கற்றுக் கொடுப்பாய்? எப்படி அதன் தன்னம்பிக்கையை வளர்ப்பாய்? அதை உலகத் தலைவராவதற்கு எந்த மாதிரி தயார் செய்வாய்? தலைமை ஏற்கப் போகும் ஒருவருக்கு மற்றவர் உணர்வுகளைப் புரிந்து பணிந்து போகவும் தெரிய வேண்டும்; அதே சமயம், தான் தலைவர் என்பதையும் அவர் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்! திறந்த மனதுடையவனாகவும், அதே சமயத்தில் திடமான முடிவுகளை எடுப்பவனாகவும் அந்தக் குழந்தையை வளர்க்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அந்தக் குழந்தைக்கு எந்த மாதிரி கல்வி கற்றுக் கொடுப்பாய்?" என்று அந்த தேவதை கேட்டது.
ஆசிரியர் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார். அவருக்கு உடல் வியர்த்தது. அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை – தன்னிடம் படிக்கும், அல்லது படிக்க வரும் எந்தக் குழந்தையாவது உலகத் தலைவராக வரக்கூடும் என்று. தான் அவ்வாறு ஒரு தலைவரை உருவாக்கும் அளவுக்குக் கற்றுத் தருகிறோமா? தலைமைப் பொறுப்பு ஏற்க விரும்பும் குழந்தைகளுக்கேற்றவாறு தயார் செய்கிறோமா? – இதுவரை யோசித்துப் பார்த்ததே இல்லை. அந்த மாதிரி ஒரு பெரிய பதவிக்கு வர வேண்டுமென்றால் தன்னிடம் படிப்பவர்களுக்கு எப்படி நாம் கல்வி அறிவைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினார். அதற்காக மனதில் ஒரு திட்டமும் போட்டார்.
உலகத் தலைவராகும் தகுதியுள்ள மாணவனுக்குச் சிறந்த கல்வியும் வேண்டும்; அதே சமயம், நல்ல அனுபவமும் வேண்டும்! எல்லா விதப் பிரச்சினைகளையும் எப்படித் தீர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் வகையில் அவன் திறனோடு விளங்க வேண்டும். கல்வி அறிவு மட்டும் போதாது; அனைவரையும் மதித்து நடப்பவனாகவும் உறுதியான மனம் படைத்தவனாகவும் அவன் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு திகழ வேண்டும். முடிவெடுக்கையில் அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசிக்க வேண்டும். பழமையை மறக்காமல், அதே சமயம் புதுமைக்கு வரவேற்புக் கொடுப்பவனாகவும் அவன் இருக்க வேண்டும். எப்போதும் புதிது புதிதாகக் கற்று அவனை அவன் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்களைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து அந்த ஆசிரியர் தன் கல்விமுறையை மாற்றிக் கொண்டார். ‘எப்படி உலகத் தலைவனை உருவாக்குவது?’ என்ற எண்ணமே அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. தன் மாணவர்களில் அனைவருமே வருங்காலத் தலைவராக அவர் கண்ணுக்குத் தோன்றினார்கள். அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்காமல், அவர்களை எப்படி உருவாக்க முடியும் என்றே அவர் சிந்தித்தார். ஒவ்வொருவரும் சிறந்த மாணவராகத் திகழ வேண்டும். தான் கொடுக்கும் கல்வியால்தான் அந்த மாதிரி தலைவனை உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குத் தெரிந்த ஒரு பெண் உலக அளவில் மிகப் பிரபலமாக வந்தார். அந்த ஆசிரியருக்கு, அந்தப் பெண்தான் தன் கனவில் தேவதையால் விவரிக்கப்பட்ட பெண்ணாகத் தோன்றினார். ஆனால், அந்தப் பெண் அவர் மாணவியில்லை – அவர் பெற்ற மகள்!
அந்தப் பெண் சொன்னார் – "எனக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும், என்னைப் பொறுத்த வரை என் அப்பாதான் சிறந்த ஆசான்" என்று.
நாம் எதிர்காலத்திற்கு விட்டுச் செல்லும் சிறந்த செல்வங்கள் குழந்தைகள்தான் என்று சொல்வார்கள். இது ஒன்றும் பெயர் தெரியாதவரின் கதை அல்ல; இது நம்மைப் பற்றியதுதான் – அனைவருக்கும் பொதுவானதுதான் – நீங்கள் ஆசிரியர்களாக இருந்தாலும் சரி; பெற்றோர்களாக இருந்தாலும் சரி – ஒவ்வொருவருடைய கதையும்தான்.
எதிர்காலத்தில் ……………….. வளரக்கூடிய குழந்தை கிடைக்கும். கோடிட்ட இடத்தை ‘ஒரு தலைவனாக’, ‘ஒரு ஆசானாக’, ‘ஒரு சிறந்த தகப்பன் அல்லது தாயாக’, ‘ஒரு விஞ்ஞானியாக’ என்று ஏதாவது ஒன்றை எழுதி நிரப்பிக் கொள்ளுங்கள். எப்போது, எங்கே, எப்படி இந்த மாதிரி குழந்தையைக் கண்டுபிடிப்பீர்கள் என்பது புதிர். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! ஒரு குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. யாரும் மட்டமானவர்களல்ல; அனைவருக்குள்ளும் திறமை ஒளிந்திருக்கிறது! அதைத் தேடிக் கண்டுபிடிப்பது உங்கள் கடமை!
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே!" என்ற வரிகளை நினைவில் கொள்ளுங்கள்!
மூலம்: ஸடீவ் குட் இயர்
–தமிழில்: டி.எஸ்.பத்மநாபன்
“
சுபெர்