நகைச்சுவை பொதுவுடமை

(ச்ச்சும்மா… கிண்டலுக்குத்தான். கோவிச்சுக்காதீங்க)

கம்யூனிசத்திற்கும் நகைச்சுவைக்கும் காத தூரம் – அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் போல. பொதுவாக கம்யூனிஸ்டுகள் எப்போதும் சீரியசானவர்கள். பொதுவுடமை என்ற பெயரில் பணக்காரர்களையும் ஏழையாக்குவதுதான் அவர்களுடைய சித்தாந்தம் என்பார்கள். கம்யூனிஸ்டுகள் நகைச்சுவைவாதிகளாக இல்லாவிட்டாலும், கம்யூனிசமும் அதன் தலைவர்களும் எப்போதுமே நகைச்சுவைக்கான கருப்பொருளாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். கடினமான அதிபரான ஸ்டாலின் கூட சில சமயங்களில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் என பென் லூயிஸ் கூறுகிறார். ("Hammer & tickle the communist joke book" என்ற திரைப்படம் எடுத்தவர்)

கம்யூனிசத்திற்கும் முதலாளித்துவத்திற்குமான வேற்றுமையை இந்த ஜோக்கில் பாருங்கள்!

அவன் இறந்த பிறகு நரகத்திற்குச் செல்கிறான். அங்கே அவனுக்கு கம்யூனிச நரகம் அல்லது முதலாளித்துவ நரகம், இரண்டினுள் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்டது. அவன் இரண்டில் எது பரவாயில்லை என தெரிந்து கொள்ள விரும்பினான்.

முதலில் முதலாளித்துவ நரகத்தின் வாயிற்படியை அடைந்தான். அங்கே வெளியே எமதூதன் பார்ப்பதற்கு ரீகன்போல் இருக்கிறார். வந்தவன், "இங்கே நரகம் எப்படியிருக்கும்?" என்று கேட்கிறான். அதற்கு அந்த தூதன், "இங்கே முதலில் உன்னை உயிரோடு கட்டி வைத்து சவுக்கால் அடிப்பார்கள். பிறகு எண்ணைக் கொப்பரையில் கொதிக்க வைத்து, பின் ஒரு கூர்மையான கத்தியால் துண்டு துண்டாக்குவார்கள்" என்றான்.

பயங்கரமாக இருக்கிறதே என்று எண்ணிய அவன் கம்யூனிச நரகம் எப்படியிருக்கிறது பார்க்கலாம் என்று அங்கே சென்றான். அந்த நரகத்தின் வாயிலில் கார்ல் மார்க்ஸ் போன்று ஒரு தூதுவன் நின்றான். அவனிடம் நரகம் இங்கே எப்படியிருக்கும் என்று கேட்க, அவனும், "இங்கே முதலில் உன்னை சவுக்கால் அடிப்பார்கள். பின்னர் எண்ணைக் கொப்பரையில் கொதிக்க வைத்தபின் கத்தியால் துண்டாக்குவார்கள்" என்றான்.

"இதுவும் முதலாளித்துவ நரகம் போலத்தானே இருக்கிறது. பிறகு இங்கு ஏன் பெரிய க்யூ நிற்கிறது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு தூதுவன், "இங்கே பல நேரங்களில் எண்ணை கிடைக்காது; கத்தி இருக்காது; ஏன் கொதிக்கும் தண்ணீர் கூட இருக்காது" என்றான்.

பல கம்யூனிச நகைச்சுவைகள் சிரிப்பே வரவழைக்காவிட்டாலும் அவை நாட்டின் உண்மையான நிலையைப் பரிகசிப்பதாக அமைந்தன.

ஹங்கேரிய கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த மாட்யாஸ் ரசோகியைப் பற்றிய ஒரு ஜோக். இரண்டு நண்பர்கள் தெருவில் நடந்து செல்கிறார்கள். ஒரு நண்பன் மற்றவனிடம் கேட்கிறான். "நீ ரசோகியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

நண்பன்,"இதைப் பற்றி நான் இங்கே சொல்ல முடியாது. கொஞ்சம் என் பின்னாலேயே வா" என்று சொல்கிறான். இப்படி மீண்டும் மீண்டும் அதைச் சொல்லியே ரகசியமாக ஒரு மூலைக்கு அழைத்துச் செல்கிறான். "சரி இப்போதாவது சொல். ரசோகியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்று மறுபடியும் கேட்க, நண்பன் நாலா பக்கமும் சுற்றி முற்றிப் பார்த்து விட்டு ரகசியமாகச் சொன்னான். "அவர் ரொம்ப நல்லவர்"

கம்யூனிச நகைச்சுவைகள் பல நேரங்களில் அபத்தமாக இருக்கும் – சிரிப்பே வராததுபோல் தோன்றலாம். ஆனாலும் மக்கள் தங்கள் சோகத்தை இப்படித்தான் மறைத்துக்கொண்டார்கள்.

ரஷ்யப் புரட்சி பற்றிய ஜோக்குகள் முதன்முதலில் அக்டோபர் 1917ல் வெளியாயின. அவற்றில் ஒன்று – ஒரு மூதாட்டி மாஸ்கோவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் ஒரு ஒட்டகத்தைப் பார்த்து, "பாருங்கள்.. இந்த பால்ஷிவிக்குகள் குதிரையை எப்படி ஆக்கிவிட்டார்கள்!" என்று சொல்கிறார். இந்த மாதிரி கம்யூனிசத்தைப் பற்றிய நகைச்சுவைகள் தொடரத் தொடர, அதற்கு அதிகார வர்க்கத்திலிருந்து பல தடைகளும் வரத்துவங்கின. ஸ்டாலின் ஆட்சியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் ஜோக் சொன்னதற்காக சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறையில் மூன்று பேர் பேசிக் கொள்கிறார்கள். முதல் கைதி சொல்கிறான். "நான் எப்போதும் வேலைக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகச் செல்வேன். அதற்காக என்னை உளவு பார்க்க வருவதாகக் கூறி கைது செய்துவிட்டார்கள்". இரண்டாவது கைதி சொல்கிறான். "நான் எப்போதும் ஐந்து நிமிடங்கள் லேட்டாக வருவேன். என்னை ஏதாவது நாச வேலை செய்து விடுவேன் என்று கைது செய்தார்கள்". மூன்றாமவன், "நான் எப்போதும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வருவேன். நான் மேற்கத்திய கடிகாரத்தை வைத்திருக்கிறேன் என்று என்னைக் கைது செய்து விட்டார்கள்" என்கிறான்.

எவ்வளவோ பேர் ஜோக் சொன்னதற்காக கைது செய்யப்பட்டாலும் அதற்காக யாரும் தூக்கிலிடப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. ஹங்கேரிய நாட்டின் பழைய கோப்புகள் தினம்தோறும் அதிகாரிகள் ஜோக் சொல்பவர்களைக் கைது செய்வதையும் அவர்கள் சிறு தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதையும் பற்றிக் கூறுகின்றன. கம்யூனிசத்தை எதிர்ப்பவர்கள் மட்டும் ஜோக் சொல்வார்கள் என்பதில்லை. ஸ்டாலினே கூட ஜோக் சொல்லியிருக்கிறார்.

ஒருமுறை ஜார்ஜியன் தூதுக்குழு ரஷ்யா வந்தது. தூதுக் குழுவினர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். பிறகு க்ரெம்லின் மாளிகை வாயில் வழியாக அவர்கள் வெளியேறுகிறார்கள். ஸ்டாலின் அப்போது தனது புகை பிடிக்கும் ‘பைப்’பைக் காணவில்லை என்று தேடுகிறார். அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தனது ரகசிய போலிஸ் அதிகாரியைக் கூப்பிட்டு, வந்து சென்ற தூதுக் குழுவில் யார் தனது பைப்பை எடுத்துச் சென்றார்கள் என்று பார்த்துவரச் சொன்னார். அதிகாரி சென்ற சிறிது நேரத்திற்குள் பைப் கோப்புகளின் நடுவே பதுங்கியிருப்பது அவருக்குத் தெரிந்தது. அவர் அதிகாரியை மீண்டும் கூப்பிட்டு, "பைப் கிடைத்து விட்டது" என்று சொல்கிறார். அதற்கு அந்த ரகசிய போலிஸ் அதிகாரி, "இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. வந்தவர்களில் பாதிப் பேர் தாங்கள்தான் பைப்பை எடுத்தோம் என்று ஒப்புக் கொண்டு விட்டார்கள். மீதிப்பேர் விசாரணையின்போதே இறந்து விட்டார்கள்" என்று சொன்னார்!!

1960களில் சோவியத் யூனியனில் ஜோக்குகள் வெள்ளம்போல் பரவின. அவைகளில் 20 உப பிரிவுகள் இருந்தன. முக்கியமாக, பொருளாதாரத்தைப் பற்றிய ஜோக்குகள் பிரசித்தம். ஒரு குடும்பத்தலைவி மற்றொருத்தியிடம் கூறுகிறாள். "நாளைக்குப் பனி வரும்போல் இருக்கிறது" என்று. மற்றவள் கூறுகிறாள். "வந்தால் வரட்டும். அதற்காக நான் க்யூவில் நிற்கப் போவதில்லை"

சோவியத் நாட்டின் பிரச்சாரங்களைப் பற்றியும் ஜோக்குகள் உலவின. "முதலாளித்துவ நாடுகள் பள்ளத்தை நோக்கிப் போகின்றன. நாங்கள் விரைவில் அவர்களை முந்திவிடுவோம்" என்பது போல!

மார்க்சிச, லெனினிச சித்தாந்தங்களைப் பற்றி சொல்லும் போது "ஏன் தனிமனிதன் பொதுவுடமையின் மத்தியில் நிறுத்தப்படுகிறான்" என்ற கேள்விக்கு, "அப்போதுதான் அவன் எல்லா பக்கங்களிலிருந்தும் உதைபட முடியும்" என்பது போன்ற பதில் சொல்லும் ஜோக்குகளும் உண்டு.

கம்யூனிஸ்ட் ஆட்சியில் கலைகளைப் பற்றியும் விமரிசனம் உண்டு. இயற்கை ஓவியம் வரைபவர்களுக்கும், கற்பனை ஓவியர்களுக்கும், பொதுவுடமை நாட்டு ஓவியர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு கேள்வி. ‘இயற்கை ஓவியர்கள் இயற்கைக் காட்சிகளை வரைவார்கள். கற்பனாவாதிகள் தங்கள் மனதிற்குத் தோன்றியதை ஓவியமாகத் தீட்டுவார்கள். சோஷியலிச ஓவியர்கள் அவர்களுக்கு கட்டளையிட்டபடி வரைவார்கள்’ என்பது பதில்!

கம்யூனிச நாடுகளில் எவ்வளவு தூரம் குடியாட்சி உண்டு என்பதைப் பற்றி சொல்லப்படுவது:

"எப்போது ரஷ்யாவின் முதல் தேர்தல் நடந்தது?"

"கடவுள் முதல் முதலாக ஏவாளை ஆதாம் முன்பாக நிறுத்தி, ‘போ.. உனக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவரை மணந்து கொள்’ என்று சொன்னபோது"

யூத கம்யூனிஸ்ட் ஜோக்குகளும் உண்டு. உதாரணம்..

"ஹாய், உனது சகோதரன் ஜோசப் எப்படியிருக்கிறான்?"

"அவன் பிராகில்(Prague) கம்யூனிசத்திற்காகப் பாடுபடுகிறான்"

"உன்னுடைய சகோதரி ஜூடித் எப்படியிருக்கிறாள்?"

"அவள் புடாபெஸ்டில் கம்யூனிசத்திற்கு எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்"

"உன்னுடைய மூத்த சகோதரன் பெர்னி?"

"அவன் இஸ்ரேலுக்குச் சென்றுவிட்டான்"

"அவனும் இஸ்ரேலில் பொதுவுடமைக் கொள்கையை வளர்க்கிறானா?"

"அவனுக்கென்ன பைத்தியமா.. சொந்த நாட்டில் கம்யூனிசத்தை வளர்க்க?"

கம்யூனிச ஜோக்குகள் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கும்போது சுவையானதாக அமைந்தன. 1968ல் ரஷ்ய டாங்குகள் ப்ராகில் நுழைந்தபோது பொதுமக்கள் தங்கள் நகைச்சுவை உணர்வால் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஒவ்வொரு இரவும் நகரின் சுவர்களில் "சோவியத் நாட்டு சர்கஸ் மீண்டும் நகருக்கு வந்துள்ளது. புதிய அம்சங்கள்!" என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டன.

மக்கள் தங்களுக்குள் ஜோக் அடிப்பார்கள். "ஏன்.. செக்கொஸ்லோவாக்கியா நடுநிலைமை நாடாக இருக்கிறது? ஏனென்றால், அது தனது உள்நாட்டு விவகாரங்களில் கூடத் தலையிடுவதில்லை" என்பது போன்று.

‘ரஷ்யர்கள் நமது நண்பர்களா, சகோதரர்களா?’ என்ற கேள்விக்கு, "நிச்சயமாக சகோதரர்கள்தான். நண்பர்கள் என்றால் அவர்களை நாம் தேர்ந்தெடுக்க முடியுமே!!" என பட்டென்று பதில் வரும்!

கம்யூனிச ஜோக்குகள் கம்யூனிசத்திற்கான எதிர்ப்பாகவே கருதப்பட்டன. ஒரு முறை அமெரிக்க அரசு, அமெரிக்கா சோவியத் நாட்டின் மீது படையெடுத்தால் அந்த நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள் என்று அறிய எண்ணியது. சோவியத் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மன் காம்ப்புகளில் வாழும் ஆயிரக்கணக்காவர்களை பேட்டி கண்டனர். சோவியத் அரசு எப்படிப்பட்டது என்று அவர்களை விளக்கிச் சொல்லுமாறு கேட்ட போது அகதிகள் ஜோக்குகளை உதிர்த்தார்கள்.

"உங்களுக்கு சோவியத் நாட்டிலிருந்து வெளியேற நினைத்த ஆடுகளைப் பற்றிய கதை தெரியுமா? அந்த ஆடுகள் நாட்டின் எல்லையில் நிறுத்தப்பட்டன. சோவியத் நாட்டை விட்டும் வெளியே செல்ல நினைப்பதற்கு காரணமென்ன என்று அங்கு இருந்த காவல்காரர் ஆடுகளிடம் கேட்டார். அதற்கு ‘ரகசிய போலிஸ்தான் காரணம்’ என சொல்லிய ஆடுகள், ‘ஸ்டாலின் நாட்டிலுள்ள எல்லா யானைகளையும் கைது செய்யச் சொல்லியிருக்கிறாராமே!’ எனத் தொடர்ந்தன. ‘யானைகளைத்தானே கைது செய்யச் சொல்லியிருக்கிறார்கள் – உங்களை இல்லையே!’ எனக் காவல்காரர் கேட்க, ஆடுகள், ‘அப்படியென்றால் இதை அந்த ரகசியப் போலிசிடம் சொல்லிப் பாருங்கள்’ எனக் கூறின"

கம்யூனிசத் தலைவர்களுக்கு உலக நடப்பைப் பற்றி எவ்வளவு ஞானம் இருக்கிறது என்பதற்கு சான்றாக இந்த ஜோக்கைச் சொல்லுவார்கள். ப்ரஸ்னேவ் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியைத் திறந்து வைக்கும்போது எழுதி வைத்த உரையைப் படிக்கிறார். ஒலிம்பிக்ஸ் சின்னமான வட்டங்களைப் பற்றி அறியாமல் "O-O-O-O-O" எனப் படிக்க உதவியாளர் அது ஒலிம்பிக் சின்னம் என்று கூறுகிறார்.

கம்யூனிச ஜோக்குகள் எவ்வளவு தூரம் அரசியல், சமுதாய, மனோதத்துவ ரீதியாக பலனளித்தன என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆனால் உண்மை என்னவென்றால் ஜெர்மன் சுவர் இடிக்கப்பட்ட பிறகு இது போன்ற ஜோக்குகள் வறண்டு விட்டன. வாழ்க்கை அவ்வளவு நகைச்சுவையானதாக அமையவில்லை. கம்யூனிசத்தின் வளர்ச்சி நகைச்சுவைக்கென உலகில் தனி பாணியை உருவாக்கியது. கம்யூனிச நகைச்சுவைகள் கம்யூனிசத்தை மாற்றாமல் போயிருக்கலாம். ஆனாலும் அவைகள் வெறும் ஜோக்குகள் மட்டுமல்ல; இந்த ஜோக்குகள் மக்களுடைய மனதில் மாற்று ஆட்சியைப் பற்றிய சிந்தனையைத் தோற்றுவித்தன. இந்த நகைச்சுவை உணர்வுதான் அவர்களை நாற்பதாண்டு கால கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் ஆக்கிரமிப்பின்போது பட்ட துன்பங்களை சமாளிக்கும் மனப் பக்குவத்தை ஏற்படுத்தின.

(ஆதாரம்: Prospect Magazine: Politics Essays Argument)

About The Author

2 Comments

  1. P.Balakrishnan

    பொதுவுடைமைக் கட்சிகள் பற்றி இதைவிட அதிகமான நகைச்சுவையைக் காணமுடியாதுதான்.

Comments are closed.