அ க தி (1)

ரிவ்கா கேரன் (ஹங்கேரி)

ஒரு ஜனவரி மாத சந்திநேர மயக்க இருள். பேராசிரியரும் அவர் மனைவியும் இஸ்லமொராதா பகுதியின் கடற்கரைப் பக்க ஒரு மோட்டலுக்கு, சாலையோர பயணியர் இல்லத்துக்கு வந்தார்கள். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஓய்ந்து விருந்தினர் இல்லாமல் வெறிச்சிட்டிருந்தது மோட்டல். வெக்கையும் புழுக்கமுமாய் பிரதான தெருவே பாசி பிடித்து நத்தைகள் அப்பிக் கிடந்தது. கடற்கரையில் ஏறிக்கிடக்கும் தோணிகள் இடையே பெலிகன் பறவைகள் மரப்பாலத்தின் பட்டைகளில் சிலையாய்த் தவமிருந்தன.

நீண்ட பயணத்தின் களைப்பில் அவர்கள் வியர்த்து கசகசத்து அயர்ந்திருந்தார்கள். ஒரு குளியல் போட்டு, உடை மாற்றிக்கொண்டு கீழே வந்தார்கள். உணவுப்பொருட்களையும் பானங்களையும் விற்கும் யந்திரங்களை, பனிச்சில்லுகள் கக்கும் பெட்டிகளைத் தாண்டி, நீச்சல் குளம் கடக்க, வெளியே புல்வெளி. அங்கங்கே பிளாஸ்டிக் தம்ளர்கள் சிதறி காற்றில் உயிர்கொண்டு புரண்டன. பின்பக்க கார் நிறுத்தும் இடம் ஜிலொன்னிருந்தது. சற்று தயங்கினாப் போல அவள் நின்றாள். அங்கேயிருந்து கடலைப் பார்க்க கிளைபிரிந்தது ஒரு ஒற்றையடிப்பாதை. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு ஆசுவாச நடை. சாண்டல் செருப்புகள் மணலில் சிக்காதபடி கவனமான நடை. கரை சின்னச் சின்ன அகலஉப்பங்கழிகளாக ஊடறுபட்டிருந்தது. உட்காரப் போட்டிருந்த நாற்காலிகள் தாறுமாறாய்க் கிடந்தன. அவற்றில் ரெண்டை இழுத்து, தூசி தட்டிவிட்டு அமர்ந்தார்கள்.

ஸ் ஸப்பா, ஒரு வழியா… என்றார் பேராசிரியர்.

அவள் பேசவில்லை. சுற்றிலுமான அமைதி. காற்றலைப்பில் கடல் ததும்பியபோது வண்ணங்கள் மாறின. வெளிர்நீலம். ஊதா. கருநீலம். பழுப்பு… என்னென்னவோ குழைவுகள். அப்படியே தாமிர மெருகு.

ரம்மியமாத்தான் இருக்கு, என்றாள் அவள். ஆனா ஜிலோன்னிருக்கு…

நாம அப்பிடி இருக்கணும்னு தானே இங்க வந்தோம், இல்லையா… என்றார் அவர். ஜெருசலம் அப்படியாய் இல்லை. அதான் அவர்கள் கிளம்பி வந்திருந்தார்கள்.

ம்… என்றாள் அவள். தகதகக்கும் வெளிச்சத்தில் அவள் கண்கள் பெரிய கடல்புறா ஒன்று சிப்பிச் சிதறல்களுக்குள் என்னவோ கிளறிக் கொண்டிப்பதையே பார்த்தன. தொடுவானத்தில் ஒரு படகு நிழலுருவம் காட்டியது. மெல்ல ஆகாயம் வைரங்களை வாரியிறைத்தது. கண்களால் அவர்கள் அவற்றையெல்லாம் அனுபவித்தபடி தங்கள் நினைவுகளுக்குள் மெல்ல அமிழ்ந்தார்கள். குப்பென எழுந்த அலை சீறி வந்து கரையைக் கடித்து உள்வாங்கியதில் வெண்சரிகை மடிப்புகள் பரந்து சுருங்கின, குழந்தை பாலருந்துகிறாப் போல அதன் சிறு சப்சப்-தம். காற்றில் வெண் சரிகையிட்ட மாதிரி, ஒரு சாக்ஸஃபோன் மேல்ஸ்தாயியில் இழைகிறது.

திரும்ப அமைதி கவிகிறது. இசை அடங்கிவிட்டது. சின்ன அலையடிப்பும் நீர் பாயும் ஒலியும் தவிர வேறு சப்தம் இல்லை. கதகதப்பான ஈரமணல். கால்களை அதில் புதைத்துக் கொண்டாள் அவள்.

திடுதிப்பென்று ஒரு ஒளிக்கற்றை அந்த இருட்டைக் கீறியது. கடல்பக்கமிருந்து வந்தது அது. கரையில் இருந்து ஒரு மின்னல்போன்ற வெளிச்சம் பதில் போல. தந்தி பாஷை சமிக்ஞை போல விரைவான பரிமாற்றங்கள்.
அதை கவனிச்சீங்களா, அவள் கேட்டாள்.

ம், என்றார் பேராசிரியர்.

என்ன அது, அவள் கேட்டாள்.

எனக்கு எப்படித் தெரியும், அவர் பதிலாய்க் கேட்டார். யாரோ மீனவர்களாட்டம் இருக்கு.

விளக்குகள் அணைவதும் எரிவதுமாய். தொடுவான வெளி தகதகத்து மெல்ல அடர்ந்துகொண்டு வந்தது. இந்தத் தீவை நோக்கி ஒரு ஒளிப்பந்து போல அந்த ஒளிக்கற்றை சர்ரென்று வருகி…. சடாரென்று அணைந்துவிட்டது அது. கரையில் அலைகள் ஹோவென பெரிசாய் எழும்பின.

அவள் எழுந்துகொண்டாள். அறைக்குத் திரும்பிவிட நினைத்தாள். அவர் கொஞ்சம் முனகி, பெருமூச்சு ஒன்றை விட்டார்.
உடம்பைத் திரட்டி எழுந்துகொண்டு கிளம்பினார். மீனவர்கள்… மெல்லச் சொன்னார். தனக்கே பேசிக்கொள்கிறாப் போலிருந்தது.
கைகோர்த்துக் கொண்டபடி அவர்கள் அறையைநோக்கித் திரும்பினார்கள். திரைச்சீலைகளும், மெத்தைவிரிப்புகளும் ஒரே துணி, ஒரே பூவேலைப்பாடு. மங்கலான அறைவிளக்கு வெளிச்சம்.

ச், ஒண்ணும் சொகமில்ல, இதைவிட நல்ல இடமா தங்கியிருக்கலாம்.

சமுத்திரம் பக்கமா போணும்னு நீதானே இவளே ஆசைப்பட்டே… அவர் பதில் சொன்னார். இதைவிட பக்கத்துக்கு எங்க போறது?

உடம்பெங்கிலுமாய் மணல் ஒட்டிக்கொண்டு கூட வந்திருந்தது. தண்ணித்தொட்டியில் அலசிக் கொண்டார்கள்.
ஏம்மா உனக்குப் பசிக்கலியா?

ச். வெளிய இறங்கவே வேணான்னு இருக்கு, என்றாள் அவள்.

பிட்சா கொண்டுவரச் சொல்லிரட்டுமா, அவர் கேட்டார். அவள் தோளை குலுக்கிக்கொண்டாள்.

மேல என்ன ஊத்தலாம், என்றவர், அவள் பதில் சொல்லாள் என உணர்ந்து, வழக்கமானதே சொல்லிரலாந்தானே? – என்றார்.
வழக்கமானதே, அவள் சிரத்தையில்லாமல் பதில் சொன்னாள். கைப்பையில் இருந்து சின்ன நோட்டுப்புத்தகத்தை எடுத்தாள். ஒண்ணுங்கீழ் ஒண்ணாக எண் கோபுரம். செலவுக் கணக்குகளைக் கூட்ட ஆரம்பித்தாள்.

அந்த மனுசன் தொலைபேசியில் கூப்பிட்டு பிட்சா கொண்டுவரச் சொன்னார்.

நியூயார்க்கில் கண்டபடி பணவிரயம் பண்ணிட்டம், என்றாள்.

அதான் இப்ப வெறும் பிசாத்து பிட்சான்னு டப்பா டான்சாடிட்டது – ஆனால் அதை உற்சாக தொனியில் சொன்னார். நாம சின்னப் பிள்ளைங்களா, வயசு கொறஞ்சிட்டாப்ல இருக்கில்ல?

இல்ல, என்றாள் அவள்.

அவர் என்னவோ தனக்குள் முணுமுணுத்தபடி முதுகுக்கு ரெண்டு தலையணையால் அணை கொடுத்துக் கொண்டார். ஃபைலை
சர்ரென்று ஜிப்பை பிரித்து ஒரு காகிதக்கற்றையை வெளியே எடுத்தார்.

(தொடரும்)

About The Author