நான் சொல்லப் போவது என் பாட்டியின் வாழ்க்கையில் நடந்தது. என்னுடைய தந்தை பதிமூன்று வயது இருக்கும் போது என் தாத்தா இறந்து விட்டார். எனது பாட்டியும் என் தந்தையும் மல்லிகைப்பந்தல் என்ற ஊரில் தாத்தாவின் பூர்வீகச்சொத்தான ஒரு சின்ன வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். வீட்டின் முன்பு ஒரு அகலமான சாலையும் சாலையின் எதிர் புறத்தில் விரிந்து வளர்ந்த பெரிய அரசமரமும் இருந்தன. சாலையின் வலது புறம் போனால் ஒரு பழங்கால சிவன் கோயில் இருந்தது.
தாத்தா எப்போதும் அந்த அரசமரத்தின் கீழே உட்கார்ந்து இருப்பாராம். நம்மைக் காப்பாற்றும் நம் மூதாதையர்களில் ஒருவர் தெய்வமாக இந்த மரத்தில்தான் இருக்கிறார் என்றுச் சொல்லி கை கூப்பி வணங்குவாராம். தாத்தா இருந்தவரை குடும்பம் எந்த சிரமமும் இல்லாமல் நடக்க, அவர் போனப் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் பாட்டி விழித்தாள்.
ஒரு வெள்ளிக்கிழமை காலையில் குளித்து விட்டு அரச மரத்து அடியில் போய் அமர்ந்தாள். "நீங்கள்தான் அவரின் தெய்வம் என்று சொல்லுவார். இப்போது எனக்கும் என் பையனுக்கும் நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்" என்று கை கூப்பி வேண்டினாள்.
அந்த அதிகாலை வேளையில் மரத்து இலைகள் அசையாமல் இருக்க சில்லென்ற காற்று சிவன் கோயில் பக்கம் இருந்து வீசியது. பாட்டி அதிசயமாக அத்திசை நோக்கிப் பார்த்தாள். அந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ஒரு பெரியவர் வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் அணிந்து எதிரே நிற்பது போல மங்கலாக தோன்றியது. பாட்டி பயபக்தியுடன் வணங்கினாள்.
அவர் வாய் அசையவில்லை. ஆனாலும் அவர் சொல்லுவது பாட்டிக்கு கேட்டது. "நீ உன் வீட்டின் வாசலில் ஒரு பூக்கடை வை. எல்லாம் நல்லபடியாக நடக்கும்."
தூய ஆவியர் கையைத் தூக்கி ஆசிர்வதித்து மறைந்தார். தாத்தாவின் கண்ணில் படாத அவரைப் பார்க்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி பெருமைப்பட்ட பாட்டி, ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டின் வாசலில் ஒரு பூக்கடை வைத்தாள்.
அந்த ஊரில் பெரிய தனவந்தரான ஒரு செட்டியரின் மகன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு மிகவும் மோசமான நிலையை அடைய, அவர் சிவனிடம் "என் மகன் குணமானால் கோயிலுக்கு தினமும் இரண்டு மாலையும் இருபது முழம் மல்லிகைப் பூவும் காணிக்கையாகச் செலுத்துகிறேன்" என்று வேண்டிக் கொண்டார்.
அவர் பையன் குணமடைந்து வீடு திரும்பவும், என் பாட்டி கடை திறக்கவும் சரியாக இருந்தது. பாட்டியிடம் வந்த செட்டியார் தினமும் தன் காணிக்கையைக் கோயிலில் செலுத்திவிட வேண்டும் என்று கூறி ஒரு தொகையை முன்பணமாக கொடுத்தார். அன்று முதல் கடை பிரபலமாகி பிழைப்புக்கும் பையன் படிப்புக்கும் எந்த தடையும் இல்லாமல் வாழ்க்கை நகர ஆரம்பித்தது.
கொஞ்ச நாள் கழித்து பக்கத்து வீட்டிற்கு தாசில்தார் ஆபிஸில் வேலை செய்யும் ஐயர் ஒருவர் வாடகைக்கு வந்தார். மிகவும் பக்திமானாகிய அவர் தினமும் பாட்டியிடம் பூ வாங்க ஆரம்பித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி, முறையாக கலசத்தை வைத்துப் புஷ்பங்களால் அலங்கா¢த்து, நல்ல வாசனை உள்ள மலர்களால் பூஜை செய்வார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மஹாலக்ஷ்மி மந்திரம், சௌபாக்யலக்ஷ்மி மந்திரம், அஷ்டலக்ஷ்மி மாலா மந்திரம், கமலவாசினி மந்திரம் என்று பலவிதமான மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வார். பூஜை முடிந்ததும் மூன்று சுமங்கலிகளுக்கு புதுத்துணி, பலகாரம் கொடுத்து அனுப்புவார். கடைசியில் ஒரு தட்டில் நிறைய பலகாரங்களை வைத்து பாட்டி வீட்டிற்கு அனுப்புவார். பல வெள்ளிக்கிழமைகளில் என் தந்தைக்கும், பாட்டிக்கும் அதுவே இரவு உணவாக அமைந்தது.
அவர் வந்த ஆறு மாதத்தில் அவர் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணமும் நல்லபடியாக நடந்து அவள் மாமியார் வீடு சென்றாள். அந்த வருடத்திலேயே அவர் பையன் பட்டப்படிப்பை முடித்து ஒரு வங்கியில் கேஷியர் வேலையில் சேர்ந்தான்.
ஐயர் அடிக்கடி என் பாட்டியிடம் "நான் கும்பிடும் மஹாலக்ஷ்மி கண்ணைத் திறந்து விட்டாள்" என்று ஆனந்தமாக சொல்லுவார்.
இரண்டு வருடங்கள் இப்படியே நல்லபடியாக ஒடியது. என்னுடைய அப்பாவும் பி.யு.சி. பரிட்சை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தார்.
அப்போதுதான் ஐயரின் வீட்டில் துன்ப அலை வீசத் தொடங்கியது. யார் கண்பட்டதோ தெரியவில்லை. ஐயர் ஆபீஸில் யாரோ ஒருவர் லஞ்சம் வாங்கி அதை, போலீஸ் சோதனைக்கு வந்த போது – ஐயர் மேஜையறையில் போட்டுவிட, ஐயரை "சஸ்பென்ட்" செய்து விட்டார்கள்.
கொஞ்ச நாளில் அவர் மகளும் ஒரு வயது குழந்தையுடன் வந்து சேர்ந்தாள். கணவன் குடித்துவிட்டு தினமும் அடித்து கொடுமைப் படுத்துவதாகவும் அவனோடு வாழ முடியாது என்றும் சொல்லிவிட்டாள்.
இந்த துன்ப அலைகளில் இருந்து மீள்வதற்குள் ஐயா¢ன் மகன் ஆபிஸில் பெருத்த அளவில் பணம் காணாமல் போக ஐயரின் மகன்தான் திருடி இருக்கவேண்டும் என்று சந்தேகப்பட்டு போலீஸ் அவனை சிறையில் அடைத்தது.
துன்பத்திற்கு மேல் துன்பம். ஐயர் என்ன செய்வார்? மனம் உடைந்து போனார். நடைப்பிணம் போல உலவ ஆரம்பித்தார்.
ஒரு வியாழக்கிழமை மாலை 5 மணி இருக்கும். என் தந்தை திண்ணையில் உட்கார்ந்து படித்துக்கொண்டு இருந்தார். ஐயர் வந்து பாட்டியைக் கூப்பிட்டார்.
"அம்மா, நாளையிலிருந்து நான் லக்ஷ்மி பூஜை செய்யப் போவதில்லை. எனவே எனக்கு நாளை பூக்கொடுக்க வேண்டாம்." என்று சொன்னார். சொல்லும்போதே அவர் குரல் மங்கியது. சொல்லிவிட்டு "தடக்"கென்று போய்விட்டார்.
நடந்தது அனைத்தும் தொ¢ந்த என் பாட்டி, என்ன செய்வது, எப்படி அவரைத் தேற்றுவது என்பது தெரியாமல் விழித்தாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அரச மரத்து பெரியவர்தான்.
உடனே குளித்துவிட்டுப் போய் அரச மரத்தடியில் கை கூப்பி உட்கார்ந்தாள். தொலைவில் கோயில் மணி அடிப்பது கேட்டது. கோயில் பக்கமாக அரசமரத்தின் அருகே தூய ஆவியார் தோன்றினார். பாட்டி மவுனமாக, தான் வந்த காரணம் அவருக்கு நிச்சயம் தொ¢யும் என்ற நம்பிக்கையுடன், பேசாமல் கைகூப்பி எழுந்து நின்றாள்.
அவர் பேசாமல் பேசியது கேட்டது.
"ஐயரின் ஊழ்வினை சாபம் அவரைப் பாடாய்ப் படுத்துகிறது. வீட்டிற்கு வெளியே, அரச மரத்தின் அடியே இருக்கும் கறுப்பு எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றிற்கு அ¡¢சி, சர்க்கரை, நெய் கலந்து 48 நாட்கள் போட்டு வர சாப நிவர்த்தியாகும். தெய்வத்திடம் கோபம் கொள்வதில் பலன் இல்லை.
"நாளை மாலை வழக்கம் போல பூ கொண்டு போய் அவரிடம் கொடுத்து பூஜையைத் தொடர்ந்து செய்ய சொல். மஹாலக்ஷ்மியின் கருணை எல்லையற்றது. அனைத்தும் நல்லப்படியாக முடியும்." சொல்லி விட்டு மறைந்து விட்டார்.
அடுத்த நாள் மாலை பாட்டி வழக்கம் போல பூக்களைக் கூடையில் வைத்து ஐயர் வீட்டிற்கு சென்றாள்.
அவர் ஆச்சா¢யமாக "நான் நேற்றே பூ வேண்டாம் என்று சொன்னேனே, ஏன் கொண்டு வந்தாய் ?" என்று கேட்டார்.
என் பாட்டி நடந்தவைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டு "பெரியவர் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும், சாமி. நீங்கள் வழக்கம் போல இன்றும் பூஜை செய்யுங்கள். எறும்பு புற்றிற்கும் உணவிடுங்கள். நான் போய் வழக்கமாக வரும் சுமங்கலிகளை வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டு அவர் முகத்தைப் பார்த்தாள்.
சற்று நேரம் யோசனை பண்ணிய ஐயர் "சரி, அப்படியே ஆகட்டும். போய் சொல். நான் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.
அன்று மிக அற்புதமாக முழு ஈடுபாட்டுடன் பூஜையை செய்து முடித்து விட்டு ஐயர் சொன்னார்:
"மஹாலக்ஷ்மி அஷ்டகத்தில் ஒரு வா¢ வருகிறது. மஹாலக்ஷ்மி நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நமக்கு எது நன்மையோ அதையே கண்காணித்து அருள் செய்து வருவாள். அவளின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்க வேண்டிக்கொள்வோம்" கண்கள் கலங்க கை கூப்பி வேண்டினார்.
அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.
அடுத்த மாதம் ஐயர் ஆபிஸில் மற்றொருவர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிப்பட்டார். விசாரித்தப்போது ஐயரின் மேஜையறையில் லஞ்சப்பணத்தை போட்டதை ஒத்துக்கொண்டார். ஐயர் எந்த பாதிப்பும் இல்லாமல் வேலையில் சேர்ந்து விட்டார்.
மகன் சிறையில் இருக்கும் போது, திருடியவன் பணத்தைத் தாராளமாக செலவு செய்ய, எல்லாரையும் கண்காணித்து வந்த போலீஸ் அவனைப் பிடித்து முறையாக விசாரித்தது. நான் தான் பணத்தை எடுத்தேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டான்.
போலீஸ் ஐயரின் மகனை விடுதலை செய்தது. "உங்களை காவலில் வைத்து இருந்தால்தான் உண்மையான திருடன் மாட்டுவான் என்ற எண்ணத்தில்தான் உங்களை காவலில் வைத்து இருந்தோம். இப்போது உண்மையான குற்றவாளி மாட்டிவிட்டான். நீங்கள் போகலாம்" என்றது.
ஐயரின் வீடு கொஞ்சம் களை கட்டியது. ஆனாலும் பெற்ற பெண் கண் கலங்கி வீட்டில் இருந்தது குடும்பத்தினருக்கு என்னவோ போல இருந்தது.
ஒரு நாள் நன்றாகக் குடித்துவிட்டு அவள் கணவன் பஸ்ஸில் இருந்து இறங்கும் போது விழுந்து பலத்த காயம் அடைந்தான். அவனை கவனிக்க ஆள் இல்லாமல் தவித்த போது ஐயா¢ன் மகள் அவன் கூட இருந்து தன் கஷ்டம் பாராமல் இரவு பகலாக கவனிக்க, அவன் முழுவதும் குணம் அடைய மூன்று மாதம் ஆனது.
அதுவரை குடிக்காமல் இருந்த அவன் தன் மனைவியின் அருமையைப் புரிந்து கொண்டு ஐயா¢டம் வந்து தன் குற்றத்தை ஒத்துக் கொண்டு தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.
"நீங்கள் நன்றாக இருந்தாலே போதும்" என்று ஐயர் அவர்களை வாழ்த்தி வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க, மகளின் குடும்பமும் நிம்மதியாக வாழத் தொடங்கியது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை பாட்டி அரச மரம் அருகே செல்ல, அதன் அடியில் அமர்ந்து இருந்த ஐயர் எழுந்து நின்றார்.
"ஐயா, நீங்கள் எங்கே ………." என்று பாட்டி இழுத்தாள்.
"நான் செய்ய இருந்த ஒரு மகத்தான தவற்றைச் சுட்டிக்காட்டி, திருத்தி, எனக்கு மஹாலக்ஷ்மியின் கருணை வெள்ளம் கிடைக்க காரணமானவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அவர் என் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் இங்கே அருகில் இருக்கிறார் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.” என்று கூறிவிட்டு, ஐயா, உங்களுக்கு என் சார்பிலும், என் குடும்பத்தினர் சார்பிலும் மிகுந்த நன்றி" என்று கூறி அரச மரத்தின் கீழே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
பாட்டி கோயில் பக்கம் பார்த்தாள். பெரியவர் புன்னகையோடு ஐயரை ஆசீர்வாதம் செய்வது தெரிந்தது.