சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் துண்டுகள் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 1 கப்
தேங்காய் – 1/2 கப்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
பொட்டுக் கடலை – 2 ஸ்பூன்
மிளகாய்/உப்பு/ எண்ணெய் – தேவைக்கேற்ப
வெங்காயம்/க.பருப்பு/கருவேப்பிலை/கடுகு – சிறிதளவு (தாளிக்க)

செய்முறை:

ஒரு கடாயில் கொத்தமல்லி, சீரகம், மிளகைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய வெங்காயத்தின் சூடு ஆறியதும் பாதி தேங்காய், வறுத்து வைத்துள்ள கொத்தமல்லி, சீரகம், மிளகுக் கலவை ஆகியவற்றுடன் தேவைக்கேற்ப மிளகாய் சேர்த்து மிக்சியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த கலவையில் சிறிதளவு எடுத்து தனியே வைத்துவிட்டு கழுவிய சிக்கன் துண்டுகளுடன் கலந்து, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வைத்திருக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கலவையைக் கொட்டி சிக்கனை வேக விடவும். மேற்சொன்ன கலவையை தோசை மாவு போல் தண்ணீர் சற்று அதிகம் கலந்து அரைத்திருப்பதால் அந்த தண்ணீரிலேயே சிக்கன் வெந்து விடும்.

சிக்கன் வெந்ததும் மீதியிருக்கும் தேங்காய்,பொட்டுக் கடலை, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து சிறிதளவு தனியே எடுத்து வைத்து விட்டு சிக்கனுடன் சேர்க்கவும். இரண்டாவது கலவை சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

வெந்த சிக்கன் துண்டுகளில் எலும்புடன் ஒன்றிரண்டு விட்டு விட்டு மீதியை தனியே எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு குழம்பிற்கு தாளிக்கவும். இன்னொரு பாத்திரத்திலும் அதே போல் தாளித்து இரண்டு கலவைகளிலும் சிறிது எடுத்து வைத்த விழுதைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அத்துடன் தனியே எடுத்து வைத்த சிக்கனை கலந்து வைத்து விடுங்கள்.

விருந்தினரை அசத்தும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் ரெடி!

About The Author

5 Comments

Comments are closed.