"நேத்துத்தான் இந்தப் பய மாணிக்கம் சொன்னாம்மா, புள்ள உண்டாகலன்னு ஒன்ன ஒதுக்கி வச்சிட்டானாமே ஒம் புருஷன், என்ன அநியாயம்டி இது! புள்ள இல்லாதது ஒரு கொறையா? அப்படிப் பாத்தா எனக்குந்தான் புள்ள இல்ல, ஆனா நா எப்படி ராணியாட்டமா இருக்கேன் பாத்தியா?"
"நீங்க உண்மயிலேயே ராணி தானே ராணியம்மா?"
"ஒன்னயும் ராணி மாதிரியே நா வச்சிக்கிருதேன் சிவகாமி. இந்த ஒட்டுப்போட்ட புடவையயெல்லாம் கழட்டி எறி. நா ஒனக்கு நல்ல துணிமணி தாறேன். நீ வேல ஒண்ணும் செய்ய வேண்டாம். எனக்குத் தொணையா இரு, போதும்."
சிவகாமிக்கு ராணியம்மா செய்கிற உபசரணைகளைப் பார்த்த போது இந்தப் பொம்பளக்கிக் கோட்டி கீட்டி புடிச்சிருச்சா என்று மாணிக்கத்தின் நினைப்பு ஓடியது. ஒன்றும் பேச முடியாமல் மாணிக்கம் பொறுமையிழந்து காத்திருந்தான், தன்னுடைய செயல்களுக்கு ராணியம்மா ஒரு விளக்கம் வைத்திருப்பாள், தன்னிடம் சொல்லுவாள் என்று.
சிவகாமிக்கு விருந்து படைத்து, உடுத்திக் கொள்ள நல்ல உடைகள் எடுத்துத்தந்து, அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்கு ஓய்வெடுக்க அவளை அனுப்பிவிட்டு ராணியம்மா மாணிக்கத்தைப் பார்த்து ஒரு விஷ(ம)ப் புன்னகை சிந்தினாள். அது மாணிக்கத்துடைய குழப்பத்தை அதிகரித்தாலும், இதில் ஏதோ விஷ(ய)ம் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
மாணிக்கம் பரிமாற, ராணியம்மா மதிய உணவை ஒரு பிடி பிடித்தாள். பிறகு மாணிக்கத்திடம், சாப்பிட்ட பிறகு தன்னுடைய அறைக்கு வரும்படிச் சொல்லிவிட்டுப் போனாள்.
சஸ்பென்ஸ் தாங்காத மாணிக்கம், மளமளவென்று அள்ளிக் கொட்டிக் கொண்டு அடுத்த ஆறாவது நிமிஷம் ராணியம்மாவின் அறையில் ஆஜரானான்.
அறையில் வைத்து ராணியம்மா மாணிக்கத்திடம் கேட்ட முதல் கேள்வி, ‘புதுசா வந்திருக்கானே பையன், ஒன் அஸிஸ்ட்டன்ட், அவன் ஆள் என்ன மாதிரி?’
மாணிக்கம் கொஞ்சமும் தயங்காமல் அப்துல்காதருக்கு ஸர்ட்டிஃபிகேட் வழங்கினான்.
"சுறுசுறுப்பான பையன் ராணியம்மா. நல்ல கெட்டிக்காரன்."
"ஆயுசும் கெட்டிதான் அவனுக்கு."
"என்ன சொல்றீங்க ராணியம்மா?"
"வெவரமா சொல்றேன், கவனமாக்கேளு. ஒம்மேல நம்பிக்க வச்சு இதச் சொல்றேண்டா மாணிக்கம், வெளிய யாருக்கும் தெரியக்கூடாது."
"சொல்லுங்க ராணியம்மா."
"இந்த சிவகாமிய நா எதுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னேன் தெரியுமா?"
"அது தெரியாமத்தானே ராணியம்மா நேத்துலயிருந்து நா மண்டைய ஒடச்சிட்டிருக்கேன்.!"
"நா சொல்றதக் கேட்டு ஷாக் ஆயிராத. இந்த சிவகாமிய நம்ம தோட்டத்துல பலி குடுக்கப் போறேன். நர பலி."
அதிர்ந்து போனான் மாணிக்கம்.
"ராணியம்மா!"
குரல் வளைய அழுத்திக் கொண்டு ஒலியெழுப்ப முயல்கிற மாதிரி, வால்யூமைக் குறைத்து அலறினான்.
‘டென்ஷன் ஆகாதடா மாணிக்கம்’ என்று ராணியம்மா அவனை சமனப்படுத்தினாள்.
"நீ இந்த சமஸ்தானத்துக்கு விஸ்வாசமானவன். ஒம்மேல நம்பிக்க வச்சித்தான் இந்த ரகசியத்த ஓன்ட்ட சொல்றேன். உணர்ச்சி வசப்படாம கேளு. நீ என்னோட ஒத்துழச்சா ஒனக்கு வெகுமதி கெடக்யும். என்ன, சொல்லட்டுமா?"
தோள்ப்பட்டைப் பட்டியில் சொருகியிருந்த மேஜை துடைக்கிற துணையை எடுத்து முகத்து வியர்வையை அழுத்தித் துடைத்தபடி ‘சொல்லுங்க ராணியம்மா’ என்றான் மாணிக்கம்.
ராணியம்மா ஒரு திகில்க் கதை சொன்னாள்.
"நம்ம தோட்டத்ல புதையல் ஒண்ணு இருக்குன்னு ஒரு மநதிரவாதி சொன்னாண்டா மாணிக்கம். எக்கச்சக்கமான தங்க நகை இருக்குன்னு மை போட்டுப் பாத்துச் சொன்னான். ஆனா அத எடுக்கணும்னா ரெண்டு நரபலி குடுக்கணும். எனக்கு இந்தப் புதுப்பையன் ஞாபகந்தான் சட்னு வந்தது. ஆனா, மந்திரவாதி அத ஒத்துக்கல. ஒரு பெண்பலி தான் குடுக்கணும்ங்கறான். ஏற்கனவே ஒரு ஆண்பலி குடுத்துட்டதால, இப்பப் பெண்பலி தான் குடுக்கணுமாம்."
இந்த இடத்தில் ராணியம்மா நிறுத்தினாள்.
‘ஏற்கனவே ஒரு ஆண்பலி குடுத்துட்டதால’ என்கிற வாக்கியம் மாணிக்கத்தின் கண்களை அகலமாய் விரிய வைக்கும் என்று அவளுக்குத் தெரியும்.
மாணிக்கம் அவளை அகலப் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, ராணியம்மா தொடர்ந்தாள்.
"மஹாராஜா திடீர்னு காணாமப் போனது யார் வேலன்னு நெனக்கிற? அந்த மந்திரவாதி வேல தான். சரியாச் சொல்லப் போனா, அது என்னோட வேல. அடேய் மாணிக்கம், வாரிசு இல்லாத சமஸ்தானம்டா இது. வாரிசு இல்லாமப் போனதுக்கு யார் காரணம்னு நெனக்கிற? சிவகாமி மாதிரி நா மலடியா? இல்லவே இல்ல. எனக்கு வாய்ச்ச புருஷன், ஒங்க மஹாராஜா ஒரு வடிகட்டின மலடன். ஆண்மையில்லாத ஆத்மா. அந்த ஆளால எனக்கு வாழ்க்கையில ஒரு சந்தோஷமுமில்ல, ஒரு ப்ரயோஜனமுமில்ல. புதையல எடுக்கவாவது அந்த மனுஷன் ப்ரயோஜனப் படட்டுமேன்னு மந்திரவாதி கூட சேந்து மஹாராஜாவப் பரலோகத்துக்கு அனுப்பி வச்சேன். இப்ப மந்திரவாதி சொல்றான், அந்தப்பலி பத்தாது, ஒரு பெண் பலியும் இருந்தாத்தான் பலி பூரணமாகும், அப்பத்தான் புதையல் எடுக்க முடியும்னு. அதுக்காகத்தான் இந்த சிவகாமியத் தள்ளிட்டு வர ஒன்ன அனுப்பிச்சேன். இல்லாட்டி இந்த சனியனுக்கு எங்கையால விருந்து பரிமாறணும்னு எனக்கென்ன தலையெழுத்தா! அனாதிக் கழுத. கமுக்கமா காரியத்த முடிச்சிட்டா கேக்க ஆளிருக்காது. நீ என்ன செய்ற, ராத்திரி சாப்பாட்டுக்குப் பெறகு ஐஸ்க்ரீம்லயோ காப்பிலயோ மயக்க மருந்து கலந்து சிவகாமிக்கிக் குடுத்துர்ற. ராத்திரி மந்திரவாதி வருவான். மீதி வேலய அவன் பாத்துக்குவான். ராத்திரி கவனமாயிரு. இப்ப நீ போகலாம்."
(தொடரும்)
வணக்கம்! அருமையான ஆரம்பம்! தொடர்ச்சியை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்!