ஹலோ ஃபிரெண்ட்ஸ்,
நான் இங்கே நல்லா இருக்கேன். நீங்க எல்லோரும் சுகந்தன்னே?
கடந்த வாரம் தாமரை இல்லப் பெண்களுக்கு நிலா தன்னுடைய தோழி சுகந்தியின் ஒலிவடிவ செய்தியை அனுப்பியிருந்தாங்க. குழந்தைகளுக்கான சின்ன கதை மாதிரி சொல்ல ஆரம்பிச்சு அதன் மூலமா அழகான ஒரு செய்தியும் சொல்லியிருந்தாங்க நம்முடைய தோழி சுகந்தி. இதுதான் அந்தக் கதையின் சுருக்கம்:
இரயில் நிலையத்தை விட்டுக் கிளம்பிய இரயில் என்ஜின் கொஞ்ச தூரம் போனதும் உடைந்த தண்டவாளங்களின் காரணமாக விபத்துக்குள்ளாகிறது. உடைந்து போன இரயில் என்ஜினின் கதி அவ்வளவுதான் என்றில்லாமல், ஒரு கலைஞனின் மூலமாக தன்னுடைய உள்ளக் கருணையை கடவுள் வெளிப்படுத்துகிறார். இரயில் என்ஜினைப் பிரித்தேடுத்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டியெடுத்து பல ஆயிரம் காற்று கிண்கிணிகளை (Wind Chime) உருவாக்குகிறான் அந்த கலைஞன். அதே போல் வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கண்டு சோர்ந்து போகாமல், அதனுள்ளே ஒளிந்திருக்கும் வாய்ப்புகளைத் தேடி கண்டெடுத்து, பயன்படுத்தி, வாழ்வில் வளம் பெறவேண்டும்னு சொல்லியிருந்தாங்க. கதை மட்டுமில்லாம அதற்கேற்ற பின்னணி இசையையும் சேர்த்திருந்தது வித்தியாசமானதாக மட்டுமில்லாமல் சுவாரஸியமாகவும் இருந்தது.
Wind chime என்கிற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை தெரியாமல் தடுமாறினாங்களாம் சுகந்தி. மற்றவர்கள் தன்னைப் பத்தி என்ன நினைப்பார்களோ என்று எண்ணாமல், வெட்கப்படாமல் பலரிடமும் கேட்டு, அவருடைய விடாமுயற்சியின் பலனாக Wind chimeக்கு இணையான பல தமிழ் வார்த்தைகளை (வழி மணி, வழி குழல் மணி, காற்றுக் கிண்கிணி, வழி கிண்கிணி, தென்றற்கிணுக்கு, காற்றுக் கிணுக்கு) தெரிந்து கொண்டதைப் பற்றியும் சொல்லியிருக்காங்க. அந்தச் செய்தியில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
"கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன். கேட்பது கிடைக்கும் வரை கேளுங்கள். கதவுகள் திறக்கும் வரை தட்டுங்கள். கேள்விகளை மாற்றிக் கேளுங்கள். கதவுகளைத் தட்டும் விதத்தை வித்தியாசப்படுத்துங்கள். உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் வரை உலகமே உங்கள் வசம்."
இந்தக் கதையைக் கேட்ட பிறகு இது மாதிரியான ஒலிவடிவ கதைகள் செய்யறதுல ஒரு தனி ஆர்வம் வந்திருக்கு. (நிலாவின் வழிகாட்டுதலும், உங்களுடைய துணையும் இருக்கும் என்கிற நம்பிக்கையிலதான் இப்படி எல்லாம் யோசிக்கிறேன்!)
போன வாரம் முழுக்க நண்பர்கள் வாரமா உலகம் முழுவதும் கொண்டாட்டம் தூள் பறந்திருக்கு. பொதுவா நண்பர்கள்னா அடிக்கடி பேசுவாங்க, சேர்ந்து வெளிய போவாங்க (எல்லோருமே அப்படித்தான்னு சொல்லலை. இது ஒரு பொதுவான கருத்து!) அப்படீன்னு பலர் நினைக்கிறதுண்டு. என்னுடைய நண்பர்கள், தோழிகள்கிட்டேயிருந்து மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலமா நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வந்தன. எங்களுடைய நட்பு குழுவில் ஒரு சின்ன புரிதல் உண்டு. நாங்க எல்லோரும் தொலைபேசி/அலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாவோ அதிகம் பேசிக்கறதில்லை. ஆனா ஒரு நண்பருக்கோ (அ) தோழிக்கோ தேவையிருக்கும் பட்சத்துல அங்கே இருக்கத் தவறுவதில்லை. அது எப்படி தெரியவரும்னு நீங்க கேட்கலாம். ஏங்க தொலையுணர்தல் (telepathy) காதலர்களுக்கிடையே மட்டும்தான் இருக்கணுமா? நல்ல அன்பான ஆரோக்கியமான நட்புகளுக்கிடையே கூட தொலையுணர்தல் இருக்கலாமில்லையா! எல்லாம் சரிஸ உங்களுடைய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லிட்டீங்க இல்லையா?
முந்தைய அரட்டையில EFT மூலமா என்னுடைய தோள் வலி சரியானதா எழுதியிருந்தேன் இல்லையா? அதைப் படிச்சிட்டு என்னுடைய நண்பர் ஒருத்தர் "அதேப்படி இவ்வளவு வருஷமா இருந்த வலி சில நாட்களிலேயே சரியாப் போச்சு? அதென்ன மேஜிக்கா?"ன்னு எங்கிட்ட வாதம் செய்ய ஆரம்பிச்சாரு. அப்போ நான் அவர்கிட்டே சொன்னேன் "பொதுவா மேஜிக் எல்லாம் சினிமாவிலும், கதைகளிலும்தான் சாத்தியம்னு பலரும் சொல்லுவாங்க. ஆனா என்னைப் பொறுத்தவரை எல்லோருடைய வாழ்விலும் மேஜிக் நடக்கிறதுண்டு. எதுவுமே நாம் பார்க்கும்/எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கு. வலி பல வருஷமா இருந்திருக்கலாம். ஆனா அந்த வலிக்கான அடிப்படைக் காரணம் தெரிஞ்சுக்க பல வருஷமாகணும்னு அவசியமில்லை. இதுக்கு முன்னாடி பல முறை நானே EFT முறைகள் தனியா செய்தபோதெல்லாம் என்னுடைய வலியில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. பிரச்சனைக்கான அணுகுமுறை மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும். இந்த முறை நிலாவுடன் நான் இணைந்து செய்யும்போது, அவங்க என்னிடம் கேட்ட கேள்விகளின் மூலமா என்னுடைய வலிக்கான காரணத்தை ஒரு புதிய பரிணாமத்தில் யோசிக்க ஆரம்பிச்சேன். அதனால என்னுடைய வலி படிப்படியா குறைஞ்சுது. அதனாலேயே தோள் வலி சில நாட்களிலேயே சரியானது. இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ன்னு கேட்டேன். நல்லாவே புரிஞ்சுதுன்னு சொன்னாரு. இப்போ நான் ‘இதையேதான் என்னுடைய அரட்டையிலும் எழுதியிருந்தேன். அப்போ உங்களுக்கு புரியலை. அதையே இப்போ நேரிலே விளக்கும்போது புரியுதே! எப்படி நடந்தது இந்த மேஜிக்கு?"ன்னு கேட்டேன். பதில் சொல்லத் தெரியாம பயங்கரமா முழிக்க ஆரம்பிச்சுட்டாரு. பாவம்!
சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாள்ல ‘Look, I can swim (பாருங்க, என்னால் நீந்த முடிகிறது)’ என்ற கட்டுரையைப் படிச்சேன். அலைபேசியின் மூலமா அவங்களோட தொடர்பு கொண்டு பேசினேன். அவங்களைப் பற்றின ஒரு சின்ன அறிமுகம் அப்புறம் அவங்ககூட என்னெல்லாம் பேசினேன்னு ஒலிவடிவ அரட்டையில சொல்லியிருக்கேன் கேளுங்க. அது மட்டுமில்லாம சமீபத்துல நான் ரசிச்சுப் பார்த்து கேட்ட ஒரு பாடலைப் பற்றியும் சொல்லியிருக்கேன்.
Blog: http://yeswetoocan.blogspot.com
Email: madavi.prathi@gmail.com
சூரியகலாவோட படிப்பின் ஆர்வம் அறிந்து அவளுடைய படிப்புக்கான செலவை ஏற்றிருப்பவரைப் பற்றி நம்முடைய அரட்டையில் ஒருமுறை சொல்லியிருந்தேன் இல்லையா? அவங்களுடைய பெயர் திருமதி. சுகுணா. இதுவரை அவங்ககூட மொத்தம் 4 முறை பேசியிருக்கேன். ஆனா கடைசியா போன வாரம் அவங்களோட பேசினபோதுதான் அவங்களைப் பத்தின நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க மத்திய தர வகுப்பினை சேர்ந்தவங்க. அவங்க கணவரின் உபகார சம்பளத்தில் அவங்களுடைய தேவை போக மீதமிருக்கும் பணத்தைக் கொண்டு சூரியகலாவிற்கு உதவறாங்க. ‘வாழ்க்கையில நிறையப் பார்த்துட்டேன். இனிமே வேற எதுவும் வேணும்னு எங்களுக்குத் தோணலை. சூரியகலாவின் படிப்பு மாதிரியான உதவிகளை மத்தவங்களுக்கு செய்யும்போது மனநிறைவு ஏற்படுது. ஆனா அதுகூட கொஞ்ச நாள்ல கரைஞ்சு போயிடுது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். கரைஞ்சு போகலைன்னா இதுவரைக்கும் செய்தது போதும்ன்னு தோணிடுமே!’ன்னு சொல்றாங்க. அவங்களோட பேசினது நல்ல அனுபவமா இருந்தது.
என்னவோ தெரியலை இந்த வாரம் எனக்குக் கிடைச்ச கொடைகளை உங்ககிட்டே பகிர்ந்துக்கணும் போலிருக்கு.
1. சுகுணா மேடம்கிட்டே பேசினது.
2. தோழி சுகந்தியின் இரயில் கதையை கேட்டது.
3. மாதவி லதாவுடன் பேசினது.
சரி.. கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வரலாமா? என்ன இது போட்டோ மட்டுமிருக்கு. இதைப் பத்தின செய்தியை எழுத மறந்துட்டேன்னு நினைக்கறீங்க இல்லையா? அதுதான் கிடையாது. ஒலி வடிவ அரட்டையில இது சம்பந்தமான செய்தியைச் சொல்லியிருக்கேன். கேளுங்க…
சரிங்க இன்னும் அரட்டையடிக்க நிறைய விஷயம் எங்கிட்ட இருந்தாலும் உங்களுக்கு ஒரு சின்ன விளம்பர இடைவெளி கொடுத்துடறேன். தொலைக்காட்சியின் தொடர்களில் வரும் விளம்பர இடைவெளி மாதிரி பெரிய இடைவெளியா இல்லாம ஒரே ஒரு வாரத்துக்கான சின்ன இடைவெளி இது. இடைவெளி முடிஞ்சு அடுத்த அரட்டையில் சந்திக்கும் வரை டா டா… பை பை… ஸீ யூ…
“