காலப்போக்கில் பல யாப்பு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. பழைய மரபு வகைப் பாடல்கள் பலவற்றை இயற்றுவதற்குக் கவிஞர்கள் வெகுவாய் குறைந்துவிட்டபோதிலும், சதுரங்க பந்தத்தைப் பாடலில் அமைத்துப் பாட வல்லவர்கள் இன்றும் இருக்கின்றனர்.
இவர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் திகழ்பவர் புலவர் பா.முனியமுத்து. சித்திரக் கவிகளைப் பற்றி ஆய்வு நடத்தி ஒரு நூலையே வெளியிட்டுள்ளார். ‘சிற்றிலக்கியத்தில் மடக்கணி’ என்ற ஆய்வுக்காக அவர் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றுள்ளார். 19 கவிதை நூல்களை எழுதியுள்ள இவரின் புனைபெயர் உவமைப் பித்தன். 130க்கும் மேலான கவியரங்குகளுக்குத் தலைமை வகித்துள்ள இவர் 800க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
இவர் இயற்றிய சித்திரக் கவிகள் ‘செந்தமிழ்த்தாய் திருவாயிரம் – தொகுதி 1’ என்ற பெயரில் சிலேடைப் பதிப்பகம் (எம்.ஆர்.நகர், சென்னை -600178) நிறுவனத்தால் 2001ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளன.
அதில் சதுரங்கப் பந்தப் பாடல்கள் இரண்டு இடம் பெற்றுள்ளன. ஒன்றில் நான்கு பக்கங்களிலும் ஈற்றடி ஒன்றாக இருப்பது போல அமைந்துள்ளது. இன்னொன்று ‘ஆனையடி சதுரங்க பந்தம்’.
முதல் பாடலைப் பார்ப்போம்:
மாரி விரிமனமே மாமழைப்போய் வானழைமாதே
நீரிடத்தால் மாதவம் நீண்டதொரு – வாரிதமிழ்
ஆரியத்தை வெல்லும் அமிழ்மித மாழைமரி
மாரி மழைமா தமிழ்
கவிதையைப் படிக்கக் கட்டங்களில் 1, 2, 10, 9, 17, 18, 19, 11, 3, 4, 12, 20, 28, 27, 26, 25, 33, 34, 35, 36, 37, 29, 21, 13, 5, 6, 14, 22, 30, 38, 46, 45, 44, 43, 42, 41, 49, 50, 51, 52, 53, 54, 55, 47, 39, 31, 23, 15, 7, 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 63, 62, 61, 60, 59, 58, 57 என்ற வரிசையில் செல்ல வேண்டும்.
பாடல் முழுதுமாக அமைந்து விட்டது. அத்துடன் நான்கு பக்கங்களிலும் ‘மாரி மழைமா தமிழ்’ என்ற கடைசி அடியும் அமைந்து விட்டது. (ஈற்றடி மேலே சதுரங்க அறைகளில் மஞ்சள் வண்ணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). ஈற்றடி மேலே இடமிருந்து வலமாகவும் கீழே வலமிருந்து இடமாகவும் அமைந்திருக்கிறது. அதே போல வலப்பக்கம் மேலிருந்து கீழாகவும் இடப்பக்கம் கீழிருந்து மேலாகவும் அமைந்துள்ளது.
அடுத்த பாடலைப் பார்ப்போம்:
பாரத மாத்தேரி லூவரும் பண்தாயே வாணியகம்
காரிகை தந்தே மகிழ சமத்துவ மித்தரையில்
மாருத மாண்புபோல் பாதம்சீர் மான நிலமிசையே
தாரணி பாநறவு பூங்கா மலர்த மிழணியே
பாடலைப் படிக்கக் கட்டங்களில் 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 15, 22, 29, 36, 43, 50, 57 எனும் வரிசையில் பயணிக்க வேண்டும்.
மஞ்சள் வண்ணம் கொண்டிருக்கும் குறுக்குக் கட்டங்களில் ‘பாரதமாத்தேரிலூ‘ என்பதும் ‘மலர்தமிழணியே’ என்பதும் பொருந்தி வந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.
–விந்தைகள் தொடரும்…
“