வீட்டிற்கு உள்ளே
குழந்தைகளை வீட்டிற்கு வெளியே தனியே விடுவதற்கு எது ஏற்ற வயது என்று சரியாக எவ்வாறு நிர்ணயம் செய்ய முடியாதோ, அதேபோல வீட்டிற்குள் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்வதற்கும் சரியான வயது நிர்ணயம் இல்லை. ஆயினும், குழந்தைகளைப் பெற்றோர்கள் அடிக்கடி தனியாக வீட்டில் விட்டுச் சென்றால் குழந்தைகளின் மனோநிலை பாதிக்கும். பெற்றோர்கள் ‘என்னைப் புறக்கணிக்கின்றார்கள்; எனக்கு யாரும் இல்லை’ என்று ஒரு குழந்தை நினைக்க ஆரம்பித்தால், குழந்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும். இதை எல்லாப் பெற்றோர்களும் உணர வேண்டும். வீடியோ கேம், கம்ப்யூட்டர் கேம் என்று குழந்தையின் பொழுதுபோக்கிற்கு எவ்வளவு பணம் செலவழித்தாலும் குழந்தைகள் மனம் பெற்றோர்களின் அருகாமையைத்தான் விரும்பும்!
சரி! அப்போது என்ன செய்வது? இக்கால அம்மாக்கள் வேலைக்குச் செல்வது என்பது அவசியமாக இருக்கும் பட்சத்தில் இந்தச் சிக்கலை எப்படி சமாளிப்பது?
குழந்தைகளை நல்லமுறையில் பார்த்துக் கொள்ளக்கூடிய நம்பகமான நபர்களைத் தேடுங்கள்! அவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டும். குழந்தைகள் அவர்களோடு பாதுகாப்பாகவும், மன மகிழ்வோடும் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம். அதற்கான செலவு சற்று அதிகமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தைக்கு இந்த ஏற்பாடு செய்ததோடு உங்கள் கடமை முடிந்து விட்டதா? அதுதான் இல்லை! நீங்கள் வீட்டில் இருக்கும் போதெல்லாம் குழந்தையின் பாதுகாவலருக்கு ஓய்வு அளித்து, நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். அதுதான் குழந்தைகளின் விருப்பமாகும்!
ஆனால் எல்லோருக்கும் சரியான ஆட்கள் கிடைப்பதில்லையே.. அப்போது என்ன செய்வது?.. தனியே விட்டு விட்டுச் செல்லலாமா?
அந்த மாதிரியான சந்தர்ப்பம் நிகழவே கூடாது. அதுவும் குறிப்பாக மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்றால் நிச்சயம் கூடாது. பெற்றோர்கள் ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாடு செய்தே தீர வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் சிலர், பெற்றோர்கள் வரும்வரை இரண்டு மூன்று மணிநேரம் தனியாக வீட்டில் இருப்பார்கள்.’குறைந்த நேரம்தானே’ என்று பல பெற்றோர்கள் எண்ணுகின்றனர். அதுவும் தவறுதான். பள்ளிக்கு அருகிலோ, வீட்டிற்கு அருகிலோ நம்பகமான ஆட்கள் அல்லது பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் என்று எவரேனும் கிடைக்கிறார்களா என்று தேடுங்கள். அதுதான் சிறந்தது.
ஒரு வேளை இந்த ஏற்பாடு வாய்க்கவில்லையென்றால், குழந்தைகளுக்கு எல்லாவற்றைப் பற்றியும் அறிவுறுத்துங்கள். ஆபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள், உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள் ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். சில பெற்றோர்கள், ‘ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள்’ என்று இரண்டு குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்வார்கள். இதுவும் தவறுதான். இருவரும் சிறுவர்களாக இருப்பதால் ஏதேனும் விபரீதம் நிகழ வாய்ப்பிருக்கின்றது.
வீட்டில் குழந்தைகளைத் தனியாகத்தான் விட்டுச் செல்கிறீர்கள் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் :
ஆபத்தை விளைவிக்கும் எவ்விதப் பொருட்களும் குழந்தைகளின் பார்வையில் படுமாறு வைக்காதீர்கள். கூர்மையான ஆயுதங்கள், இரசாயனப் பொருள்கள், மாத்திரை மருந்துகள், நெருப்புப் பெட்டி, லைட்டர் போன்ற பொருட்களைக் குழந்தைகள் கண்ணில் படாதவாறு வைத்து விட்டுச் செல்லுங்கள். மேலும் அக்கம் பக்கத்து வீடுகளில் குழந்தை தனியாக இருப்பதைத் தெரிவியுங்கள்! அடிக்கடி தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்!
நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? ஒரு மணிநேரமாக இருந்தாலும் சரி, இரண்டு மணி நேரமாக இருந்தாலும் சரி, நீங்கள் விட்டுச் செல்வதற்காகக் குழந்தைகள் ஏங்கி விடாமல், பெற்றோரின் இக்கட்டான நிலையை உணர்ந்துள்ளார்களா என்பதை அறிந்துகொள்வதுதான்! எல்லாச் சிக்கல்களும் புரிதலின் மூலம் விலகிவிடும்தானே!
எந்த சந்தர்ப்பத்திலும் எந்த வயது குழந்தைகளாக இருந்தாலும், இரவில் தனியாக விட்டுச் செல்லாதீர்கள். ‘குழந்தை நன்றாக உறங்குகின்றது, விழித்துக்கொள்வதற்குள் வந்து விடலாம்’ என்று எண்ணி வெளியே செல்லாதீர்கள். குழந்தைகள் இரவு நேரங்களில் விழித்துக்கொண்டு, நீங்கள் இல்லையென்றால் பயந்து விடும்.
குழந்தைகளின் வளர்ச்சி என்பது அவர்களின் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல மனம் சம்பந்தப்பட்டதும் ஆகும். முடிந்தவரை குழந்தைகளின் மனம் பாதிக்கப்படாதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிறு செடியை மண்தொட்டியில் வைத்து, அது வளர்கிறதா என்று தினந்தோறும் பார்த்து, தண்ணீர் ஊற்றி, அதன் வளர்ச்சியில் மகிழ்கிறோமே, அது போலத்தான் குழந்தை வளர்ப்பும்!
Disclaimer : The images in this article are collected from various resource on the web. If there is any copyright violation, please inform the administration. Corrective actions will be taken.
“
அருமையான தகவல்களுக்கு நன்றி
அற்புதமான கட்டுரை
அன்புமிகுசித்திராபாலு அவர்களே பிள்ளைகளை தனியாகவிடக்கூடாது என்பதுசரியானத்தே.ஆனால் பெற்றொர்கள் வேலைக்குச்செல்லவேண்டியனிலையில் தாத்தா,பாட்டி அதாவதுகணவன் ,அல்லது மனைவி தனது அப்பா,அம்மா இவர்களை தன்னொடுவைத்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்குசரியான பாதுகாப்பும்,அன்பும்கொடுதால்மிகவும் நன்று என்று தாங்கள் சரியான ஒரு கருதைசொல்லாலாம்