எங்கள் எஜமானர் முதலில் ரிச்மான்ட் நகர் வழியாகப் போகப் போவதாகக் கூறினார். ஆனால் ஏனோ மனம் மாறி பல நாட்கள் நாங்கள் ஆள் அரவமில்லாத அத்வானமான பிரதேசத்தின் வழியாகப் பயணம் செய்தோம். வழி முழுவதும் முட்காடுகளும் புதர்களும்தான். ஒரு காலத்தில் வளமான பூமியாக இருந்த நிலத்தை உருவாக்க எத்தனை ஆயிரம் அடிமைகள்கொடுமைக்கார எஜமானர்களிடம் அடிபட்டு, உதைபட்டு தங்கள் வியர்வையைச் சிந்தினார்களோ?
சில இடங்களில் புதர்கள் நாலைந்து மைல்கள் தூரத்திற்குத் தொடர்ந்திருக்கும். வழியில் ஒரு வீடுகூட கண்ணில் படாது.
ஒருநாள் இந்தப் புதர்களைக் கடந்து வருகையில் இவைகளுக்கிடையில் பார்க்க பிரம்மாண்டமாக இருந்த ஒரு செங்கல் கட்டிடம் கண்ணில் பட்டது. நெருங்கிப் பார்க்கையில் அது பழைய தேவாலயம் எனத் தெரிந்தது. எங்களை அழைத்து வந்தவன் குதிரையிலிருந்து இறங்கி, அதை ஒரு ஓரமாகக் கட்டிவிட்டு எங்களையும் அமரச் சொன்னான். அவன் ஒரு மரத்தடியில் ஒரு கல்லறை மேல் அமர்ந்தான். சதுரமான அந்த இடிந்த கட்டிடத்தைச் சுற்றியிருந்த சுடுகாடு கிட்டத்தட்ட இரண்டு ஏக்கருக்குப் பரவியிருந்தது. கதவுகள் கூட துருப்பிடித்து விழும் நிலையில் இருந்தன – சுற்றிலும் கல்லறைல்கள்தான். பல கல்லறைகள் பளிங்குக் கற்களால் பார்க்க அழகாக இருந்தன. பல மிகச் சிறியவையாக இருந்தன. அவை இறந்தவர்களின் அந்தஸ்தைச் சுட்டிக்காட்டின. கிட்டத்தட்ட இந்த இடுகாடு உபயோகத்திலிருந்து முப்பது வருஷங்களாகியிருக்கவேண்டும்!
கல்லறைகளைப் பார்க்கும்போது இங்கு பலவருடங்களுக்கு முன்னால் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு ஏன் அங்கு வாழ்ந்தவர்கள் தங்கள் சொந்த இடத்தை விட்டுவிட்டுச் சென்றிருக்கவேண்டும் என்ற கேள்விஎழுந்தது.
நாங்கள் பொடமாக் நதியைத் தாண்டி வந்த பூமி நல்ல வளமான சிவப்புக் களிமண் பூமியாகத்தான் இருந்தது. நல்ல செழிப்பான, அறுவடைதரும் நிலம். ஆனால் அங்கு வசிக்க வந்தவர்கள் பேராசையால் அந்த வளமான பூமியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் புகையிலையைத் தொடர்ந்து பயிரிட்டுச் செல்வந்தரானார்கள். நாளடைவில் பூமி தன் வளத்தை இழந்திருக்கும். அவர்கள் தங்கள் நிலத்திற்குத் தங்கள் அடிமைகளுக்குத் தரும் மதிப்பைக் கூடக் கொடுத்திருக்க மாட்டார்கள். பூமி தன் வளத்தை இழந்து இனிப் பயிரிடமுடியாது என்ற நிலை வந்தவுடன் நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் அடிமைகளை வந்த விலைக்கு விற்றுவிட்டு கென்டகி பகுதிக்குச் சென்றிருப்பார்கள் – அங்கும் பழைய கதையே தொடரும்.
இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு நாங்கள் பாழடைந்த அந்த இடத்திலிருந்து கிளம்பினோம். அங்கிருந்து புறப்பட்டதே எனக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் மேற்கு நோக்கிப் பயணித்தோம். கடைசியாக தெற்கே சென்று ஜேம்ஸ் நதியைக் கடந்தோம். நதிகள் வழியாகவும், சாலைவழிகள் வழியாகவும் இப்படியே பலநாட்கள் பயணித்த பின்னர் தெற்கு கரோலினா வந்தடைந்தோம். அங்குதான் கம்டென் என்னும் இடத்தில் முதல் முதலாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ஒரு பருத்திவயலைப் பார்த்தேன். நாங்கள் கிளம்பிய நேரத்திலிருந்து இதுவரை எந்தெந்த ஆறுகளைக் கடந்தோம் எந்த சாலைகள் வழியாக வந்தோம், இடங்களின் பெய்ரகள் என்ன, ஆறுகளை எந்தப் படகுகளில் கடந்தோம் என்ற விவரங்களையெல்லாம் மனதிற்குள் பதித்துக் கொண்டேன். இதுதான் பின்னர் நான் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று தப்பிக்கப் பேருதவியாக இருந்தது.
ஜேம்ஸ் நதியைக் கடந்தபிறகு என்னை நான் ஓரளவு உற்சாகமாகவே காட்டிக் கொண்டேன். என்னுடைய எஜமானரிடம் மாரிலான்டில் எஜமானரகள் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் பழக்கவழக்கங்கள் பற்றி விவரிப்பேன். அவரிடம் ஜார்ஜியாவின் வழக்கங்களைப் பற்றி கேட்பேன். எங்கள் பாதை ஜேம்ஸ்நதியைத் தாண்டி தென் மேற்காகச் சென்றது. வர்ஜீனியா மற்றும் கரோலினாவிலும் மேல் பிரதேசம் (upper country)என்று சொல்லப்படும் இடம் அது. அதுவரையில் நிலச் சொந்தக்காரர்களாலாயே அடிமைகளின் உதவியில்லாமல் பயிரிடப்பட்ட நிலங்களை நான் பார்த்ததில்லை. தெற்குப்பகுதிகளில் அடிமைகளால் பயிரிடப்படும் தோட்டங்களையும் பென்சில்வேனியாவில் சொந்தக்காரர்களே உழுது பயிரிடும் காட்சியையும் என்னால் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியவில்லை.
தெற்குநோக்கி செல்லச் செல்ல வர்ஜினியாவில் கூட விவசாயம் படு மோசமான நிலையில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஒன்று மாற்றி ஒன்று இடைவெளி விடாமல் பயிர்செய்து வளமான நிலத்தைக்கூட களர் நிலமாக மாற்றியிருந்தார்கள். மாரிலான்ட் மற்றும் வர்ஜினியாவின் கீழ்ப் பகுதிகளில் பல இடிந்து போன கட்டிடங்களை பல நூறு ஏக்கர் நிலங்களுக்கிடையே காணமுடியும். வயல்களுக்கிடையேயும் காண முடியும்.
மாரிலான் டிலும் வர்ஜீனியாவிலும் எஜமானர்கள் அடிமைகளிடம் கடுமையாகவும் சில சமயங்களில் கொடுமையாகவும் நடந்து கொண்டாலும் அவர்களுக்கு இளகிய மனதும் பரிவும் உண்டு என்பதைப் பல சம்பவங்களில் பார்த்திருக்கிறேன். நானும் மாரிலான்டில் மூன்று எஜமானர்களிடம் அடிமையாக இருந்திருக்கிறேன். என்னை ஜார்ஜியாவைச் சேர்ந்தவருக்கு விற்ற அந்த எஜமானரைத் தவிர மற்ற இருவரும் என்னிடம் பிரியமாகவே நடந்து கொண்டார்கள். இதை நான் அடிமைகளை வெறுத்து ஒதுக்கும் மாகாணத்தில் பல ஆண்டுகள் வசித்து அதனை உணர்ந்த நிலையிலும் கூறுகிறேன். அவர்கள் ஓரளவுக்குமேல் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை – விலை கொடுத்து வாங்கிய எந்த ஒரு உரிமையும் இல்லாத ஒரு பொருளாக நினைக்கவில்லை. மாரிலான்டில் இருந்த என் எஜமானிகள் எல்லாருமே நல்லவர்கள். என் மனைவியின் எஜமானி மிகவும் பரிவுள்ள அன்பான பெண்மணி – அவர்கள் வீட்டில்தான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என் மனைவியை சந்திக்கச் செல்வேன். அவர் எனது உண்மையான நண்பர் – அவரை நான் என்றுமே மறக்க முடியாது.
பழைய பரம்பரைப் பெண்களைவிட மிகவும் நல்ல இதயமுள்ள பெண்கள் யாரும் இருக்க முடியாது என்பது என் எண்ணம். சில குடும்பங்களில் அடிமைகள் பரம்பரையாக வேலை செய்வார்கள். அந்தக் குடும்பத்தின் எஜமானிளுக்கு தங்களிடம் இத்தனை பேர் பணிசெய்கிறார்கள் என்ற ஒரு கர்வம் இருக்கும். அதுவே அந்த அடிமைகளிடம் ஒரு பாசத்தை ஏற்படுத்தும்
மாரிலான் டிலும் வர்ஜீனியாவிலும் உள்ளவர்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக பயிர்களை நேரம் பார்த்து விளைவித்திருந்தால் – வேலைக்குத் தேவையான அடிமைகளை மட்டும் தங்களிடம் வைத்திருந்தால் – அவ்வப்போது தங்கள் இடங்களைப் பழுதுபார்த்து நல்ல நிலையில் வைத்திருந்தால் நிலை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது வர்ஜீனியாவில் வசிக்கும் கருப்பு நிறத்தவர்களில் பத்தில் ஒன்பதுபேர் துன்புறக்காரணம் அவர்களது எஜமானர்களின் ஏழ்மைதான். பல நேரங்களில் தோட்டங்களின் விளைச்சல் அங்கு வேலைபார்க்கும் அடிமைகளுக்குத் தேவையான உணவையும், உடைகளையும் கொடுக்கக்கூடப் போதுமானதாக இல்லை . எஜமானர்களுக்கு வேண்டிய தேவைகளையே தோட்டத்திலிருந்து வரும் பணத்தில் பூர்த்தி செய்யமுடியாத நிலையில் அங்கு வேலைபார்க்கும் அடிமைகள் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்? எனவே விளைச்சலே இல்லாத புகையிலைத் தோட்டங்களிலிருந்து அடிமைகளுக்கு வாரம் முழுவதுக்கும் கிடைப்பது சோளம்தான். அடிமைகள் நிலைதான் இப்படி என்றால் அவர்கள் எஜமானர்கள் நிலை ஒன்றும் இதைவிட அதிகம் உயர்ந்ததில்லை. அவர்கள் தங்கள் குடும்ப கவுரவத்தைக் காத்துக்கொள்ள ஆண்கள் உழவுத் தொழிலையோ, பெண்கள் பாத்திரம் கழுவுவதையோ செய்யக் கூடாது. அப்படி செய்தால் குடும்பத்திற்கே இழுக்காகக் கருதப்படும். அதற்காகவே எதுவும் லாபமில்லாவிட்டாலும் அவர்கள் வேலைக்காரர்களை அமர்த்திக் கொள்வார்கள்.
(தொடரும்)