"சார்! உங்க செருப்பை கொஞ்சம் போட்டுக்கவா? பாத்ரூம் போயிட்டு வந்து தந்துட்றேன்" என்று அந்த பெரியவரிடம் கேட்கும் போதே அவமானமாய் இருந்தது எனக்கு. சாதாரண 200, 300 ரூபாய் சமாச்சாரம் தான். அதில்லாமல் ஏதோ சுவாசிக்கக் காற்று இல்லாததைப் போல உணர்கிறோமே! உணவு, உடை, உறையுள்-இவற்றுடன் காலணியையும் சேர்த்து விடலாம் என்று இப்பொழுது எனக்கு தோன்றுகிறது.
நான் யார்? என்ன நடந்தது? – கொஞ்சம் பொறுங்கள்; பெரியவர் செருப்பைக் கொடுத்து விட்டார்; இதோ வந்து விடுகிறேன்.
"அப்பாடா! தேங்க்யூ சார்," என்று பெரியவரிடம் வாங்கியதைக் கொடுத்த பொழுது, சற்றுமுன் என்னிடம் அவர் காட்டிய கரிசனம் சிறிதும் இல்லை. இந்த பயணம் முழுமைக்கும், அவரை நான் பாடுபடுத்தப் போவதாகவே நினைக்கிறார். ம்ம். நினைத்து விட்டு போகட்டும்.
நான் ஜெகன். பெங்களூருவில் வந்து, ஆங்கிலம் பேசி, அமெரிக்காக்காரர்களுக்கு வேலை பார்க்கும் ஒரு தமிழன். யாராவது, "தமிழ்நாட்டிலே எங்கே?" என்றால், "சௌத் சைட்" என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்வேன். அந்த சௌத் சைட்தான், இங்குள்ள பல மென்பொருளாளர்களின் சொந்த ஊராக இருக்க வேண்டுமென்பது என் யூகம். யூகம் மட்டுமில்லை. உண்மையும் அதுதான் என்பதைப் போல், தென் திசை செல்லும் இந்த ரயில், எப்பொழுதும் ஜெகஜெகவென்றே இருக்கும். பெங்களூரு ரயில் நிலையத்தில், இந்த ரயில் நிற்கும் இடத்தில் மேலும் வனப்பும், சௌந்தர்யமும் கொட்டக் கிடப்பதாகவே நான் நினைப்பேன். சொந்த ஊர் மக்கள், சொந்தத் தமிழ்… எல்லாமே ஊருக்குச் செல்லும் அந்தப் பொன் அந்தி இரவுப் பொழுதை, மேலும் மெருகூட்டும். ஆனால் உண்மையில் அந்த பொன் அந்திப் பொழுது எனக்கு எரிச்சலையூட்டியது. காரணம். வெகு சிறியது. என் காலணி. காலணிக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்? எதுவுமே இல்லாத போதுதான் அதன் அருமை தெரியும் என்பதைப் போல.. உண்ர்ந்த பொழுது தான், செருப்பின் மகத்துவம் புரிந்தது.
தமிழர்களுக்குள் ரொம்பவே பொதுவான விஷயம் அவசரம். எல்லோருக்கும் அவசரம் உண்டென்றாலும், இங்கே முன்பதிவு செய்த வகுப்புகளுக்கே "அன்ரிசர்வ்டு" பெட்டிகளுக்குள் ஏறுவதைப்போல ஏற வேண்டிய நிர்ப்பந்தம். என்ன செய்வது? நானாவது பொறுத்திருக்கலாம். நானும் தமிழன்தானே! கும்பலில் முதலில் நின்றேன். ரயிலில் ஏற ரயில் பெட்டியின் படியில் காலை வைத்தேன். பின்புறம் சகபயணி ஒருவர் பாசத்துடன்(!) தள்ள, செருப்பு கழன்று ரயிலின் அடியில் விழுந்தது. நான் பிளாட்பாரத்தில் ஒற்றைக்கால் செருப்புடன், விழுந்த செருப்பைத் தேடினேன். கழிவறையின் கீழ் ஒய்யாரமாய் கிடக்கிறார், நம்மவர்."நீ-நின் ஜோடியுடன் பல்லாண்டு வாழ்க!" என்று அதன் பக்கத்திலேயே மற்றதையும் எறிந்து விட்டு,வெறும் காலுடன் நின்றேன்.’பிளாட்பாரத்தில் செருப்புக்கடை எங்கேயாவது இருக்கிறதா?’ என்று ஒரு பிளாட்பாரக்கடை வைத்திருக்கும் அம்பானியிடம் கேட்டதற்கு, சிரித்து விட்டு, "இல்லை" என்றார். எனக்கு இடுக்கண், அவருக்கு நகுதல்!
ஒரு வழியாக ரயிலில் ஏறினேன். ரயில் கிளம்பியது. இயற்கை உபாதைகளின் தொல்லையினால், பெரியவரிடம் கேட்ட உதவியின் பயனாக, அந்நிமிடமே அவர் தன் பெர்த்திற்கு சென்றுவிட்டார்.
இந்த பயணத்தை ‘முடித்தால் போதும் சாமி’ என்றிருந்தது. தரையில் காலை வைக்கவே கூசியது. இன்னும் இந்த ரயிலிலிருந்து இறங்கி, மற்றொரு பாசஞ்சர் ரயில் பிடித்து, ஊருக்கு போக வேண்டும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது. சபரிமலை பல முறை சென்றவன்தான். ஆனாலும் மென்பொருளாளர்களால் நிரம்பி வழியும் அவ்விடத்தில், இதை ஒரு கௌரவக் குறைவாகவே மனது நினைத்தது. யோசித்து யோசித்து சிறிது நேரத்தில், நித்திரையை ஒரு வழியாகத் தழுவி விட்டேன்.
கதிரவன் மெல்ல மலர்ந்து கொண்டிருந்தான். ரயில் தன் ரிதம் மாறாமல் சென்று கொண்டிருந்தது. வழக்கமாக மற்ற பயணங்களில், இச்சமயத்தை நான் படியில் நின்றபடி ரசிப்பது வழக்கம். இப்பொழுது கீழே இறங்கவே தோன்றவில்லை. அப்பாடா! இதோ அந்த பெரியவர். "சார்!" என்றேன். "நான் பாத்ரூம் போறேன் தம்பி. வந்து தர்றேன்" என்றார், நான் கேட்காமலேயே. "ஹே!ஹே!சரி சார்" என்றேன் நெளிந்து கொண்டே. ‘கடவுளே இப்பயணத்திற்கு முடிவே இல்லையா?’ என்ற என் கூக்குரலுக்கு ஓரளவு செவிசாய்த்த கடவுள், பாசஞ்சர் ரயில் ஏற வேண்டிய நிலையத்திற்கு சற்று முன்னதாகவே கொண்டு வந்து சேர்த்தார்.
என் பாதயாத்திரை தொடங்கியது. இந்த பிளாட்பாரத்திலிருந்து இறங்கி, அடுத்த பிளாட்பாரம் போகும்வரை மற்றவர்கள் காலையே பார்த்துக் கொண்டு வந்தேன். ஓரிருவரைத் தவிர மற்ற எல்லோருமே காலணி அணிந்திருந்தார்கள். ‘சேச்சே! இதெல்லாமா கவனிப்பார்கள்!’ என்று எனக்கு நானே நிந்தித்துக் கொண்டேன்.
எதிரே ஒரு அழகான பெண். என் முகம் பார்த்தவள், சிறிது மலர்ந்தாள். சட்டென்று காலைப் பார்த்தாள். முகம் சுழித்துச் சென்றுவிட்டாள். இதெல்லாம் உண்மையிலேயே நடக்கிறதா? இல்லை எல்லாம் என் மனப்பிராந்தியா? ஒன்றும் புரியாமல் பாசஞ்சர் ரயிலில் ஏறி அமர்ந்தேன். சுற்றிமுற்றி நோட்டம் விட்டேன். என் எதிரே வயதான மூன்று பாட்டிகள். பக்கத்தில் கையில் மாவுக்கட்டு போட்ட ஒரு பையன். அவனருகில் அவன் தந்தை. பின்புறம் விலங்கு மாட்டப்பட்ட கைதியுடன் ஒரு கான்ஸ்டபிள்…. பாசஞ்சர் ரயில் பயணம் என்றுமே ஒரு கலகலப்பான பயணம்தான். பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கமுடியும் பயணம். இன்றும் நான் சந்தித்தேன். வெறும் காலணிக்காக வருந்திய என்னை, காலணிக்கடைகள் இருக்கும் பஜாரில் வெறும் காலுடன் செல்ல வைத்த அந்த பாட்டியை.
மூன்று பாட்டிகளில் ஒரு பாட்டி மட்டும் கொங்கு தமிழ் பேசினாள். மற்றவர்கள் என் பாண்டியத்தமிழ். பின்னர்தான் தெரிந்தது, கொங்குதமிழ் பாட்டி இவர்கள் கூட்டத்திலில்லை என்பது. அவர்கள் பேச்சிலிருந்து புரியவந்தது இதுதான்: கொங்குதமிழ் பாட்டி திருச்செந்தூர் முருகனின் தரிசனத்திற்காக சேலத்திலிருந்து வந்திருக்கிறாள் என்று. மற்ற இருவரும், அவளிடம் முருகனின் பெருமைகளைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். சட்டென்று ஒரு எண்ணம் மேலிடவே, மூவரின் கால்களையும் பார்த்தேன். கொங்கு பாட்டியின் காலில் மட்டும் காலணி இல்லை. இல்லாதது மட்டுமில்லை, சற்று வீங்கிக் கன்றிப் போயிருந்தன, அவளது கால்கள். எனக்கு என்னவோ போலாகிவிட்டது. அவர்களின் பேச்சைக் கேட்கலானேன், காதில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு, ஐபாடை ஆன் செய்யாமலேயே.
"என் பையன் லெட்சுமி மில்லுல பெரிய சூப்பர்வைசரா இருக்கிறானுங்க. மாசம் 7000 ரூபாய் சம்பளம். நானே உன்னைத் திருச்செந்தூருக்குக் கூட்டிட்டுப் போறேன்னான். நானுதான் வீண்செலவு என்னாத்துக்குனு ஒத்தயா வந்துட்டேம்மா," என்று மற்ற பாட்டிகளிடம் கொங்குப் பாட்டி கூறுவதில் எனக்கு உண்மையிருப்பதாக தெரியவில்லை.
இதனிடையில், கோயிலை எப்படி அணுகுவது என்று மற்ற பாட்டிகள் கொங்குப் பாட்டியிடம் கூறுவதைக் கேட்டேன். அதிலிருந்து அவர்கள் முன்னொரு காலத்தில் போன அனுபவங்களைக் கூறுவதைப் போலவே எனக்குப்பட்டது. சமீப காலங்களில் கோயில் வழிசெல்லும் பாதையில் மாற்றம் ஏற்பட்டதை சொல்லவேயில்லை. கொங்குப் பாட்டி இவர்கள் கூறுவதை வேதம் போலக் கேட்டுக் கொண்டிருந்தாள். தொடர்ந்து, "பாதயாத்திரை போகணும்னுதான் நெனச்சிருந்தேன். கால்ல ஆணி வந்துருச்சு. அதான் அவ்வளவா நடக்க முடியலை" என்றாள். அப்பொழுதுதான் அவள் காலணியாலும் அவதிப் படுவதைக் கண்டேன். ஷூ போட்டு மெத்மெத்தென்று இருந்த என் கால்களையும் பார்த்துக் கொண்டேன். மேலும் பாட்டி, "முருகன் என் கனவுல வந்து கூப்பிட்டானுங்க. அதான் போட்டது போட்டபடி வந்துட்டேன். பஸ்ஸுக்கு எம்புட்டுக் காசு கேட்குறான்.. அந்த காசு இருந்தா ஒரு செருப்பு வாங்கியிருப்பேனுல்ல.. அதான் கம்மி காசுக்கு ரயிலிலேயே வந்துட்டேனுங்கம்மா" என்று சக பாட்டிகளிடம் கூறினாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் பாட்டிகள் அந்நியோன்மாய் பேசத் தொடங்கினர். அந்த புதிய நட்பின் பயனாக, கொங்குப் பாட்டி மெல்ல மெல்ல அவளைப் பற்றிக் கூறத் தொடங்கினாள். அவளுடைய மகன், கல்யாணம் முடிந்ததும், முற்றிலும் மாறிப் போயிருக்கிறான் . மருமகள் இவளை மதிப்பதில்லை. செலவுக்கு காசு கொடுப்பதில்லை. காலில் சிறிதாக பட்ட காயம், வெறும் காலுடன் நடந்து நடந்து, பழுத்துவிட, டாக்டர் மாத்திரை மருந்துடன் ‘செருப்பு போட்டு நட’ என்று பரிந்துரை கொடுக்க, அதை அவள் மகனிடம் கேட்க, மகன் கடிந்து கொண்டிருக்கிறான், பொருளாதாரத்தைக் காரணம் காட்டி. கடைசியில் காலில் ஆப்பரேஷன் செய்யவேண்டிய நிலை வந்துவிடவே, மகனுக்கு சிறிது புத்தி வந்திருக்கிறது. ஏதோ தெரிந்தவர் ஒருவரின் பண உதவியுடன், ஆப்பரேஷன் செய்து குணப்படுத்தியிருக்கிறான். இருந்தும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை. ஒரளவு குணமாகியிருக்கும் வேளையில், பாட்டிக்கு சாவதற்குள் திருச்செந்தூர் முருகனைப் பார்க்கும் ஆவல் வந்து விடவே, உடனே கிளம்பி வந்திருக்கிறாள்.
வந்தவளுக்கும் என்னைப் போல ரயில் ஏறும் பொழுது தவறி ரயிலின் அடியில், செருப்பு விழுந்துவிட்டிருக்கிறது. மறுபடியும், வெறும் காலுடனும், காலணியுடனும் திருச்செந்தூர் செல்கிறாள். இதைக் கேட்ட எனக்கு மனதில் ஏதோ போலிருந்தது. ஆனால், அதைக் கூட பாட்டி, "முருகனைப் பார்க்கப் போறேன்ல, அதான் ‘செருப்பு போடாம வா’னு அவன் உத்தரவு போட்டிருக்கான் போல" என்று கூறி சிரித்தாள்.
நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது. பாட்டியும் திருச்செந்தூர் பஸ் பிடிக்க அங்கேயே இறங்கினாள். ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்தேன். என் பின்னால் மெல்ல மெல்ல பாட்டி வந்து கொண்டிருந்தாள். அவளிடம் நேராக போய், "பாட்டி உங்களுக்கும் என்னை மாதிரியே செருப்பு தவறியிருக்கு. ரெண்டு பேருக்கும் சேர்ந்தே வாங்கிரலாம்" என்றேன். ரயிலில் அருகில் அமர்ந்திருந்த என்னை ஏற்கனவே கவனித்திருந்த அவள், முதலில் வெகுவாக மறுத்தாள். பின்பு அரை மனதுடன் சம்மதித்தாள். அவளுக்கு நல்லதொரு காலணியை வாங்கிக் கொடுத்தேன். அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. "உன்னை என் முருகன்தான் அனுப்பி வைச்சுருக்கான்" என்றாள். கடையை விட்டு வெளிவந்தேன். பாட்டி, "உனக்கும் செருப்பு வாங்கலையா?" என்று கேட்டாள். "எங்க ஊர்ல போய் வாங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவளிடமிருந்து விடை பெற்றேன்.
உண்மையில் வெறும் காலுடன் பாதயாத்திரை செய்வது இப்பொழுது எனக்கு பிடித்திருந்தது. எதிரே வருபவர்களின் கால்களைப் பார்க்கத் தோன்றவில்லை. தார் சாலையில் மெத்மெத்தென்ற என் பாதம் பட்டும் வலிக்கவில்லை.
“
அருமை சங்கு.
நீ-நின் ஜோடியுடன் பல்லாண்டு வாழ்க”. இவ்விடத்தில் மெல்லிய நகைச்சுவை.
இன்னும் நன்றாக எழுத என் வாழ்த்துக்கள்”