ஆம்! மாகவி ஒரு மாகடல் இல்லையா? அக்கடலில் யார் வேண்டுமானாலும், எக்காலமும் மூழ்கி, மூழ்கி, உளமார முத்துக் குளிக்கலாம் இல்லையா?
ஒவ்வொரு முத்தும் ஒவ்வொரு வகை! ஒவ்வொரு முத்துமே விலை மதிப்பற்றது! ஒவ்வொரு முத்தும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும்! ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு மனத்தினை ஈர்க்கும்! அந்த ஆழ்கடலில் வித விதமான முத்துக்கள் கிடைக்கும், வண்ண வண்ண மீன்கள் கிடைக்கும், கடற் செல்வங்கள் கிடைக்கும்! ஒவ்வொரு மனத்திலும் புத்தொளி பிறக்கும்! ஒவ்வோர் ஒளியும் பாரதியின் ஒவ்வொரு பரிமாணத்தைக் காட்டும்! ஒவ்வொரு பரிமாணமும் பாரதியின் பெருமையையும், புகழையும் இமயத்திற்கு இட்டுச் செல்லும்! ஒருவரை ‘ஏன் தமிழனாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு அவர் சரியாகச் சொன்னார்: "நான் பாரதி பிறந்த மண்ணில் பிறந்தேன்! அந்த மண்ணில் வாழ்கிறேன்! மனிதப் பிறவியைப் பெற்ற எனக்கு இதைத் விடப் பெருமைப்படத்தக்கது வேறு எதுவாகவும் இருக்க முடியாதில்லையா?" என்று! உண்மை! முக்காலும் உண்மை!
பாரதி பாடிய பாடல்களும், எழுதிய கட்டுரைகளும், பேசிய பேச்சும் – ஒவ்வொன்றும் ஒரு தனி உலகம்! படிக்கப் படிக்க, கேட்கக் கேட்க, சிந்திக்கச் சிந்திக்கப் புதிய பரிமாணத்தையும், உலகையும் காட்டும் வலிமை பெற்றவை!
வேத மந்திரங்களைப் பற்றிக் கூறும்பொழுது அவற்றிற்கு ‘ஸ்தூல’ப் பொருள், ‘சூக்ஷ்ம’ப் பொருள் என இரு வகையான பொருள்கள் உண்டு என்பர். பாரதியின் சில கவிதைகளுக்கும் அதைப் போன்ற குணம் உண்டு. எடுத்துக்காட்டாக, பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’, ‘குயில் பாட்டு’, ‘காக்கைச் சிறகினிலே’, ‘நிற்பதுவே, நடப்பதுவே’ போன்ற படைப்புகளைச் சொல்லலாம்.
இந்தக் கவிதையைப் பாருங்கள்:
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
அது என்ன அக்கினிக் குஞ்சு? காட்டிடைப் பொந்தில் அந்தக் குஞ்சை ஏன் வைக்க வேண்டும்? பாரதியின் வேறு ஏதேனும் கவிதைக்கும் இக்கவிதைக்கும் தொடர்பு இருக்குமோ?
இந்தக் கவிதையைப் பார்ப்போம்:
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
மற்றொன்று:
ஆடுவோமே –பள்ளுப் பாடுவோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று {ஆடுவோமே}
மகாகவி பாரதியின் உயிர்ப்பறவை கூடுவிட்டுப் பறந்த நாள் 11-9-1921. நம் நாடு சுதந்திரம் பெற்றதோ 15-8-1947. இறப்பதற்குக் குறைந்தது 27 ஆண்டுகளுக்கு முன்னரே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடினார்! பள்ளுப் பாடினார்!!
அவ்வாறே, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு விடையும் தந்தார். என்ன விடை? அக்கினிக் குஞ்சொன்று கண்டு, அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்து, அதனால் வெந்து தணிந்தது காடு! என்றால் பாரத நாட்டு மக்களிடையே, குறிப்பாகத் தமிழக மக்களிடையே, சுதந்திர வாஞ்சையை நாட்டியது, கனல் மூட்டியது, கூட்டம் கூட்டி வந்தே மாதரம் என்று கோஷித்தது, ஆங்கிலேயனைத் தூஷித்தது, கப்பல் ஓட்டியது, பொருள் ஈட்டியது, கோழைப்பட்ட மக்களுக்கு உண்மைகள் கூறியது, சட்டம் மீறியது, வீரம் பேசியது, அடிமைப் பேடிகளை மனிதர்கள் ஆக்கியது, புன்மை போக்கியது, மிடிமை போதும் என்று இருந்தோரைத் தூண்டியது, ஆசை ஊட்டியது, சோர்வை ஓட்டியது, தன்னாட்சி விருப்பத்தை ஏவியது, விதை தூவியது – போன்றவையெல்லாம்தான் அவர் கண்ட அக்கினிக் குஞ்சுகள். அவற்றை நாட்டு மக்கள் மனமெனும் பொந்தில் வைத்ததும், ஆங்கிலேயர் ஆட்சியெனும் காடு வெந்து தணிந்தது, நாட்டு விடுதலை மலர்ந்தது!
‘பாஞ்சாலி சபதம்’ பாரதியின் நெடுங்கவிதைகளுள் ஒன்றாகும். அவரது முகவுரையில் "எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம்" என்று கூறுவார். இருப்பினும் பாரதியையும், பாரதநாட்டையும் ஒரு கணமும் பிரிக்கமுடியாதில்லையா! பாரதிச் சித்தர் ஒரு பாரதப் பித்தர்! ஆம், அவர் பேச்செல்லாம் பாரதம், மூச்செல்லாம் பாரதநாடு, உணர்வெல்லாம் பாரத மக்கள், நெஞ்சத்தில் வியாபித்து இருந்ததெல்லாம் பாரதத்தின் விடுதலை!
பாஞ்சாலி சபதத்தில், துகிலுரிதல் சருக்கத்தில் திரெளபதியைப் பணயம் வைத்து இழக்கின்றனர். திரெளபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் மகிழ்ச்சி கொண்டனர். துரியோதனன் மனமகிழ்ந்து சகுனிக்கு நன்றி கூறுவான். சபைக்கு அழைத்து (இழுத்து) வரப்படுகிறாள் பாஞ்சாலி. துகில் உரியப்படுகிறது; அநியாயம் தொடர்கிறது; உதவிக்கு யாருமற்ற நிலையில் அவள் கண்ணனிடம் பிரார்த்திக்கிறாள். கண்ணன் கருணை செய்து மானம் காக்கிறான். பாஞ்சாலி சபதம் ஏற்கிறாள்:
பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து – குழல்
மீதினிற்பூசி நறு நெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யானிது
செய்யுமுன்னே முடியேன் என்று!
அர்ஜுனன் கூற்றாகப் பாரதி சொல்லுவார்:
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்" எனு மியற்கை
மருமத்தை உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம் இன்று
கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்,
தனு உண்டு காண்டீவம் அதன் பேர்என்று.
மேலே சொன்னது போல், இவற்றின் ஸ்தூலப் பொருள் மகாபாரதக் கதை என்றாலும், இவற்றை எழுதும்பொழுது பாரதியின் எண்ணமெல்லாம் பாரத அன்னை ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு, தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற நிலையிலும், தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வி பாரத மக்கள் நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி நின்ற நிலையிலும், பாரத அன்னையின் கைவிலங்குகள் போய், இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் என்பதிலும், பாரதம் விடுதலைப் போரிட்டு வெற்றிபெறும் என்பதிலும்தான் இருந்தது. அவரது அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பே பாஞ்சாலி சபதம்! பாஞ்சாலி சபதத்தின் சூக்ஷ்மப் பொருளும் அதுவே!
இறைவனின் பெருமையையும், சிறப்பையும், தத்துவத்தையும், அவனைப் பற்றிய கொள்கையையும், அவன் மேல் வைத்த பக்தியையும், நம்மேல் இறைவன் கொண்டுள்ள பரிவையும், அன்பையும், கருணையையும் காயின் புளிப்பிலும், கனியின் இனிப்பிலும், நோயிலே படுப்பதிலும், நோன்பிலே உயிர்ப்பதிலும், காற்றின் குளிரிலும், கனலின் சூட்டிலும் காண்பவர் இல்லையா பாரதிப் பெருமகன்!
காக்கைச் சிறகிலும், கரிய நிறத்திலும், பார்க்கும் மரங்களிலும், பச்சை நிறத்திலும், கேட்கும் ஒலியிலும், தீக்குள் விரலை வைத்து அது பொசுக்கும் சூட்டிலும் எங்கும், எதிலும், எப்பொழுதும் இறைவன் இருப்பதில் ஐயம் ஏது? அவற்றின் உட்பொருளுக்கு விளக்கமும் வேண்டுமோ?
"காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
காண்பதுவே உறுதி கண்டோம், காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சத்தியமாம் – இந்தக் காட்சி நித்தியமாம்!"
இது மாய உலகமில்லை! நாம் வாழும் உலகம் நித்தியமானது, சத்தியமானது! நமது வாழ்க்கை அநித்தியமாக இருக்கலாம்! பாரதியின் இப்பாடலின் உட்பொருளும் இதுதானோ?
பாரதி ஒரு மாகடல்! அக்கடலில் யார் வேண்டுமானாலும், எக்காலமும் மூழ்கி, மூழ்கி, உளமார முத்துக் குளிக்கலாம் இல்லையா? நானும் முயன்றேன்! எனக்கும் கிடைத்தன!
மிக அருமை