நீரை சேமிக்கும் தொழில்நுட்ப முறைகள்:
மழைநீர் சேமிப்பு:
மிக எளிதான இந்த முறையில் சேமிக்கப்பட்ட நீரை வீட்டு மற்றும் விவசாய பணிகளுக்குப் பயன்படுத்தலாம். இதில் மழைநீரை ஒரிடத்தில் பிடித்தல், அதை தேவையான இடத்திற்குக் கொண்டு செல்லுதல், சேமித்தல் என்னும் மூன்று படிகள் உள்ளன.
நிலத்தடி நீரைத் தேடி நாம் பூமியின் அடுத்த பக்கத்திற்கே துளை போட முயலும் துரதிஷ்டத்தை மழைநீரால் மாற்றமுடியும். நகரமயமாக்கலினால் நீர் பிடிப்பு பகுதிகள் குறைந்து கொண்டே வருவதும் தண்ணீரின் தேவையை அதிகரிக்கச் செய்கிறது. CGWB என்னும் நிறுவனத்தால் ஆயிரக்கணக்கான மழைநீர் சேகரிப்பு நிலையங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையை படிக்கும் ஒரு சிலராவது குறைந்து வரும் நிலத்தடி நீரை அதிகரிக்க மழைநீர் சேகரிப்பு முறையைப் பின்பற்றி நீரின் அளவை அதிகரிப்பீர்கள் என எண்ணுகிறேன்.
மழைநீரை எதிர்காலத் தேவைக்கு சேமித்து வைப்பதன் மூலமும், நிலத்தடி நீரின் அளவை உயர்த்துவதன் மூலமும் நீருக்காய் நீங்கள் செலவழிக்கும் தொகையை மிச்சப்படுத்தலாம். இதன் மூலம்
1. குறைந்த விலையில் ஆரோக்கியமான நீர் ஆதாரத்தைப் பெறலாம்.
2. இதிலுள்ள கிருமிகளை அழிக்க கொதிக்க வைத்தாலே போதும். மாசற்ற, கிருமிகளற்ற நீர் கிடைக்கும்.
3. எளிதாகத் தயார் செய்யக்கூடிய இவ்வகை நீர் ஆதாரம் உலகெங்கும் அமைக்க முடியும்.
4. இவ்வகை நீரில் எந்தவிதமான நிறமோ, சத்துக் குறைபாடுகளோ கிடையாது.
5. இவ்வகை நீரோட்டத்தால் நதிகள் மற்றும் ஆறுகளில் நீரோட்டம் அதிகரிக்கும்.
மழைநீர் சேமிப்பு முறைக்குத் தொட்டிகள், குளங்கள், பரிசோதனை அணைகள் போன்றவை பயன்படுகின்றன. அவற்றைப் பற்றிக் காண்போம்.
குழிகள்:
இயற்கையான அல்லது செயற்கையாக பள்ளமாகும் காலியிடங்களில் சிறு குழிகளை 1 to 2 மீ அகலம், 3 மீ ஆழமுள்ளதாக அமைத்து மழைநீரை சேமிக்கலாம். அவற்றில் பெரிய பாறை, சிறிய பாறைத் துண்டுகள், கற்கள் போன்றவற்றைப் போட்டு சேகரிக்கப்பட்ட நீர் மிக மெதுவாக நிலத்தில் இறங்கச் செய்யலாம்.
கால்வாய்கள்:
கால்வாய்கள் அமைக்கத் தகுதியான நீண்ட ஆழமான இடங்களில் 0.5 to 1 மீ அகலம், 1 to 1.5 மீ ஆழம் மற்றும் 10 to 20 மீ நீளத்தில், கிடைக்கும் மழைநீரைப் பொறுத்து இவை அமைக்கப்படுகின்றன. இவற்றுள் வடிகட்டிகள் பதித்து நீரை சுத்தப்படுத்தலாம்.
கிணறுகள்:
ஏற்கெனவே தோண்டப்பட்ட கிணறுகளில் வடிகட்டிகள் மூலம் தண்ணீரைச் செலுத்தி மழைநீர் சேகரிக்கப் பயன்படுத்தலாம். கிணற்றினைச் சுற்றி 100 முதல் 300 மிமீ உயரம் வரையிலான சிறிய தடுப்புகள் அமைத் மழைநீரைச் சேகரித்து உள் அனுப்பலாம். மோட்டார்அல்லது அடிபம்பு மூலம் வெளியேற்றப்படும் நீரை சிறிய சிமெண்ட் தொட்டிகளில் விழச் செய்து, பயன்பாட்டு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வழியில் நீர்க் கசிவைத் தடுக்க, வரப்புகளின் ஒரங்களில் கற்களால், கரை அமையுங்கள்.
ஊர்ப் புறத்தில் உள்ள குளங்களை சரியான காலத்தில் தூர் வாரி படிக்கட்டுகள் அமைப்பதன் மூலம் குப்பைகள் குளத்தில் சேருவது கட்டுப்படுத்தப்படும். நம் பாட்டன், பூட்டன் காலத்தில் ஊர் தோறும் ஊருணி அமைத்து தண்ணீர்ப் பற்றாகுறையைப் போக்கினர். மேலே சொன்ன சேகரிப்பு முறைகளையே வசதிக்குத் தகுந்தாற் போல் மாற்றி அமைத்து பயன்படுத்தியுள்ளனர்.
எங்கள் ஊரிலேயே அப்படியொரு ஊருணி உண்டு. ஓடு அல்லது ஓலை வேயப்பட்ட வீடுகளின் முன்புறம் மழைநீர் விழுந்து ஆசாரம் (hall) என்னும் பகுதியில் வழிந்தோடி ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிக்குச் செல்லும். அங்கேதான் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பதெல்லாம். அங்கிருந்து குழாய் மூலம் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் மழைநீர் கால்வாய் மூலம் ஊரின் கடைசி பகுதிக்கு வரும். அனைத்து வீடுகளிலும் சேகரிக்கப்படும் நீரால் சற்று பெரிய குழாய் அல்லது கால்வாய் மூலம் கல்லணைக்குச் செல்லும். கல்லணை என்பது பெரிய பாறைகள், கிணறு வெட்டும் போது கிடைக்கும் கற்களை பொதுவான இடத்தில் போட்டு அமைப்பது.
பின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட குளத்திற்குச் செல்லும் நீர் மீண்டும் இரு கல்லணைகளால் வடிகட்டப்பட்டு ஊருணிக்குப் போகும். கடைசி இரு கல்லணைகளிலும் கற்களின் அளவு சிறிது, மிகச் சிறிதாக குறைக்கப்பட்டிருக்கும். அவரவர் வீட்டிலும், வீட்டிற்கு வெளியேயும், கல்வாய் பகுதியிலும் சல்லடை என்னும் வடிகட்டி அமைக்கப்பட்டு குப்பைகள் வடிகட்டப்படுவதோடு கல்லணையிலும் மேலும் சுத்திகரிக்கப்படும். தொத்தாங்கொட்டை என்னும் கொட்டையை அடியில் தேய்த்த ஒரு பாத்திரத்தில் இப்படிச் சேகரிக்கப்பட்ட நீரை எடுத்து வந்தால், வீடு வருவதற்குள் சுத்தமான குடிநீர் ரெடி! ஊர் கூடித் தேர் இழுக்கும் கதையாக ஊருணியில் மழைநீர் விளையாட்டு போல சேகரிக்கப்படுகிறது.
உங்கள் வீட்டு பாட்டி, தாத்தாவிடமும் இது போன்ற கதைகள் இருக்கலாம். அவர்களிடம் கேட்டு உங்கள் வீட்டிலும் நீர் மேலாண்மையை அமல்படுத்தி வருங்கால சந்ததிக்கு வளம் சேருங்கள்.
“