ஏப்ரல் 14 – புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும். ஏற்கனவே தையில் புத்தாண்டு வந்து விட்டது என்று அரசு சொல்லிவிட்டதே, இன்னும் ஒரு புத்தாண்டா என்று யோசிக்காதீர்கள். பழக்கதோஷம் – அதுவும் தை 1ல்தான் புத்தாண்டு என்பது எத்தனை வருஷங்களுக்கு நிச்சயம்!!
அடுத்த ஆட்சி வரும்போது நாள் மாறலாம் – யார் கண்டது? தலைவரின் பிறந்தநாள் மார்ச் ஒன்று என்று அன்றுதான் புத்தாண்டு பிறக்கிறது என்று சொன்னால் நாம் ஓட்டுப் போட்ட பாவத்திற்காக ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்? சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் "ஓட்டுப் போட்டவன் ஓட்டாண்டி அதை வாங்கி ஜெயித்தவன் ‘சீமான்’டி" என்று (அந்தப் பெரியவன் நான்தான் என்று சொல்லவேண்டுமா என்ன?!)
ஆனால் நாம் என்னவோ தமிழ்ப் புத்தாண்டிற்கு அது ஜனவரி 14 ஆனாலும் சித்திரை ஒன்றாம் தேதியாக இருந்தாலும் அதற்கு மாற்றாந்தாய் வரவேற்புத்தான் கொடுக்கிறோம் என்று தோன்றுகிறது – தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு வாழ்த்துச் சொல்பவர்களில் பத்து சதவிகிதம் கூட தமிழ் ப்புத்தாண்டிற்கு வாழ்த்துச் சொல்வதில்லையாம்! (எஸ்.எம்.எஸ் புள்ளிவிவரம்). மேற்கத்திய நாகரிகத்தின் எதிரொலி?
முன்பெல்லாம் பொங்கல், புத்தாண்டென்றால் வாழ்த்து அட்டைகளின் வியாபாரம் அமோகமாக நடக்கும். தபால்காரர் கட்டுக்கட்டாக வாழ்த்து அட்டைகளைச் சுமந்து வருவார். இப்போதெல்லாம் ஈமெயிலிலேயே வாழ்த்துகள் பரிமாறப் பட்டுவிடுகின்றன.
ஜனவரி 14 புத்தாண்டாக இருந்தால் என்ன தவறு? ஏன் சித்திரை ஒன்றாம் தேதிதான் புத்தாண்டாக இருக்க வேண்டும் என்று சில புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். நம் பண்டைய வான சாஸ்திர நிபுணர்களின் கணக்கின்படி சூரியன் உச்சத்தில் இருக்கும் நேரம் இதுவாம். இளவேனில்காலம் என்று சொல்லப்படும், தென்றல் வீசும் பருவம் இது – பனிக்காலத்தைத் தொடர்வது. பூமி சூரியனைச் சுற்றி வரும் நீள்வட்டப் பாதையை (360டிகிரி), 12 பாகமாகப் பிரித்து ஒவ்வொரு பாகமும் ஒரு ராசி என்று சொல்கிறோம்.
சூரியன் முதலில் பிரவேசிப்பது, மேஷ ராசி – அதைத்தான் ஆரம்பமாக வைத்து புது வருஷம் துவங்குகிறது. சிங்களர்களும் இதைத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்களாம். மலையாளிகள் விஷு என்று இதைக் கொண்டாடுகிறார்கள். வங்காளம், ஒரிஸ்ஸா மாகாணங்களிலும் சித்திரை ஒன்றுதான் புத்தாண்டு துவங்குகிறது. எப்படியோ அரசியல் நோக்கங்கள் போக, தொலைக்காட்சிகளுக்கு ‘தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முதலாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன (வந்த முதல் நாளே காணாமல் போன!) படங்களையும் தமிழே தெரியாத நடிகைகளின் பேட்டிகளையும் ஒளிபரப்பி காசு செய்யும் நாள். தை மாதம்தான் புத்தாண்டு என்று சொல்பவர்கள் கூட- ஏதோ சித்திரையைப் புத்தாண்டு என்று சொன்னால் வாய் வெந்துவிடுமோ என்று ‘விடுமுறைநாளை முன்னிட்டு’ என்று விளம்பரம் செய்வார்கள். தீபாவளி, பொங்கலுக்குப் பிறகு புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவதும் இந்த நாளில்தான். தள்ளுபடி என்ற பெயரில் செல்லுபடியாகாத சரக்குகளை தலையில் கட்டுவதும் இந்த நாளில்தான்.
புத்தாண்டன்று விருந்தில் வேப்பம்பூவும் மணக்கும் – மாங்காயும் இருக்கும் – வாழ்க்கை இனிப்பு கசப்பு, புளிப்பு, துவர்ப்பு எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்த்தும் தத்துவமாம் இது.
ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு துவங்கும்போது உதகமண்டலத்தில் கோடை காலம் ஆரம்பித்துவிடும். அதுவும் பள்ளிகளுக்கு விடுமுறையும் இந்த நேரத்தில்தான். நான் ஊட்டியிலிருந்தபோது உறவினர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லாரும் அங்கே வந்து முற்றுகை இடுவார்கள். இதுவரை முகம் கண்டறியா சொந்தங்கள் உடன்பிறப்பாக பாசம் காட்டுவார்கள். சொந்தக்காரர்கள் சொந்தக்காரர்களின் சொந்தங்கள்- அவர்களது நண்பர்கள் என்று குடும்ப மரம் பல்கிப் பெருகிவிடும். "ஊட்டிக்குப் போனா நம்ம ‘பத்து’ இருக்கான். அவன் இருக்கறப்போ ஹோட்டல்ல தங்கினா கோவிச்சுக்குவான்" என்று அவர்களாக நிச்சயித்துக்கொண்டு வந்து விடுவார்கள். அவர்களை கார்டன், போட் ஹவுஸ், ரேஸ் கோர்ஸ் என்று சுற்றிக்காட்டி ஷூட்டிங் எதற்காவது அழைத்துச் சென்று, போட்டோ எடுத்து காய்கறி வாங்கிக் கொடுத்து அனுப்புவது வரை நம் வேலை.
ஆனாலும் இப்போது நினைக்கும்போது அதுவும் ஒருவகையில் ஆனந்தமாகத்தான் இருக்கிறது. ஆங்கிலப் புத்தாண்டில்தான் புதிதாகத் தீர்மானம் போடவேண்டும் என்று ஒரு பழக்கமாகிவிட்டது – யாரும் தமிழ்ப் புத்தாண்டில் ஒரு புது சபதமோ தீர்மானமோ போட்டதில்லை. ஒருவேளை ஆங்கிலப் புத்தாண்டில் ஏதாவது தீர்மானம் போட்டால் அவற்றை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்ப் புத்தாண்டு புனிதமானது – அப்போது நிறைவேற்ற முடியாத தீர்மானங்களைப் போடக் கூடாது என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம்! தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் நம்மில் எத்தனை பேருக்குத் தமிழ் வருடங்களின் பெயர் தெரியும்? தமிழ் எண்கள் தெரியும்?
தமிழில் பேசினாலே கவுரவம் குறைவு என்று எண்ணும் எண்ணத்தை விட்டு நம் குழந்தைகள் எந்த நாட்டிலிருந்தாலும் தமிழில் பேசுவதையும், படிப்பதையும் ஊக்குவிப்போம் என்ற தீர்மானம் போட்டாலே அது நம் தமிழ்த் தாய்க்குச் செய்யும் பெரிய பணி.