விடை தேடும் வினாக்கள்
உள் தணிக்கை, தணிக்கைக் குழு மற்றும் சட்டபூர்வ தணிக்கையாளர்களைப் பற்றி முன்பு பார்த்தோம். இப்போது வங்கிகள் மற்றும் அரசுத் துறைகளின் பங்கு, பணி பற்றிப் பார்ப்போம்.
சத்யம் குழு கம்பெனிகளுக்கு வங்கிகள் நேரடிக் கடன் மற்றும் உத்தரவாதங்கள் வழியாக 3300 கோடி ரூபாய் அளித்திருக்கின்றன. இப்படிக் கடன் வழித் தொடர்பு கொண்ட வங்கிகள், பரோடா வங்கி, சிட்டி வங்கி, H.D.F.C. வங்கி, B.N.B Paribas, H.S.B.C., I.C.I.C.I ஆகியவை. இவை தவிர ராமலிங்க ராஜு வங்கிகளிடம் சொந்தமுறையில் 500 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். சத்யம் ஊழியர்களுக்கும் இந்த வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. இப்படி இருக்கையில் ஏழு ஆண்டுகளாக ஐந்தொகையில் (Balance Sheet) பொய்க்கணக்குக் காட்டியிருந்தால் அத்தனை வங்கிகளில் ஒரு வங்கிக்குக் கூட தெரியாமல் போயிற்று என்பதை நம்புவதற்கில்லை.
எப்படி என்று பார்ப்போம். பெரிய அளவில் கணக்கு வழக்கை வைத்திருக்கும் சத்யம் கம்பெனியின் அன்றாடக் கணக்குகளை கவனிக்கும்போதே ஏதாவது கோளாறாக இருந்தால் கண்ணுக்குப் புலப்படாமல் போயிருக்க வழியில்லை. அதுதான் போகட்டும், பெரிய வாடிக்கையாளர்களின் ஐந்தொகை வரும்போது வங்கி அதிகாரிகள் அவற்றை ஊன்றிக் கவனிப்பது நடைமுறையில் உள்ள ஒன்று. அதைத் தவிர, கடன் தொகை வரம்பை ஆண்டு தோறும் மறு பரிசீலனை செய்வார்கள். அப்போது ஐந்தொகையில் தப்பு – அதுவும் இத்தகைய பூசணிக்காய்த் தப்பு இருந்தால் தெரியாமல் போகாது.
கணக்கு வழக்குகளை, எவ்வளவு பெரிய வாடிக்கையாளராக இருந்தாலும் அடிப்படையில் கவனிப்பது வங்கி ஊழியர்களே. ஏதாவது சந்தேகத்துக்கு இடம் இருந்தால், அவர்களது Grapevine என்று அழைக்கிற முறை சாராத தகவல் தொடர்பு மூலம் சட் சட்டென்று வெளியில் பரவியிருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலான முக்கிய விஷயம். ராஜு போன்ற முக்கிய கார்ப்பொரேட் வாடிக்கையாளர்களுடன் வங்கிகளின் உச்ச மட்ட அதிகாரிகள் நேரடித் தொடர்பும் நெருங்கிய உறவும் வைத்துக் கொள்வார்கள். குடும்ப விருந்துகள், நிகழ்ச்சிகள் இவற்றில் பரஸ்பரம் குடும்பத்தினருடன் கலந்து கொள்வது நடைமுறையில் உள்ள விஷயம். யதேச்சையாகவாவது இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று சம்சயம் ஏற்படும் அளவுக்கு வாய்ப் பிசகாகவாவது ஏதாவது தகவல் கிட்டி விடும். இப்படி ஏழு வருஷங்களில் ஒன்றுமே நடக்கவில்லை என்பது நம்புவதற்கில்லை. இதெல்லாம் வங்கியில் மிக உயர்ந்த பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ள ஒருவர் அடித்துச் சொல்லும் தகவல்கள்.
அவர் ஒரு உதாரணத்தைச் சொன்னார். கம்பெனி அதிபரான வாடிக்கையாளர் மற்றும் அவரது மனைவியை இவரும் இவரது மனைவியும் ஒரு குடும்ப விருந்தில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது வாடிக்கையாளர் மனைவி, சிநேகிதியான மானேஜர் மனைவியிடம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்:- "இவர் இரவு முழுவதும் தூங்குவதே இல்லை. குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். கேட்டால் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறார்." இந்த விஷயம் வங்கி மேலாளர் காதுக்குப் போயிற்று. வணிக ரீதியாக சந்தேகப்படும்படியாக எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், மேலாளர் கம்பெனிக் கணக்குகளைத் தூண்டித் துருவி ஆராய்ந்ததில் கம்பெனி மிக மோசமான நிலைமையில் இருந்தது தெரிய வந்தது. உரிய நடவடிக்கை மேற்கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
சில சமயங்களில் "பெரிய கணக்கு", அதிபர் மிகவும் தகுதி வாய்ந்தவர் என்ற காரணங்களால் சில சின்ன விஷயங்களில் வங்கிகள் நீக்குப்போக்காக இருந்திருக்க வாய்ப்பு உண்டே தவிர, பொய்க் கணக்குகளைப் பொறுத்துக் கொள்வார்கள் என்றோ, பொய்யான வைப்பு நிதிகள் பற்றிய அறிக்கைகளைத் தருவார்கள் என்றோ கனவிலும் கருத இடமில்லை. இந்த அடிப்படையில்தான் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அடுத்து செபி என்னும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு வருவோம். கம்பெனியின் பங்குகள் பெரிய அளவில் விற்பனையாகி, மற்றும் அடமானம் வைக்கப்பட்டு இருக்கின்றன. கம்பெனி உள் நபர்கள் வர்த்தகம் என்று தெளிவாகத் தெரிகிற அளவுக்கு பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. இத்தனையும் பற்றி ஒன்றுமே தெரியாமல் ஐயோ பாவமாக இந்த அமைப்பு இருந்திருக்கிறது. எல்லாம் போகட்டும், போர்டு மீட்டிங் முடிந்த டிசம்பர் 16க்குப்பின் ஜனவரி 5 வரை மிகப் பெரிய அளவில் பங்குகள் கைமாறி உள்ளனவே, அதைக்கூட கண்டு கொள்ளாத அமைப்புக்கு கட்டுப்பாட்டு அமைப்பு என்று எதற்குப் பெயர்?
நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கென்றே இரண்டு அமைப்புகள் உள்ளன. மத்திய அரசின் கார்ப்பொரேட் விவகார அமைச்சின் கீழ் கம்பெனி சட்ட வாரியம் வருகிறது. கம்பெனி விவகார இலாகாவின் கீழ் கம்பெனி பதிவாளர் அலுவலகம் வருகிறது. ஒவ்வொரு பருவமும் இந்த அலுவலகங்களுக்கு நிறுவனங்கள் அறிக்கைகளை அனுப்பியாக வேண்டும். சத்யம் தங்கள் அறிக்கைகளை கடந்த ஏழு வருஷங்களில் அனுப்பி வைத்ததா? இல்லையென்றால் ஏன் இந்த அமைப்புகள் கேள்வி எழுப்பவில்லை? அனுப்பியிருந்தால் முரண்பாடுகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தாக வேண்டும்.
இதில் இன்னொரு வேடிக்கை. ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களே 320 நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்கள். அதில் 60 நிறுவனங்கள் ஒரே விலாசத்திலிருந்து இயங்குகின்றன. இதைக்கூட கண்டுபிடிக்க முடியாத அமைப்புகளைப் பற்றி என்ன சொல்வது?
அடுத்தபடி, அன்னிய செலாவணிகளைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்று உண்டு, அன்னியச் செலாவணி நிர்வாக சட்டத்தை அமல்படுத்தி நடைமுறைப் படுத்துவதைக் கண்காணிக்கும் Enforcement Directorate. சத்யத்தின் வணிகத்தில் பெரும்பான்மை வெளிநாடுகளிலேயே. 3 சதவீத லாபத்தை 24 சதவீதமாகக் காட்டி அதற்கேற்ப வருமானத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக "Over invoicing" செய்திருந்தார்கள் என்றால் இந்த அமைப்பு கட்டாயம் கண்டுபிடித்திருக்க வேண்டுமே?
வருமான வரி இலாகாவைப் பற்றி முன்னமே சொன்னோம். பாங்கிகளில் வைத்திருந்த, ராஜுவின் வைப்புத் தொகைகளுக்கு சட்டப்படி 10 சதவீத வரி பிடித்து வங்கிகள் வருமான வரி அனுப்பி விட்டன. தமது வருமான வரிக் கணக்கில் இந்த தொகைகளை, வட்டிகளைக் கணக்கில் காட்டி ராஜு பாக்கி வரியைச் செலுத்தியிருக்க வேண்டும். அவரோ இவை ஒன்றையும் கணக்கில் காட்டவே இல்லை. இதைக் கண்டுபிடித்த வருமான வரி அதிகாரியைத் தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றி விட்டு ராஜுவிடம் வரியை மட்டும் பிடித்துக் கொண்டார்கள். வருமானத்தை மறைத்ததற்கு எந்த நடவடிக்கையும் கிடையாது. ஏன் என்று கேட்பார் இல்லை.
எல்லாம் போகட்டும், வருங்கால வைப்பு நிதி இலாகா என்று ஒன்று இருக்கிறதே! இதில் ஆய்வாளர்கள் கூட உண்டு. சின்னச் சின்ன கம்பெனிகளுக்கெல்லாம் சென்று கெடுபிடி செய்து எத்தனை ஊழியர்கள், எத்தனை பேருக்கு வைப்பு நிதி பிடிக்கிறார்கள், சரியான அளவில்தான் பிடிக்கிறார்களா, ஆரம்ப முதலே பிடிக்கிறார்களா, பிடித்த பணத்தை தங்கள் பங்கையும் போட்டு இலாகாவுக்கு கட்டி விட்டார்களா என்றெல்லாம் சோதனை செய்வதே இவர்கள் பணி. 53000 ஊழியர்கள் என்று கணக்கு காட்டி விட்டு 40000 பேருக்குத்தான் நிதி பிடிக்கிறார்கள் என்றால் இவர்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?
இன்னும் விற்பனை வரி, சேவை வரி என்றெல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கும் அவ்வப்பொழுது ஒழுங்காக கணக்குக் காட்டி வரி செலுத்தியிருக்க வேண்டும். விற்பனையை எக்கச்சக்கமாக அதிகரித்துக் கணக்குக் காட்டியிருந்தால், நடக்காத விற்பனைக்கு வரி கட்டியிருக்க வேண்டுமே? கட்டினார்களா? எப்படிக் கட்டினார்கள்?
ஆக, மக்கள் வரிப்பணத்தைக் கொட்டியழுது இத்தனை துறைகளை, அமைப்புகளை இயக்கியபோதும் சத்யம் போன்ற மகா மகா ஊழல்களைக் கண்டுகொள்ளவோ தவிர்க்கவோ முடியவில்லை என்றால் அதற்கு மூன்றே காரணங்கள்தான் நம்மால் சொல்ல முடிகிறது.
1) நிர்வாக அமைப்பு முறைகளே சரியில்லை.
2) விதிகளையும் நெறிமுறைகளையும் கடைப்பிடிக்காத மெத்தனம்.
3) லஞ்ச ஊழல்.
செபியின் முன்னாள் இயக்குநர் தாமோதரன் பட்டுக் கத்தரித்தாற் போல் சொன்னார், "இத்தகைய ஊழல்களில் இதுவே முதலும் கடைசியுமில்லை!". அவருக்குத் தெரியாத விஷயமா?
ஸ்விஸ் வங்கியிலே 72 லட்சம் கோடி ரூபாய் தனியார் போட்டு வைத்து உலகத்திலேயே முதல் இடத்தை நமது நாடு பிடித்திருக்கிறது என்பதில் வியப்பில்லை. (இது இந்தியாவில் உள்ள அத்தனை வங்கிகளிலும் அத்தனை பேரும் போட்டு வைத்துள்ள கணக்கைக் காட்டிலும் அதிகம்! நமக்கு அடுத்து உள்ள நாடுகள், ரஷ்யா போன்றவை எல்லாம் எங்கோ பின் தங்கி நிற்கின்றன.) இதில் அரசியல்வாதிகள், நிர்வாக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெரிய வர்த்தக நிறுவனர்கள் பங்குகள் எவ்வளவு இருக்கும் என்று அவரவர் யூகித்துக் கொள்ளலாம். இதைத் தோண்டியெடுக்க யாரும் முனைய மாட்டார்கள் என்பதும் சர்வ நிச்சயம்.
(முற்றும்)
“