கால தாமதம்

குமுதாவைப் பற்றி:

பட்டப்படிப்பு முடித்திருந்தாள். சரியான கிணற்றுத் தவளை. பட்டென்று போட்டு உடைத்து விடுவாள் மனதில் பட்டதை. இடம் பொருள் பார்த்து பேசத் தெரியாது. எடுத்தெறிந்து பேசுவதில் சர்வாதிகாரி. கோபத்தைக் குத்தகைக்கு வாங்கியிருப்பாள் போலும். அப்பா செல்லம். அம்மா கொடுக்கு. அதனால் நண்பர்கள் வட்டம் மிகவும் குறைவு. சிரிப்பென்றால் கலகலப்பு. சோகம் என்றால் குற்றால அருவி. கோபம் என்றால் காட்டாற்று வெள்ளம். எதுவாயினும் மனோ தைரியம் அவளது பூர்வீக சொத்து.

குமரேசனைப் பற்றி:

அதிகம் படிக்காதவன். ஆனாலும் சிறுவயது முதற்கொண்டே பல ஊர்கள் சென்ற அனுபவம். எளிதில் பழகக்கூடிய சாமர்ததியசாலி. பழகுவதற்கு எளிமை. சுயநலமில்லாக் கொள்கை. தக்கார்க்கு தக்கபடி பேசுவதில் சமர்த்தன். கோபம் சட்டென்று வராது. வந்தால் ஊரே தாங்காது. எவரிடமும் பயமின்றிப் பழகும் இயற்கையான குணம். பொறுமை கைவந்த கலை. நகைச்சுவைப் பேச்சு வரப்ரசாதம். எதிரி என்று யாரையும் நினைப்பதில்லை. அனைவரிடமும் மத நல்லிணக்கத்துடன் பழகுவதில் தனிக்குணம். பெரியோர்களை மதிக்கும் பண்பு.

குமுதா ஆரம்பித்தாள். “என்ன சொன்னாலும் தஞ்சாவூர் தலையாட்டு பொம்மை மாதிரி நல்லா தலையை ஆட்டுறீங்க! உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு” என்றாள்.

“ஓ? அப்படியா?” என்றான் குமரேசன்.

“உங்க அம்மாவுக்கு நம்ம திருமணத்தில் இஷ்டம் இல்ல போலிருக்கே?” மெதுவாக ஆரம்பித்தாள் குமுதா.

“எதை வச்சு அப்படி சொல்ற?”

“உங்க அம்மாவுக்கு உங்க தங்கை குழந்தைகள்னா ரொம்ப ஒசத்தி. நம்ம குழந்தைகள்னா படுமட்டம்” என்றாள்.

“அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. தெரியாம அரைகுறையா எதுவும் சொல்லாதே” என்றான் கோபமாக குமரேசன்.

“உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா உடனே வந்து உதவி செய்யறாங்க. எனக்கு உடம்பு சரியில்லேன்னா திரும்பிக்கூட பார்க்கமாட்டேன்கிறாங்க”

“எனக்கு அம்மா உதவறாங்க. நான் உனக்கு உதவறேன். போதாதா” என்றான்.

"எங்க அம்மாவைப் பாருங்க! எல்லாரும் சமம். ஆனா உங்கம்மாதான்…." இழுத்தாள் குமுதா

"எல்லா அம்மாக்களுக்கும் தனது மகன்களைவிட தனது மகள்களிடம் பாசம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். தவறு சிறிதும் இல்லை. இதில் யாரும் விதிவிலக்கல்ல"

"இருந்தாலும் எங்க அம்மாவைப் போல உங்க அம்மா வரமாட்டாங்க" என்று சிணுங்கினாள் குமுதா.

"உன்னுடைய நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது" என்று இப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் குமரேசன்..

காலசக்கரம் சுழல்கிறது.

குமுதாவைப்பற்றி அவளது மகனிடம் மருமகள் பேசுவது கேட்கிறது.
குமுதா ஒட்டுக்கேட்கிறாள்.

“இதப் பாருங்க! உங்க அம்மாவுக்கு என்னைக் கொஞ்சும் கூட பிடிக்கவில்லை. தேவையில்லாம எல்லா விஷயத்திலும் தன் மூக்கை நுழைக்கிறாங்க”.

குமுதா ஓடிவந்து குமரேசனிடம் புலம்புகிறாள். “இதோ பாருங்க நம்ம மருமகள் நம் மகனிடம் என்னைப் பற்றி தவறாகப் பேசுகின்றாள். குறை கூறகின்றாள். நான் அப்படியா பாரபட்சமாய் இருக்கின்றேன்?” என்று கண்ணைக் கசக்கினாள்.

“இதில் அதிசயம் ஒன்றுமில்லை. அன்று நீ என் அம்மாவைப் பற்றி என்னிடமே குறைசொன்னாய். இன்று உன் மருமகள் உன்னைப்பற்றி குறை கூறுகிறாள். என் மகன் என்னை மாதிரி. உன்னையும் விட்டுக்கொடுக்க மாட்டான். நமது மருமகளையும் விட்டுக் கொடுக்கமாட்டான். அனாவசியமாய் கவலைப்படாதே. ஒட்டுக்கேட்பதை மட்டும் இன்றுடன் நிறுத்திவிடு” என்றான்.

குமுதா வாய் மூடியது மட்டுமல்லாது குமரேசனை வாயாரப் புகழ்ந்து தள்ளினாள்.

“காலதாமதம் என்றாலும் பரவாயில்லை” என்று பெருந்தன்மையாக கூறினான் குமரேசன்.

About The Author

10 Comments

  1. chitra

    காந்திஜீயின் சத்ய சோதனை சுய சரிதம் படித்தார் போல இருக்கு

  2. K Narasimhan

    உண்மையை தலையில் அடித்து நச்சென்று சொல்லிய மாதிரி மிகவும் அருமையக உள்ளது.

Comments are closed.