பாபா பதில்கள் – இறைவன் ஒளிமயமானவன் என்பதற்கு என்ன சான்று?

Q. இறைவனிடம் எவ்வாறு அன்பு செலுத்துவது?

அன்பு என்பது ஆயிரம் கோடி வருடங்களாக உனக்குள் இருக்கிற விஷயம். பூமியில் தண்ணீர் சுரப்பதுபோல அன்பு தானாகவே சுரக்கும். கன்றுக்குட்டியின் குரல் கேட்டவுடனேயே பசுவுக்கு பால் சுரக்கிறது. அந்த மாதிரி கடவுளிடம் அன்பு என்பது spontaneous expression. யாரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பது அல்ல. எப்படி வேண்டுமானாலும் கடவுளை நேசிக்கலாம். சாக்கிய நாயனார், கண்ணப்ப நாயனார் போன்றவர்கள் தங்களுக்குத் தோன்றிய விதத்தில் அன்பு செலுத்தினார்கள்

Q. யாவற்றையும் கடந்து நிற்கும் கடவுளைக் காண முடியுமா?

பசியையும் ருசியையும் காண முடிவதில்லை. ஆனால் உணர்கிறோம். காற்றைக் காண முடிவதில்லை. ஆனால் உணர்கிறோம். அதே போல ஊனக் கண்களால் கடவுளைக் காண முடியாது. கடவுள் இருக்கிறார் என்று திடமாக நம்பி, பக்தி செலுத்தி, அகக்கண் கொண்டு உள்ளுணர்வால் உணரலாம்.

Q. இறைவனைத் துதிக்க எது சிறந்த வழி …..தீர்த்த யாத்திரை? … க்ஷேத்திராடனம்? …பூஜை, புனஸ்காரங்கள்?

இருபத்து நான்கு மணிநேரமும் கடவுளுடனேயே வாழ்கிற மாதிரியான பாவனையோடு வாழ்ந்து கொண்டிருப்பது சிறந்த மார்க்கம்.

Q. இறைவன் ஒளிமயமானவன் என்பதற்கு என்ன சான்று?

மகாபாரத யுத்த களத்தில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணர் அவனுக்கு தன் விச்வரூப தரிசனத்தைக் காட்டினார். பயந்து போன அர்ச்சுனன் அவருடைய உண்மையான ஸ்வரூபம் எது என்ற வினவ கிருஷ்ணர், ‘நீ பார்க்கிற என்னுடைய ரூபம் எதுவும் உண்மையல்ல, என்னுடைய நிஜ வடிவம் ஒளி. I am a CosmicLight. என் பக்தன் எந்த வடிவத்தில் என்னைப் பார்க்க விரும்புகிறானோ அந்த வடிவத்தில் என்னால் வர முடியும்’ என்றார். ஞானசம்பந்தர் சொன்னதும் அதுதான். ‘மிக்குப் பரந்துள்ள ஜோதியான்’ என்றார்.

About The Author