மரங்களின் மரப்பட்டைகள் (bark) :
மரத்தண்டுகள் அல்லது வேர்கள் ஆகியவற்றைச் சுற்றி மேற்புறத்தில் மரப்பட்டைகள் உள்ளன. மரப்பட்டையின் முக்கிய செயல்பாடுகளுள் ஒன்று உள்ளே இருக்கும் மென்மையான பகுதிகளைப் பாதுகாப்பதாகும். அப்பகுதிகளை உலர்ந்து போகாமல் காப்பதோடு, பல்வகைப்பட்ட வெளிப்புற ஊறுகளிலிருந்தும் மரப்பட்டைகள் அவற்றைப் பாதுகாக்கின்றன.
மரப்பட்டைகள் உருவாகும் செயல்முறை ஆண்டுதோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும். இவற்றின் சில வெளிப்புறப் பகுதிகள் உலர்ந்தும் மடிந்தும் போகலாம். மடிந்தும் உடைந்தும் போன பகுதிகளால் மரப்பட்டையின் தோற்றம் கரடுமுரடாகக் காட்சி தரும். சிறிய மரக்கிளைகள் பெரிதாகும் போதும் வயதாகும் போதும் உலர்ந்து போன துண்டுகள் கீழே விழுந்துவிடும் அல்லது உடைந்து போகும்.
சில நேரங்களில் தண்டினுடைய எவ்வளவு பகுதி மரப்பட்டை என்பதை உறுதி செய்ய முடிவதில்லை. எடுத்துக்காட்டாக தென்னை மரத்தில் மரத்தண்டு மற்றும் மரப்பட்டை இவற்றுக்கிடையே தெளிவான பிரிவை அறிந்து கொள்ள முடிவதில்லை. தேங்காய் என்பது பெரிதான மற்றும் உட்குழிவான ஒரு கொட்டை ஆகும். இதில் இருக்கும் இளநீர் பருகுவதற்குச் சுவையானது என்பதை நாம் அறிவோம். இதில் உள்ள தேங்காய்ப் பருப்பு எண்ணெய்ப் பசை உடையது மற்றும் சமைப்பதற்கு உகந்தது. தேங்காய் ஓட்டுக்கு வெளியே உள்ள நார்ப்பகுதி கயிறு, பாய் மற்றும் பை ஆகியவைகட்கு மூலப்பொருளாக விளங்குவது.
தாவரங்களின் வேர்கள் :
ஒரு தாவரத்துக்கு இரு காரணங்களுக்காக வேர்கள் தேவைப்படுகின்றன: ஒன்று, தரை அல்லது பூமியில் தாவரம் நிலையாக நிலைத்திருப்பது; அடுத்தது மண்ணிலிருந்து தாவரங்கட்குத் தேவையான நீர் மற்றும் கனிமங்களைப் பெற்றுத் தருவது. பெரும்பாலான தாவரங்களின் வேர்கள் மண்ணிலேயே வளர்கின்றன. வேர்களின் முனைகள் நீள்வதால் புது மண்ணுடன் அவை எப்போதும் தொடர்பில் இருக்க முடிகிறது. இளம் வேரின் மிகச் சிறிய மயிரிழை போன்று ஆயிரக்கணக்கில் அமைந்துள்ள பகுதிகள் மண்ணிலிருந்து பொருட்களை உறிஞ்சிக் கொள்கிறது. சில தாவரங்களுக்கு பெரிய குமிழ் போன்ற வேர்கள் உள்ளன; அவற்றை “ஆணி வேர்கள் (tap roots)” எனக் கூறுவர். மண்ணில் விளையும் புற்களுக்கு நார் போன்ற நுண்ணிழை வேர்கள் (fibrous roots) இருப்பதால் மண் சரிவு ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. வெப்ப மண்டலத்தில் மரத்தின் மீது வ்ளரும் செடிகளுக்கு கடற்பஞ்சு (spongy) போன்ற வேர்கள் அமைந்திருக்கும்.
ஆணிவேர் உள்ள தாவரத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது காரட்கள் (carrots) ஆகும். தரைக்குக் கீழ் ஒரு பெரிய வேரில் இத்தாவரம் வளர்கிறது. இவ்வேர்கள் உணவாக உட்கொள்ளத் தகுந்தவை என்பது நமக்குத் தெரியும்.
“