கனத்த மழை நேரத்துல
இடி இடிச்சா
அர்ஜுனா அர்ஜுனா என
வாய்விட்டு
சொல்லச் சொன்ன அம்மா..!
புகுந்தவூட்டுல
அவரோட
ஒவ்வொரு அடிக்கும்
சொல்லிக் கிட்டுதான் இருக்கேன்
மனசுக்குள்ளேயே!
வாய்விட்டுச்சொன்னா
யாருடி அவன்னு
அதுக்கும் அடி விழுமே!…
புதை மணல்
எனது பாதை முழுவதும்
பரந்து கிடக்கிறது
பயணிக்க முடியாத வண்ணம்…
எனது
வெளிச்சங்களை எல்லாம்
விழுங்கிவிட்டது
அகல விரிந்து…
விட்டு வைக்கவில்லை
என்னையும்.
புதை மணல் என்று
முன்பே தெரிந்திருந்தால்
பார்த்திருக்கவே மாட்டேன்
அந்தக் கண்களை.
அனுபவம்
எங்களது மழையில்
திரண்டு வளர்ந்த
அந்த
பெருத்த குடைக்காளான்
நிழலில்
யார் யாரோ இளைப்பாறுகிறார்கள்
எங்களைத் தவிர.
–தொட்டுத் தொடரும்“