என்ன செய்யலாம்?
எல்லாம் ஒழுங்குமுறையாக நடக்க என்ன செய்யலாம் என்பது பற்றிய நமது பரிந்துரைகள்:
1. இண்டெர்னல் ஆடிட்டர்களாக வெளியார் ஆடிட் கம்பெனிகளையே நியமிக்க வேண்டும். இந்த நியமனம் தணிக்கைக் குழுவால் செய்யப்பட வேண்டும். ஆடிட்டர்கள் என்னென்ன பரிசீலிக்க வேண்டும் என்ற வரைமுறையையும் ஆடிட் கமிட்டியே நிர்ணயிக்கும். இந்த இண்டெர்னல் ஆடிட்டர்கள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரிக்கோ, கம்பெனியின் இலாகாக்களுக்கோ பதில் சொல்லத் தேவையில்லை. இண்டெர்னல் ஆடிட்டர்கள் கொடுக்கும் அறிக்கையைப் பரிசீலித்து நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி அவர்கள் தரும் பதிலை அல்லது தவறுகளைத் திருத்தும் நடவடிக்கைகளைப் பரிசீலித்து, திருப்தியான முறையில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன என்று முடிவெடுக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவினுடையது..
2. இண்டெர்னல் ஆடிட் கம்பெனி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். அவர்கள் பொறுப்பை நிர்ணயிக்க வேண்டும். அவர்கள் தொழில் முறையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.
3. தணிக்கைக் குழுவில் அக்கவுண்ட்ஸ் தொழிலறிவும் அனுபவமும் உள்ளவர்களையே நியமிக்க வேண்டும். பெரிய பெயர் என்பதற்காக நியமிக்கப்பட்டு போர்டு மீட்டிங்குக்கு வந்து வவுச்சரில் கையெழுத்துப் போட்டு செக் வாங்கிக்கொண்டு செல்கிறவர்கள் கூடாது.
4. தணிக்கை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள மனித வளத்துக்குப் பொருத்தமான அளவிலேயே வேலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, எக்கச் சக்க நிறுவனங்களின் ஆடிட் வேலைகளை எடுத்துக் கொண்டு விட்டு பின்னால், “மூன்று மாசம், முந்நூறு கம்பெனி” என்றெல்லாம் முனகக் கூடாது!
5. நிறுவன பணியாளர்களிலும் சரி, தணிக்கைக் நிறுவனங்களிலும் சரி, இள நிலையிலுள்ள ஊழியர்கள், நிறுவனத்தில் நடக்கும் தவறுகளை உச்ச மட்ட அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்வது வரவேற்கப்பட வேண்டும். இப்போதுள்ள நிலையில் அப்படிப்பட்ட whistle blowers பழிவாங்கப்படுவோம் என்கிற பயத்தில் வாய் மூடி மெளனியாக இருந்து விடுகிறார்கள். இதனோடு நில்லாமல், தவறு நடந்து அதைத் தெரிந்து கண்டும் காணாமல் இருப்பவர்களும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும், அவர்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும்.
6. தணிக்கை நிறுவனத்துக்கான ஊதியம் நிலைப்படுத்தப்பட வேண்டும் (standardised). தணிக்கை செய்யப்படும் நிறுவனம், அதன் வேலை அளவு, தன்மை இவற்றைப் பொறுத்து சீரமைத்து நிர்ணயிக்கப்பட வேண்டும். இது தணிக்கை ஒழுங்குமுறை அமைப்பின் பணியாக இருக்க வேண்டும். (Audit Regulatory Authority)
7. இந்த ஒழுங்குமுறை அமைப்புக்கு National Auditing Board என்று அல்லது ஏற்ற முறையில் பெயரிடப்படலாம். இந்த அமைப்பு சட்டபூர்வமான அமைப்பாக இருக்க வேண்டும். தணிக்கை நிறுவனங்களின் செயல்பாடுகளையும் நெறிமுறைகளையும் வகுத்துத் திட்டமிட்டுக் கண்காணிக்கும் அமைப்பாக இருக்க வேண்டும். Institute of Chartered Accountants பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலையை மட்டும் செய்யட்டும்!
அமெரிக்கா என்ரான் ஊழலுக்குப் பிறகு விழித்துக் கொண்டது. S.E.C (Securities Exchange Commission) என்ற, நமது செபிக்கு இணையான அமைப்பு, Public Companies Accounting Oversight Board என்ற ஒரு வாரியத்தை அமைத்துள்ளது. அமெரிக்காவில் நிறுவப்படும் ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு தணிக்கை நிறுவனமும் இந்த அமைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவை இந்த அமைப்பின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பின் கீழ் வரும்.
எல்லாம் செய்யலாம்தான். எந்த சட்டம், விதிமுறைகள் அமைத்தாலும் அவற்றுக்கு escape route கண்டுபிடிக்கத் திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. சட்டத்தை இயற்றுகிறவர்களை விட சட்டத்தை மீறுகிறவர்கள் புத்திசாலிகளாய் இருக்கிறார்கள் என்பதே நாம் காணும் உண்மை. “திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று இதனால்தான் சொல்லி வைத்தார்கள் போலும்!
(அடுத்த இதழில் முடியும்)
“