தாயத்து

"மூணு வயசு கூட ஆகலை. அதுக்குள்ள குழந்தைக்கு என்ன பிரச்னை இருக்க முடியும்? ஆனா அவனோட ஆவேசம் பார்த்தா என்னால சாதாரணமா எடுத்துக்க முடியலைடா" என்று கலங்கியபடி சொன்ன ஜெயமோகனை அனுதாபத்துடன் பார்த்தேன்.

ஆர்டர் செய்திருந்த பன்னீர் பக்கோடாவும், டீயும் வரக் காத்திருந்த இடைவெளி நேரம். சாலையோர உணவகங்களில் கூட இப்போதெல்லாம் உள்வெளி கட்டமைப்புகளில் நிறைய அக்கறை எடுத்து செலவழிக்கிறார்கள் என்று தோன்றியது. ஆனால் ஜெயமோகனின் அந்த நேர மனநிலையின் குழப்பங்களை நானும் உள்வாங்கத் தயாராகிக் கொண்டிருந்ததால் அந்த இடத்தின் ரம்மியத்தையோ, வெளியே தெரிந்த பசுமையையோ முழுதுமாக ரசிக்க முடியவில்லை.

முக்கால் மணிநேரத்திற்கு முன் ஜோர்ஹாட் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது இந்தப் பயணத்தில் ஜாலியே உருவான ஜெயமோகனிடம் இப்படி ஒரு குழப்பம் இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முந்தைய தொலைபேசிப் பேச்சுக்களிலோ, ஈமெயில்களிலோ கூட இது குறித்துக் கோடிட்டிருக்கவில்லை அவன்.

ஜோர்ஹாட் விமான நிலையம், அதிகபட்சமாக உசிலம்பட்டி பேருந்து நிலையத்தை விடக் கொஞ்சம் பெரிதாக இருந்தது. நான் வந்த விமானம் தவிர கொஞ்சம் தள்ளி ஒரு சிறு விமானம் நின்றிருந்தது. சுற்றுப்புறங்களில் கட்டிட வேலைக்கான பணிகள். ஒரே ஒரு நிர்வாகக் கட்டிடம், காற்றின் திசைகாட்டும் துணி உருளைகள் இரண்டு.

சொற்பமான கூட்டத்துடன் நடந்து கட்டிடத்தினுள் நுழைய, மறுபக்கம் வெளியே இருந்து என்னைப் பார்த்து விட்ட ஜெயமோகன் புன்னகையுடன் கை அசைத்தான். என்னுடைய ஒரே பெட்டியைக் கைச்சுமையாகக் கொண்டிருந்ததால் கன்வேயர் பெல்ட்டின் முன் குவிந்திருந்த மக்களை விலக்கி வெளியே வந்து மூச்சினை இழுத்து விட்டேன். இது தான் அஸ்ஸாமா? அந்த விமான நிலையத்தின் அளவுக்கு அதிகமாகவே ஸ்டென் துப்பாக்கிகளுடன் காவலர்கள்.

"பிரயாணமெல்லாம் எப்படி?" என்று சம்பிரதாயக் கேள்வியுடன் ஆரம்பித்து என் பெட்டியை வாங்கிக் கொண்ட ஜெயமோகனின் தோளில் கை போட்டபடி, "என்னடா முகத்தில் கீறல்? புறங்கையிலும் நகக் காயமாய்த் தெரியுது? யாரையும் ரேப் கீப் பண்ணினியா?" என்று கேட்டேன்.

"வந்தவுடன் உன் டாக்டர் புத்தியைக் காட்ட ஆரம்பிச்சாச்சா? எல்லாம் நம்ம பையன் கைங்கர்யம்" என்றான் ஜெயமோகன்.

"பொடியன் அம்ரித், எப்படி இருக்கான்? அதுதானே அவன் பெயர்?" என்று நான் கேட்க, தலையில் அடித்துக் கொண்டான் அவன். "அம்ரித் இல்லைடா, அவ்ரித்" என்று திருத்தினான். "என் மனைவியைச் சொல்லணும். அவள் பாட்டுக்கு, யாருமே வைக்காத பேரா இருக்கணும்னு என் உயிரை எடுத்து யோசிச்சு, வச்ச பெயர் இது. ‘அருள்மிகு விநாயகர் இவனுக்குத் துணை’ என்பதன் சுருக்கம் தான் அவ்ரித். எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இனியாவது மறக்காதே" என்றான் தொடர்ந்து.

"வாவ்" என்றேன். அவனுடைய காரில் ஏறி உட்கார்ந்தோம். வளாகம் விட்டு வெளியே வந்த கணத்திலேயே வேகம் எடுத்தான். சாலை நன்றாக இருந்தது. காரினுள் சிவாஜி படப்பாடல் குளிர்காற்றினை நிரப்பியது.

"சொல்லுடா வீட்டில் பையன், ஜோதி எல்லாம் நலமா?"

"எல்லாம் ஓகே. அவ்ரித் பத்தித் தான் உங்கிட்ட ஒண்ணு பேசணும்னு இருந்தேன் ஃபோன்லயே பேசி இருப்பேன். திடீர்னு நீ இங்கே ஏதோ கன்ஃபரன்ஸுன்னு வர்றதா ஷாக் கொடுத்த. சந்தோஷமா இருந்துது. நேர்லயே பேசிக்கலாம்னுதான் விட்டுட்டேன்" என்ற ஜெயமோகனின் முகத்தில் கவலை தெரிய நான் அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன்.

"நத்திங் டு ஒர்ரி. பார்த்துக்கலாம். ஒண்ணு செய், இங்கே ஏதாவது நல்ல ஓட்டலா பார்த்து நிறுத்து. டீ குடிச்சிட்டே வேணா பேசிட்டு வீட்டுக்குப் போகலாம்" என்றேன். "அப்படி நிறுத்தினா ஏதும் தீவிரவாதிங்க கடத்திட்டுப் போயிர மாட்டாங்களே?" என்று கேட்டேன் சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு.

ஜெயமோகன் சிரித்தான். "அதுக்கெல்லாம் கியாரண்டி கொடுக்க முடியாது" என்றான்.

வெளியே சாலையின் இரண்டு பக்கமும் பச்சைப்பசேல் என்று வயல்கள் அல்லது புற்கள் அல்லது மரங்கள் அல்லது தேயிலைத் தோட்டங்கள்.

"இது மலைப்பகுதி கிடையாதே" என்று கேட்டேன்.

"இல்லை. இங்கே ஸ்பெஷாலிட்டியே சமவெளியில் படர்ந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள் தான்"

ஆங்காங்கே கண்களில் பட்ட பெண்களில் கொஞ்சம் தமிழ்த் தன்மை தெரிந்தது. சேலைக்கட்டு, பொட்டு, நிறம் போன்றவை நம்முடையதை ஒத்திருப்பதாகத் தோன்ற அதைக் கேட்ட போது ஜெயமோகன் சிரித்தானே ஒழிய ஏதும் சொல்லவில்லை.

"இங்கே தானே சிரபுஞ்சியும் காஸிரங்காவும் இருக்கின்றன? பள்ளிக்கூட நாட்களில் படித்தது இன்னும் ஞாபகம் வச்சிருக்கேன் பார்" என்றேன்.

"சிரபுஞ்சி அருகில் இல்லை. காஸிரங்கா இப்போது நாம் போய்க் கொண்டிருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் ஒரு மணிநேரப் பிரயாண தூரத்தில் இதே சாலையில் இருக்கிறது. நீ உன் பயணத்தை ஓரிரு நாட்கள் தள்ளிப் போட முடியும்னா பிளான் பண்ணலாம். யானை சஃபாரியில் போய் காண்டாமிருகம் பார்க்கலாம்"

"சாமி, நான் அதையெல்லாம் டிஸ்கவரி சேனலில் பார்த்தாச்சு. நாளை மறுநாள் கௌஹாத்தி கான்ஃபரன்ஸ் முடிஞ்ச கையோட அங்கிருந்தே ரிட்டர்ன். ஏதோ நீ இருக்கியே உன்னையும் பார்த்த மாதிரி இருக்குமேன்னு தான் கொல்கத்தாவிலிருந்து கௌஹாத்திக்கு டிக்கெட் எடுக்காம இங்கே ஜோர்ஹாட்டுக்கு எடுத்து இந்தப்பக்கமா வந்தேன். நாளை நைட் நான் கௌஹாத்தி போக டிரெயினுக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சுல்ல?" என்று கேட்டேன்.

வண்டியை இடது பக்கம் ஒடித்து அழகான வெளிக்கட்டமைப்புடன் இருந்த சாலையோர உணவகம் ஒன்றின் முன் நிறுத்தினான். இறங்கி நடந்து உள்ளே போய் அமர்ந்தோம். பன்னீர் பக்கோடாவும், டீயும் சொல்லி விட்டு நிமிர்ந்தான்.

"நீ டாக்டர்ங்கறதால உனக்கு எத்தனையோ கேஸ்கள் பார்க்கும் அனுபவத்தில் சாதாரணமாகத் தெரியலாம் ஆனா . . ." என்றவனின் தோளில் கை வைத்தேன்.

"அப்படிச் சொல்லாதே, நான் டாக்டர்ங்கறது இரண்டாம் பட்சம். முதலில் நாம் பள்ளி நாள் முதலான நண்பர்கள். அவரித் எனக்கு ஸ்பெஷல். அவனுடைய பிரச்னையை நான் சாதாரணமா எடுத்துப்பேன்னு நினைக்க வேண்டாம்"

"சாரிடா. எனக்கு இருக்கற குழப்பத்தில் ஏதேதோ உளறிட்டேன். என்ன செய்யறதுடா, இரண்டு பக்கத்திலும் பெரியவங்க ஆதரவோ, பக்கத் துணையோ இல்லை. பாஷை தெரியாத கலாச்சாரம். புரியாத புது இடம். குழந்தை இரண்டரை வயசுக்கு மேல ஆயாச்சு. இன்னும் பேச்சு வரலை. யாரைப் பார்த்தாலும் இதைத்தான் முதலில் கேட்கறாங்க. போதாக்குறைக்கு அவன் நினைச்சதைத் தான் சாதிக்கணும்ங்கற பிடிவாதம் நம்பமுடியாத அளவுக்கு அதிகமா இருக்கு. நினைச்சது நடக்கலைன்னா எதையும் தூக்கி அடிக்கறான். நான், அவன் அம்மா என்று யாரையும் பார்க்கறது இல்லை. அடி விட்டான்னா பலம்மா விழுது. ராத்திரி தூங்கறதுக்கு பனிரெண்டு மணிக்கு மேல ஆக்கிடறான். டிவி பார்த்திட்டு முழிச்சிருக்கான். பகலில் தூங்க மாட்டேங்கறான். எதாவது விஷயத்தில் பிடிவாதம் பிடிச்சு ராத்திரில சண்டை ஆயிடுது. எவ்வளவு அடி வாங்கறான் தெரியுமா? அழுதான்னா சத்தம் ஊரைக் கூட்டிடும். அப்படி ஒரு குரல்"

ஜெயமோகன் பேசிக் கொண்டே போனான்.

"அதையெல்லாம் விட என்னைக் கலக்கின விஷயம் வேறடா" என்று கூட்டி விழுங்கினான்.

"சொல்லு" என்று ஊக்கினேன்.

"நாங்க வீட்டின் முதல் மாடில குடி இருக்கோம். வீட்டு ஓனர் தரைத்தளத்தில் இருக்காங்க. அவங்க முஸ்லிம். ரொம்ப நல்லவங்க. அவங்க ஒரு தடவை வந்து தயங்கித் தயங்கி என்ன சொன்னாங்க தெரியுமா?"

(மீதி அடுத்த இதழில்)

மேலும் பல…..

About The Author

Momizat Team specialize in designing WordPress themes ... Momizat Team specialize in designing WordPress themes