2013 – ஒரு பறவைப் பார்வை

புதிய ஆண்டொன்று பிறப்பதும் பழையது கழிந்து போதலும் காலங் காலமாக நடந்து வருபவை. பிறக்கும் புதிய ஆண்டில் பழைய ஆண்டின் நிகழ்வுகளைச் சற்றே நோக்கும்போது, அந்த நிகழ்வுகள் கண் முன்னே மீண்டும் தோன்றுவது போன்ற உணர்வுக்கு ஆட்பட்டுவிடுகின்றோம். அப்படி, 2013-ஐ மேலோட்டமாக, ஒரு பறவைப் பார்வையில் பார்ப்போமா?

ஆண்டுத் தொடக்கமே, இராணுவப் படை அணிவகுப்புடன்தான் தொடங்கியது. ஆபிரிக்க நாடான மாலி, தன் நாட்டைப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள, தனது முன்னாள் ஆட்சியாளராக இருந்த பிரான்ஸ் நாட்டின் இராணுவ உதவியைக் கோரியது. பிரென்ச் அரசும் தனது இராணுவப் படைகளை மாலி நாட்டுக்கு அனுப்பி வைத்தது. எவ்வளவு இராணுவத்தினர் சென்றனர் எனும் கணக்கு வெளியே தெரியாவிட்டாலும், 800 முதல் 900 வரையிலான இராணுவத்தினர் சென்றிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஜனவரி மாத நடுப்பகுதியில், மேலும் ஒரு தொகை இராணுவத்தினர் (மொத்தம் 1500) அனுப்பப்பட்டனர். போராளிகள் மாலி நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றி விட்டதால்தான், இந்த மேலதிகப் படை என்று காரணம் சொல்லப்பட்டது.

இப்படி, இங்கே போர் மேகம் சூழ, 22 மாதங்களாகத் தொடரும் சிரிய உள்நாட்டுப் போர், அது வரை 60,000–க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்திருக்கின்றது என்று ஐ.நா அவை ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அடிபாடுகளும் வன்முறை நிகழ்வுகளும் ஓய்வதாகத் தெரியவில்லை. ஜனவரி நடுப் பகுதியில், அல்ஜீரியாவில் ஆயுதபாணித் தீவிரவாதிகள் 60 பேர், 41 பொறியியலாளர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டார்கள். பணயக் கைதிகளில் பலர் அமெரிக்க, பிரித்தானியக் குடிமக்கள். மாலி நாட்டுப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கடத்தல் என்று சமூக அக்கறையாளர்கள் கருதினார்கள். அல்ஜீரியப் படைகள் தாக்குதலுக்குப் பின்னர், பணயக் கைதிகளில் 37 பேரும், 29 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. மூன்று தீவிரவாதிகளை உயிரோடு பிடித்தார்கள்.

இதே நேரம், இஸ்ரவேல் நாட்டில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்தது. தேர்தல் முடிவில், பலரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவால் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடியவில்லை.

ஆர்ப்பாட்ட அலைகள் எகிப்தில் தொடங்கியதும், ஜனவரி மாதப் பிற்பகுதியில்தான்! அங்கு புரட்சி வெடித்து இரு ஆண்டுகள் கழிந்த நிலையில், வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் வெடித்தன. நாட்டின் பிரதமர் மோர்ஸி பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தவறிவிட்டார், மக்களுக்குப் போதுமான சுதந்திரம் அளிக்கவில்லை என்றெல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. போர்ட் செயிட் உட்பட மூன்று பெரிய எகிப்து நகரங்களில், அரசால் அவசரக் காலநிலை அறிவிக்கப்பட்டது. போட் செயிட் நகரில் (2012இல்) காற்பந்தாட்டத் திடலில் 75 பேர் அநியாயமாக உயிரிழந்த நிகழ்வையொட்டி நடாத்தப்பட்ட விசாரணையில், 21 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர்தான் இங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்த நகரில் மாத்திரம், வன்முறையால் பொதுமக்களில் குறைந்த பட்சம் 45 பேர் கொல்லப்பட்டனர்.

ஆண்டின் ஆரம்பமே இப்படி வன்முறைகளுடன்தான் வெடித்தது.

விளையாட்டு உலகைச் சற்றே நோக்கினால், கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சுற்றுப் போட்டியில், பெலாரஸ் நாட்டு வீராங்கனையான விக்டோரியா அஸாரென்கா மீண்டும் பெண்களுக்கான வாகையர் (சாம்பியன்) பட்டத்தை வென்றெடுத்தார். 2012இலும் இவர்தான் வெற்றிவாகை சூடியவர். இவருடன் மோதித் தோற்றவர் சீன வீராங்கனையான லிநா. ஆண்களின் மோதலில் சேர்பியரான நொவாக் ஜொக்கோவிச் சாம்பியனாக, இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார் ஸ்காட்லாந்து வீரரான அன்டி மரே!

ஆண்டுக்கு ஆண்டு வருகை புரியும் தொற்று நோய்கள், இந்தத் தடவை அமெரிக்க மக்களை ஆட்டி வைத்தன. 2013இன் தொடக்கத்தில் அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகளை ஒரு வைரஸ் தாக்கியது. மோசமான காய்ச்சலால் பலர் பீடிக்கப்பட்டார்கள். பலர் பொல்லாத இருமலின் தாக்குதலுக்கும் ஆளாகினர். பாஸ்டன் நகரில் இந்த வைரஸின் தாக்குதல் தீவிரத்தால், அங்கு நகரத் தந்தை அவசரக் காலநிலை அறிவித்தார். இந்தக் காய்ச்சலினால் பாஸ்டன் நகரில் மாத்திரம் நால்வர் கொல்லப்பட்டதோடு, 700 பேர் இதன் மோசமான தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் கோடைகாலம் ஜனவரியில்தான் வரும். வெயிலின் உக்கிரம் நாட்டின் பல இடங்களில் காட்டுத் தீயைத் தோற்றுவித்தது. குறிப்பாக, 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை காட்டிய நாட்டின் தென்மேற்குப் பகுதிகள் காட்டுத் தீயினால் பெரிதும் பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத கோடையால் நாடு பொசுங்கியது. மனித இழப்புகள் உறுதிப்படுத்தப்படாவிடினும், தஸ்மேனியாவில் ஒரு காட்டுத்தீ விபத்துக்குப் பின்னர், 100 பேர் வரையில் காணாமல் போய்விட்டதாக அஞ்சப்படுகின்றது.
ஆடப் போய் ஆட்டங்கண்ட பரிதாப நிகழ்வு, இலத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்றது. சான்டா மரியா என்ற நகரின் இரவு விடுதியொன்றில் தீப்பற்றிக் கொண்டதால் 233 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். அந்நேரத்தில் இங்கே நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிறைந்திருந்தது சோக நினைவு.

பெப்ரவரி மாதம், பிறக்கும்போதே பயங்கரவாதத்தைக் கூடவே அழைத்து வந்தது. துருக்கி நாட்டின் அமெரிக்கத் தூதரகம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியது. துருக்கி நாட்டுக் காவலாளி ஒருவர் கொல்லப்பட்டார். ‘மக்கள் விடுதலைப் புரட்சிக் கட்சி’ என்ற அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

ஆனை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பது போல, மாலி நாட்டுக்குத் தம் படைகளை அனுப்பி வைத்த பிரெஞ்ச் அதிபர், பெப்ரவரி மாதம் அந்நாட்டுக்குச் சென்றார். ஜனவரியில் அவர் அனுப்பி வைத்த படையினர், போராளிகளை நாட்டை விட்டு விரட்டுவதில் வெற்றி கண்டிருந்தனர். எனவே பிரெஞ்ச் அதிபருக்குச் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிரிய அதிபரோ முக்கிய இராணுவத் தலைவர்களோ கலந்து கொள்ளாமல் இருந்தால், சிரிய அரசுடனான பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று சிரியப் புரட்சிப் படைகள் பெப்ரவரி மாத நடுப் பகுதியில் அறிக்கை வெளியிட்டன. அதே சமயம், அலெப்போ என்னும் சிரிய நகரில் சண்டை வலுப் பெற்றதோடு, இராணுவ தளம் ஒன்றையும் புரட்சிப் படைகள் கைப்பற்றின.

இதே நேரம், இஸ்ரவேலின் அதிபர் தனது முன்னாள் வெளியுறவு அமைச்சரைத் தம்முடன் இணைந்து பாலஸ்தீனர்களுடனான பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தங்களுடைய பழைய வேண்டாவெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இருவரும் கூட்டாக இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக இருவரும் அறிவித்தது அரசியல் உலகில் அட்டகாசமான ஒரு நிகழ்வுதான்!

ஜனவரி மாதம் அமெரிக்க நகரங்களை வைரஸ் அச்சுறுத்தியது; இந்த மாதமோ இயற்கையின் சீறல்! நெமோ என்று பெயரிடப்பட்ட புயலின் தாக்கத்திற்கு அமெரிக்க நகரங்கள் ஆட்பட்டன. பெருவாரியாகப் பனி கொட்டியது. 40 அங்குல உயரமளவுக்குப் பனி சரமாரியாகக் கொட்டியது. இந்தப் பனிப் புயலில் 18 பேர் வரையில் மரணித்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் எரிகல்லின் பாரிய துண்டொன்று சைபீரியாவில் விழுந்ததில் 200 பிள்ளைகள் உட்பட 1000 பேர் வரையில் காயமடைந்தனர். விழுந்த இராட்சதத் துண்டு 10 தொன் எடை கொண்டது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள்.

ஒருவாறாக இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. மார்ச் மாதமும் பிறந்தது. தன நாட்டு மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட தலைவர் ஒருவருடைய மரணத்திற்காக மார்ச் மாதம் காத்திருந்தது போலும். தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபர் ஹியூகோ சாவெஸ் தனது 14 ஆண்டு ஆட்சி முடிவில் புற்று நோயின் தாக்குதலுக்கு இலக்காகி மரணத்தைத் தழுவினார்.

பெப்ரவரி மாதம் வட கொரியா நடத்திய அணுகுண்டுச் சோதனைக்குப் பதிலடியாக ஐ.நா அவை அந்நாட்டுக்கு எதிராக மேலும் பல தடைகளை அமல்படுத்தும் முடிவை இந்த மாதம் எடுத்தது. இதே காரணத்துக்காக அமெரிக்கா, தென்கொரியாவுடன் கூட்டாகச் சேர்ந்து மேலும் இராணுவப் பயிற்சிகளில் இறங்கியதோடு, வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கப் போர் விமானங்களைக் கூடுதலாக நிலைநிறுத்தியது. கலிபோர்னியாவிலும், அலாஸ்காவிலும் உள்ள தனது இராணுவ தளங்களில் அதிக ஏவுகணைகளை நிறுவும் பணியிலும் தீவிரமாகச் செயல்பட்டது.

உலகெங்குமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்களின் புதிய ஆன்மிகத் தலைவராக, 266ஆவது போப்பாண்டவராக அர்ஜென்டினாவின் கார்டினலான ஜார்ஜ் மரியோ பேர்போகிலியோ இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகிலேயே மிக அதிகக் கத்தோலிக்க மக்களைக் -480 மில்லியன்- கொண்ட இலத்தீன் அமெரிக்காவின் முதல் போப்பாண்டவர் என்ற பெருமை இவரைச் சேர்ந்தது. மார்ச் 13 அன்று தேர்வான இவர் போப் பிரான்ஸிஸ் என அழைக்கப்படுகிறார்.

இதற்கு அடுத்த நாள், சீனாவின் புதிய தலைவராக ஜிங்பிங் தேர்வாகியது இன்னொரு முக்கிய நிகழ்வு. அதிபரைத் தெரிவு செய்யக் கூடியிருந்த 2956 பிரதிநிதிகளில் ஒரேயொருவர்தான் தெரிவுக்கு எதிராக வாக்களித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 22 அன்று இரு நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர உறவு மீண்டும் முளைவிட அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பங்களிப்பு பெரிதும் உதவியது. துருக்கி நாட்டுக்கும், இஸ்ரவேல் நாட்டிற்கும் இடையில் நிலவிய முறுகல் நிலையில் தளர்வு கண்டதுடன், இருவரும் மனமொத்து நல்ல ஒரு முடிவுக்கு வந்தார்கள். 2010இல் துருக்கி நாட்டுக் கப்பல் ஒன்றைத் தாக்கி அதில் 9 மாலுமிகள் கொல்லப்பட்டதால் எழுந்த இந்தப் பிணக்கைத் தீர்க்க இடைத் தரகராகச் செயல்பட்ட ஒபாமா பாராட்டுக்குரியவர்தான்.

சைப்பிரஸ் நாடு மிக மோசமான நிதி நெருக்கடியைச் சந்திக்கும் நிலை வந்தது. ஐரோப்பிய ஒன்றியமும், அகில உலக நிதியமும் கைகோத்து 13 பில்லியன் டாலர் கொடுத்து சைப்பிரஸ் அரசைத் தூக்கி நிறுத்தின, ஒரு நிபந்தனையோடு. சைப்பிரஸ் மக்களின் வங்கி வைப்பீடுகளுக்கு வரி விதிப்பது (அதாவது 100,000 டாலர்களுக்கு மேல் கணக்கில் வைத்திருப்பவர்கள் அரசுக்கு 9.9 விழுக்காடு வரி கட்டியாக வேண்டும்) எனும் அந்த நிபந்தனை இந்த நாட்டு வங்கிகளில் பெரும் பணத்தை முதலிட்டுள்ள ரஷ்யப் பெரும் புள்ளிகளைக் கொதித்தெழச் செய்தது.

வட கொரியாவின் வேடிக்கையான அச்சுறுத்தலோடு பிறந்தது ஏப்ரல். நாடே ஒரு வறிய நாடு. மேற்கொண்டு, ஐ.நா அவையின் கடும் பொருளாதாரத் தடைவிதிப்பு. இத்தனைக்கும் இடையில், அணு ஆயுத நிலையை மேலும் விரிவுபடுத்தப்போவதாக, ஏப்ரல் ஒன்று அன்று வடகொரிய அதிபர் அறிவித்தது யாரை முட்டாளாக்க? இந்த அறிவித்தலோடு நின்று விடாமல், வடகொரியாவையும் தென்கொரியாவையும் இணைக்கும் பூங்காவுக்குள் தென்கொரிய மக்கள் வரத் தடை என்ற அறிவிப்பும் தொடர்ந்து வந்தது. தம்மைத் தாக்க வல்ல ஓர் ஏவுகணை வடகொரியாவிடம் ஆயத்தமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தித் தென் கொரியா ஓர் அறிக்கை விடுத்தது. அமெரிக்காவும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, ஒரு புதிய ஏவுகணையை நிறுவியிருப்பதாக அறிவித்தது. இவையெல்லாம் அந்த மாதம் கொரிய மண்ணில் ஒரு பதற்ற நிலைக்கு வித்திட்டன.
பாலஸ்தீனியர்களிடையே நிலவிய அதிருப்தி காரணமாக இதன் பிரதமர் சலாம் பயாட் பதவி விலகிக் கொண்டது ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு நிகழ்வு.

வெனிசூலாவின் அதிபர் மரணத்தை அடுத்து அவர் இடத்திற்கு நிக்கலஸ் மடுறோ என்பவர் தேர்தல் மூலம் தெரிவாகினார். 19ஆம் தேதி இவர் பதவி ஏற்றார்.

சிரிய அரசு வேதிம ஆயுதங்களைப் போரில் பயன்படுத்தியதாகப் பிரித்தானியாவும், பிரான்சும் ஐ.நா அவையில் ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்தன! டிசம்பர் 2012 முதல் சிரியா இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதாக இரு நாடுகளும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தன.

சிரியாவின் தவற்றைச் சுட்டிக்காட்டிய பிரான்ஸ், இதே மாதம் 23இல் வேறு ஓர் அறிக்கையால் தனது மண்ணில் தானே பெரிய எதிர்ப்பலையில் சிக்கிக் கொண்டது. தன்னினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வதைச் சட்டரீதியாக ஆதரிக்கும் 14ஆவது உலக நாடாக ஏப்ரல் 23 அன்று பிரான்ஸ் தன்னை அறிவித்துக் கொண்டது. தேசியப் பேரவை வாக்கெடுப்பில் 331க்கு 225 எதிர்ப்பு வாக்குகள் என்ற அளவில், பிரான்ஸ் அரசு சட்டரீதியாகத் தன்னினச் சேர்க்கையை அங்கீகரித்தது.

ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவை உலுக்கிய இயற்கை, இந்த மாதம் சீனாவில் தன் கைவரிசையைக் காட்டியது. நீங்கள் எந்த வித்தையைக் காட்டினாலும் என்னை மிஞ்ச முடியுமா என்று கேட்பதுபோல, திடீர் வருகை புரிந்த நிலநடுக்கம் 186 பேரைப் பலி வாங்கியது. சீனாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 7.

ஆசியக் கண்டத்தில் மீண்டும் இன்னொரு பேரழிவு! ஏப்ரல் 24 அன்று ஒரு பாரிய மாடிக் கட்டடம் சரிந்ததில், 377 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. நடந்த இடம் பங்களாதேஷ். ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை அனுப்பும் ஒரு நிறுவனத்தின் தொழிலகத்தில்தான் இந்தப் பரிதாபச் சம்பவம் நடைபெற்றது.

மே மாதத்தில், சிரியாவின் மீது இஸ்ரவேல் விமானத் தாக்குதலை நடாத்தியது. முதல் வாரத்தில் இரு தடவைகள் டமாஸ்கஸ் நகரில் இந்தத் தாக்குதலை இஸ்ரவேல் நடத்தியது.

சிரியாவின் புரட்சிப் படைகள் மீதிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதும், அமெரிக்க செனட்டர் ஒருவர் சிரியா சென்று, தமது ஆதரவைக் காட்டுவது போலப் புரட்சிப் படைகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதும், மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள் என்று சொல்லலாம்.

ஏப்ரல் மாதத்தில் பிரான்ஸ் தன்னினச் சேர்க்கைக்குப் பச்சைக் கொடி காட்டியதன் எதிரொலியாக, மே மாதம் 26ஆம் தேதி, ஏறத்தாழ 150,000 பேர் பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். குறைந்த பட்சம் 100 பேர் வரையில் கைதாகினர்.
இந்த மாதத்தின் பிற்பகுதியில் வந்த செய்திகளின்படி, பங்களாதேஷ் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 1127 பேர் இறந்துள்ளனர் என்று சொல்லப்பட்டது. இந்த விபத்து நிகழ்ந்தபோது இங்கு 3000க்கும் அதிகமானவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள் என்றும் செய்திகள் கசிந்தன.

பிரெஞ்ச் ஓபன் எனப்படும் கிரான்ட் ஸ்லாம் போட்டி, ஜூன் மாதத்திற்குச் சொந்தமானது. வழமைபோல இடம்பெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார். அதே சமயம், ஆண்களுக்கான மோதலில், 8வது தடவையாக ஸ்பானியரான நடால் வெற்றிக் கிண்ணத்தைத் தட்டினார்.

இதே மாதம், ஈரானில் நடைபெற்ற தேர்தல் ஒரு புதிய குடியரசுத் தலைவரைப் பெற்றது. இவர் பெயர் ஹஸன் றோஹானி. மொத்த வாக்குகளில் இவருக்குக் கிடைத்தது 51 விழுக்காடு. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பாராளுமன்றத்தில் சேவையாற்றிய அனுபவம் இவருக்குண்டு.

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட ஜூலியா கில்லார்ட் தனது பதவியிலிருந்து 26ஆம் தேதியன்று விலகிக் கொண்டார். முன்னாள் பிரதமரான கெவின் ரட் தொழில் கட்சித் தலைவராக நியமனம் பெற்றதோடு, அடுத்த நாளே பிரதமர் நாற்காலியிலும் அமர்ந்தார்.

எகிப்தின் புதிய குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு கிடைப்பதாகக் காணோம். ஜூன் மாதக் கடைசி நாளன்று எகிப்தில் பாரிய எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்றதோடு, குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து விலகுமாறு கூக்குரல்களும் எழுந்தன.

ஜூலை மாதம், எகிப்தின் குடியரசுத் தலைவர் முகமது மோர்ஸி தன் பதவியை விட்டு விலகியதாக இராணுவம் அறிவித்தது. இது இராணுவப் புரட்சி இல்லை என்றும் கூறியது. ஆனால், குடியரசுத் தலைவர் இது இராணுப் புரட்சிதான் என்றார். மோர்ஸி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டமும், இராணுவத்தினரின் தாக்குதல்களும் தொடர்ந்தன. இந்த மாதம் முடியும் வரை ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும், இராணுவத்தினரின் வன்முறைத் தாக்குதல்களும் தொடர்ந்தன.

உலகப்புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் சுற்றுப்போட்டிகள் வழமைபோல, நல்ல கோடை வெயிலில் தொடங்கின. இந்தத் தடவை விம்பிள்டன் அமைப்பிற்குப் பெருமை சேர்த்து, ஒரு புதிய வரலாறு படைக்க, பிரித்தானியர் ஒருவர் ஆண்கள் மோதலில் வெற்றிவாகை சூடினார். 77 ஆண்டுகளில் முதல் தடவையாக பிரித்தானியரான அன்டி மரே வாகையர் பட்டம் வென்றார். அதே சமயம், இதுவரை இல்லாத வகையில், இறுதி ஆட்டத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காகப் பெண்கள் இருவர் மோதிக் கொண்டது இந்த ஆண்டு நடைபெற்றது. இவர்களுள் பிரான்ஸ் நாட்டின் மரியன் பார்ரொலி என்பவர் பெண்களுக்கான வாகையர் பட்டம் தட்டினார்.

இந்தச் சூடான மாதத்தில் மேலும் ஒரு சூடான நிகழ்வு! இங்கிலாந்தும் வேல்ஸ் நாடும் தன்னினச் சேர்க்கையாளர்கள் மணந்து கொள்வதைச் சட்டரீதியாக அனுமதிப்பதாக அறிவித்தன. ஸ்கொட்லாந்தும் இவர்கள் வழியில் சீக்கிரம் செல்லலாம் என்று செய்திகள் தெரிவித்தன.

ஜூலை மாதம் 22ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ளவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது போல, முடிக்குரிய இளவரசர் வில்லியம்ஸ்-காதரீன் தம்பதி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றனர். இராஜ குடும்ப வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ். இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம்ஸ் ஆகியோரை அடுத்து மூன்றாவது வாரிசாக இந்தக் குழந்தை இருக்கும்.
மாதத்தின் கடைசி நாளன்று, இஸ்ரவேலும் பாலஸ்தீனும் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, உலகை ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தன.

அமெரிக்காவின் 11 மாவட்டங்களில் காட்டுத் தீயின் அட்காசம்! ஆகஸ்ட் மாத நடுப் பகுதியில் அமெரிக்க மாவட்டங்களில் அல்லோலகல்லோலம்! 34 இடங்களில் காட்டுத் தீ தனது அட்டகாசத்தை நடாத்தியது. மிகப் பெரிய காட்டுத் தீ அடாகோ மாவட்டத்தில் பற்றியது. மொத்தம் 1200 தீயணைப்புப் படை வீரர்கள் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டனர். 2300க்கும் மேற்பட்ட வீடுகள் காலி செய்யப்பட்டன. ஆகஸ்ட் 26 அன்று கலிபோர்னியாவின் வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு பாரிய காட்டுத் தீ! 144,000 ஏக்கர் நிலம் காட்டுத் தீயில் பொசுங்கியது. இது சிகாகோ நகரின் பரப்பளவோடு ஒத்தது என்றும், மொத்தம் 3000 தீயணைப்புப் படையினர் தீயுடன் போராடியதாகவும் சொல்லப்பட்டது.

இந்துப் பயணிகள் கூட்டமாக ஒரு விபத்தில் கொல்லப்பட்டதும் இந்த மாதம் 19ஆம் நாளன்று நடைபெற்றது. வேகமாக வந்த ஒரு தொடர்வண்டி, சோதனைச் சாவடியில் இருந்த நடைபயணிகள் மீது மோதியது. பீகாரின் கிராமத்தில் நடந்த இந்த விபத்தால் சீற்றமடைந்த பயணிகள் தொடர்வண்டிக்குத் தீ வைத்து, ஓட்டுநரையும் நையப்புடைத்தார்கள்.

கார்த்திகைத் தீபம் ஏற்றும் நவம்பர் மாதத்தில் ஒரு நாட்டில் இருள் சூழ்ந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹய்யான் என்று பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியதில் அந்த நாட்டின் பல பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன. 220,000 மக்கள்தொகை கொண்ட கரையோர நகரமான ரக்லோபான் முற்றாக அழிக்கப்பட்டது. மொத்தம் 270 பட்டினங்களின் 4.28 மில்லியன் மக்கள் இந்தச் சூறாவளியால் பாதிக்கப்பட்டதாக இங்குள்ள நலன்புரி அமைச்சுத் திணைக்களம் தெரிவித்தது. பலியானோர் எண்ணிக்கை 4011ஐத் தொட்டுள்ளதாக நகர்மன்றம் ஒன்று தெரிவித்தது. கண்டிப்பாக இந்த எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்குமே ஒழிய, குறைய வாய்ப்பில்லை. காணாமல் போனவர்கள் பட்டியலில் 1600 பேர் வரையில் இருக்கிறார்களாம்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவை இந்த ஆண்டில் இழந்திருப்பது மகா சோகமான நிகழ்வாகும். தனது 95ஆவது வயதில், டிசம்பர் 6ஆம் நாள் இவர் இயற்கை எய்தினார். 1962ஆம் ஆண்டு இவரைத் தீவிரவாதி முத்திரை குத்திச் சிறையில் தள்ளினர். மொத்தம் 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், பின் வெளிவந்து 1994இல் தென் ஆப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது, கறுப்பின முதல் குடியரசுத் தலைவர் எனும் வரலாறு படைத்தார்.
டிசம்பர் மாதம் 26இல் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியிலும் படு தோல்வியைத் தழுவிய இங்கிலாந்தின் கிரிக்கெட் அணிக்கு இது பொல்லாத காலம். எதிர் அணி ஆஸ்திரேலியாவிற்குச் சொல்லில் வர்ணிக்க முடியாத நல்ல காலம். இங்கிலாந்திடம் தான் வாங்கிய பலத்த அடியை, அப்படியே ஆஸ்திரேலியா திருப்பிக் கொடுத்தது. அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று துள்ளுகின்றது இங்கிலாந்து.

உலகத் தரத்தில் 6ஆவது இடத்திற்கு இறங்கிவிட்ட சுவிஸ் டென்னிஸ் வீரர் றோஜர் பெடரருக்கு 2013 துரதிர்ஷ்டமான ஆண்டு. 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் போட்டிகள் வென்றவருக்கு, இந்த ஆண்டு ஒரு தடவை கூட வெல்ல முடியாதது சோகம்தான்! 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, கிரான்ட் ஸ்லாம் போட்டிகள் ஒன்றில் கூட இவரால் இறுதிச் சுற்றில் நுழைய முடியவில்லை. 2014இல் விட்டதைப் பிடிப்பேன் என்கிற வெறியில் இருக்கின்றார் இந்த வீரர்!

******

இப்படியாக, ஓர் ஆண்டுக்குரிய வழமையான இலட்சணத்துடன், நல்லதையும் பொல்லாததையும் கலந்தே 2013 தந்திருக்கின்றது. 2014இல் அதிகமான நன்மைகள் நடைபெற வேண்டும் என்பதே எல்லோரது அவா! நம்பிக்கையும் கூட!

பிறக்கும் ஆண்டு மனதிற்குப் பிடித்தமான பல நிகழ்வுகளைக் கொண்டு வர வேண்டுமென அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

About The Author