கைப்பேசி போன்ற பல அன்றாட உபகரணங்களை ஆண்டுக்கொரு தடவை மாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய நாகரிக உலகில் 47 வருடங்களாக ஒரே காரையே பாவனை செய்து வருகிறார் ஒருவர்! 1966ஆம் ஆண்டு தான் வாங்கிய கார் ஒன்றை இன்றும் ஆசையோடு ஓட்டிக் கொண்டு செல்வதோடு, உலக சாதனைகளையும் படைத்து வருகின்றார் அவர்.
இர்வ் கார்டன் (Irv Gordon) எனும் அவர் 1966இல் வாங்கிய சுவீடன் நாட்டு வால்வோ (Volvo) கார் ஒன்றை இன்றும் பயன்படுத்தி வருகிறார்! வால்வோ 1800 எஸ் என்ற ரகத்தைச் சேர்ந்த இந்தக் காரை இவர் ஓட்டத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த மாதம் 18ஆந் திகதி (செப்டம்பர் 18, 2013) வரையிலான காலக்கட்டத்தில், முப்பது இலட்சம் மைல்கள் தூரத்தை ஓட்டி முடித்திருக்கின்றார். இது ஓர் உலக சாதனையாகவும் ஆகியுள்ளது. இது பூமியைச் சுற்றி 120 தரம் ஓடியதற்குச் சமம் என்று கூறுகின்றார்கள்.
தனது ஆசைக் காதலி என்றே இவர் தன் காரை வர்ணிக்கின்றார். தினமும் தனக்குப் பிடித்தமான காரில் பயணிப்பது தனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்து வருவதாகப் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். தான் பத்து வருடங்களில் ஐந்து இலட்சம் மைல்களை ஓட்டி முடித்து விட்டதாகக் கூறும் இவர், 1987இல் பத்து இலட்சம் மைல் தூரத்தைத் தொட்டுவிட்டதை நினைவுகூர்கின்றார். 2002இல் இருபது இலட்சம் மைல் தூரத்தை இவரது வால்வோ தாண்டியிருக்கின்றது.
தனது முப்பது இலட்சமாவது மைல் தூரத்தை அலாஸ்காவிலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் முடிக்க வேண்டும் என்பது இவர் ஆவல். அதற்காக ஒரு டிரக் வண்டியில் தனது காரை ஏற்றி அலாஸ்காவுக்கு அனுப்பிய இவர், விமானத்தில் பறந்து அந்த இடத்துக்குப் போயிருக்கின்றார். பின்பு, காரில் ஏறி அலாஸ்காவின் குறிப்பிட்ட அந்தத் தெற்குப் பிராந்தியத்தில் ஓட்டத் தொடங்கியிருக்கின்றார். இங்குள்ள ஹோப் (Hope) எனும் குக்கிராமத்தின் அருகே முப்பது இலட்சமாவது மைலைத் தொட்டு உலக சாதனையாளராகி இருக்கின்றார். செப்டம்பர் 18ஆந் திகதி மாலை 4 மணியளவில் இவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். ஒரு மனிதன் ஒரே காரில் கடந்த அதிக தூரம் என்பதாக இந்தச் சாதனை கின்னஸ் உலக அதிசயப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றது.
இங்கே வால்வோ கார் நிறுவனம் பற்றிச் சில வரிகளாவது சொல்வது அவசியமாகின்றது.
பி வால்வோ (B Volvo) பிரமாண்டமான சுவீடன் நாட்டு நிறுவனம். பேருந்து, டிரக் வண்டிகள் ஆகியவற்றையும், வீட்டுப் பாவனைக்குரிய இயந்திரப் பொருட்களையும் உற்பத்தி செய்து வந்த இந்நிறுவனத்தின் கார் உற்பத்தி ஏப்ரல் 1927இல் தொடங்கியது. கார் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் ஏ.பி எஸ்.கே.எஃப் (AB SKF) எனும் நிறுவனம் மூலம் தங்கள் முதல் காரை இவர்கள் உற்பத்தி செய்திருக்கின்றார்கள். வால்வோ ஓ.வி-4 (VOLVO OV4) என்ற தனது முதல் உற்பத்தியை இந்த நிறுவனம் ஜாக்கப் (Jakob) என்ற செல்லப் பெயரிட்டே அழைத்து வந்தது.
1999இல் அமெரிக்காவின் ஃபோர்டு (FORD) கார் உற்பத்தி நிறுவனம் வொல்வோ நிறுவனத்தை 600 கோடியே 45 இலட்சம் டாலருக்கு வாங்கிவிட்டது. ஆனால், வால்வோ கார் உற்பத்தியில் இலாபம் ஈட்ட முடியாமை காரணமாக 2010 ஆகஸ்டில் சீனக் கார் உற்பத்தி நிறுவனம் ஒன்றிற்கு வால்வோவை விற்பனை செய்து விட்டது ஃபோர்டு. விற்ற தொகை 100 கோடியே எண்பது இலட்சம் டாலர்கள் மாத்திரமே!
இதன் பின்பும் பல கைகள் மாறி, வால்வோ இப்போது மீண்டும் சுவீடன் உற்பத்தியாக மாறியுள்ளது. 2011இன் முடிவில் இந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் தொகை 96,162. பல நூறு கோடி டாலர் வருமானத்தை வருடா வருடம் காணும் இந்த நிறுவனம் பல இயந்திரப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.
இர்வ் கார்டனின் இந்தச் சாதனை வால்வோ நிறுவனத்துக்கும் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். நம்பிக்கைக்குரிய, நீண்ட காலப் பாவனைக்கு வால்வோ காரை விடச் சிறந்தது ஏது என்று அவர்கள் தாராளமாகவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.