‘ஹரிதாஸ்’ ப்ருத்வியுடன் ஒரு சந்திப்பு

Prithvi
"நீங்க வருவீங்கன்னு இங்கேயே இருக்கச் சொல்லியிருந்தேன். நான் உள்ளே போய் வருவதற்குள் காணாமல் போய்விட்டான். இங்கேதான் எங்கேயாவது இருப்பான். இதோ கூட்டி வருகிறேன்" என்றார் ப்ருத்வியின் தாயார் அன்புமொழி. சில நிமிடங்களில் வந்து சேர்ந்த ப்ருத்வியைப் பார்த்தபோது, இந்தச் சிறுவனா ‘ஹரிதாஸ்’ திரைப்படத்தில் ஆட்டிஸம் உள்ள சிறுவனாக நடித்துள்ளான் என்று ஆச்சரியமாக இருந்தது. அவனுடன் உரையாட ஆரம்பித்தேன். அதற்கு முன்பு ப்ருத்வியைப் பற்றி ஒரு சிறு குறிப்பு.

‘ஆட்டிஸம்’ என்றால் என்ன, அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என நம்மில் சிலருக்குத் தெரிந்திருந்தாலும், சமீபத்தில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் வெளியான ‘ஹரிதாஸ்’ திரைப்படம் அதைப் பற்றிப் பரவலான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆட்டிஸம்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான ஊக்கத்தையும், பயிற்சிகளையும் அளித்தால் அவர்களாலும் சாதனைகள் புரிய முடியும் என மிக அழகாக எடுத்துரைத்துள்ளது இத்திரைப்படம். ‘ஆட்டிஸம்’ கொண்ட குழந்தையாக இந்தப் படத்தில் நடித்துள்ள சிறுவன் ப்ரித்விராஜுக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Prithviகோயமுத்தூரைச் சேர்ந்த 11 வயதான ப்ருத்வியின் முழுப் பெயர் ப்ருத்விராஜ் தாஸ். இந்தியன் பப்ளிக் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் ப்ருத்வியின் தந்தை ராஜாமோகன் தாஸ், ஏர்செல் நிறுவனத்தில் பொதுமேலாளராகப் பணிபுரிகிறார். ப்ருத்விக்குப் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதிலும், அவற்றை முயன்று பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம். படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் அவர் உபயோகிக்கும் கேமிராவைப் பற்றிப் பல மணிநேரங்கள் பேசி அவரை அசத்தியிருக்கிறான் ப்ருத்வி. டிரம்ஸ், கிடார் வாசிப்பதுடன் செஸ்ஸூம் விளையாடக் கற்றுக்கொண்டிருக்கிறான். பள்ளியின் கிரிக்கெட் குழுவில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறான். கணிதமும் அறிவியலும் இவனுக்கு மிகவும் பிடித்த பாடங்களாம்!

‘ஹரிதாஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

எங்களுடைய குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக ‘ஹரிதாஸ்’ படத்திற்கான தேர்வு நடப்பது தெரியவந்தது. எனக்கு ஆடிஷனில் கலந்து கொள்ள விருப்பமா என்று அவர் என்னிடம் கேட்டபோது எனது தாய், தந்தையிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர்கள் உதவியுடன் முதலில் என்னுடைய புகைப்படங்களையும், என்னுடைய நடிப்பைப் பதிவு செய்த ஒரு சி.டி-யையும் அனுப்பி வைத்திருந்தோம். அதில் தேர்வு பெற்ற பிறகு, சென்னையில் நடைபெற்ற ஆடிஷனுக்குச் சென்றிருந்தேன். அதில் பங்கேற்ற 250 சிறுவர்களில் என்னைத் தேர்வு செய்தார்கள். அதன் பிறகு, ஃபோட்டோ ஷூட் நடைபெற்றது. அதன் பின் இந்தப் படத்தில் நடிப்பதற்குத் தேவையான சில பயிற்சிகள் இருந்தன. அதற்குப் பிறகு ஷூட்டிங் நடைபெற்றது.

இந்த படத்தில் நடித்திட என்ன மாதிரியான பயிற்சிகள் உனக்கு அளிக்கப்பட்டன?

முதலில், சென்னையில் உள்ள ஜெயராவ் அவர்களின் ‘கூத்துப்பட்டறை’யில் 10 நாட்கள் எனக்குப் பயிற்சி தந்தார்கள். பிறகு, ஆட்டிஸம் உள்ள குழந்தைகளுக்கான பள்ளியில், சிறப்பு அனுமதியுடன் அவர்களை அருகிலிருந்து கவனித்திட எனக்கு மூன்று நாட்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டது. பொதுவாக, இது போன்ற பள்ளிகளில் வெளி மனிதர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால், இது அவர்களைப் பற்றி எடுத்துச் சொல்லும் படத்திற்கான பயிற்சி என்பதால் இந்த அனுமதி கிடைத்தது. முதல் நாள் சென்றபோது, ஏன் அவர்கள் என்னைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை. அங்கு ஒரு மாணவன் விளையாட்டாக என்னை முதுகில் அடித்தவுடன் நான் பயந்து, அறையில் இருந்து அழுதபடியே வெளியே வந்துவிட்டேன். அப்புறம் என்னுடைய அம்மா, இந்தச் சிறுவர்களும் நம்மைப் போலதான், ஆனால் இவர்களால் விஷயங்களை மெதுவாகத்தான் புரிந்து கொள்ளமுடியும் என்று எடுத்துக் கூறி, மூன்று நாட்களும் அங்கே என்னுடன் இருந்தார்.

‘ஹரிதாஸ்’ பட இயக்குநரின் உறவினர் மகனுக்கும் இந்தக் குறைபாடு உள்ளது. அவனுடனும் ஒரு வாரம் இருந்து, அவனுடைய நடவடிக்கைகளை நன்றாகக் கவனித்தேன். "நீ அவனுடன் பேசினால் அவனிடம் என்ன மாதிரியான பாதிப்பு இருக்கிறதோ, அதுபோல் நீயும் நடிக்க வேண்டும்" என்று இயக்குநர் சொல்லியிருந்தார். நானும் அதுபோலவே அவனுடன் இருந்து அவனுடைய அங்க அசைவுகள், ஒருவர் பேசும்போது அவனிடம் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை நன்றாகக் கவனித்தேன். பிறகு, சில காட்சிகளை ஹேண்டி காமிரா உதவியுடன் பதிவு செய்து திருப்தியான பிறகு ஷூட்டிங் தொடங்கியது.

இதற்கு முன்பு நீ படங்களில் நடித்ததில்லை. அப்படியிருக்கும்போது இவ்வளவுபயிற்சி, படப்பிடிப்பு என எப்படி முடிந்தது? படப்பிடிப்பு முடிய எவ்வளவு நாட்கள் ஆயின?

படப்பிடிப்பு முடிய மூன்று மாதங்கள் ஆயின. நடிப்பது புதிதாக இருந்ததால் ரொம்பவும் சுவாரசியமாக இருந்தது. அதனால் எனக்கு அந்த மூன்று மாதங்களில் பயிற்சி, படப்பிடிப்பு எல்லாமே பிடித்திருந்தது. படப்பிடிப்பு நடந்த கடைசி நாளில், மறுபடியும் இவர்கள் எல்லோரையும் எப்போது பார்க்க முடியும் என்று நினைத்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? இந்தப் படத்தின் கதாநாயகன் கிஷோர், கதாநாயகி சினேகா ஆகியோருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? அவர்கள் உனக்கு எந்த அளவு உதவியாக இருந்தார்கள்?

டைரக்டர் அங்கிள் எப்போதும் என்னைத் திட்டவே மாட்டார். படப்பிடிப்பின்போது, இந்த சீனில் இந்த அளவு தேவையில்லை, இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் சேர்த்து நடித்தால் நன்றாகயிருக்கும் என்று பொறுமையாக விளக்கிச் சொல்லுவார். கிஷோர் அங்கிள் நிறைய டிப்ஸ் கொடுப்பார். உதாரணமாக, மற்ற நேரம் ஜாலியாக இருந்துவிட்டு ‘ரெடி’ என்று சொன்னவுடன் நான் நடிக்கத் தயாராவேன். அதைப் பார்த்த கிஷோர் அங்கிள், ரோலிங்கின்போதே நான் தயாராக இருக்கவேண்டும், இல்லையென்றால் அது மற்றவர்களையும் பாதிக்கும் என்று எடுத்துச்சொல்லி எனக்குப் புரியவைத்தார். படத்தின் முழுக் கதையும் என்னைச் சார்ந்தே இருப்பதால் நான் பொறுப்போடு நடிக்கவேண்டும் என்று சொல்லி, சினேகா ஆண்ட்டி படத்தில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் டீச்சராகவே இருந்தார். யூனிட்டில் இருந்த அனைவரும் என்னை ரொம்பவும் அன்பாகப் பார்த்துக் கொண்டார்கள். என்னுடைய பசி, தூக்கம் எல்லாவற்றையும் கவனித்து, அதற்கேற்பப் படிப்பிடிப்பு நடந்தது. மூன்று மணி நேரத்தில் என்னுடைய டப்பிங் வேலையையும் நானே செய்து முடிக்கவும் எல்லோரும் உதவியாக இருந்தார்கள்.

இந்தப் படத்தில் நடித்ததின் மூலம் நீ என்ன தெரிந்து கொண்டாய்?

ஆட்டிஸம் குறைபாடு உள்ளவர்களிடம் எவ்வளவுதான் நாம் பேசினாலும் அவர்களிடம் பெரிய மாற்றம் இல்லாது போகலாம். ஆனால், விடாமுயற்சியுடன் அவர்களை உற்சாகப்படுத்தினால் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

‘ஹரிதாஸ்’ படத்தில் உன் நடிப்பைப் பார்த்த உன்னுடைய நண்பர்கள் என்ன சொன்னார்கள்?

என்னுடைய நண்பர்கள் நான் நன்றாக நடித்திருப்பதாகச் சொன்னார்கள். நான்தானா இப்படி நடித்திருப்பது என்று பலராலும் நம்ப முடியவில்லை. இசை வெளியீடு, ப்ரிவியூ ஷோ ஆகியவற்றின்போது பலரும் என்னைப் பாராட்டினார்கள். உண்மையிலேயே எனக்கு ஆட்டிஸம் குறைபாடு உண்டா என்று நிறையப் பேர் என்னைக் கேட்டார்கள். சில பேரால், எனக்கு ஆட்டிஸம் குறைபாடு இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. நிறையப் பேர் என் அப்பாவிடம் வந்து "இந்தப் படத்தின் மூலம் உங்கள் மகன் எங்களுக்கு ஒரு வழி காட்டியிருக்கிறான். என்னுடைய பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளனவா?

நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் என்னுடைய அம்மா கவனித்துக் கொள்கிறார். படிப்பு மிக முக்கியம்! அதற்குத் தடை ஏதும் ஏற்படாதவாறு, விடுமுறை நாட்களில் படங்களில் நடிக்கலாம் என்று யோசித்திருக்கிறோம்.

உனக்கு என்ன பிடிக்கும்? உன்னுடைய பொழுதுபோக்குகள் என்னென்ன?

எனக்கு விளையாடப் பிடிக்கும். விளையாட்டில் செஸ், சாக்கர், பேட்மிட்டன் போன்றவை என்னுடைய பொழுதுபோக்குகள்.

நீ என்னவாக விரும்புகிறாய்?

சின்ன வயதிலிருந்தே ஏர் மார்ஷல் (Air Marshal) ஆகவேண்டும் என்பது என்னுடைய லட்சியம். என்னுடைய மாமா விங் கமாண்டராக (Wing Commander) டெல்லியில் பணிபுரிகிறார். அவரை எல்லோரும் மரியாதையுடன் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன். அது மட்டுமில்லாது, சின்ன வயதிலிருந்து ஏரோப்ளேன் (Aeroplane) எனக்கு ரொம்ப இஷ்டம். இந்தக் காரணங்களால் நான் ஏர் மார்ஷல் (Air Marshal) ஆக விரும்புகிறேன்.

இந்தச் சிறுவயதிலேயே நடிப்பில் இப்படிச் சாதித்திருக்கும் ப்ருத்வி தன் குறிக்கோளையும் அடைய வாழ்த்துவோம்!

About The Author