ஸ்வர்ண லோகம் (27)-வாழ்வையும் சாவையும் புரிந்து கொள்ளுங்கள்!

தூய்மையே ஜென் வாழ்க்கை முறை!

தூய்மை! தூய்மை! தூய்மை! எதிலும் தூய்மை; எப்பொழுதும் தூய்மை. இதைத்தான் ஜென் கற்பிக்கிறது. வாழ்வு என்றால் என்ன, மரணம் என்றால் என்ன என்பவற்றில் ஒரு தெளிவைக் காண்பிக்கிறது ஜென்.

ஜப்பானைச் சேர்ந்த ஜென் மாஸ்டரான டோஜென் ஜென்ஜி சீனாவில் படித்துக் கொண்டிருந்த சமயம் அவரை ஒரு குரு அணுகினார். "ஏன் இந்தப் புத்த மத நூல்களை நீ படித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.

"எனது முன்னோர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை நான் கற்க விரும்புகிறேன்" என்று பதில் சொன்னார் டோஜென் ஜென்ஜி.

"எதற்காக அதைக் கற்க வேண்டும்?" என்று கேட்டார் அந்தக் குரு.

"ஏனெனில், மனிதத் துன்பங்களிலிருந்து நான் விடுதலை பெற விரும்புவதால்" என்றார் டோஜென் ஜென்ஜி.

"ஏன் விடுதலை பெற வேண்டும்?" என்று கேட்டார் குரு.

"எல்லா மனிதர்களும் துன்பம் அடைவதால் சுயபுரிதல் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் நான் உதவ விரும்புகிறேன்" என்றார் டோஜென் ஜென்ஜி.

"எதற்காக?" என்று கேட்டார் குரு.

"வெகு சீக்கிரமே நான் ஜப்பானுக்குத் திரும்பவிருக்கிறேன். அங்குள்ள என் கிராம மக்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்றார் டோஜென்.

"எதற்காக?" என்று மீண்டும் கேட்டார் குரு.

டோஜென் ஜென்ஜி இப்போது பதில் எதையும் கூறவில்லை.

சொல்வதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை. இப்படிக் கேள்வி கேள்வியாகக் கேட்டு, அவரால் பதில் சொல்ல முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

மனித வாழ்க்கையின் தன்மையைச் சரியாக அவர் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தினாலேயே இந்தக் கேள்வி மேல் கேள்வி கேட்கும் அணுகுமுறை குருவால் கையாளப்பட்டது. இறுதியில் வாழ்க்கையின் உள்ளார்ந்த அம்சத்தையே அது சுட்டிக் காட்டுகிறது.

அதுதான் மரணம்!

எல்லோருமே ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனுமே இருக்க விரும்புகிறார்கள். எதற்காக ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்? எதற்காக ஒருவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்?

ஆனால், கடைசியில் இறக்கும்போதோ யாரும் மகிழ்ச்சியுடனும் இல்லை, ஆரோக்கியத்துடனும் இல்லை. நிச்சயமாக இன்றோ அல்லது நாளையோ அல்லது நாளைக்குப் பிறகு இன்னொரு நாளோ இறக்கப் போகிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவேதான் வாழ்க்கை மிக அழகிய ஒன்றாக இருக்கிறது. இதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் பிரபல அமெரிக்க ஜென் மாஸ்டரான டைனின் கடகிரி.

ஜென் பயிற்சிகளின் மீதோ அல்லது புத்த மதத் தத்துவத்தின் மீதோ நம்பிக்கை கொள்வது என்பது ‘அது ஏதோ ஒரு வழிமுறை; அதைப் பற்றி நாம் சிந்திக்கிறோம்’ என்பதில்லை. வாழ்க்கையின் அடி ஆழத்திலிருந்து அதைப் பயிற்சி செய்வது என்பதே நாம் உண்மையாகக் கொள்ள வேண்டிய நிலையாகும்! எப்படிப் பயிற்சி செய்வது? அதைப் பழகிப் பழகி வாழ்ந்து காட்டுவதே!

உள்ளார்ந்த விருப்பம், மனதில் ஊறும் விழிப்புணர்ச்சி, முயற்சி, தியானம் (ஜஜென்), ஞானம், கட்டுப்பாடு, நம்பிக்கை, தர்மத்தைக் கடைப்பிடிப்பது, அனைத்திலிருந்தும் விலகாமல் இருத்தல், உறுதி பூண்டு வாழ்தல் ஆகிய இந்த முக்கியமான பத்து படிகளே நம்மை ஒரு புத்தராக ஆக்கும்! இதில் ஐயமில்லை.

மனதில் உள்ளார்ந்த சபதத்தை மேற்கொண்டு புத்தராவோம்; அனைவரும் புத்தராக சேவை செய்வோம்!

முடிவுரை

ஜென் வாழ்க்கை முறை என்பது புத்த மதம் உலகிற்கு அளித்த கொடை.

ஜென் என்றால் என்ன என்பதை விளக்குவது கஷ்டம். சில சொற்களால் விளக்க முயன்றால் அது ஜென் அல்ல. வாழ்ந்து காட்டுவதுதான் ஜென் வாழ்க்கை முறை. சொற்களுக்கு அப்பாற்பட்டது ஜென். தியானத்தின் மூலம் உள்ளுணர்வாக அனுபூதி மூலம் அனுபவிக்கப்படுவது ஜென்.

வீட்டைக் கோவில் போலச் சுத்தமாக வைத்துக் கொள்வது, உடலை ஒழுங்காகப் பராமரிப்பது, உள்ளத்தில் எப்போதும் சந்தோஷம் பொங்க இருப்பதுடன் அதை மற்றவர்களுக்கும் பாய்ச்சுவது – இவற்றில் ஜென் மிளிரும்.

சின்னச் சின்ன விஷயங்களிலும் விழிப்புணர்வோடு இருப்பது ஜென். எல்லாப் பொருட்களிலும் அதன் உபயோகத்தைக் காண்பது ஜென். எல்லோரிடமும் நல்ல அம்சங்களைக் காண்பது ஜென் – இப்படி விளக்கிக் கொண்டே போகலாம். இதற்கு ஓர் எல்லை இல்லை என்பதால்தான் விளக்க முடியாத வாழ்க்கை முறை ஜென் என்று கூறப்படுகிறது.

ஜென் மட்டுமே புத்த மதம் அல்ல. அறிஞர்களை ஈர்க்கும் புத்த மதம் சாமான்யர்களைப் பற்றிக் கவலைப்படுகிறது. நிர்வாண நிலை அனைவருக்கும் பொது என்று கூறி ‘அனைவரும் புத்தரே’ எனத் திடமாக அறிவிக்கிறது.

புத்தரைப் பற்றியும் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் அடுத்த பாகத்தில் காணலாம்.

முதல் பாகத்தைப் படித்து ஊக்கமூட்டிய நண்பர்களுக்கும் தொடரை வெளியிட்ட ‘நிலாச்சாரல்’ இதழுக்கும் ஆசிரியர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் நிலாச்சாரல் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

அடுத்த பாகத்தில் மீண்டும் சந்திப்போம்!

About The Author