யார் உயர்ந்தவர்?
ஓஷோ (முன்னாளில் ஆசார்ய ரஜனீஷாக அறியப்பட்டவர்) ஜென் குட்டிக் கதைகள் பலவற்றைக் கூறியுள்ளார். அவற்றில் ஒன்று இது.
மாஸ்டர் சூ சௌவிடம் வந்த மன்னர் கேட்டார்: "உலகியலில் வாழும் மன்னன் உயர்ந்தவனா அல்லது தர்மத்தின்படி வாழும் மன்னன் உயர்ந்தவனா?"
சூ சௌ பதில் சொன்னார்: "மனித மன்னர்களில் நான் உயர்ந்தவன். தர்ம மன்னர்களில் நானும் உயர்ந்தவன்!"
இதில் பொதிந்துள்ள தத்துவம் மிகப் பெரியது! ஜென் வாழ்க்கை முறைப்படி வாழும் ஒருவர் மிகவும் எளிமையாக இருப்பார். சூ சௌ தனது உண்மையான நிலையையே பதிலாகக் கூறியுள்ளார். அவர் தன்னைப் பற்றிக் கூறாமல் தன் நிலையைப் பற்றியே இங்கு எடுத்துரைக்கிறார். அவர் மனம் இருக்கும் உயரிய நிலையையே அது காட்டுகிறது. அகங்காரத்தை விட்டுவிட்ட நிலையில் கர்வத்தை உதறித் தள்ளி விட்ட நிலையில் அவர் கூறிய கூற்று இது!
எப்படி இறப்பது?
இதுவும் ஓஷோ கூறிய கதைதான்!
அந்தப் புத்த பிக்ஷுணி இறப்பதற்கு முன்னர் தன் சிஷ்யர்களிடம், "உங்கள் யோசனை என்ன? நான் எப்படி இறக்க வேண்டும்?" என்று கேட்டார்.
பொதுவாக, ஜென் மாஸ்டர்கள் இப்படிக் கேட்பது சம்பிரதாயமான ஒரு வழக்கம்தான்! அவர்கள் உணர்வு இருக்கும்போதே இறப்பவர்கள். அவர்களுக்குச் சாவு என்பது ஒரு விளையாட்டு போல! இறப்பதற்கு ஏராளமான வழிகளைக் கண்டுபிடித்துச் சிரித்துக் கொண்டே மரணத்தைத் தழுவுவது அவர்களின் பழக்கம்.
ஒரு சீடர் கூறினார்: "மாஸ்டர்! தலை மீது நின்று கொண்டு நீங்கள் இறக்கலாம்!"
இன்னொருவர் கூறினார்: "மாஸ்டர்! நடந்து கொண்டே நீங்கள் இறக்கலாம். ஏனெனில், நடந்து கொண்டே இறப்பதை நாங்கள் யாருமே பார்த்ததில்லை!"
இன்னொருவர் கூறினார்: "நாங்கள் ஒரு சிதையை மூட்டுகிறோம். அதில் எரியும் நெருப்பின் நடுவே நீங்கள் தியானம் செய்தவாறே இறக்கலாம்!"
"ஆஹா! இது அருமையாக இருக்கிறதே! இது வரை கேள்விப்படாததாயும் இருக்கிறது!" என்றார் பிக்ஷுணி. ஆகவே, சிதை ஒன்று தயாரிக்கப்பட்டது. அதில் நடுவில் சௌகரியமாக அமர்ந்தார் பிக்ஷுணி. பிறகு, சிதைக்குத் தீயை மூட்டினர். தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தினரில் ஒருவன், "அங்கே எப்படி இருக்கிறது? உங்கள் அருகே கூட வர முடியவில்லை. வெப்பம் தாங்க முடியவில்லை. அதனால் சத்தம் போட்டுக் கேட்கிறேன். அங்கே எப்படி இருக்கிறது?" என்று கேட்டான்.
பிக்ஷுணி சிரித்தார். பிறகு, கூறினார்: "ஒரு முட்டாள் மட்டுமே இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடியும்! இங்கே மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் குளிர்ந்து இருக்கிறேன்."
இந்தப் பதிலின் உண்மையான அர்த்தம் என்ன? அவர் தனது உள் நிலையைக் கூறினார். அகத்தில் எப்போதும் குளுமைதான். அதை அறியாத ஒரு முட்டாள்தான் அங்கு எப்படி இருக்கிறது என்று கேட்க முடியும்! ஒருவர் சிதையில் தியானத்தில் அமரச் சித்தமாகி அமர்ந்து, தீயும் கொழுந்து விட்டு எரியும்போது அவர் மௌனமாக அமர்ந்திருக்கிறார் என்றால் அது எப்படிப்பட்ட உயரிய நிலை! அவரது அக நிலை எப்படிக் குளிர்ந்து இருக்க வேண்டும்! – தீயினால் கூட ஒன்றும் செய்ய முடியாத குளுமை!
இதுதான் உண்மையான அனுபூதி பெற்ற ஒரு ஜென் மாஸ்டரின் நிலை!
ஒழுங்குமுறை வரிசை!
பணக்காரன் ஒருவன் ஒரு ஜென் மாஸ்டரிடம் வந்தான். தன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக மகிழ்ச்சியுடன் செழித்து வளர ஏதேனும் ஒரு வாக்கியத்தை எழுதித் தருமாறு வேண்டினான். ஜென் மாஸ்டர் ஒரு பேப்பரை எடுத்தார். அதில், "தந்தை இறக்கிறார், மகன் இறக்கிறார், பேரன் இறக்கிறார்" என்று எழுதித் தந்தார்.
அதைப் படித்த பணக்காரனுக்குக் கோபம் வந்தது. மாஸ்டரிடம் அவன், "பரம்பரை பரம்பரையாக மகிழ்ச்சியுடன் செழித்து வளர ஏதேனும் ஒன்றை எழுதித் தரச் சொன்னால் இப்படி எழுதி இருக்கிறீர்களே?" என்றான்.
அவனைப் பார்த்த மாஸ்டர், "உன்னுடைய மகன் உனக்கு முன்னே இறந்து விட்டால் அது உனக்கு எல்லையற்ற துன்பத்தைத் தரும். உன் பேரன் உன் மகனுக்கு முன்னால் இறந்து விட்டாலோ அதுவும் உனக்கு துன்பத்தையே தரும். நான் எழுதி இருக்கும்படி அந்த ஒழுங்குமுறை வரிசையில் ஒவ்வொருவராக மறைந்தால் அது வாழ்க்கையில் முறையாக நடக்க வேண்டிய வரிசையில் நிகழ்ந்ததாக ஆகும். யாருக்கும் துன்பம் வராது. இயற்கை நிகழ்ச்சியாக அது அமையும். பரம்பரை பரம்பரையாக அதுவே வளத்திற்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக அமையும்" என்றார். உண்மையை உணர்ந்து கொண்ட பணக்காரன் அந்தப் பேப்பரை மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்றான்.
இறந்த பின் ஏற்படும் ஞானம்
மாஸ்டர் குடோவிடம் வந்து வணங்கிய மன்னன், "இறந்த பின்னர் ஞானம் அடைந்த ஒருவனுக்கு என்ன ஏற்படும்?" என்று கேட்டான்.
"அது எனக்கு எப்படித் தெரியும்?" என்றார் மாஸ்டர்.
"ஏனெனில் நீங்கள்தான் மாஸ்டர் ஆயிற்றே!" என்றான் மன்னன்.
"மாஸ்டர் என்பது உண்மைதான்! ஆனால், நான் இறந்த பிணம் இல்லையே" என்றார் மாஸ்டர்!
மக்களுக்கு உதவுவது எப்படி?
ஒரு உளவியல் நிபுணர் ஜென் மாஸ்டர் ஒருவரைச் சமூக நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தார்.
அவர் மனதில் எழுந்த கேள்வியை ஜென் மாஸ்டரிடம் கேட்டார்: "நீங்கள் எப்படி மக்களுக்கு உதவுகிறீர்கள்?"
"இனியும் எந்த ஒரு கேள்வியும் கேட்க முடியாத நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறேன்" என்றார் ஜென் மாஸ்டர்!
சின்ன உண்மை
ஜென் பொன்மொழிகளில் சில:
தவறு ஒன்றைச் செய்யும் வரை நீங்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை! (No one is listening until you make a mistake.)
ஒரு போதும் நீரின் ஆழத்தை இரண்டு கால்களையும் விட்டுப் பார்க்காதே! (Never test the depth of the water with both feet.)
உன்னுடைய உதவி இன்றியே உனது நற்குணங்களை ஒருவர் கண்டுபிடிப்பது அதிகம் கவரும் ஒன்று! (It is far more impressive when others discover your good qualities without your help.)
–மின்னும்…