ஸ்வர்ண லோகம் (17)-மூ!

பின்னர் இவர் சீனாவில் நாடெங்கும் சுற்றி வரலானார். தனது வாழ்நாளில் ஜென் பிரிவில் உதித்த பெரும் மாஸ்டர் சாவோ சௌ சங்-ஷென் (778-897). ஜப்பானைச் சேர்ந்த இவரை ஜோஷு என்ற பிரபலமான பெயரால் அனைவரும் அறிவர். ‘மூ’ என்ற பிரபலமான ஒரு கோயனால் உலகில் இன்றளவும் அவர் போற்றப்படுகிறார்.

பெரும் ஞான நிலையை எய்திய இவர் நான் – சூவான் (748-835) என்ற ஆசார்யரிடம் சிஷ்யராக இருந்தார். ஆசார்யர் மஹாநிர்வாணம் அடைந்த கடைசி நாற்பது ஆண்டுகளில், வட சீனாவில் ஒரு சிறிய ஆலயத்தில் தங்கியிருந்து தன் சிஷ்யர்களுக்குப் போதித்து வந்தார். சில வார்த்தைகளிலேயே பெரும் உபதேசத்தை அருளும் அரிய பாணியை இவர் கைக்கொண்டிருந்தார்.

ஒரு துறவி அவரிடம், "ஒரு நாய்க்கு புத்தத் தன்மை இருக்கிறதா?" என்று கேட்டார்.

மஹாயான புத்தமதத் தத்துவத்தின்படி, புத்தத் தன்மை என்பது அனைத்து உயிரினங்களிடமும் இருக்கும் ஓர் அடிப்படைத் தன்மையாகும். எல்லா உயிரினங்களிடமும் என்று சொல்வது வெறும் அலங்காரச் சொற்றொடர் இல்லை. மனிதர்களை மட்டும் அல்ல, நிஜமாகவே எல்லா உயிரினங்களையும் அது குறிக்கும். ஆகவே, அதில் நாயும் அடங்கும்! அதுவும் உயிரினத்தில் ஒன்றுதானே!! ஆகவே, துறவி கேட்ட கேள்விக்கான சரியான பதில் ஆம் என்பதே!

ஆனால், சாவோ சௌ சங்-ஷென் "மூ" என்று பதில் அளித்தார். இதை ஒரு மிருகத்தின் தீனமான குரலைப் போல அல்லது முனகலைப் போல உச்சரிக்க வேண்டும். "மூ…ஊ.ஊ" என்று!

"மூ! இல்லை! இங்கே என்ன நடக்கிறது?" என்றார் சாவோ சௌ சங்-ஷென்.

இந்தக் கோயனில் உள்ள கேள்வியானது ‘இருக்கையின் இயற்கை’ (existence nature) பற்றியது! துறவியின் கேள்வி ‘இருக்கை’ பற்றிய ஒரு பக்கமான, சிதைந்த பார்வையினால் கேட்கப்பட்ட ஒன்று. சாவோ சௌ சங்-ஷென் அந்தத் துறவியின் சிதைந்த சிந்தனைக்கு ஓர் அடி கொடுத்து அவரது சம்பிரதாயமான சிந்தனையை உடைத்தார்.

இந்தக் கோயன் ‘சாவோ சௌ சங்-ஷென்னின் நாய்’ என்ற பெயரில் உலகெங்கும் பிரபலமானது. கடந்த 12 நூற்றாண்டுகளாக ஜென் புத்த மதத்தினர் இந்தக் கோயன் பற்றி ஆழ்ந்து தியானிக்கின்றனர்.

"மூ" என்பது சீனாவில் வூமென் ஹூகை (1183-1260) என்பவரால் தொகுக்கப்பட்ட ‘கதவில்லாத கதவு’ (Gateless Gate) என்ற 48 கோயன்கள் அடங்கிய தொகுப்பில் முக்கியமான கோயன் ஆகும். ஜென் மாஸ்டர்களுக்கும் சீடர்களுக்கும் இடையே பல ஆண்டுகளில் நடந்த உரையாடல், கேள்விகளில் மிக முக்கியமானவை மட்டும் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டன. ஒவ்வொரு கோயனும் தர்மம் பற்றிய ஒரு விளக்கமாக அமைகிறது.

‘மூ’ என்ற கோயன் நம்மிடையே நிலவும் மாயத்திரையை அறுத்து எறிய வல்ல முக்கியமான ஒன்று. அது கென்ஷோ எனப்படும் ஞானோதய அனுபவத்தைத் தர வல்லதாகக் கருதப்படுகிறது. மூடி இருக்கும் அறைக் கதவை உடைத்துத் திறப்பது போல அல்லது மேகமூட்டத்தின் இடையே மறைந்திருக்கும் சந்திரனைச் சிறிது பார்ப்பது போல இந்த அனுபவத்தைக் கூறலாம்.
‘மூ’ என்பதை ஆம் என்றோ இல்லை என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. ஒன்றுமில்லை அதாவது சூன்யம் என்பதை விளக்க மாஸ்டர் சாவோ சௌ சங்-ஷென் குறிப்பாக அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் என்றும் பலர் வியாக்யானம் செய்கின்றனர்.

ஆகவே ‘மூ’ என்ற எழுத்தை, அது பற்றி எங்கெல்லாம் விளக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காட்சிப் பொருளாக மாட்டி வைப்பது இன்றைய மரபாக ஆகி விட்டது.

மூவில் மூன்று கோடுகள் உள்ளன.

முதலில் கிடைமட்டமான கோடு. அடுத்து, மேலிருந்து கீழாக வரும் கோடு ஒரு க்ளாக்வைஸ் சுழலைக் கொண்டு பின்னர் கீழிறங்கும். அடுத்து, கீழிறங்கிய கோடு வலது பக்கமாகச் செல்லும்.

மாஸ்டர் வூமென் ஹூகை ஆறு வருட காலம் சிரமப்பட்டு ‘மூ’ என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டார்! இதைப் பற்றிய வியாக்யானத்தில் அவர் குறிப்பிடுவது இது: "உனது மொத்த உடலையும், அதில் உள்ள 360 எலும்புகளையும், 84,000 மயிர் அடிப் பைகளையும் சந்தேகமாக ஆக்கிக் கொண்டு இந்த ஒரே ஒரு வார்த்தையான ‘மூ’ என்பது பற்றித் தியானம் செய்! இரவு பகலாக, நன்கு ஆழத் தோண்டிக் கொண்டே இரு! இருக்கிறது என்றோ அல்லது இல்லை என்றோ நினைக்காதே! அதை ஒன்றுமில்லை என்றும் யோசிக்காதே! பழுக்கக் காய்ச்சிய சிவப்பான இரும்புக் குண்டை விழுங்குவது போல அது இருக்கும். அதை வாந்தி எடுக்க முயன்றாலும் உன்னால் முடியாது!"

‘மூ’ பற்றிய அர்த்தத்தை உணர்வது நம் முன்னே இருக்கும் காலை நேரப் பனியை விலக்குவது போல ஆகும்.

இதைப் போன்ற கோயனை ஒரு குரு உச்சரிக்கும்போது சிஷ்யர் "இதன் அர்த்தம் என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால்…" என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே மாஸ்டர் குறுக்கிட்டு, "நீ நினைப்பது ஏற்கெனவே தப்பாக ஆகிவிட்டது!" என்பார்.

சுலபத்தில் விளக்க முடியாதது – மூ! அனுபவத்தில் உணர வேண்டியது மூ! தர்க்கரீதியாக உணர முடியாதது மூ! தர்க்கரீதியாக ஒருவர் இது பற்றி அறிய விரும்புவது இரும்புச் சுவரில் முஷ்டியால் குத்திக் கொள்வது போல என்று ஜென் மாஸ்டர்கள் கூறுகின்றனர்!

சின்ன உண்மை

‘மூ’ எங்கிருந்து பிறந்தது என்று ஆராயப் போனால் அது போதிதர்மரைச் சுட்டிக் காட்டுகிறது. போதிதர்மரின் சமாதி இருப்பது சீனாவில் உள்ள ஷான்ஸி மாகாணத்தில் "பேர் இயர் மவுண்டன்" (Bear Ear Mountain) என்னும் இடத்தில். அங்குள்ள ஒரு கல்வெட்டில் ‘மூ’ செதுக்கப்பட்டிருக்கிறது. இதைச் சக்ரவர்த்தி வூ செதுக்கியதாக வரலாறு சொல்கிறது. பின்னால் வந்த ஆசாரியர் மூ என்ற பிரபல கோயனை உருவாக்கினார்.

–மின்னும்…

About The Author