ஸ்வர்ண லோகம் (16)-உள்ளொளி பெற்ற உத்தமர்!

‘பிறக்காத புத்த மனம்’ என்பது புத்த மதத்தில் ஏற்கனவே இருந்த ஒன்றுதான் என்றாலும், பாங்கெய் அதற்கு ஒரு புதுப் பரிமாணத்தையும் அழுத்தத்தையும் தந்து பிரபலமாக்கினார்.

பாங்கெயைப் பொறுத்த வரையில், மனம் அபாரமான சக்தி வாய்ந்த ஒன்று. உலகத்தைப் பிரதிபலிக்கும் உயிருள்ள கண்ணாடி அது! பார்த்த அனைத்தையும் பிரதிபலிப்பதோடு, அனைத்தையும் சேர்த்து வைத்திருக்கும் ஒன்றும் கூட. யாரானாலும் சரி, அனைத்துப் பதிவுகளையும் ஒவ்வொன்றாக அகற்றி விட்டால் போதும், ஞானம் பெற்று விடலாம் என்று அவர் சுலபமாக உபதேசித்தார்.

‘பிறக்காத மனம்’ பற்றி ஓர் எளிய உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம். இலையுதிர்காலத்தில் ஒரு மரத்தின் அடியில் உட்காரும் ஒருவன் இலைகளை அகற்றி இடத்தைச் சுத்தப்படுத்துகிறான். ஆனால், மரத்திலிருந்து இலைகள் கீழே விழுந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் கணத்தில் அவன் இலைகளை அகற்றி விட்டாலும் கூடத் தொடர்ந்து இலைகள் விழுந்து கொண்டேதான் இருக்கும். அதே போல, கோபம் பற்றிய எண்ணத்தை உங்கள் மனதிலிருந்து நீங்கள் அகற்றி விட்டாலும் கூட, அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள் ஒருபோதும் முடிவுக்கு வரப்போவதே இல்லை. ஆனால், அப்படி எழும் எண்ணங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமலும் அதைப் பொருட்படுத்தாமலும் அதை நிறுத்த முயற்சி செய்யாமலும் இருந்து விட்டால் அதுதான் ‘பிறக்காத புத்த மனம்’ ஆகும்.

பாங்கெய் ஒருபோதும் தனது கொள்கைகளையும் விதிமுறைகளையும் யார் மீதும் திணிக்கவில்லை. அதே போல ஜாதி, அந்தஸ்து, இனம், பால் போன்ற எதுவும் ஆன்மிகப் பாதையில் குறுக்கிட முடியாது என்பது அவரது திண்ணமான எண்ணம். ஒருநாள் சாமான்ய, படிப்பறிவில்லாத ஒரு பெண்மணி அவரிடம் வந்து, "பெண்கள் எல்லோரும் கர்மாவினால் பெரும் பாரத்தைச் சுமந்து கட்டுப்பட்டவர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்களே! அவர்களால் புத்தத்துவத்தை உணர முடியுமா?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள். அதற்கு பாங்கெய், "நீ எப்போதிலிருந்து பெண்ணாக ஆனாய்?" என்று எளிமையாகக் கேட்டு ஆழ்ந்த உண்மையை விளக்கி விட்டார்!

1690ஆம் ஆண்டிலேயே மிகவும் பிரபலமான துறவியாக அவர் ஆகிவிட்டார். அவர் பேச்சைக் கேட்பதற்காக யோமோஞ்ஜி ஆலயத்தில் ஆயிரத்தி எழுநூறு புத்தத் துறவிகள் ஜப்பான் முழுவதிலுமிருந்தும் வந்து கூடினர். அவரது அருளுரைகள் அனைத்தும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டன. 1693இல் அவரது உடல்நிலை சற்று மோசமடைந்தது. அவர் இன்னும் சில காலமே இருப்பார் என்பதை ஊகித்த அவரது சீடர்கள் தங்களது பணம், நேரம், உழைப்பு ஆகியவற்றைக் கொட்டி அவருக்கு ஒரு பகோடாவை அமைக்க முயன்றனர். இரவு பகலாக வேலை தொடர்ந்தது. பெரும்பாலும் இரவு நேரத்தில், சந்திர ஒளியில் பகோடா பணி தொடர்ந்தது. இறுதி நேரம் வந்ததை ஒட்டி பாங்கெய் மூன்று தினங்கள் கடைசிச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி விட்டு ஆலயத்தினுள் சென்று அமைதியை நாடினார்; 1693ஆம் ஆண்டு செப்டம்பரில் நிர்வாணம் அடைந்தார். அவரது அஸ்தி யோமோஞ்ஜி, ந்யாஹாஜி ஆகிய இரண்டு முக்கிய ஆலயங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 1740ஆம் ஆண்டு அரசாங்கத்தின் உயரிய விருதான கோகுஷி எனப்படும் ‘நேஷனல் மாஸ்டர்‘ என்ற விருதை அளித்து அரசு அவரைக் கௌரவித்தது.

முன்னமேயே அவரது உயரிய ஞான நிலையைச் சீனாவிலிருந்து வந்த பெரும் மகானே உலகிற்கு அறிவித்து விட்டார். டாவோ – சே சாவோ யுவான் என்ற மாபெரும் துறவி நாகசாகிக்கு வந்தார். அப்போது பாங்கெயின் குருவான உம்போ அவரிடம் டாவோ – சே சாவோ யுவானைத் தரிசிக்குமாறு அறிவுறுத்தினார். டாவோ சேவுக்கு ஜப்பானிய மொழி தெரியாது, சீன மொழி மட்டுமே தெரியும். சீன மொழியையும் ஜப்பானிய மொழியையும் எழுத்து வடிவத்தில் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பதால் பாங்கெய் டாவோ சேவுக்கு எழுதிக் காண்பித்துத் தான் சொல்ல விரும்பியதைச் சொன்னார். டாவோ சே, பாங்கெயின் உள்ளொளியை உடனே புரிந்து கொண்டார். ஆனால், அவரது ஞானம் பூர்த்தியாகவில்லை என்று தெரிவித்தார்.

பாங்கெய், டாவோ சேயின் சிஷ்யர்கள் வட்டத்திற்குச் சென்றார். அங்கு அவர் சொல்வதை நன்கு கூர்ந்து கேட்டார். தியான அறையில் இருந்தபோது ஒரு நாள், மாலை நேர நிழலில் அவர் ஞானவொளி அனுபவத்தைப் பெற்றார். ஜென் சம்பிரதாயப்படி உடனே டாவோ சேயிடம் சென்று தன் அனுபவத்தைக் கூறினார்.

"பிறப்பையும் இறப்பையும் பற்றி என்ன?" என்று ஒரு பிரஷினால் எழுதிக் கேட்டார் பாங்கெய்.

"யாருடைய பிறப்பு, இறப்பு பற்றி?" என்று பதில் கேள்வியை எழுதிக் கேட்டார் டாவோ சே.

பாங்கெய் வெறுமனே தன் கைகளை நீட்டினார், அவ்வளவுதான்! டாவோ சே மீண்டும் எழுதுவதற்காக பிரஷை எடுக்க முயலுகையில் பாங்கெய் அதைப் பிடுங்கித் தரையில் எறிந்தார். மறுநாள் காலை டாவோ சே தன் சீடர்களிடம் பாங்கெய் ஜென் பயிற்சியை முற்றிலுமாக முடித்து விட்டார் என்று அறிவித்தார்.

உள்ளொளி பெற்ற பின்னர் சொல்லும் எழுத்தும்தான் ஏது?!

சின்ன உண்மை

பாங்கெயின் முக்கியமான அருளுரை இது:- "சத்தியத்தின் உள்ளே ஆழ்ந்து செல்லச் செல்ல அது இன்னும் அதிக ஆழம் உடையதாக இருக்கும்!"

–மின்னும்…

About The Author