ஹகுயினின் வாழ்க்கை சுவாரசியம் ததும்பிய ஒன்று. அதில் ஏராளமான சுவையான சம்பவங்களைப் பார்க்க முடியும். மிகவும் பிரபலமான இரு சம்பவங்களைப் பார்க்கலாம்.
ஜப்பானிய இளம் பெண் ஒருத்தியின் பெற்றோர் ஹகுயின் வாழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு உணவு விடுதியை நடத்தி வந்தனர். ஒரு நாள் தங்கள் பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்தனர். கர்ப்பத்துக்குக் காரணமானவன் யார் என்று கேட்டு அவளைக் குடைந்தனர். அவளோ லேசில் பதில் சொல்வதாயில்லை. பெரும் முயற்சிக்குப் பின்னர் அவள் ஹகுயினே அதற்குக் காரணம் என்று சொன்னாள். பெரும் கோபம் அடைந்த பெற்றோர் ஹகுயினிடம் வந்து நடந்ததைச் சொல்லிக் கத்தினர்.
"அப்படியா?" என்று மட்டும் சொன்னார் ஹகுயின். அவளுக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை எடுத்து வந்த இளம் பெண்ணின் பெற்றோர் ஹகுயினிடம் தந்தனர். அதைச் செல்லமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஆரம்பித்தார் ஹகுயின். இதற்குள் இந்தச் சம்பவம் ஊரெல்லாம் பரவி ஹகுயினின் பெயர் மிகவும் கெட்டு விட்டது. ஒரு வருடம் கழிந்தது. அந்தப் பெண்ணால் இனியும் பொறுக்க முடியவில்லை. தனது பெற்றோரிடம் அவள் உண்மையைக் கூறினாள். அந்தக் குழந்தையின் நிஜமான தந்தை மீன் சந்தையில் இருக்கும் ஒரு இளைஞன்தான் என்று! உடனே அவளது பெற்றோர் ஹகுயினிடம் ஓடி வந்தனர். நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேட்டனர். குழந்தையைத் தங்களிடம் திருப்பித் தருமாறு வேண்டினர். எல்லாவற்றையும் கேட்ட ஹகுயின் "அப்படியா?" என்று மட்டும் சொன்னார். குழந்தையை அவர்களிடம் மனமுவந்து திருப்பிக் கொடுத்தார். இதனால் அவர் புகழ் எல்லா இடங்களிலும் பரவி எப்பேர்ப்பட்ட உன்னதமான குரு அவர் என்று அவரைப் போற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர்.
இன்னொரு சம்பவம்.
ஒரு நாள் போர்வீரன் ஒருவன் ஹகுயினிடம் வந்தான்.
"உண்மையிலேயே நரகமும் சுவர்க்கமும் இருக்கின்றனவா?" என்று கேட்டான்.
"நீ யார்?" என்று கேட்டார் ஹகுயின்.
"நான் ஒரு சாமுராய்" என்றான் அந்தப் போர்வீரன்.
"நீ ஒரு சாமுராயா!" என்று வியந்து கூறினார் ஹகுயின்.
"உன்னைக் காவலனாக எந்த மன்னன்தான் வைத்திருக்கிறானோ! உன்னுடைய முகம் பிச்சைக்காரன் போலத் தோற்றமளிக்கிறதே!" என்றார் ஹகுயின். இதைக் கேட்டு வெகுண்ட அவன் தன் வாளை உருவினான். ஆனால் ஹகுயினோ பயப்படவில்லை. தொடர்ந்து பேசலானார்.
"ஓ! உன்னிடம் ஒரு கத்தி இருக்கிறதா! உன்னுடைய ஆயுதம் உன் புத்தியைப் போலவே மழுங்கி இருக்கிறது!" என்றார்.
அந்தப் போர்வீரன் வாளை ஓங்கவே, "இதோ! நரகத்தின் வாயில் திறக்கிறது!" என்று ஹகுயின் கூறினார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அவரது பெருமையையும் அவர் போதிக்கும் விதத்தையும் உணர்ந்த அந்த வீரன் தன் வாளை இடையில் செருகிக் கொண்டான்.
"இதோ! சொர்க்கத்தின் கதவு திறக்கிறது" என்று ஹகுயின் கூறினார். அந்த வீரனுக்கு எது சொர்க்கம், எது நரகம் என்று புரிந்து விட்டது! ஹகுயினுக்குத் தலை வணங்கி அவன் விடைபெற்றுச் சென்றான்.
ஹகுயின் அதிகம் பேச மாட்டார். சில சொற்களிலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுவார். மௌனமாக இருப்பதே அவரது இயல்பு. இதை விளக்கி ஓஷோ (முன்னாளில் ஆசார்ய ரஜனீஷ்) ஹகுயினின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார்.
ஒருமுறை ஜப்பானிய மன்னன், ஹகுயினை ஒரு உபதேச உரை நிகழ்த்துவதற்காக அழைத்தான். ராணி, மன்னன், ராஜ குரு, மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் அரசவையில் அவர் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் குழுமினர். ஹகுயின் அங்கு வந்தார். ஒரு நிமிடம் நின்றார். சபையிலிருந்தோரைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் சபா மண்டபத்தை விட்டு வெளியேறினார். மன்னன் மந்திரியிடம், "இது என்ன? நாம் இவர் சொல்லப் போவதைக் கேட்பதற்காக வந்திருக்கிறோம். ஒன்றுமே பேசாமல் போகிறாரே!" என்றான்.
மந்திரி கூறினார், "அரசே! நான் இதுவரை கேட்ட பிரசங்கங்களிலேயே இதுதான் அற்புதமானது! நீங்கள் உபதேச உரை கேட்டீர்கள். அவர் அதைச் செய்து காண்பித்து விட்டார். அவர் மௌனமாக சில விநாடிகள் நின்றார். அவரே மௌனமாக ஆனார். ஒரே மௌனம்! உபதேசித்ததை விட்டு விட்டீர்கள். ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களே" என்றார்.
மௌனத்தை எப்படி விளக்க முடியும்! மௌனத்தினாலேதான் விளக்க முடியும்! அரசன் புரிந்து கொண்டான். எதையும் ஹகுயின் வாழ்ந்து காட்டிப் புரிய வைப்பார்.
பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்ட ஹகுயின் 31ஆம் வயதில் ஷோயின்-ஜி மடாலயத்திற்குத் திரும்பி வந்தார். அங்கே தலைமைக் குருவானார். முதல் குரு என்று பொருள்படும் தாய்-இசிஸா என்று அவர் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். ஹகுயின் என்ற அவரது பெயருக்கான அர்த்தம் ‘வெண்மையில் ஒளிக்கப்பட்டது’ என்பதாகும். 1768ஆம் ஆண்டு, ஜனவரி 18ஆம் தேதியன்று 83ஆம் வயதில் அவர் நிர்வாணம் அடைந்தார். ஞானம் அடைந்த 90 வாரிசுகளை அவர் உருவாக்கியது ஒன்றே அவர் எப்படிப்பட்ட மாபெரும் குருவாகத் திகழ்ந்தார் என்பதை உணர்த்தும்.
சின்ன உண்மை
ஹகுயின் தியானப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மிகவும் பிரபலமான அந்தப் பாடலில் நீங்கள் ‘முழுமை’ அடைந்து விட்டால் கடவுளின் அருள் கிடைக்கும். கடவுள் அங்கு இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப் பாடியே ஜென் பிரிவினர் தியானத்தைச் செய்தல் மரபு.
–மின்னும்...
ரொம்ப நன்றாக இருக்கிறது.