ஸ்வர்ண லோகம் (10)

நீ உள்ளே வரலாம்!

டைடோகுஜி மடாலயத்தின் வாயிலை சோகோ அடைந்தார். தனது தொப்பியைக் கழற்றி வாயிலின் அழுக்குத் தரையில் ஒருபுறமாக வைத்தார். மடாலயத்தில் மரத்தினாலான படியில் உட்கார்ந்து அனுமதிக்காக இறைஞ்சினார். சாதாரணமாக, வாயில் எப்போதுமே அழுக்கு படிந்திருக்கும். அதிலிருந்து சில அடிகள் தள்ளி விசாலமான நடைபாதைப் பகுதிகள் இருபுறமும் ஆரம்பிக்கும்.

உள்ளே பன்னிரெண்டு துறவிகள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோதிலும் அங்கு மயான அமைதி நிலவியது. மீண்டும் பாரம்பரிய வழக்கப்படி சோகோ அனுமதி வேண்டிக் கூவினார். ஆனால், அவரது குரல் தேய்ந்து மறைந்தது. யாரையும் காணோம். சிறிது நேரம் கழித்து, "யாரது?" என்று கேட்டவாறே வந்த மூத்த துறவி ஒருவர் "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். குனிந்த தலை நிமிராமலே கை நீட்டித் தன்னைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் சோகோ தந்தார். அதில் அவரது கல்வித் தகுதிகள், அனுமதி கோரும் விண்ணப்பம், உயிரே போவதாக இருந்தாலும் கூட அங்கு தங்கித் துறவிப் பயிற்சியில் ஈடுபடப் போவதற்கான உறுதிமொழி எல்லாம் இருந்தன.

அவரிடம் குறிப்புகளைத் தந்து தன்னை அனுமதிக்குமாறு சோகோ கெஞ்சினார். அந்தத் துறவி உள்ளே சென்று சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்தார்.

"இங்குள்ள பயிற்சி கடினமானது. அதை உன் நோஞ்சான் உடம்பு தாங்காது. ஆகவே, வேறு ஏதாவது ஒரு மடாலயம் பார்த்து அங்கு போய்ச் சேர்" என்றார் அவர்.

சாதாரணமாக, 150 பௌண்ட் எடையுள்ள சோகோ அப்போது 105 பௌண்ட் எடைதான் இருந்தார்.

சோகோவுக்கு மடாலயம் ஆரம்பத்தில் என்ன பதில் சொல்லும் என்பது நன்கு தெரியும். லேசில் ஒருவரை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். "இங்கு இடம் இல்லை. மடாலயம் நிரம்பி விட்டது", "இந்த மடாலயம் மிகவும் ஏழ்மைப்பட்ட நிலையில் இருப்பதால் உன்னைச் சேர்க்க முடியாது" இத்யாதி பதில்கள், வருபவரைத் திருப்பி அனுப்பத் தயாராக இருக்கும்.

இந்தப் பதில்கள் எல்லாம் ‘நிவாஜூமே’ என்ற பெயரிலான ஒரு சோதனைதான்! ஜென் மடாலயங்களின் பாரம்பரிய வழிமுறைகளில் இந்தச் சோதனையும் ஒன்று. கௌதம புத்தருக்குப் பின்னால் வந்த 28ஆவது குருதான் போதி தர்மர். அவர்தான் ஜென் பிரிவின் முதலாவது குருவும் கூட!

போதி தர்மர் சீனாவுக்கு வந்த பின்னர் அவரிடம் சீடராகச் சேர ஹுயிகியோ என்பவர் அனுமதி வேண்டிக் கெஞ்சினார். அவர் பல நாட்கள் போதி தர்மரிடம் நின்றவாறே கெஞ்சியதாக வரலாறு தெரிவிக்கிறது. பனிக்காலம் வந்து பனி மழை பொழிய ஆரம்பித்து, அவர் முழங்கால்கள் வரை பனி மூடி விட்டது! ஆனாலும் அவர் இடத்தை விட்டு நகரவில்லை. தனது வேண்டுகோளில் உறுதியாக இருந்தார். கடைசியில், தனது உறுதியைக் காண்பிக்கும் விதமாகத் தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து இடது கையை வெட்டி அதைப் போதி தர்மருக்குச் சமர்ப்பித்தார். அப்போதுதான் போதிதர்மர் அவரைத் தன் சீடராக ஏற்கச் சம்மதித்து அருளினார். ஹுயிகியோவை ஜப்பானிய மொழியில் ஏகா என்பர். இந்த ஏகாதான் போதிதர்மருக்கு அடுத்து இரண்டாவது ஜென் பிரிவு குருவாக ஆனார். ஆகவேதான் 1500 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட ஜென் மடாலயத்தில் சேர இப்படிப்பட்ட கஷ்டமான அனுமதி முறை நிலவி வருகிறது!

இந்தப் பின்னணியெல்லாம் நன்கு அறிந்திருந்த சோகோ தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து அனுமதிக்காக இறைஞ்சிக் கூவிய வண்ணம் இருந்தார். அனுமதி கஷ்டம்தான் என்றாலும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த சோகோ, அது இவ்வளவு கஷ்டமான ஒன்று என்பதை உண்மையிலேயே நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

சிறிது நேரம் கழித்துக் கையில் தடியுடன் ஒரு துறவி வந்தார். "உனக்கு அனுமதி இல்லை. இருந்தாலும் கூட நீ இங்கேயே இன்னும் இருக்கிறாய். உன்னைப் பார்க்கவே யாருக்கும் பிடிக்கவில்லை. உடனே வெளியே போ!" என்றார் அவர். சோகோ அசையவே இல்லை. இதனால் வெகுண்ட அவர், சத்தம் போட்டு, "என்ன, நீ செவிடா?" என்று கேட்டவாறே தடியால் இரண்டு சார்த்து சார்த்தி சோகோவை வெளி வாயில் கதவை நோக்கி விரட்டினார்.

சற்று நேரம் கழித்து உள்ளே நுழைந்த சோகோ, அங்கே அந்தத் துறவி இல்லாததைப் பார்த்து மீண்டும் அதே இடத்திற்குச் சென்று அமர்ந்தார். இந்தத் துரத்தல் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்தது. ஆரம்பத்தில் ஓடி ஓடி வெளியே போன சோகோவுக்கு ஒரு கட்டத்தில் கோபம் கொப்பளித்தது. ஆனாலும் மாலை ஆனபோது அவர் மனம் கோபத்தை ஒதுக்கி விட்டு வருந்த ஆரம்பித்தது.

"நான் யார்? என்ன செய்கிறேன்? கசங்கிய துணியைத் துவைப்பது போல என்னைப் புரட்டிப் புரட்டி அடிக்கிறார்கள். தாயும் தந்தையும் இல்லைதான்! டொயோமோ நகரில் எனக்கு இன்னும் சில உறவினர்கள் இருக்கிறார்களே! அங்கே, அவர்கள் வீட்டிற்குச் செல்லலாமே! இப்படி ஒரு அவமானத்தைச் சகிக்க வேண்டாமே" என்று நெஞ்சமெல்லாம் உருக வருந்தினார் சோகோ. காலையில் தனது குரு தனக்குத் தந்த நிர்வாணப் பணத்தை எண்ணிப் பார்த்தார். அவர் தனது காலணிகளை முடிந்து, "இதை என்றும் அவிழ்க்காதே" என்று சொன்னதையும் சோகோ நினைவு கூர்ந்தார்.
காலையில் எடுத்த உறுதிமொழி என்ன! மாலையில் இப்போது தான் நினைப்பது என்ன? தனது உறுதியெல்லாம் இவ்வளவுதானா!

மூன்று நாட்கள் ஓடின. சோகோவின் முகமெல்லாம் வீங்கி விட்டது. உடலெல்லாம் வலி. தாங்க முடியாத குளிரினால் அவயவங்களெல்லாம் விறைத்து விட்டன. கண்கள் பிதுங்கி வெளியே விழும் நிலை! கால்களையோ அசைக்கக் கூட முடியவில்லை. பள்ளி நாட்களில் தன் வீரத்தைக் காண்பிக்க, வேண்டுமென்றே யாரையாவது சண்டைக்கு இழுத்த தனக்கா இந்த நிலை! சோகோ வெதும்பினார். இங்கே சண்டை போட முடியுமா என்ன?

மூன்றாம் நாள் மாலை ஒரு துறவி சோகோவிடம் வந்தார்.

"உன்னை அடித்து வெளியே அனுப்பினாலும் கூட நீ இங்கேயே மூன்று நாட்களாய் இருப்பது உன் உறுதியைக் காண்பிக்கிறது. நீ உள்ளே வரலாம். ஆனால், உன்னைத் துறவிப் பயிற்சிக்கு அனுமதித்து விட்டோம் என்று மட்டும் எண்ணி விடாதே" என்றார்.

சோகோ மடாலயத்தின் உள்ளே மெதுவாக அடியெடுத்து வைத்தார்.

சின்ன உண்மை :

ஜப்பானிய வார்த்தையான ஜென், சீன வார்த்தையான சான் ஆகிய இரண்டும் சம்ஸ்கிருத வார்த்தையான ‘த்யான்’ (தியானம்) என்பதிலிருந்தே பிறந்தன.

–மின்னும்…

About The Author