அப்பப்பா…! எத்தனை புகழ்ச்சி இந்த ஒரு திரைப்படத்திற்கு! அந்த விருது, இந்த விருது என்று என்னெல்லாமோ சொல்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் கதையாம், லண்டனைச் சார்ந்த இயக்குனராம். சரி, திரைப்படத்தைப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில், கல்லூரியை ‘கட்’ அடித்துவிட்டு, ஒரு திங்கள் மதியம் தனியாக திரையரங்கிற்கு சென்றேன்!
இந்த சமயத்தில் ஒரு உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எத்தனையோ வெள்ளி-சனி இரவுகளில் தனியாக அமர்ந்து திரைப்படம் பார்த்ததுண்டு. அமெரிக்க நாட்டின் தியேட்டர்காரர்கள், பாவம் எனக்காக மட்டும் திரைப்படத்தை திரையிட்ட கதையெல்லாம் நடந்திருக்கின்றது. அப்பொழுதெல்லாம் தியேட்டரில் ஈ-காக்கா இருக்காது. அதிசயம்.. ஆனால் உண்மை. திங்கள் மதியம், இந்த திரைப்படத்திற்கு அரங்கு நிரம்பி வழிந்தது. இந்தியர்களெல்லாம் இல்லை, எல்லாரும் அமெரிக்கர்தான்! வாயடைத்துப்போய் இருக்கையில் அமர்ந்தேன்.
படத்தின் இயக்குனர் டேனி பாயில். ட்ரெய்ன்ஸ்பாட்டிங், 28 டேஸ் லேடர், சன்ஷைன் போன்ற திரைப்படங்களின் இயக்குனர். இந்தியாவில் உள்ள ஒரு இணைஇயக்குனரின் உதவியைக் கொண்டு முழுப்படத்தையும் இயக்கி இருக்கின்றார். நன்று! கொஞ்சம் கூட தயங்காமல் நிறைய வசனங்களை ஹிந்தியிலேயே வைத்ததற்கு சபாஷ். சற்று தைரியம் வேண்டும்! கதைக்கு யதார்த்தத்தை அள்ளித் தருகின்றது. முக்கிய கதாபாத்திரங்கள் இருவரும் புதுமுகங்கள் – ஜமல் மலிக்காக தேவ் படேல், லதிகாவாக ஃப்ரீடா பிண்டோ! இருவரும் கதைக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றார்கள். நடிப்பிலும் பாஸ் மார்க்.
சரி, கதை என்ன? விகாஸ் ஸ்வரூப் எழுதிய “க்யூ அண்ட் ஏ” என்ற புத்தகத்தின் தழுவல். முதல் காட்சி, கதாநாயகன் ஜமல் போலீஸ்காரரிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். ஜமல் ஏமாற்றுக்காரரோ என்ற சந்தேகம்! ‘கௌண் பனேகா கரோர்பதி’ போன்ற ஒரு பரிசுப் போட்டியில் பங்கு பெற்று எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லிவிட்டார் ஜமல் – ஒரே ஒரு கேள்விதான் பாக்கி! அன்றைய நேரம் முடிந்துவிட, போட்டி மறுநாள் தொடர வேண்டும். ஒரு சாதாரண எடுபிடி ஆசாமிக்கு இது சாத்தியம் இல்லை என நம்புகிறார், கேள்விகளை கேட்ட அனில் கபூர். அதனால், கதாநாயகனை போலீஸாரிடம் ஒப்படைக்கின்றார்.
போலீஸ் விசாரணையில், தான் ஏமாற்றவில்லை என்றும், நிஜமாகவே அத்தனை கேள்விகளுக்கும் தனக்கு பதில் தெரியும் என்றும் சொல்கிறார் ஜமல். ஐந்து வயதிலிருந்து ஆரம்பித்து, போட்டிக்கு வந்தது வரை, தன் கதையைச் சொல்கிறார். அவ்வளவுதான் படம்!
தன் வாழ்க்கையிலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கின்றது! உதாரணமாக, ராமர் கையில் என்ன இருக்கும் என்ற கேள்விக்கு பதில் சிறு வயதில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தின் சமயம், தன் அன்னையை இழந்த சோகத்தில் கிடைக்கின்றது!
சிறு குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைப்பதும், சிறுமியை விபச்சாரத்திற்காக தயார்படுத்துவதும் யதார்த்தம். கதாநாயகனும் அவன் அண்ணனும் தப்பும் காட்சி அருமை. (தியேட்டரில் அனைவரின் ரியாக்ஷன்தான் அதற்கு அத்தாட்சி! கண்ணைப் பிடுங்கும் காட்சியில் கதிகலக்கி விட்டார்கள்!)
ஜமலுக்கு நூறு டாலர் பில்லின் மேல் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் தெரியும், ஜமலின் கண் தெரியாத தோழனின் உதவியால்! ஆனால், நூறு ரூபாயின் மேல் இருக்கும் இந்தியரை ஜமலுக்கு தெரியாது! ஜமலின் கதாபாத்திர அமைப்பிற்கு சரியான எடுத்துக்காட்டு!
ஜமலும் அவன் அண்ணனும் சேர்ந்து, அவர்கள் தோழியைக் காப்பாற்றிய பின், அண்ணன் “அவள் எனக்கு வேணும்” என்று சொல்லி, தம்பியை விரட்டி அடிப்பது சினிமாத்தனம்! அதே போல, அதே அண்ணன் பெரிய தாதாவை துப்பாக்கியால் சுடும் காட்சி – அவன் வயது பதினைந்துதான் இருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் – ஸாரி, கொஞ்சம் ஓவர்!
வருடங்கள் கழித்து, தொலைந்த லதிகாவை இன்னொரு தாதாவின் வீட்டில் பார்க்கிறான் ஜமல். அவளை தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்க, அவள் தயங்க, அந்த தாதாவிற்கு அது தெரிய வர, அவளை கண்ணுக்கெட்டா தூரத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றான். அதே தாதாவிடம் ஜமலின் அண்ணன் அடியாளாக இருக்கிறான் என்று வேறு கதை நீளுகிறது! ஹப்பாஹ், தமிழ் சினிமா தோற்றுப் போய்விடும்!
எங்கு தேடியும் தன் காதலி லதிகா கிடைக்கவில்லை! அவள் தன்னைக் கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காக ஜமல் “க்ரோர்பதி” நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம்!
சரி, கடைசியில் என்னதான் ஆகிறது? ஜமல் பொய் சொல்லவில்லை என்று முடிவு செய்து விட்டு, போலீஸ் அவனை, மறுதினம் போட்டியில் பங்கு கொள்ள அனுமதிக்கின்றது! கடைசி கேள்வி கேட்ட பின் அனில் கபூரிடம் நாயகன் சொல்லும் “நம்ப முடிகிறதா! எனக்கு பதில் தெரியவில்லை” ஏ-க்ளாஸ்!
ஜமலின் அண்ணன் மனம் திருந்தி (திடீரென்று எப்படி மனம் திருந்தினார் என்றெல்லாம் கேட்கக் கூடாது!), அந்த தாதாவை கொலை செய்து விட, லதிகா அங்கிருந்து தப்பித்து நாயகனை சந்திக்க ஓடுகிறார். “ஃபோன் அ ஃப்ரெண்ட்” மூலம் நாயகன் அவளிடம் பேசும் காட்சி அருமை. கேள்வியை கேட்காமல், “எங்க இருக்க!” என்று கேட்பதும், அவள் “சுகமாக இருக்கிறேன்” என்று சொல்வதும் சூப்பர்! “எனக்கும் பதில் தெரியாது” என்று சிரித்துக்கொண்டே சொல்வதும் இன்னும் சூப்பர்!
அங்கங்கு சிரிக்கவும், நிறைய இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறது ஸ்லம்டாக் மில்லியனேர். நிறைய யதார்த்தம்; கொஞ்சம் தடுமாற்றம்; நல்ல நடிப்பு; நல்ல இசையமைப்பு (நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்தான்!)
இன்னும் அழகாய்ச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றினாலும்.. பரவாயில்லை! இது போன்ற வித்தியாசமான திரைப்படங்கள் சினிமா உலகுக்கு கண்டிப்பாக தேவை! நல்ல முயற்சி!