ஸ்தலபுராணம்

கல்யாணம் முடிந்ததும் குடும்ப வழக்கப்படி சர்ப்ப லிங்கேஸ்வரரை தரிசிக்கக் கிளம்பினார்கள்.

சுஜாதாவுக்கு அமெரிக்க மாப்பிள்ளை அமையும் என்று யார் எதிர்பார்த்தார்கள்! யாரார் மூலமோ ஜாதகம் கைமாறி, பொருந்துவதாக அமெரிக்காவிலிருந்து ஐயெஸ்டி வந்தது. விரைவில் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் மதுரை வரவிருப்பதாகவும், வழியில் பம்பாயில் இறங்கி அவர்கள் பெண் பார்க்க வருவார்களென்றும் கடிதம்; ஆனால், தாமதமாக வந்தது. அவர்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள். அம்மாவுக்குக் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அப்பாவுக்கு போன் பண்ணினாள். சுஜாதாவைப் பாதிநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளச் சொல்லி உடனே வரச் சொன்னார்கள். ஹோட்டல் ஐட்டம்ஸ் வரவழைத்து ஒருவாறு சமாளித்தார்கள். அவர்கள் பார்த்துப் பிடித்துவிட்டால் மாப்பிள்ளைக்கு சம்மதம்தான். அடுத்த மாதம் கல்யாணம் வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். அப்பா தயாராய் ஒரு எதிர்பார்ப்புடன் பணம் வைத்திருந்தார். கிடைத்த மண்டபம், அவசரக் கல்யாணம் என்று செலவு கொஞ்சம் அதிகம்தான். அதைப் பற்றியென்ன? சுஜாதா அவரது ஒரே பெண். அவளுக்குச் செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறார்?… அத்தோடு ஸ்ரீதர் இப்போது வேலைக்குப் போகிறான்… எல்லாம் சமாளித்து விடலாம்.

ஒரு வார லீவில் வந்திருந்தான் விஸ்வநாதன் முரளி. அவனை வரவேற்க எல்லாரும் ஏர்போர்ட் போயிருந்தார்கள். அதுவரை ஸ்ரீதர் ஏர்போர்ட் போனதில்லை. காத்திருத்தல் அவனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. தரகர்களும் டாக்ஸி டிரைவர்களும் எந்த வெளிநாட்டுக்காரன் திரும்பினாலும் திரும்பிய பக்கமெல்லாம் முளைத்து அவர்களைப் பார்த்துச் சிரித்தார்கள்.
விஸ்வநாதன் முரளி. தமிழ் பேசவே அவனுக்கு என்னவோ போலிருந்தது. இவர்களும் அப்படித்தானே, தமிழை விட இந்தி பேசுவதை இயல்பாய் நினைக்கிறவர்கள்தானே?… சேர்ந்தாற்போல இரண்டு மணி நேரம் சிகரெட் புகைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. அவனது அவஸ்தை சுஜாதாவுக்கு வேடிக்கையாய் இருந்தது. ஸ்ரீதர் அக்காவைப் பார்த்தான். பான்பராக் போட்டான் என்று அந்தப் பழக்கத்தை அவன் நிறுத்தும் வரை அவனோடு பேசாத அக்கா… அக்கா, உன்னை இவ்வளவுக்கு மாற்றியது எது?… அமெரிக்காவை நோக்கிக் குவிந்துள்ள அவளது கனவுகளுக்கு ஸ்ரீதர் வாழ்த்துச் சொன்னான். இளம் ஆராய்ச்சியாளன் விஸ்வநாதன் முரளி. மருத்துவம் படித்து விட்டு ஸ்டெத்தும் நோயாளியுமாய் அலையாமல், ஆஸ்திரேலியன் ஆன்டிஜனுக்கு மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் முரளி. நேரங்காலமற்ற யோசனை. ஆராய்ச்சி. குறிப்பு. புத்தகங்கள். விவாதங்கள். உரைகள். வாயோரத்தில் சிகரெட்டைக் கவ்வியபடி வோர்ட் பிராஸஸரில் டைப்படிப்பதான அவனது உலகில், கம்ப்யூட்டர் படித்த சுஜாதா எவ்வளவில் உதவிகரமாய் இருப்பாள் என அனுமானிக்க முடியவில்லை.

முரளியிடம் இந்திய அடையாளங்கள் இல்லை. துளிக்கூட இல்லை. தோல்நிறம் கூட, உடைகள் கூட அமெரிக்கச் சாயலில் இருந்தன. அவன் பெற்றோர்கள்தாம் வேஷ்டி மடிசார் சகிதம் மரபை விடாமல் காப்பாற்றி வந்தாற்போலிருந்தது. மகனுக்குத் தமிழ்ப்பெண்தான், இந்தியாவில்தான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தாராம். எது எப்படியோ, சுஜாதா இப்போது முரளியிடம் மூன்று முடிச்சு போட்டுக்கொண்டு வாய் நிறையச் சிரிப்பும் மனம் நிறைய சந்தோஷமுமாய் வளைய வருகிறாள். வாய் வலிக்கவில்லையா அக்கா?…

இந்தியா வந்ததும், தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்வதுமான விஷயங்கள் அவனுக்கு உற்சாகம் அளிக்கும் என சுஜாதா நம்பினாள். சர்ப்ப லிங்கேஸ்வரரா?… என்றான் முரளி யோசனையுடன். "இல்ல – ஒரு பிரார்த்தனை…" என்று சுஜாதா தயங்கினாள். "லீவு ஒரு வாரம்தான் இருக்கு. அதுக்குள்ள எல்லாம் முடிச்சிக்கணுமே" என்றான் அவன். அவனிடம் அவளது பயம் அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது.

சத்திரம் காலி செய்வது போன்ற வேலைகளை அம்மாவிடமும் தம்பியிடமும் விட்டு விட்டு, அப்பா, சுஜாதா, முரளி, ஸ்ரீதர் நால்வராய் லிங்கம்புதூர் கிளம்பினார்கள். ஸ்ரீதருக்கு வேலை கிடைத்தபோதே அவர்கள் ஒருமுறை வந்து போயிருக்க வேண்டும். ஸ்ரீதருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. "நான் இன்ட்டர்வியூவில் நல்லாப் பண்ணினேம்ப்பா. அதுக்குத்தான் வேலை குடுத்திருக்கான் – உங்க சர்ப்ப லிங்கேஸ்வரருக்காக இல்ல" என்றான் அவன். "அதெல்லாம் சரிதான். ஆனா இன்ட்டர்வியூவில உனக்குத் தெரிஞ்ச கேள்வியா இருந்ததோல்யோ? அதெப்டி" என்றார் அப்பா. அவனும் விடவில்லை. "அப்ப தெரியாத கேள்வி வந்திருந்தா உங்காளு வென வெச்சிட்டான்னு சொல்வேளா? நான்ஸென்ஸ்!" என்றான் ஸ்ரீதர். "என்னடா, உங்காளு எங்காளுனுக்கிட்டு?" என்று கத்தினார் அப்பா. கிறுக்குப் பயலைப் பெற்று விட்டேனே, என்று அவருக்கு வருத்தமாய் இருந்தது.
கிறுக்கு அப்பனாக இருக்கிறானே, என அவனுக்கும் இருந்திருக்கும்!

இப்போது சுஜாதாவின் கல்யாணத்தை ஒட்டி ஒருமுறை தம் பிறந்த ஊருக்குப் போகிறபோது அப்பா அவனையும் கூப்பிட்டார். அவன் அப்பாவைப் பார்த்தான். "வாங்க ஸ்ரீதர், எனக்கும் டைம் பாஸிங்கா இருக்கும்…" என்றான் விஸ்வநாதன் முரளி. ஸ்ரீதர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். "உங்களுக்குத்தான் டைம் பாஸிங்குக்கு சுஜி இருக்காளே?" என்றான். பின் "வரேன்" என்றான்.
பம்பாயிலிருந்து சென்னை வரை ஃபிளைட். அங்கிருந்து சிதம்பரம் வரை ஒரு எக்ஸ்பிரஸ் ரயில். படு ஸ்லோவாகப் போனது. சிதம்பரத்திலிருந்து லிங்கம்புதூருக்கு டாக்ஸி கிடைக்குமா என்று பார்த்தார்கள். கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பாஸஞ்சர் ரயிலில் மீண்டும் ஏறினார்கள். வழியெல்லாம் எதிர் வருகிற ரயில்களுக்கு வழி கொடுத்துக் கொண்டே பட்டி நாய் போல பயந்து பயந்து போனது ரயில். ரயிலும் அதில் உட்கார்ந்திருந்த மனிதர்களும் அடிக்கடி பெருமூச்சு விட்டார்கள். கூட்டமேயில்லை. முரளிக்கு வெறுப்படித்தது. அவன் சுஜாதாவோடு ஒட்டி உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தான். சாக்கடைகளும், ரயில் போவதைப் பார்த்துக் கொண்டு அதனருகே நிற்கும் பெண்களுமாய்… ஏன் இங்கே நிற்கிறார்கள்?… ஓ! அவன் முகத்தைத் திருப்பித் திருப்பிக் கொண்டான். பிளடி இண்டியா! வியாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். எவ்வளவு நேரத்தை இவர்கள் வேஸ்ட் பண்ணுகிறார்கள்! தனது பரபரப்பு மிக்க அமெரிக்க மணித்துளிகளை அவன் நினைத்துப் பார்த்தான். நான் இங்கே இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்!… அவனுக்குத் தன் மீதே ஆச்சரியமாய் இருந்தது. (எலிகள் எப்படி இருக்கின்றனவோ?) யோசனையுடன் அவன் சிகரெட் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான்.
"இந்திய சிகரெட் காட்டமானது!" என்றான் விஸ்வநாதன் முரளி.

"ஐஸீ" என்றார் அப்பா.

திடீரென்று முரளி "ஸ்ரீதர்" என்று கூப்பிட்டு சிகரெட் பாக்கெட்டை நீட்டினான். ஸ்ரீதர் அப்பாவைப் பார்த்தான். "இல்லை, அவன் புகைப்பதில்லை" என்றார் அப்பா அவசரத்துடன்.

நெய்யூத்திலிருந்து லிங்கம்புதூருக்குக் குதிரை வண்டி பிடித்தார்கள். வண்டி தடக் தடக்கென்று ஆடியாடிப் போனது. கூண்டோடு முட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. குதிரை பாவம் இழுத்துத் தள்ளாடியது. கிழட்டுக் குதிரை. கிழட்டு வண்டிக்காரன் அதை அடித்து விரட்டியபோது ஸ்ரீதர் "மெதுவாப் போலாம்ப்பா" என்றான் – ஏன்யா இந்த வயசில உன்ன அடிச்சி ஓடச் சொன்னா ஓடுவியா நீ?

அப்பா பேசிக்கொண்டே வந்தார். "நான் பிறந்த ஊர்" என்றார் அப்பா. மாப்பிள்ளை தலையாட்டினான். "எங்க குடும்பத்து எல்லா சுபகாரியத்துக்கும் இங்க வர்றது…" மீண்டும் அவன் தலையாட்டினான். "எங்க திருமணநாள், குழந்தைகளோட ஜென்ம நட்சத்திரம்… இப்படி எல்லா நல்ல நாளுக்கும் இங்க அர்ச்சனை பண்ணச் சொல்லி பணம் அனுப்சிருவோம்…" முரளி புன்னகைத்தான். "சுவாமிநாத குருக்கள்னு இங்க… மகானுபாவன்! அவருக்கு எழுதினா அர்ச்சனை பண்ணி பிரசாதம் அனுப்சிருவார்." "ஓ.கே" என்றான் முரளி. அப்பா அவனை உற்சாகப்படுத்த விரும்பினார். "இனிமே உங்க கல்யாணநாளுக்கும் அர்ச்சனை பண்ணுவோம்!…"

ஸ்ரீதர், "அப்ப விபூதி பிரசாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பேளாப்பா?" என்று கேட்டபோது முரளி திரும்பி ஸ்ரீதரைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அப்பா அவர்களைப் பார்த்தார். என் வயிற்றில் இப்படி ஒரு பிள்ளை. குடும்பத்தின் கோடரிக்காம்பு. அவருக்கு வேதனையாய் இருந்தது. மரபுசார்ந்த தமது மூதாதையார் பாதையில் அவருக்குத் தமது வாழ்நாளின் பின்பகுதியில் ஒரு பிடிப்பு விழுந்தது. நாற்பது வயதுக்கு மேல் அவர் மீசையை எடுத்து விட்டார். காலை மாலை என்று சந்தி பண்ணினார். சும்மா ஓய்வாய் இருக்கும்போது சுலோகங்கள் முணுமுணுத்தார். அனாமதேயக் கடிதம் பார்த்துக் கோயில்களுக்கு மணியார்டர் அனுப்பினார். ஃபிளாட்டின் நாலாவது மாடியின் ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்து சூரியநமஸ்காரம் பண்ணினார். தமிழ்ப் பஞ்சாங்கம் தருவித்து அமாவாசை பார்த்து இரவுகளில் சாதம் தவிர்த்து டிபன் சாப்பிட்டார். தாராவி போய் கும்பலாய்த் தமிழர்களுடன் பூணூல் போட்டுக் கொண்டார். அவன் ஊரிலிருந்தால் ஒரு சச்சரவுக்குப் பின் அவனும் கூடப் போனான். மந்திரம் தெரியாமல், புரியவும் புரியாமல், அப்பாவுடன் கூடவே உட்கார்ந்து கொண்டு அப்பாவுக்கே தர்ப்பணம் பண்ணும் பிரகிருதிகளைப் பார்த்து அவனுக்கு எரிச்சலாய் இருந்தது.

நம்பிக்கையில்லாமல் உதறப் பயந்து மட்டுமே இப்படி நம்பிக்கைகளைச் சுமந்து திரிகிற அவசியம் என்ன? கடவுள், சாஸ்திரம் என்பதான விஷயங்களில் கேள்விகளையே அனுமதிக்காத அப்பாவிடம் அவன் எதிர்ப்பு, ஆகவே, அதனாலேயே கடுமையாய் இருந்தது. நீங்கள் வெட்கமற்றவர் அப்பா! அலுவலகத்தில் கோட்டும் சூட்டுமாய் வெள்ளைக்காரன் போட்ட டிரஸ்ஸில் திரிகிறவர், மாலை வீட்டில் வேட்டி கட்டி மூக்கைப்பிடித்து மந்திரம் சொல்லி, மரபை மறுகையால், இடது கையால் தாங்குகிறீர்கள்… அட, வயிற்றுக்காக வேறொரு வாழ்க்கை இங்கே நிர்ப்பந்தம் என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்? அதுவும் சம்பளம் வாங்கும் இடத்துக்கான துரோகம் அல்லவா அது? மரபைக் கட்டிக் காத்து வருவதான தனது பாவனைக்குமே துரோகம் அல்லவா? புதிய விஞ்ஞானரீதியான வாழ்க்கை அனுபவிக்கக் கிடைத்தாலும், அதன் வெற்றிகளைச் சுவைத்துக் கொண்டே பழமைரீதியான மரபுரீதியான பாரம்பரியச் சரடைப் பேணுவதில் ஒரு போலியான பாதுகாப்பு கிடைப்பதாய் நம்பும் எளிய ஜன சமுத்திரம்…

நம்பிக்கை என்று எல்லாருக்குமே ஏதாவது தேவைப்படத்தான் செய்கிறது. அதற்காக, செயலூக்கமற்ற காரணமற்ற அசட்டு நம்பிக்கைகள். அவற்றைப் புறக்கணிக்காமல் சிந்தனைக்கு வேலை என்ன? சரி. மமதை அழியுமுகமாய் கடவுள் என்கிற பிம்பம் மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பதாய் ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொண்டாலும் கூட, தன்னைப் பற்றி அறிந்த ஒருவனுக்கு இந்த மமதை முன்னேற்றிவிடும் அம்சம்தானே? அதனை முடக்குவது என்ன நியாயம்? எளிய ஜனங்களுக்கான விதிகளை அவன்மீது திணித்து ஒரு சமூகம் செய்கிற அட்டூழியங்கள்… விமர்சனக் கேலிகள்.

பணம் பிரதானமான இந்த உலகின் சராசரி மனிதரான அப்பாவால் அமெரிக்க மாப்பிள்ளையின் செயல்களை அனுமதிக்க முடிகிறது. அவரது குலக் கொழுந்தான என்னை அனுமதிக்க உள்ளும் புறமும் எரிகிறது. ஆத்திரமடைகிறார். எல்லாத்தையும் விடப்பா! பொய்கள் சாராத என் வாழ்க்கையைப் பார்த்து ஆயாசமடைகிற அப்பாவே! உனது இந்த விஞ்ஞான-லௌகிக ஆற்றில் சேற்றில் வாழ்க்கையின் முரணை நீ அறிவாயா? உனக்காக நான் வருந்துகிறேன் அப்பா! கேள்விகள் மறுக்கப்பட்டவர்கள் நீங்கள். இனி உன்னை வளைப்பதும் நியாயமில்லை. தேவையுமில்லை. நீங்கள் அப்படியே இருங்கள். நான் இப்படியே இருக்கிறேன்…

வண்டி நின்றது. சுவாமிநாத குருக்களுக்கு ஏற்கெனவே கடிதம் வந்திருந்தது. "வாங்கோ" என்றபடி அவர் மாப்பிள்ளையைப் பார்த்துப் புன்னகைத்தார். "பிரயாணம்லாம் சௌரியமா இருந்ததா?" டாக்டர் விஸ்வநாதன் முரளி புன்னகைத்தான். எரிச்சல் வரும்போதெல்லாம் அவன் புன்னகைக்கிறான் என நினைத்துக் கொண்டான் ஸ்ரீதர். உள்ளே போனார்கள். "உக்காருங்கோ" என்று கிழிந்த பாயை விரித்தார். "பரவாயில்லை" என்று முரளி நின்று கொண்டான். "உக்காருடா" என்றார் அப்பா ஸ்ரீதரிடம்.

"காலை அபிஷேகத்துக்கு சாமான்லாம் வாங்கியாச்சு. கறந்த பாலா புதூ பாலா ஒரு லிட்டர் சொல்லீர்க்கு. டாண்ணு நாலு மணிக்கு வந்துருவன். பாயசம் பண்ணி நைவேத்யம் பண்ணிடலாம். நீங்க அலுப்பா இருக்கேளா எப்படி? வரதா இருந்தா வாங்கோ, தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்…" அப்பா "வரோம்" என்றார். "அப்ப சரி, குளத்ல ஸ்நானம் பண்ணி ரெடியாகுங்கோ. நானும் அர்ச்சனைக்கு எடுத்து வெச்சிக்கறேன்…" என்றபடி குருக்கள் மாமியிடம் குற்றேவல்களை ஏவ ஆரம்பித்தார்.

தெரு தாண்டியதுமே குளம் தெரிந்தது. படித்துறையில் படிகள் தாறுமாறாய்க் கிடந்தன. பாசியும் குப்பையுமான தண்ணீர். சோப்பும் கலந்திருக்கலாம். ஓட்டமிருந்தால் தண்ணீர் இத்தனைக்கு நாறாது. அப்பா சட்டையைக் கழற்றினார். வெளுத்த நரைத்த மார்பு முடிகள். "நீங்க?" என்றார் அப்பா மாப்பிள்ளையிடம். "நான் காலைல குளிக்கறேன்." அப்பா “ரைட்” என்றார். "சட்டையக் கழட்டுறா" என்றார் அப்பா ஸ்ரீதரிடம். "குளிச்சிட்டுத்தான் கோவிலுக்குப் போணும்."

"நீங்க போயிட்டு வாங்க, நான் வாசல்லயே நின்னுக்கறேன்." கோவிலுக்குப் போவதுகூட இல்லை, இந்தத் தண்ணீரில் குளிப்பதே அவனுக்குச் சங்கடமான விஷயமாய் இருந்தது. அப்பாவோ விடுவதாய் இல்லை. இருவரும் மாற்றி மாற்றிப் பேசுவதை சுஜாதா குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். "இங்க பாருடா, உம் பிள்ளையை நீ எப்பிடியோ வளத்துக்கோ. இப்ப நீ நான் சொல்றபடி கேளு. அதான் நீ எனக்குக் கொடுக்கற மரியாதையா நான் எடுத்துக்கறேன்."

"இளைஞர்களைச் சாகடிக்கறதே உங்க தலைமுறையோட வேலையா ஆயிட்டது" என்றபடி ஸ்ரீதர் பேன்ட் சட்டையுடன் குளத்தில் முழுக்குப் போட்டான். நீர் ஓட்டமில்லாத, பாசி பிடித்து நாறுகிற பழைய குளம் – அப்பாதான் குளம்!

"ஆச்சா?" என்றபடி குருக்கள் வந்தார். அவர்கள் தவிர அந்தப் பக்கம் நடமாட்டமே இல்லை. இருட்டுக்கே அடங்கிவிடுகிற கிராமம். சின்ன வயதில் அவன் வந்திருக்கிறான் இங்கே. ஒருமுறை அவனுக்கு உடம்பு முடியாமல் கண்ணே திறக்காமல் கிடந்தபோது அம்மா வேண்டிக் கொண்டாளாம். அப்போதைக்கிப்போது மாற்றம் என்று ஒன்றுமில்லை என்பது ஆச்சரியம்தான். இங்கே மட்டும் பூமி சுழல்வதை நிறுத்தி விட்டாற்போல… இந்த ஆலமரம்! இதில் கட்டியிருந்த ஊஞ்சலிலிருந்துதான் சுஜி விழுந்தாள், பாவம்! அவன் பார்த்தபோது சுஜாதா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் – அவளுக்கும் அதே ஞாபகங்கள் பூத்திருக்கலாம்.

லேசாய் ஒளி கசிகிற இருட்டு. பளபளக்கும் கருமை. இரட்டையடிப் பாதை. சில சமயம் காலில் குத்திய நெருஞ்சிகளை எடுத்தெறிந்து விட்டுப் போனார்கள். குருக்கள் அரிக்கேன் விளக்கைக் கொண்டு வந்திருந்தார். அப்பா அதை எடுத்துக் கொண்டு முன்னால் போனார். பின்னால் குருக்கள். அடுத்து விஸ்வநாதன் முரளி சுஜாதாவைக் கட்டி இறுக்கியணைத்தபடி கூட்டிப் போனான். அவளுக்கு வெட்கமாய் இருந்தது. ஸ்ரீதர் புன்னகைத்தபடியே பின்னால் வந்தான். முரளி இயல்பாய் இருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது.

குருக்களுக்கு ரொம்ப நாளுக்கப்புறம் வீடு தேடி ஆள் வந்திருக்கிறது. எப்படியும் செலவெல்லாம் போக லிங்கேஸ்வரன் ஒருமுறை வந்தால் பத்தம்பது ரூபாய் கையில் கொடுத்துவிட்டுப் போவார். ஒரு வாரப் பாடாச்சே! ஊரா இது! இங்க இந்த மாதிரி நம்பிக்கைப்பட்டவா வந்தா உண்டு. காட்டுப்பிரதேசம் – பஸ் வரவே எவ்வளவு காலமாகுமோ? நெய்யூத்திலிருந்து வரதானா குதிரை வண்டி கிடைக்கும். திரும்பிப் போக அப்பக்கூட நடைதான்.

"உங்களத் திரும்ப அழைச்சிண்டு போக வண்டிக்காரன்கிட்டச் சொல்லிட்டேளா?"

"ஓ! சொல்லீர்க்கு. நாளை மதியம் ஒரு பன்னெண்டு மணிக்கு வந்துடுவான்."

சர்ப்ப லிங்கேஸ்வரருக்கு நன்றி செலுத்துமுகமான சிந்தனை பவித்ரங்களுடன், அரிக்கேன் விளக்கால் வழிகாட்டிக் கொண்டே போவதாய்ப் போனார். ஆனால், குருக்கள் சற்று மெதுவாய் நடந்ததால் இடையே இருட்டு அகழி வெட்டியது. ஸ்ரீதர் அப்பா பற்றி நினைத்துக் கொண்டு வந்தான். அப்பா உங்களை நான் அறிவேன்… டாக்டருக்குப் படித்துவிட்டு நோயாளி கையைப் பிடிச்சாலே காசு வாங்கும் உலகில், ஆராய்ச்சி என்று ஏதோ பண்ணிக் கொண்டிருக்கிறான் மாப்பிள்ளை, பிழைக்கத் தெரியாதவன், என நீ கொஞ்ச நாளில் வருத்தப்பட்டுச் சொல்வாய். கல்யாணத்துக்கு முன் அப்பாவியாகவும் நல்லவனாகவும் தோற்றம் தரும் மாப்பிள்ளைகள் கல்யாணத்துக்குப் பின் ஏமாளிகளாயும் இளிச்சவாயர்களாயும் அடையாளங் காணப்படுகிறார்கள்.

பழகாத நடை. இரட்டையடிப் பாதை வளைந்து நெளிந்து பாம்பாய்ப் போனது. யாரும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர் உலகத்துச் சிந்தனைகள். இரவும் புதுக் கல்யாணமுமாய் விஸ்வநாதன் முரளி இளம் மனைவியின் கதகதப்பை அனுபவித்துக் கொணடிருந்தான். ஐ ஐ டி கோல்ட் மெடலிஸ்ட். சுஜாதா. பயமும், சந்தோஷமான படபடப்புமாக கணவனே உலகமாய், அவனுக்குப் பணிவிடை செய்வதே லட்சியமாய், உலகம் சுருங்கிப் போயிருந்தாள். மாமனார் மாமியாருக்கு இந்தியச் சமையல்காரியாய் அவள் போகப் போவதில் அப்பா அம்மாவுக்கு அலாதிப் பெருமை! பிளடி மிடில் கிளாஸ்! அடிமைச் சனங்களடி… அமெரிக்கா என்றால் இப்படி வாயைப் பிளந்துகொண்டு அலைகிறார்கள்.

குருக்கள் பிறகு கடமையுணர்வுடன், கற்பூரத் தட்டில் விழப்போகும் தட்சிணைக்கு வஞ்சகம் செய்யாத கவனத்துடன், சர்ப்ப லிங்கேஸ்வரரின் ஸ்தல புராணத்தைச் சொல்ல ஆரம்பித்தார். இப்போது அப்பா நின்று காத்திருந்து அவர்களோடு சேர்ந்து கொண்டிருந்தார். ஆகா, எப்பேர்ப்பட்ட பிரக்யாதியான ஊர் அது. புண்ணிய பூமி. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். அப்ப இங்கெல்லாம் ஒரே காடு… (இப்ப மட்டும் எப்டி இருக்கு?) காட்டுல சுயம்புவாய் ஒரு லிங்கம். அப்பர் ஸ்வாமிகள் இந்த வழியா வந்திண்டிருக்கார். ஒரே மழை. வானம் கிழிச்சிண்டாப்ல ஊத்தோ ஊத்துனு ஊத்துது. முரளி மனைவியை முத்தமிட விரும்பினான் போலிருந்தது. (நான் வேணா முன்னாடி போயிடட்டுமா?) தரை தெரியல்ல – மழையான மழை. திருநாவுக்கரசர் வந்திண்டிருக்கார். நின்னு லிங்கத்தப் பார்க்கறார். மழையான மழை. சொட்டச் சொட்ட நனைஞ்சிண்டிருந்தது லிங்கம். அப்போ பார்த்து… எங்கேர்ந்தோ ஒரு பாம்பு – நாகப்பாம்பு வந்தது மழைல. என்ன அதிசயண்டாப்பா இது! பாம்பு சரசரன்னு வந்து லிங்கேஸ்வரரைச் சுத்திண்டு மழைல அவர் நனையாம குடை பிடிச்சது, படம் எடுத்து… கேட்கும்போதே அப்பாவுக்கு சிலிர்க்கிறது. ஸ்வாமிகள் பார்த்தார். மெய் சிலிர்த்துப் போச்சு அவருக்கு. ஏன் ஐயா! இந்தக் காட்ல, கொட்ற மழைல நீ கூரையில்லாம இருக்கேன்னு சொல்லாமச் சொல்றியான்னு கன்னத்துல போட்டுண்டார். (ஸ்ரீதருக்கு குருக்கள் கன்னத்தில் அறையவேண்டும் போலிருந்தது!) ராஜாட்டச் சொல்லி உடனே உனக்கு ஒரு கோவில் கட்டிடறேன்னு சங்கல்பம் பண்ணிட்டார்… குருக்கள் சற்று நிறுத்தினார். அவருக்கு மூச்சிரைத்தது. மாப்பிள்ளைக்குக் கதை எப்படி இருந்தது தெரியவில்லை.

இருட்டு கவியத் துவங்கி விட்டிருந்தது. ஆசிரியருக்குத் தெரியாமல் தாமதமாய் வகுப்புக்குள் உள்ளே நுழையும் மாணவன்போல் இருட்டு. பாதை மயங்கியது. கோவில் இன்னும் எவ்வளவு தூரம் தெரியவில்லை. பாம்பு பல்லி கிடந்தால் கூடக் கண்ணில் படுமா, சந்தேகம்தான். குருக்கள் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

லிங்கம்புதூர் பாம்புகள் நிறைந்த ஊர். விஸ்வநாதன் முரளி நின்றான். மேலே நடக்க அவன் திடீரென்று யோசனைப்பட்டாற் போலிருந்தது. வரும் வழியில் புதர்கள் பக்கமிருந்து கேட்ட சிறு சரசரப்புகள் இப்போது கலவரப்படுத்தின அவனை. "எஸ்?" என்றான் ஸ்ரீதர். குருக்கள் திரும்பிப் பார்த்தார். ஆமாம்… இந்த ஊரோட விசேஷமே அதுதான். எத்தனையோ விதவிதப் பாம்பெல்லாம் இங்க உண்டு. ஆனா எந்தப் பாம்பையும் யாரும் பிடிக்கவோ கொல்லவோ கூடாது. ஊர்க் கட்டுப்பாடு… "ஜஸீ" என்றான் முரளி. "அதுபோல…" என்றார் அப்பா. பிறந்த ஊர்ப்பெருமை அவர் குரலில் வழிந்தது. "இந்த ஊர்ல இதுவரை யாருமே பாம்புக்கடி பட்டதில்லை. யாரையுமே அதுங்களும் கடிக்காது…" விஸ்வநாதன் முரளி மனைவி தோளிலிருந்து கையை எடுத்திருந்தான். "யாரும் துன்புறுத்தலன்னா அது ஏன் கடிக்குது?" என்றான் முரளி.

கோவில் தெரிகிற தூரத்திலேயே குருக்கள் "ஈஸ்வரா, ஈஸ்வரா" என்று கூப்பிட்டுக் கைதட்டிக் கொண்டே போனார். பாம்பு எதுவும் வழியில் கிடந்தாலும் ஒதுங்கிப் போய்விடும் – ஒண்ணும் பண்ணாது… அப்பா திரும்பிப் பார்த்தார். மாப்பிள்ளைக்குச் சொல்கிறாரா, ஸ்ரீதருக்குச் சொல்கிறாரா என்று தெரியாத தொனியில் பேசினார். "எதிலயும் நம்பிக்கை வேணுண்டா! நான் பொறந்தது வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்தான்… எனக்குத் தெரிஞ்சி இங்க பாம்பு கடிச்சதுன்னு யாருமே வைத்தியர்கிட்டப் போனதில்ல… என்ன குருக்கள்?" "வாஸ்தவம்" என்றார் குருக்கள். "ஈஸ்வரா! ஈஸ்வரா!" என்று அவர் கைதட்டிக் கொண்டே போனார்.

பாழடைந்த கோவில். காலையிலேயே வந்திருக்கலாம் – கதவு ஒரு நாராச ஒலியுடன் திறந்தது. உள்ளே கும்மிருட்டாய்க் கிடந்தது. அரிக்கேன் விளக்கொளிகூட வெளிச்சத்தைவிட இருட்டைத்தான் அதிகப்படுத்திக் காட்டுவதாக இருந்தது, "படி – பாத்து வாங்கோ. ஈஸ்வரா… ஈஸ்வரா." முன்னைவிட அவர் குரல் இன்னும் சத்தமாய் ஒலித்தது. அந்தக் குரல் கோவிலின் பெரிய வெறுமையில் சுவர்களில் மோதி எதிரொலித்தது. சுஜாதா மனதில் என்ன நினைவுகள் ஓடும் என்று ஸ்ரீதரால் கற்பனை செய்ய முடியவில்லை. குருக்கள் போய் விளக்கேற்றும் வரை அவர்கள் காத்திருந்தார்கள். அப்பா அங்கேயிருந்த கம்பியில் விளக்கை மாட்டினார். "ஈஸ்வரா" என்று கைதட்டியபடி சந்நிதியை குருக்கள் திறந்தார். வலது காலை எடுத்து உள்ளே வைக்கவும் சட்டென்று அவர் காலை இழுத்துக் கொண்டாற் போலிருந்தது. அப்படியே நின்றார் அவர். "என்ன மாமா?" என்றார் அப்பா. "ஒண்ணுமில்ல."

வயதாகிவிட்டது அவருக்கு. கண் சரியாத் தெரியல. கட்டுத் தளர்ந்து விட்டது. பொறந்த ஒண்ணும் பொண்ணாப் போச்சு. ஜீவனோபாயம்னு கோவிலை விட்டால் வேறுவழியில்லை அவருக்கு. சாக்கடைத் தண்ணிக்கு ஏது போக்கிடம்னாப்ல… பார்வை எங்க இருக்கு? எல்லாம் நிழலா பிரமையா இருக்கு. குருக்கள் உள்ளே போய் மாடப்பிறையில் தீப்பெட்டி தேடினார். உள்ள காலெடுத்து வைக்கிறார் – கால்ல ஏதோ வழவழன்னு தட்டுப்பட்டாப்ல… தவளையா பெருச்சாளியா பாம்புதானா… இல்ல வெறும் பிரமையா… விளக்கேற்றும்போது தரைப்பக்கம் கண் தெரியவில்லை. உத்தேசக் கணக்குதான். நடை சாத்தும்போது தவறாமல் ஜலதாரை வழியை ஒரு கல் வைத்து அடைத்துவிட்டுத்தான் போகிறது… அவர் ஜலதாரையைப் பார்த்தார். திறந்திருந்தது. அவரது பயம் அதிகரித்தாற் போலிருந்தது. சே! வீணாக் கலவரப்படறோம். அவன் இருக்கான். அவன் பாத்துப்பான் எல்லாத்தையும்… "அர்ச்சனை யார் பேருக்கு?" என்று சத்தமாய்க் கேட்டார். கூட மனிதர்கள் இருக்கிறார்கள்… தெம்பாய் இருந்தது.

"முரளி. வாதூல கோத்ரம், பரணி நக்ஷத்ரம்."

சத்தமாய் அர்ச்சனையை ஆரம்பித்தார். குரலின் பிசிறு பயத்தினாலா வயதானதினாலா, தெரியவில்லை. அவர் கர்ப்பகிரகத்துக்குள் நுழையும்போது காட்டிய தயக்கம் வேடிக்கையாய் இருந்தது. ‘எதிலும் நம்பிக்கை வேணுண்டா ஸ்ரீதர்’. அப்பா, குருக்கள்ட்ட சொல்லுங்கோ அதை… ஸ்ரீதர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். இனியேனும் பிறத்தியாரைப் பற்றித் தரக் குறைவாய் நினைப்பதை விட்டுவிட வேண்டும். தன் மீதே அவமானமாய் உணர்ந்தான். சுஜாதாவுக்கு பயமாய் இருந்தது போலும். அவள் முரளியைக் கட்டிக் கொண்டாற்போல நெருங்கி நின்றிருந்தாள். இங்க பாம்பு யாரையும் கடிக்காது. நம்பிக்கை வேணும். அப்பர் சுவாமிகள்தானே, ‘மூத்த’ திருநாவுக்கரசைப் பாம்பு கடித்ததென்று சிவன் சந்நிதியில் மடியில் போட்டுக் கொண்டு நியாயம் கேட்டவர். டாக்டர் விஸ்வநாதன் முரளி, பாம்பு திரும்ப வந்து விஷத்தை உறிஞ்சி எடுப்பது சாத்தியமா?… நாதர் முடிமேலிருக்கும் நாகப் பாம்பே… புன்னாகவராளி. நல்ல பாட்டு அது!’

அர்ச்சனைக்குத் தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம் எல்லாம் கொண்டு வந்திருந்தார் குருக்கள். தேங்காயை உள்கல்லில் உடைத்த சத்தம் கேட்டது. கற்பூர ஆரத்தி. சர்ப்பக்குடை. அப்பா கன்னத்தில் படபடவென்று அடித்துக் கொண்டார். குருக்கள் வெளியே வந்து கற்பூரம் காட்டினார். "கற்பூரத்தட்டில் ஏதாவது போடுங்கோ மாப்பிள்ளை!" விஸ்வநாதன் முரளி பர்ஸிலிருந்து எடுத்து நூறு ரூபாய் போட்டான். நூறு ரூபாய்… லிங்கேஸ்வர தரிசனம் அப்பாவுக்குப் பரவசம் தந்தாற்போல் குருக்களுக்கு நூறு ரூபாய் பரவசம் தந்தது.’

கர்ப்பகிரகத்துக்குள்ளிருந்து வியர்த்து வழிந்த உடம்புடன் வெளியே வந்தார் குருக்கள். பணத்தை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு மீண்டும் உள்ளே போனார். வியர்வை நதிபோல் முதுகுநடுப் பள்ளத்தில் பெருக்கெடுத்தோடியது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது கர்ப்பகிரகத்துக்குள் காலடியெடுத்து வைத்த குருக்கள் "ஐயோ" என்று அலறியதையும், நிலை தடுமாறி லிங்கேஸ்வரர் மேல் முட்டிக் கொண்டு மயங்கியதையும் கவனித்து எல்லாரும் ஓடினார்கள். ஸ்ரீதரும் முரளியுமாய் குருக்களைத் தூக்கி வந்தார்கள். "என்னாச்சி?" என்றபடியே அப்பா அரிக்கேன் விளக்கை எடுத்துப் பிடித்தார். முரளி நாடி பார்த்தான். கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னான். "ஒண்ணில்ல, ஏதோ பயந்திருக்கார். அவ்ளதான்…"

ஸ்ரீதர், "இங்க பாருங்க" என்று குருக்கள் பாதத்தைக் காட்டினான்.

ஒரு தேங்காய்ச் சிரட்டை அவரது உள்ளங்காலில் பற்றியிருந்தது. "பாம்பு கடிச்சிட்டதா நெனச்சி பயந்துக்கிட்டாரோ என்னமோ?" ஸ்ரீதர் கடகடவென்று சிரித்தான். முரளி சிரிக்கவில்லை. அவன் யோசனையுடன் திரும்பி மாமனாரைப் பார்த்தான்.

About The Author