இந்தக் குருடன், என் பெண்டாட்டியின் பழைய சிநேகிதன், அவன், இரவை இங்கே கழிக்கிறதாக வந்து கொண்டிருக்கிறான். அவன் சம்சாரம் இறந்து, கனெக்டிகட் நகரத்தில் இருக்கிற அவளது சொந்தக்காரர்களையெல்லாம் அவன் பார்க்க வந்தான். அப்படியே மாமனார் வீட்டில் இருந்து அவன் என் பெண்டாட்டியைக் கூப்பிட்டுப் பேசினான். ஆக அவன் வருகைக்காக வீடு தயாரானது.
ஒரு அஞ்சு மணி நேரப் பயணம், என் பெண்டாட்டி அவனை ரயில்நிலையத்தில் இருந்து கூட்டி வருவாள். சியாட்டில் நகரத்தில் ஒரு கோடைகாலத்தில் அவனிடம் அவள் வேலை பார்த்த பரிச்சயம், அது ஒரு பத்து வருஷம் முன்பு, அதற்குப் பிறகு அவங்க ரெண்டு பேரும் நேரில் சந்தித்துக் கொள்ளவேயில்லை. ஆனாலும் அவர்களுக்குள்ளே கொள்வினை கொடுப்பினை இருந்தது. ஒலிநாடாவில் பேசி இவளும் அவனும் ரெண்டுபேருமே அனுப்புவதும் பெறுவதுமாய் இருந்தார்கள். அவன் வருவதில் நான் ஆர்வப்படவில்லை. எனக்கு அவனை ஆளையே தெரியாது. பார்வை இல்லைன்றதே சிரமம்தான். சினிமாவில்தான் காட்டுறாங்களே, அவர்கள் மந்தகதியில் நடந்து போவார்கள், சிரிக்கவே மாட்டார்கள். சில சமயம் நாய்கள் அவர்களுக்கு வழிகாட்டி கூட்டிப் போகின்றன. ஒரு குருடன் என் வீட்டிற்கு வருவதில் நான் சுவாரஸ்யப்பட ஒண்ணும் இல்லை.
அந்தக் கோடையில் என் பெண்டாட்டிக்கு ஒரு வேலை வேண்டியிருந்திருக்கிறது. கோடை முடிந்ததும் அவள் கல்யாணம் செய்துகொள்ளப் போகிற பையன் ‘அதிகாரி பயிற்சிப் பள்ளி’யில் இருந்தான். அவனிடமும் துட்டுப்பாடு தட்டுப்பாடு தான். என்றாலும் அவள் அவனைக் காதலித்தாள், அவனும் அவளை… இன்ன பிற.
நாளிதழைப் பார்த்தாள் அவள். உதவி தேவை. பார்வையற்றவருக்கு வாசித்துக் காட்ட வேண்டும். கூடவே ஒரு தொலைபேசி எண். அவள் பேசிவிட்டு நேரில் போனாள், அப்பவே வேலையிலும் அமர்ந்தாள். கோடைகாலம் பூராவும் அவனுடன் வேலைசெய்தாள். அவனுடைய வேலைகள்னா, விவரக் குறிப்புகள், விசாரணை அறிக்கைகள், இன்ன பிற. அவனது உள்ளூர் சமூகசேவை அலுவலகத்தை அவள் ஒழித்துச் சீராக்கிக் கொடுத்தாள். அவர்கள் நல்ல நண்பர்களாக ஆகி விட்டார்கள், என் பெண்டாட்டியும் அந்தக் குருடனும்.. அவளது கடைசி வேலைநாளில் அந்தக் குருடன், "உன் முகத்தை நான் ஸ்பரிசிக்கலாமா?" – என்று கேட்டான். அவள. "ம்," என்றாள். என்னிடம் அவள் இதைச் சொன்னாள், தன் விரலால் அவன் அவள் முகத்தின் ஒவ்வோர் அங்கத்தையும், மூக்கு – கழுத்தையும் கூட தீண்டினான்! அவள் அதை மறக்கவேயில்லை. அதைப்பற்றி அவள் ஒரு கவிதைகூட எழுத முயற்சி செய்தாள். எப்பவும் கவிதை எழுத அவள் முயன்றபடி இருந்தாள். வருடா வருடம், பொதுவாக அவளுக்கு முக்கியமாக எதாவது நடந்தால், அதைப்பற்றி ஒன்றோ ரெண்டோ கவிதை கிறுக்குவாள்.
முதன்முதலாக நாங்கள் ரெண்டுபேரும் ஒன்றாய் வெளியே கிளம்பியபோது அவள் அந்தக் கவிதையை எனக்குக் காட்டினாள்… ஸ்பரிச நேரத்தில் அவள் என்ன மாதிரியெல்லாம் நினைத்தாள் என்கிறதையும், தனது நாசியையும் உதடுகளையும் அவன் தொட்டபோது அவள் மனசில் என்ன மாதிரியெல்லாம் எண்ணங்கள் ஓடின என்பதையும் சொல்லியிருந்தாள். அந்தக் கவிதையின் விசேஷம் எதுவும் தங்கவில்லை என் மனதில். என்றாலும் அவளிடம் நான் சொல்லவில்லை. கவிதை ருசி எனக்கு ஒருவேளை பத்தாமல் இருக்கலாம். நான் ஒத்துக்கிறேன், என்னமாச்சும் படிக்க என எடுத்தால் முதல் விருப்பமாக கவிதையை எடுக்கிற ரகம் இல்லை நான்.
அதிருக்கட்டும், இந்தப் பையன், அவளது இதயம் கவர்ந்த அந்த ‘வருங்கால’ அதிகாரி, சின்ன வயசிலிருந்தே அவளுக்கு நெருக்கமானவன் அவன். ம் சரி, நான் என்ன சொல்கிறேனென்றால், அந்தக் குருடனை தன் முகம் தொட அவள் அனுமதித்தாள், விடைபெற்றாள், இளம்பிராயத் தோழனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டாள், இப்போது அவன் தகுதியான அதிகாரி, அவள் சியாட்டில் நகரைவிட்டு வெளிப் போந்தாள். ஆனபோதிலும் அவர்கள் பரிவர்த்தனை தொடர்ந்தது. ஒரு வருடம் கழித்து, அலபாமா நகரின் விமானப்படைத் தளத்தில் இருந்து ஓர் இரவில் அவள் அவனைக் கூப்பிட்டு, அவனுடன் பேச அவள் விரும்பியிருந்தாள், அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவள் வாழ்க்கை பற்றி அவள் பேசி ஒரு ஒலிநாடாவில் பதிவு செய்து அவனுக்கு அனுப்பி வைக்கச் சொன்னான் அவன். இதை அவள் செய்தாள். ஒலிநாடாவை அவள் அனுப்பி வைத்தாள். குருடனிடம் அவள், தான் தன் கணவனை நேசிப்பதாகவும், என்ன வசிக்கும் இடந்தான் கச்சடா என்றும், ராணுவத் தொழிற்சாலையெல்லாம் ஒரு வேலைல சேத்தியா, என்றும் சொன்னாள். தான் ஒரு கவிதை எழுதியிருப்பதையும், அந்தக் குருடன் அதில் வர்றதாயும் சொன்னாள். ஒரு விமானப்படை அதிகாரியின் திருமதியாக இருப்பதுன்னா என்ன, என்பது பற்றியும் அவள் ஒரு கவிதை எழுதி, அந்தக் கவிதையை இன்னமும் முடிக்கவில்லை. குருடனும் ஒரு ஒலிநாடாவைத் தயாரித்தான். அதை அவளுக்கு அனுப்பி வைத்தான். பதில் நாடாவை அவளும்… இப்படி வருடங்கள் நகர்ந்தன. அதிகாரி ஒரு முகாமிலிருந்து அடுத்தது என மாறிக் கொண்டிருந்தான். மூடிமுகாம், மேகுயிர், மேகோனல், கடைசியாக சக்ரமென்டோ பக்கத்தில் திரவிஸ்… என ஒவ்வொரு முகாமிலிருந்தும் அவள் ஒலிநாடாக்கள் அனுப்பிக் கொண்டிருந்தாள். அந்தக்கட்டத்தில்தான் அவள் தனிமையை உணர்ந்தாள், இடம் இடமாக மாறிக்கொண்டே அலைவதில் எத்தனை சிநேகிதங்களை இழக்க வேண்டியிருக்கிறது… இப்படியே இனிமேலும் திரிந்து கொண்டிருக்க ‘ஐய, என்னால் முடியாது…’ உள்ளே போனாள், மருந்து அலமாரியில் இருந்த அத்தனை மாத்திரைகளையும் குளிகைகளையும் வாயில் போட்டுக்கொண்டு ஒரு பாட்டில் ஜின்னுடன் கடகடவென விழுங்கினாள். ஒரு வெந்நீர்க்குளியல், பிறகு நினைவின்றிக் கிடந்தாள்.
ஆனால் சாகவில்லை, சுய நினைவின்றிக் கிடந்தாள். அந்த அதிகாரி – பேர் எதற்கு, இளம் பிராயத் தோழன், வேறென்ன அடையாளம் வேணும் அவனுக்கு?… எங்கேயிருந்தோ வீடு வந்தான், அவள் நிலைமையைப் பார்த்துவிட்டு, ஆம்புலன்ஸை வரவழைத்தான்… காலவட்டத்தில் அத்தனை விவரத்தையும் அவள் ஒலிநாடாவில் பதிவாக்கினாள். இதுமாதிரியான எல்லா விஷயங்களையும் போட்டு உடைத்தாப் போல வருட வருடமாய் அவள் அவனுக்கு அனுப்பி வந்தாள். கவிதை புனைவதற்கு அடுத்தபடியாக, நான் நினைக்கிறேன், இதுதான் அவளது பிரதான பொழுதுபோக்காக இருந்திருக்கிறது.
ஒரு ஒலிநாடாவில் அவள் தன் அதிகாரியைக் கொஞ்சகாலம் பிரிந்து இருந்து பார்க்கப் போவதாகச் சொன்னாள். இன்னொரு ஒலிநாடாவில் தன் விவாகரத்தைப் பற்றிச் சொன்னாள்… அவளும் நானும் வெளியே சேர்ந்தே போய்வர ஆரம்பித்தோம். ம், அந்தக் குருடனிடம் இந்த விஷயத்தையும் அவள் பரிமாறினாள். எல்லாத்தையுமே அவள் அவனிடம் சொன்னாள், அப்படித்தான் தோன்றுகிறது . ஒரு சமயம், அந்தக் குருடனிடமிருந்து வந்த ஒலிநாடாவை நான் கேட்க விரும்புகிறேனா என்று என்னிடம் அவள் கேட்டாள், அதாச்சு ஒரு வருடம் முன்னால். "நீயும் அதில் இருக்கிறாய்," என்றாள் அவள். "ம். கேட்டாப் போச்சு." எங்கள் இருவருக்கும் பானங்கள் எடுத்து வந்தேன். நாங்கள் கூடத்தில் அமர்ந்து கொண்டோம். கேட்கத் தயாரானோம். ஒலிநாடாவை கருவிக்குள் அவள் செருகினாள். இப்படி அப்படி சில திருகி, ஒரு விசையை அமுக்கினாள். ஒரு கீச்சொலிக்குப் பிறகு யாரோ உரத்த குரலில் பேச ஆரம்பித்தான். அவள் சத்தத்தைக் குறைத்தாள். பொதுவான அக்கப்போரான சில சேதிகள், பிறகு அவன் வாய் என் பெயரை உச்சரிப்பதை நான் கேட்டேன். இந்தப் பிரக்ருதி யாரென்றே நான் அறியேன்! – "நீ சொல்றதையெல்லாம் வெச்சிப் பார்க்கறச்ச நான் அந்தாளைப் பத்தி என்ன அபிப்ராயப் படறேன்னா…" அப்பதான் எதோ இடைஞ்சல், யாரோ கதவைத் தட்டினார்கள், அதன்பின் நாங்கள் அந்த ஒலிநாடாப் பக்கம் போகவில்லை. போகாத வரைக்கு ஷேமம். எல்லாம், கேட்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சு போலாகி விட்டது எனக்கு.
இப்ப அதே குருடன் எங்க வீட்டில் இராத்தங்க வருகிறான்!
"எங்கயாச்சும் வெளியே ‘போலிங்’ விளையாட்டு அது இதுன்னு அழைச்சிட்டுப் போய்வரலாம்னு பார்க்கிறேன்." பெண்டாட்டியிடம் நான் சொன்னேன். வெந்த உருளைக்கிழங்குகளைத் தண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் அவள். நறுக்கும் கத்தியைக் கீழே வைத்தபடி திரும்பினாள்.
"…தபார், நீ என்னை நேசிக்கிறதானா…" என்றாள் அவள். "என்மேல உனக்கு பிரியம்னு ஒண்ணு இருந்தா இதை எனக்குச் செய், பிரியம் இல்லாட்டி பரவால்ல. ஆனா, உனக்கு ஒரு சிநேகிதன், யாரானாலும் சரி, நம்ம வீட்டுக்கு வர்றதா இருந்தால், அவனை நான் தாராளமாப் பாத்துக்குவேன்." சிறு துண்டால் கையை அவள் துடைத்துக் கொண்டாள்.
"எந்தக் கபோதி நண்பனும் எனக்கு இல்லை."
"உனக்கு நண்பர்களே இல்லை" என்றாள் அவள். "வாய்ச்சது அப்பிடி, தவிர…" அவள் சொன்னாள். "எல்லாச் சனியனையும் விடு, அவன் மனைவி இப்பதான் இறந்துபோயிருக்கா. புரியுதா? அந்தாள் மனைவியைப் பறிகொடுத்திருக்கிறான்…"
நான் பதில் பேசவில்லை. அந்தக் குருடனின் மனைவி பற்றி அவள் சொன்னாள். அவள் பெயர் பியூலா. அது கருப்பினப் பெயராச்சே.
"அவ நீக்ரோவா?"
"ஒனக்கென்ன பைத்தியமா? நட்டு கிட்டு கழண்டுட்டதா உனக்கு?" ஒரு உருளைக்கிழங்கை அவள் கையில் எடுத்தாள். அது தரையில் மோதுவதை, தொம், அது அடுப்பின் கீழே உருள்வதைப் பார்த்தேன். "என்னாச்சி உனக்கு? தண்ணி போட்டிருக்கியா?"
"சும்மா கேட்டேன்."
ம், அப்புறம் அவள் அவனது மனைவி பற்றிய சேதிகளை, போதும் போதுங்கிற அளவு எனக்குச் சொன்னாள். ஒரு ஜுஸ் கலந்துகொண்டு சமையல்மேஜையில் அமர்ந்தபடி நான் வாய்பார்த்துக் கொண்டிருந்தேன். கதையின் சம்பவங்கள் அந்தந்த இடம்பார்த்து அடைய ஆரம்பித்தன.
என் மனைவி வேலையை விட்டுப் போன அடுத்த கோடையிலிருந்து பியூலா அந்தக் குருடனிடம் வேலைக்கு வந்தாள். ரொம்ப சீக்கிரமாகவே அவனும் அவளும் ஒரு தேவாலயத்தில் கல்யாணம் செய்து கொண்டார்கள். எளிய கல்யாணம்.- ‘ஆமா, ஊர்ல இல்லாத கல்யாணம். இதைப் பாக்கலன்னா என்ன தட்டுக்கெட்டுப் போச்சு’ – அவங்க ரெண்டு பேர், அந்தச் சாமியார், அப்புறம் அவரது சம்சாரம். ஆனால் தேவாலய முறைப்படி எந்த விடுதலும் இல்லாமல் கல்யாணம். ‘பியூலாவின் ஆசை அது’ என்றான் குருடன். அப்பவே பியூலா உள்ளூற புற்றுநோய் கொண்டவளாய் இருந்திருக்கலாம். எட்டுவருடங்களான அவர்களது பிரிக்க முடியா உறவில் – என் பெண்டாட்டியின் அடைமொழி, ‘பிரிக்க முடியா’ – பியூலாவின் உடல்நிலை க்ஷீணமாகிக்கொண்டே வந்தது. ஒரு சியாட்டில் மருத்துவமனை அறையில், கணவன் அவள் படுக்கையருகே கையைப் பற்றியபடி அமர்ந்திருந்த நிலையில் அவள் மேல்-லோகப் பிராப்தி அடைந்தாள். அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்தார்கள், வேலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள், படுக்கையைப் பகிர்ந்து கொண்டார்கள், அவர்களிடையே உடலுறவு இருந்தது, அது நிச்சயம் – அதன்பிறகு அந்தக் குருடன் அவளைப் புதைக்கிற மாதிரி ஆய்ப் போச்சு.
‘இத்தனையும் எப்படி,? அந்தப் பாதகத்தி எப்பிடி இருப்பாள்னு அவனுக்கு கிஞ்சித்தும் தெரியாமலேயே…’ என் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயமாய் இருந்தது அது. இதையெல்லாம் கேட்ட கணம் அந்தக் குருடனிடம் கொஞ்சம் பச்சாதாபம் ஏற்பட்டது எனக்கு. அதன்பின் அந்தப் பெண்ணைப் பற்றி,. எத்தனை பாவப்பட்ட வாழ்க்கையை இவ வாழ்ந்தாள் என்றிருந்தது. யோசித்துப் பார்த்தால், காதலனின் கண்களில் தன்னைப் பார்க்க முடியாத பெண். அவனிடம் இருந்து நோ பாராட்டு. மனைவியின் முகக் குறிப்பை, கவலையோ துயரமோ எதுவானாலும், அவனிடம் நோ ரியாக்ஷன். அவள் அலங்காரம் பண்ணிக் கொள்கிறாளா இல்லையா, அவனுக்கு நோ பாதரேஷன். அவள் நினைத்தால், ஒரு கண்ணுக்கு மாத்திரம் பச்சை ருஜ், மூக்கில் ஒரு குண்டூசி, மஞ்சள் சராய்க்கு பழுப்பு காலணி என்று கன்னாபின்னான்னு மாட்டிக்கலாம்… அவன் கண்டுக்கப்போறது இல்லை. அப்படியே குருடனின் கையைத் தன்கைமேல் வாங்கியபடி, செத்துப் போகலாம், அந்தக் குருட்டுக் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக, இப்ப எனக்குத் தோணுது, அவ என்ன நினைச்சிருப்பாள் – நான் எப்பிடி இருப்பேன்னே கடைசிவரை இந்த பிரம்மஹத்திக்குத் தெரியாது… அதற்கப்புறம் வேகமாய்க் கல்லறைப் பயணம். ராபர்டிடம் மிச்சமாக சிறு தொகைக்கான காப்பீட்டுப் பத்திரம், அத்தோடு இருபது-பெசோ மெக்சிகன் நாணயத்தின் பாதி. மற்ற பாதிதான் அவளோடு சவப்பெட்டிக்குள்ள போயாச்சே. ஐயோ பாவம்!.
நேரம் நெருங்கி வந்தது. என் மனைவி அவனை அழைத்து வர நிலையம் போனாள். எனக்கானால் வேலையில்லை, காத்திருப்பதைத் தவிர-. ஆமாம், நேரம் போகாமல் நிசமாய் நான் அவனைத் திட்டினேன் – நான் ஒரு பானத்தை அருந்தியபடியே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். கார் வாசல் வளாகத்தில் இரைந்தது. கையில் பானத்துடன் சோபாவிலிருந்து எழுந்து ஜன்னலுக்குப் போனேன்.
காரை நிறுத்திய என் மனைவி முகத்தில் பளீர் இளிப்பு. அவள் காருக்கு வெளியே வந்ததையும் கதவைச் சாத்தியதையும் பார்த்தேன். வாய் கிழிஞ்சிறப் போவுது. இவளுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுது, ஆச்சர்யம்! அந்தக் குருடன் காரிலிருந்து வெளியே வருகிறான், இவள் இறங்கி அந்தப் பக்கமாய்ப் போகிறாள், குருடன், ‘இங்க பார்றா, முழுசாய்த் தாடி வைத்திருந்தான்!’ வெ.மா.ப. குஞ்சலம்! குருடன் பின்இருக்கைக்குப் போய் ஒரு பெட்டியை வெளியிழுத்தான். கார்க் கதவைச் சாத்தியபடி என் பெண்டாட்டி அவனைக் கைத்தாங்கலாக பாதையில், விடாமல் தொணதொணத்தபடி அழைத்து வந்தாள். அப்படியே வராண்டாப் படிகளில் ஏற உதவினாள். நான் தொலைக்காட்சியை அணைத்தேன். பானத்தைக் குடித்து, முடித்து, கைகழுவி, துடைத்துக் கொண்டேன். பிறகு வாசலுக்குப் போனேன்.
அவள் சொன்னாள். "நீ ராபர்ட்டைச் சந்திக்க வேண்டும். ராபர்ட், இது என் வீட்டுக்காரர். இவரைப் பத்தி எல்லாத்தையும் உன்கிட்ட நான் சொல்லியிருக்கேன்." அவள் பிரகாசமாய் இருந்தாள். அந்தக் குருடனின் மேல்கோட்டைப் பற்றியபடி இருந்தாள் அவள்.
குருடன் சூட்கேஸை விட்டுவிட்டு கையை மேலே தூக்கி நீட்டினான்.
அதைப் பற்றிக் கொண்டேன். என் கையை அழுத்தினான் அவன். சிறிது நேரம் தன்னிடம் வைத்துக் கொண்டிருந்து விட்டு திரும்ப விட்டான்.
"நாம ஏற்கனவே சந்திச்சிருக்காப்ல நெருக்கமாய் உணர்கிறேன்" அவன் சத்தமாய்ச் சொன்னான்.
-தொடரும்..