வேண்டும்! (3)

பாரதிதாசன் தொடர்கிறார்…

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்கு புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும் – என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்.

மீனுக்குப் பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப் புலி வேண்டும் – என்
கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும்!

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்குத் தேன் வேண்டும்
தோலுக்குப் பூமாலை வேண்டும் – அடி தோகையே நீ எனக்கு வேண்டும்!

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும் -அடி
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்.

அவருக்குத் தமிழ் மகளே வேண்டுமாம்!

காதலனொருவன் கேட்கிறான்:

சாதிகள் வீழ்ந்திட வேண்டும் – பெண்ணே
தமிழினமோ வாழ்ந்திட வேண்டும்
மாதொருத்தி வேண்டும் எனக்கும் -தமிழ்
மகளாயிருந்தால் தான் இனிக்கும்.

தமிழ், உடல் உயிர் இவையாண்டும் -ஒரு
தமிழ் மகளாய்ப் பிறந்திட வேண்டும்
…………………

தமிழனுக்குச் சிறப்பு எப்படி வரவேண்டுமாம்?

சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்

என்பார்!

"உலகின் அமைதியைக் கெடுக்காதே!" என்ற கவிதையில் கூறுவார் சீனக்காரனுக்கு:

நன்றாக நீ திருந்த வேண்டும்
ஞாலம் உன்னை மதிக்க வேண்டும்
ஒன்றாய்ச்சேர்ந்து வாழ வேண்டும்
ஒழுக்கம் கெட்டால் என்ன வேண்டும்?

இந்த அறிவுரை அனைவருக்கும் பொதுவன்றோ!

இன்னும் சற்று பின்னர் வந்து இக்காலக் கவிஞர்கள் என்ன வேண்டுகின்றனர் என்று நோக்குவோமே!

புலவர் நீல. பகவன் குழந்தைகளுக்கு கருணை நெஞ்சில் வேண்டும் என வலியுறுத்தி

"எல்ல உயிரும் உறவாக
எண்ண வேண்டும் எல்லொரும்
பொல்லா எண்ணங் கொண்டேதான்
புவியில் வாழ வேண்டாவே
கல்வி கற்ற நாமெல்லாம்
கருணை நெஞ்சில் கொள்வதுதான்
நல்லோர் கூறிய நெறியெனவே
நாளும் போற்றி வாழ்வோமே!"

எனக் கூறுகிறார்.

கவிஞர் முத்து. இராமமூர்த்தி அவர்கள் அவருக்கே உரிய பாணியில் ஒரு குடைக்கீழ் உலகம் வரவேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு ஒரு படியாய் அவர் வேண்டுவது

"உள்ளங்கள் ஒன்ற வேண்டின்
உறவெனும் பாலம் வேண்டும்"

என்பார்.

வேலையில்லாப் பிணி நாட்டை வாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வேதனையுற்று வேண்டுவார்:

கருவில் பெற்ற திறனோடு
கல்வி ஆற்றல் அனுபவங்கள்
மருவில் நாட்டம் இவையறிந்து
பணிகள் செய்யும் நிலை வேண்டும்!

இந்தியா சொர்க்கமாக வேண்டுமென்றால்,

‘திசைகளின் எல்லைக் கோட்டைத்
தேடிநாம் அழித்தல் வேண்டும்’

என்று கூறுவார்.

‘கிராமப் புற வறுமை’ விலகும் என்ற தலைப்பில் கவிதை படைத்தார். அதில்

"பெற்றிட்ட விடுதலையின்
பெருமையினை நாம் உணர்ந்து
உற்றிங்கே கவனித்து
உயர் வாழ்வு தர வேண்டும்"

எனக் கூறுவார்.

கவிஞர்களை வேண்டுவர் இளந்தலைமுறைக் கவிஞர் மீ. உமாமகேச்வரி அவர்கள்

சிந்தனையில் பிறந்த
நம் சீரிய கவிதைகள்
ஒருவரையாவது
சீர்திருத்த வேண்டாமா?

என்று கேட்பார்.

தமிழே! உன்னை வாழ்த்தவும் வேண்டுமோ எனக்கேட்டு அவர் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துவார்:

காலம் காலமாய்
கவிஞர்கள்
சொல்லி வருகின்ற
பொய்யுரைகளை
நானும் உனக்கு
சொல்ல வேண்டுமோ?

என்று!

மற்றொரு இன்றைய கவிஞர் நந்தா சொல்லுவார்:

"சொல்ல வேண்டும்
கவிதை – சொன்னதும்
மனசு அங்கே
துள்ளவேண்டும்"

என்று!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வேண்டுவதைப் பார்த்த பின்னர், இகட்டுரையை முடிப்பது சாலப் பொருந்தும்!

‘வேறென்ன வேண்டும்’ என்ற தலைப்பில் அவர் வேண்டுவன:

எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்
எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும்
பெண்ணென்றால் தாயென்று பார்க்க வேண்டும்
பெரியோரை அறிகின்ற பெற்றி வேண்டும்
வண்ணங்கள் தெரியாத பார்வை வேன்டும்
வயதுக்குச் சரியானவாழ்க்கை வேண்டும்
கண்ணீரில் சுகங்காணும் ஞானம் வேண்டும்
காமத்தைக் கடந்தேறும்யோகம் வேண்டும்!

சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும்
சொன்னால்தான் சாகின்ற தேகம் வேண்டும்
கண்ணோடு வாய்மைத் தீ கனல வேண்டும்
கருதுவதை உரைக்கின்ற வன்மை வேண்டும்
பண்கொண்ட இசைப்பாடல் பயில வேண்டும்
பறவைகளுக் கிருக்கின்ற சிறகு வேண்டும்
நன்மைகளைச் சுரண்டாத நட்பு வேண்டும்
நாளைக்குக் கலங்காத செல்வம் வேண்டும்!

ஆகாயம் இடிந்தாலும் ரசிக்க வேண்டும்
அழுதாலும் புல்லின் வேர் நனையவேண்டும்
ஏகாந்தம் நம்மோடு வசிக்கவேண்டும்
எப்போதும் சிரிக்கின்ற உதடு வேண்டும்
வேகாத உணவுண்ணப் பழக வேண்டும்
வெறுந்தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும்
போகாத ஊர் கூடப் போக வேண்டும்
பொறி ஐந்தும் அறிவாலே நிரம்ப வேண்டும்!

மலரோடு(ம்) ஆராய்ச்சி நடத்த வேண்டும்
மழை பாடும் சங்கீதம் ருசிக்க வேண்டும்
சிலரோடு கவிதைகளைத் துய்க்கவேண்டும்
சிந்தனையைக் காற்றாகப் பரப்ப வேண்டும்
நிலவோடு நதி நீரில் குளிக்க வேண்டும்
நித்திரையைக் கலைக்காத கனவு வேண்டும்
பலரோடும் ஒன்றாகப் பழக வேண்டும்
பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்!

தெய்வத்தைத் தேடாத ஞானம் வேண்டும்
தெய்வங்கள் நாமென்று தெளிய வேண்டும்
பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
போராடி வெல்கின்ற புலமை வேண்டும்
கையிரண்டும் உழைக்கத்தான் கவனம் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்
மெய்யிந்த வாழ்வென்று நம்ப வேண்டும்
மேகம் போல் பொழிந்து விட்டுக் கலைய வேண்டும்!

எவ்வளவு சிறப்பாக நமக்கு வேண்டியவைகளை கவிப் பேரரசு தனது கவிதையில் எடுத்துரைக்கின்றார்! அவரது கவித்திறத்திற்கு ஒப்பாரும் மிக்காரும் உள்ளனரோ இன்று!

நல்ல கவிதைகள் எழுதி வாழ வேண்டுமாம்; அப்படி வாழ்ந்து விட்டுச் சாக வேண்டுமாம்!

"முத்துரதம் போலதினம் மோகவெறி தூண்டும்
தத்தையர்கள் என்னருகில் தாவி வர வேண்டும்
பத்து விரல் தொட்டு மனம் பாட்டெழுத மீண்டும்
அத்தைமகள் போல பல கொத்துமலர் வேண்டும்!"

வள்ளுவர் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் கவிஞர்கள் எப்படியெல்லாம், என்ன என்னெல்லாம் வேண்டியுள்ளனர் என்று மனங்குளிரப் பார்த்தோம்!

இவை அத்தனையும் பெறுவதற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, வள்ளுவன் வழியில் வாழக் கற்றுக்கொண்டு வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தால் தவறாது நாம் ஒவ்வொருவருமே வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

About The Author