வேட்டைக்காரன் – இசை விமர்சனம்

ஐம்பதாவது திரைப்படத்தை நோக்கி வீரநடை போடும் விஜய் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படத் தலைப்புடன் அடுத்த பட ரிலீஸுக்குத் தயாராகி வருகிறார். படத்தின் இயக்குனர், தரணியிடம் பணிபுரிந்த பாபு சிவன். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத, கேட்டிராத கதை இருக்கும் என்று சொல்கிறார். கிராமத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதன் நகரத்திற்கு வந்து அங்கு நடக்கும் அநீதிகளை எதிர்ப்பானாம். கேட்டிராத கதைதான் – நடத்துங்கள், நடத்துங்கள்!! விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க, பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் விஜய் ஆண்டனி. விஜய்-விஜய் கூட்டணியின் பாடல்கள் எப்படி அமைந்துள்ளன என்று பார்ப்போமே!

புலி உருமுது

வார்த்தைகள் இன்னதென்று புரியாமலே ஆரம்பிக்கிறது வேட்டைக்காரனின் இசைத்தட்டு. பாட்டைச் சற்றே ஓட்டி புரியும் வரிகளுக்கு வந்து விடுவோம். கபிலன் எழுதியிருக்கும் வரிகளை அனந்துவும், மஹேஷ் விநாயக்ராமும் பாடியிருக்கிறார்கள். எதைப் பற்றிய பாடல்? இப்படி எல்லாம் கேட்டால், உங்களுக்கே அழகா? நம் ஹீரோவின் அறிமுகப் பாடல்தான். வழக்கமான "இவர் பெரிய ஆளு" என்ற கதையைத்தான் இப்பாடலும் சொல்கிறது, அதிரவைக்கும் பீட்ஸோடு! விஜய் நடித்த படத்தின் இசைத் தட்டில் பாடலொன்று அனைத்துத் தரப்பு ரசிகர்களும் மெச்சும்படி அமைந்தது 2003ல்தான். திருமலை படத்தில் வந்தது போல இன்னும் ஒரு பாடல் "அழகூரில் பூக்காதா?"

சின்னத் தாமரை

அடுத்து வருவது ஒரு காதல் டூயட். விவேகா வரிகளை எழுத, க்ருஷ்ஷும் சுசித்ராவும் பாடியிருக்கிறார்கள். அழகான வயலின்களின் தோரணையோடு பாடல் ஆரம்பித்தாலும், அதற்குப் பிறகு (புரியாத) ஆங்கில ராப், வழக்கமான பீட்ஸ் என்று பாடல் தடம் மாறிவிடுகிறது. விளைவு – ஏற்கனவே இது போல் நிறை பாடல்களைக் கேட்டுவிட்டதால் சலிப்புதான் ஏற்படுகிறது. பாடலை முழுதாகக் கேட்க வைப்பது தாளம் போட வைக்கும் பீட்ஸும், சுசித்ராவின் குரலும்தான் – அத்தனை அழகாய் பொருந்தியிருக்கின்றது அவரது குரல்! அதனினும் அழகாக அம்மணி பாடியிருக்கிறார்.

நான் அடிச்சா

"நான் அடிச்சா தாங்கமாட்ட! நாலு மாசம் தூங்கமாட்ட! மோதிப் பாரு. வீடு போயி சேரமாட்ட!!" – இப்படி ஒரு பாடல். அதற்குப் பிறகு வாத்தியார் பாணியில் , "வம்பு பண்ணா, வாளை எடு, வணங்கி நின்னா, தோளைத் தொடு!" இந்த அருமையான பாடலை எழுதியிருப்பது கபிலன், பாடியிருப்பவர் ஷங்கர் மஹாதேவன். ஆங்காங்கே அரசியல் வேறு, மனிதர் அரசியலில் குதிக்கும் நாள் தொலைவில் இல்லை போலும்! விஜய் திரைப்படம் என்றால் பாடல்கள் இப்படித்தான் அமைய வேண்டும் என்ற வரையறைக்குள்ளேயே பாடுபட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. பாவம்!

கரிகாலன்

மீண்டும் ஒரு காதல் பாடல் – கிராமத்திய நடையில் அழகாகவே அமைத்திருக்கிறார் விஜய். ஆங்காங்கு ராப்பையும் சேர்த்து அதையும் "நன்னானே நன்னானே" என்று மிக்ஸ் செய்தது அருமை. கபிலனின் வரிகளை சுர்சித்தும் சங்கீதா ராஜேஷ்வரனும் கச்சிதமாக பாடியிருக்கிறார்கள். அம்மணி ஆங்காங்கே செய்யும் வளைவுகளும், சில்மிஷங்களும் அற்புதம் – பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இசைத்தட்டின் சிறந்த பாடல் – மற்றவைக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது!!

உச்சி மண்டை

மீண்டும் ஒரு வழக்கமான விஜய் பாடல். நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் படுத்தும்பாட்டைச் சொல்கின்றார்கள். அண்ணாமலையின் வரிகள் ஆங்காங்கே நன்றாகவும், ஆங்காங்கே அபத்தமாகவும் இருக்கின்றன. இப்பாடலைப் பாடியிருப்போர் க்ருஷ்ணா ஐயர், சாருலதா மணி மற்றும் சக்தி ஸ்ரீ. இவர்கள் போதாது என்று ஷோபா வேறு – விஜய்யின் அன்னை, ஷோபா சந்திரசேகர். மீண்டும் மீண்டும் கேட்டு சலித்து விட்ட பீட்ஸ். போதும் – பாட்டை நிறுத்தி விடுவோம்.

முன்பே சொல்லியிருந்தது போல, விஜய் ஆண்டனி நடிகர் விஜய்யின் "இமேஜை" (அப்படி ஒன்று இருக்கின்றதா என்று கேட்க வேண்டாம்!) முன்னிட்டு, தனக்குள் ஒரு வட்டமிட்டுக் கொண்டு, அனைத்துப் பாடல்களையும் அமைத்திருக்கிறார். அநேக பாடல்களைப் பாதி கேட்டவுடன் சலித்து விடுகின்றது, ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்யத் தோன்றுகின்றது. "கரிகாலன்" மட்டும் பரவாயில்லை – ஏதோ வித்தியாசமாக இருக்கின்றது. மற்றவை எல்லாம் நேர விரயமே! படம் சுமாராகவாவது இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!

About The Author

1 Comment

  1. suga

    வியஜின் இமெஜை விமர்சிக்க நீர் யார்? உமக்கு ஒரு இமெஜ் இருக்கா?

Comments are closed.