(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன்)
வாழ்வில் எது முக்கியம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
யாராவது புதிய மனிதர்களை எங்காவது சந்தித்தோமானால் முதலில் நமது பெயரைக் கேட்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்கள்?
"என்ன செய்கிறீர்கள்? எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என்பதைத்தான்.
‘என்ன வேலை செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம்’ என்பதிலிருந்து நம்மைப் பற்றி ஒரு அனுமானத்திற்கு வர முயல்கிறார்கள். நாம் செய்யும் வேலை – தொழில் – நம்மை அடையாளம் காட்டுகிறது.
ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள். எனவே "வாழ்வில் எது முக்கியம்" என்று நூற்றுக்கணக்கான பேரை சர்வே செய்தபோது, "தொழில் தான் முக்கியம்" என்றார்கள்.
நீங்கள் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள்.. "நான் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறேன்!" என்று. அல்லது நான் "கட்சியில் இருக்கிறேன்" என்று. அது ஒரு தொழிலா என்று கொஞ்சம் நீங்களே யோசித்துப் பாருங்கள்!
எப்படி நல்ல வேலையைப் பெறலாம்? நல்ல தொழிலில் இறங்கலாம்?
நல்ல படிப்பு வேண்டும். எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். ஊர் உலக வரலாறு தெரிய வேண்டும். நமது ஊர், நமது மாவட்டம், மாநிலம், நாடு, உலகம் என்று உலகியல் தெரிய வேண்டும். அறிவியல் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட கல்வியை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோமோ, அவ்வளவு நாம் எடுக்கும் வேலையைத் திறமையுடன் செய்ய முடியும். படிப்புக்கேற்றபடி சம்பளம் கிடைக்கிறது.
இந்தியா முன்னேறும்
இந்தியா முன்னேறும் என்று சொல்பவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். அதாவது இந்தியர்கள் தங்கள் குழந்தைகளைப் "படி படி" என்று சொல்லி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் இன்று அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, அவர்கள் குழந்தைகள் பெரிய ஆபிசராகவோ, கலெக்டராகவோ, விஞ்ஞானியாகவோ நாளை ஆவார்கள். இந்தியா முன்னேறிவிடும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
பள்ளிப் படிப்பு என்பது ஒன்றும் கஷ்டமானதல்ல. கோடிக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் செய்கிற வேலையைத்தான் நாமும் செய்கிறோம். அப்படியே படிப்பு வராவிட்டாலும் குறைந்தது எழுதப் படிக்கவாவது நமக்குத் தெரிய வேண்டும். அன்றாடப் பத்திரிகையைப் படிக்கிற அளவுக்கு – பிறருக்கு ஒரு கடிதம் எழுதுகிற அளவுக்கு நமக்கு படிப்பு தேவை. பத்திரிகை படிக்கும்போது நாம் உலக ஞானம் பெறுகிறோம். ஊர் உலகம் இப்படிப் போகிறது என்று தெரிந்துகொள்ளும்போது நாமும் பயப்படாமல் இறங்கி பிழைத்துக்கொள்ள முடியும். இன்று இருக்கும் பெரிய தொழிலதிபர்கள் சிலர் அதிகம் படிக்காதவர்கள்தான். ஆனால், எதையும் சமாளிக்கும் உலக ஞானம் அவர்களிடம் நிறைய உண்டு.
அவர்கள் எல்லாம் வாழ்வில் ஒரு குறிக்கோளை, "நான் பெரிய பணக்காரனாக ஆகப் போகிறேன், நான் பெரிய கலெக்டராக ஆகப் போகிறேன்; பெரிய கம்பெனி வைத்து நடத்தப் போகிறேன்" என்று சின்ன வயதிலேயே ஆசைப்பட்டவர்கள்.
அவர்கள் சினிமா மோகத்திலோ, பெண்ணாசையிலோ, கள்ளச் சாராயம் காய்ச்சுவதிலோ, குடிப்பதிலோ இறங்குவதில்லை.
அவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று தெரியும். கண்ணுக்குப் பட்டை போட்ட குதிரை எப்படி நேர் சாலையைப் பார்த்துக் கொண்டு ஓடுகிறதோ அதைப் போல கண்ணுங் கருத்துமாக தங்கள் தொழிலில், தாங்கள் முன்னுக்கு வருவதில்தான், கவனம் செலுத்துவார்கள்.
ரசிகர் மன்றங்கள்
நமது நாட்டில் – தமிழ் நாட்டில்தான் – சினிமா ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட இதெல்லாம் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதெல்லாம் இல்லை; சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் "ஆகா.. ஓகோ!" என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் இளைஞர்கள் இங்குதான் ஏராளம். தான் காதல் கொண்ட நடிகர், நடிகை நடித்த முதல் காட்சிக்கு அவர் படத்தின் முன் தூப தீப ஆராதனை எல்லாம் செய்கிறார்கள். ஒரு நாலு ஊரில் ஒரு ரசிகர் மன்றம் இருந்தால்கூட, "அகில உலக" ரசிகர் மன்றம் என்று பெயர் வைப்பார்கள்!
தங்கள் நேரத்தை, பணத்தை, உழைப்பை எல்லாம் இந்த ரசிகர் மன்றத்துக்கு வீணடிப்பார்கள். பிற நாடுகளில் இப்படி இருக்கிறதா? இல்லை! இல்லவே இல்லை!!
அங்கெல்லாம் அவர்களுக்கு அவர்கள் தொழில்தான் முக்கியம். அவர்கள் குடும்பம் மனைவி மக்கள்தான் முக்கியம். வீட்டில் சினிமாக்காரர்கள் படமோ, அரசியல் தலைவர்கள் படமோ மாட்டப்பட்டிருக்காது. மாறாக குடும்பப் படம், அவர்களை வளர்த்த அவர்களின் பெற்றோர் படம் இவைதான் இருக்கும்.
சினிமா நடிகர் என்பவர் பஸ் டிரைவரைப் போல, ஓட்டல் சர்வரைப் போல ஒரு தொழில் செய்கிறார், அவ்வளவுதான். ஒரு ஓட்டல் சர்வர் பிரமாதமாக நல்ல காப்பி போட்டுத் தருகிறார் என்று நாம் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்க முடியுமா? ஒரு பஸ் டிரைவர் மிக நன்றாக ஓட்டுகிறார் என்பதற்காக ஒவ்வொரு முறை பஸ் புறப்படும்போது அவருக்கு மாலை போட்டு தீபம் காட்டி அவரை வழி அனுப்புகிறோமா?
செய்வதில்லை!
அதுபோலத்தான் ஒரு நடிகரும் சரி, அரசியல்வாதியும் சரி. அவர்கள், அவர்கள் வேலையை – தொழிலைச் செய்கிறார்கள். நாம் நம் தொழிலில் கவனம் செலுத்தினால்தான் நாம் பிழைக்க முடியும்; நமக்கு சாப்பாடு கிடைக்கும்!
(தொடரும்)“
மிகவும் பயனுள்ள கட்டுரை
எம் .எஸ். உதயமூர்த்தி அவர்களின் புத்தகங்களை நான் நிறைய படித்துள்ளேன். அவரின் படைப்புக்கள் நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள கூடியவை.,மட்டுமிலலை மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களாகும்.
This story is very intersting thanks to mr.uthayamoorthy. this story is very useful to youth.
மிகவும் பயனுள்ள கட்டுர
sinthika vithathu inraya nilali nalla pakkam partha thirupthi
m.s.uthayamoorthy avl vizipu unaru natin pokisam(ilaizargaluku)