வெப்ஸ்டரின் அறிவுரை: மொழிப்புலமை பெறுங்கள்!
வார்த்தைகளைப் பற்றிய அழகான கவிதை
மனிதனுக்கு மனிதன் தகவலைப் பரிமாறுவது வார்த்தைகள் மூலமாகத்தான். ஒரு சொல் ஆக்கும்; ஒரு சொல் அழிக்கும். ஒரு சொல் உயர்த்தும்; ஒரு சொல் தாழ்த்தும். சொற்களைப் பற்றிய அழகான ஆங்கிலக் கவிதை ஒன்றைப் பெண்மணி லெடிஷியா எலிஸபத் லாண்டன் (Letitia Elizabeth Landon) எழுதியுள்ளார். L.E.I அல்லது திருமதி.மக்லீன் என்ற பெயரால் அறியப்படும் அந்தக் கவிஞரின் ‘The Power of Words’ என்னும் அழகிய கவிதை இதுதான்:
Tis a strange mystery, the power of words!
Life is in them, and death. A word can send
The crimson colour hurrying to the cheek.
Hurrying with many meanings, or can turn
The current cold and deadly to the heart.
Anger and fear are in them; grief and joy
Are on their sound; yet slight, impalpable –
A word is but a breath of passing air.
விருத்திராசுரன் வரலாறு
ஒரு சொல் ஆக்கும், ஒரு சொல் அழிக்கும் என்பதைப் புராண, இதிஹாஸங்களும் அழகுற விளக்குகின்றன. தேவர்களைப் படாத பாடுபடுத்தி வந்தான் விருத்திராசுரன். அவனது தந்தை த்வஷ்டா இந்திரனை அழிக்கும் ஒரு மகன் வேண்டும் என்று ‘இந்த்ர சத்ரு’ என்று கூறி வரம் வேண்டினான். ஆனால், அந்த வார்த்தையைச் சரியாக உச்சரிக்காமல் மாற்றி உச்சரித்ததால் ‘இந்திரனுக்கு எதிரியாக இருக்கும் மகன்’ என்கிற அர்த்தம் மாறி ‘இந்திரனால் அழிக்கப்படும் மகன்’ என்று ஆனது. அவன் இந்திரனால் அழிந்துபட்டான். ஒரு வார்த்தையின் தவறான உச்சரிப்பே ஒரு அசுரன் அழியக் காரணமானது.
நித்தியத்துவமும் நித்திரைத்வமும்
‘நித்தியத்துவம்’ என்று சாகா வரம் பெறத் தவம் இருந்த கும்பகர்ணன், வாய் தவறி ‘நித்திரைத்வம்’ வேண்டுமென்று கேட்டான். கேட்ட வரம் கிடைத்தது. விழிப்பின்றித் தூங்க ஆரம்பித்தான். வார்த்தை விபரீதமாக மாறிப் போனதை அறிந்த அவன் ஆறு மாத காலம் விழிப்பு, ஆறு மாத கால உறக்கம் என்று வரத்தில் திருத்தம் பெற்றாலும் அதனால் தன் வாழ்க்கையையே அவன் மாய்த்துக் கொண்டதை நாம் மறக்க முடியாது.
வெப்ஸ்டரின் அகராதி
சொல்லைச் சரியானபடி ஆள மொழிப் புலமை வேண்டும். உச்சரிப்பைச் சரியானபடி எடுத்துரைக்க வேண்டுமென்று ஆங்கில அகராதியை அமைத்த வெப்ஸ்டர் படாத பாடு பட்டார். 70,000 சொற்களுடன் அவர் தொகுத்த அகராதியில் 12,000 சொற்கள் புதிதாக இருந்தன. ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து அறிந்து புலமை பெற்று, அதை எப்படி உச்சரிப்பது என்பதையும் அறிந்து அவர் அகராதியை அமைத்தார். உச்சரிப்புக்கென அவர் பல புத்தகங்களையும் படைத்தார். "மொழிப்புலமை பெறுங்கள்" என்பதே அவரது அறிவுரை.
ஒரு சிறிய கமா
நாத்திகன் ஒருவன் அருளாளர் ஒருவரை அணுகி, அவரைக் கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் GOD IS NOWHERE என்று எழுதிக் காட்டினான். அவர் அந்த வார்த்தைகளில் ஒரு கமாவைப் போட்டுத் திருப்பிக் காட்டினார். அது GOD IS NOW,HERE என்று ஆகி இருந்தது. கடவுள் அவனிடமே இருப்பதை அந்த அருளாளர் உணர்த்தினார்.
அறிஞர் ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்று கைத்தடியுடன் வந்த ஒருவன், அவரை நோக்கி "இந்தக் கைத்தடியின் முனையில் இருப்பவன் முட்டாள்" என்று கேலியாகக் கூறினான். புன்னைகையுடன் அவர், "எந்த முனையில்?" என்று கேட்டார்.
வார்த்தைகள் சரியானபடி பயன்படுத்தப்படும்போது அபார வலிமை படைத்தவையாக ஆகின்றன.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்
The Magic of Thinking Big என்ற அருமையான புத்தகத்தை எழுதியுள்ள டேவிட் ஜே.ஷ்வார்ட்ஸ் (David J. Schwartz) கூறுவதைப் பார்ப்போம்:
"Use the big thinker’s vocabulary. Use big, bright, cheerful words. Use words that promise victory, hope, happiness, pleasure, avoid words that create unpleasant images of failure, defeat, grief"
வள்ளுவர், திருக்குறளில் "சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்" என்று கூறுவதோடு, வெல்ல முடியாமல் இருக்கும்படியான சொல்லை ஆள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
– குறள் 200
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
– குறள் 645
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பாக்கியவான்கள். அது ஏன் என்பதற்கான காரணத்தைத் தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு போன்ற பல மொழிகளை அறிந்த மகாகவி பாரதியார் கூறியுள்ளார் இப்படி:
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா!"
(‘ஓடி விளையாடு பாப்பா’ பாடல்)
வெற்றிகரமான வாழ்க்கையை அமைக்க உதவும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைக் கொண்ட செம்மொழி தமிழ். அதைக் கற்பதோடு தொழில்நுட்ப மொழியாக இன்று விளங்கும் ஆங்கிலத்தையும், பாரதப் பண்பாட்டின் மொழியாகத் திகழும் சம்ஸ்கிருதத்தையும் வெற்றியை விழைவோர் நன்கு பயிலல் வேண்டும்.
உ.வே.சாமிநாதையரின் அர்ப்பண மனோபாவம்
எப்படி மொழிப்புலமை பெறுவது என்பதை வெப்ஸ்டரின் வாழ்க்கையைப் படித்து அறிந்து கொள்ளலாம். தமிழ் மொழி கற்பதையே தன் வாழ்நாளின் ஒரே பணியாகக் கொண்ட தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் ஒரே ஒரு வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்காக எப்படி ஊர் ஊராக வண்டி கட்டிக் கொண்டு அலைந்தார் என்பதை அவரது நூல்கள் வாயிலாக அறியலாம். அவரது ‘என் சரித்திரம்’ என்ற நூலை இணையத்தளத்தில் இலவசமாகப் படிக்க முடியும். அவரது ‘நினைவு மஞ்சரி’ (நூல் எண் 432), ‘நல்லுரைக்கோவை – இரு பாகங்கள்’ (நூல் எண் 433, 441) போன்ற நூல்களை www.projectmadurai.org என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் எனப் பயிற்சியின் அருமையை விளக்கும் பழமொழி கூட ஒரு தமிழ்ப் பழமொழிதான்.
அறிவுத் திறமையும் மொழிப்புலமையும் கூடும்போது வெற்றிதானே வரும்!
–வெல்வோம்…