வெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 9)

எட்வர்ட் டீ போனோவின் அறிவுரை: மாற்றி யோசியுங்கள்!

சிந்திப்பது பற்றிய சிறப்பான கவிதை

சிந்திப்பதும் சிரிப்பதும் மனிதனுக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்புகள். சிந்தனையைச் சரியான முறையில் கொண்டிருப்பவனே வெற்றியை அடைவான்.

வால்டர் டி விண்டில் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய அழகிய ஒரு கவிதை வெற்றி பெற விழையும் அனைவராலும் நினைவில் இருத்தப்பட வேண்டிய ஒன்று.

If you think you are beaten, you are
If you think you dare not, you don’t,
If you like to win, but you think you can’t
It is almost certain you won’t.

If you think you’ll lose, you’re lost
For out of the world we find,
Success begins with a fellow’s will
It’s all in the state of mind.

If you think you are outclassed, you are
You’ve got to think high to rise,
You’ve got to be sure of yourself before
You can ever win a prize.

Life’s battles don’t always go
To the stronger or faster man,
But soon or late the man who wins
Is the man WHO THINKS HE CAN!

வாழ்க்கை என்னும் போரில் வலிமையானவனோ அல்லது வேகமாகச் செயலாற்றுபவனோ வெற்றி பெறுவான் என்பதற்கு உறுதியில்லை. யார் ஒருவன் தன்னால் சாதிக்க முடியும் என்று நன்கு சிந்திக்கிறானோ அவன் இப்பொழுதோ அல்லது சற்றுக் கழித்தோ வெற்றியை அடைவது உறுதி!

சிந்தனையையும் செக்கு மாடு போல வழக்கமாகப் போகும் போக்கில் ஓட்டக்கூடாது. நிலைமைக்கேற்பச் சற்று "மாற்றி யோசிக்கவும்" வேண்டும்!.

மாற்றி யோசி!

எட்வர்ட் டீ போனோ என்ற சிந்தனையாளர் 1967ஆம் ஆண்டில் Lateral Thinking என்ற ஒரு புது யுத்தியை அறிமுகம் செய்தார். ஆனால், அந்தப் பெயரில் இன்று உலா வரும் எண்ணற்ற கட்டுரைகளைக் கண்டு மனம் நொந்து அவரே, "எனது சிந்தனாமுறையை மாற்றியும் தவறாகவும் தருவதைப் பார்க்கிறேன்" என்று வருந்தி தனது முறையைப் பற்றித் தானே சுருக்கமாக இப்படிச் சொல்கிறார்:-

1)நீங்கள் ஒரு திசையிலேயே செல்வது வெற்றியைத் தர வேண்டும் என்பதில்லை. அதாவது, ஒரு பார்வையுடன் ஒரே மாதிரியாகக் கடினமாக உழைப்பதால் வெற்றி காண முடியும் என்பது நிச்சயமில்லை.

2)வாழ்க்கையில் சில சூழ்நிலைகளில் சில காய்கள் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. சில எல்லைக்கோடுகளுடன் சில நிபந்தனைகளுடன் சில கொள்கைகளுடன் இந்தக் காய்கள் நகர்த்தப்பட வேண்டும் என்றே அனைவரும் போதிக்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில், இருக்கும் காய்களை நகர்த்துவது அல்ல லேடரல் திங்கிங்; காய்களையே மாற்ற முடியுமா என்று பார்ப்பதே இந்தப் புதிய சிந்தனாமுறை! பார்வை முறையை மாற்ற முடியுமா என்று பார்ப்பதே இந்தப் புதிய முறையின் உத்தி!

3)மனித மூளை சமச்சீரற்ற பாட்டர்ன்களில் தனது தகவல்களை உருவாக்கிக் கொள்கிறது. அந்த அமைப்புகளில் ஒரு சீரான, கணித முறையிலான பாதையை உருவாக்கிக் கொள்வது அவசியம். அந்த மாற்று முறையே லேடரல் திங்கிங்!

இப்படித் தனது புதிய சிந்தனா முறையை விளக்கும் எட்வர்ட் டீ போனோ வெற்றி பெற விரும்பும் அனைவரையும் "மாற்றி யோசியுங்கள்" என்று அறிவுரை பகர்கிறார்.

பிள்ளையாரின் வெற்றி

இந்த மாற்றுச் சிந்தனாமுறைக்கு வித்திட்டவரே – அதாவது, பிள்ளையார் சுழி போட்டவரே நமது பிள்ளையார்தான்!
மாங்கனி தனக்குத்தான் வேண்டும் என்று முருகனும் பிள்ளையாரும் கேட்க, பார்வதியும் பரமசிவனும் "உலகங்கள் அனைத்தையும் முதலில் சுற்றி வருபவருக்கே இந்த மாங்கனி" என்றனர். உடனே மயில் மீது ஏறிப் பறக்க ஆரம்பித்தார் ஆறுமுகனார். ஆனால் மாற்றி யோசித்த விநாயகரோ, தந்தையையும் தாயையும் சுற்றி வந்து வணங்கி நின்றார்.

"எனக்கு நீங்களே உலகம்" என்ற அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது! உலகம் அனைத்தையும் சுற்றி வந்த முருகன், விநாயகர் கையில் மாங்கனி சென்ற மர்மத்தைக் கண்டு வியந்தார். கோபம் கொண்ட அவர் பழநி மலைக்குச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மாற்றி யோசிக்கப் பிள்ளையார் தரிசனம் நிச்சயம் உதவும், இல்லையா!

சில புதிர்களும் விடைகளும்

மாற்றி யோசிப்பது என்றால் என்ன? சில புதிர்களை விடுவித்தால் புரியும்!

1)ஒரு கூடையில் ஆறு ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. ஆறு பேர்கள் அவற்றில் ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டனர். கூடையில் ஒரு பழம் எப்படி இன்னும் இருக்க முடிகிறது?

2)உணவு விடுதியில் உணவை அளிக்கும் கவுண்டருக்கு வந்த ஒருவன் "தண்ணீர் கொடுங்கள்" என்கிறான். உணவு விடுதிக்காரன் ஒரு துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி நீட்டுகிறான். "நன்றி" என்று புன்முறுவலுடன் வந்தவன் திரும்பிச் செல்கிறான். என்ன நடந்தது அங்கே?

3)ஒரு பெண்மணிக்கு இரண்டு குழந்தைகள் ஒரே வருடத்தில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்தன. ஆனால், அவர்கள் இரட்டையர் அல்ல. இது எப்படி?

மாதிரிக்காகத் தரப்பட்ட புதிர்கள் இவை. மாற்றி யோசிப்பதன் மூலம் இது போன்ற ஆயிரக்கணக்கான புதிர்களை விடுவிக்க முடியும். மாற்றி யோசித்துப் பார்த்து விடைகளைக் காண முயலுங்கள்.

முடியவில்லையா? இதோ விடை:-

1)கடைசியில் பழத்தை எடுத்தவர் கூடையுடன் எடுத்துக் கொண்டார்.

2)தண்ணீர் கேட்டவர் பலமாக, கக்குவான் இருமலைப் போலத் தொடர்ந்து இருமிக் கொண்டே வந்தார். அவருக்குத் திடீரென ஷாக் கொடுக்கத் துப்பாக்கியை எடுத்துக் காண்பித்தார் உணவு விடுதிக்காரர், இருமல் நின்றது. நன்றி சொல்லிக் கிளம்பினார் வந்தவர்.

3)அந்தப் பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அந்த மூன்றில் இரண்டு குழந்தைகளே அவை!
இப்படி மாற்றி யோசித்துப் பார்த்தால் ஒரு பிரச்சினைக்கு வித விதமான கோணங்களில் தீர்வைக் காண முடியும். சரியான சிறந்த தீர்வைக் காண்பது இந்த முறையில் மிகவும் சுலபம்.

வெற்றிகரமான வாழ்க்கையை விரும்பும் ஒருவர் மாற்றி யோசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது!

–வெல்வோம்…

About The Author