வெற்றிக்கலை -இரண்டாம் பாகம் ( 8)

விவேகானந்தரின் அருள் வாசகம்

THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS;
THE REST ARE MORE DEAD THAN ALIVE

என்று அருளுரை பகர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.

‘பிறருக்காக உயிர் வாழ்பவரே வாழ்பவர். ஏனையோர் இருந்தும் இறந்தவரே’ என்ற இதே கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வான் புகழ் வள்ளுவன் தன் அழகிய குறள் பாவில் வடித்து வைத்தான் இப்படி:

ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும். – குறள் 214

பிறருக்காகவே வாழ்பவரை உலகம் தலைமேல் வைத்துப் போற்றும். அப்படிப்பட்ட நல்லவர்கள் காலம்தோறும் பிறந்து கொண்டே இருப்பர்.

பாரதீய வித்யாபவனின் தோற்றம்

பாரதீய வித்யாபவனின் தோற்றம் இப்படிப்பட்ட ஒரு நல்லவரால்தான் சாத்தியமானது. ஒருநாள் தன் கேஸ் கட்டுகளில் மூழ்கி இருந்த கே.எம்.முன்ஷி அங்கே நாற்காலியில் வந்து அமர்ந்தவரைப் பார்த்தார். எளிய தோற்றம். சற்றுக் கசங்கிய உடைகள். அவ்வளவாக யாரையும் கவர்வது போல இல்லை அவரது தோற்றம். முன்ஷி தன் கட்சிக்காரர்களுடன் பேச வேண்டியதை எல்லாம் பேசி விட்டார். அவர்களும் சென்று விட்டனர். ஆனாலும் ‘அந்த ஆசாமி’ நகரவில்லை. இடித்த புளி போல அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.

முன்ஷி அவரை அழைத்தார். "என்ன விஷயம்?" என்று கேட்டார். மிகவும் மிருதுவாக மெல்லிய குரலில் "பசுக்கள் காப்பாற்றப்பட வேண்டும்; சம்ஸ்கிருதம் அழியாமல் வளர வேண்டும்" என்றார் வந்தவர்.

முன்ஷிஜிக்குச் சற்றுக் கோபம் வந்தது. எவ்வளவு பிஸியான காலை வேளை! இதுவா பசுவையும் சம்ஸ்கிருதத்தையும் பற்றிப் பேச சமயம்? ஆனாலும் அந்தப் பெரியவரை மறுத்துப் பேசாமல், "ஆமாம் ஆமாம். அதுவே என் கொள்கையும். சரி, எனக்கு வேலை இருக்கிறது. சென்று வருகிறேன்" என்று கூறி எழுந்தார் அவர்.

"ஒரு நிமிடம்" என்று கூறிய அந்தப் பெரியவர், "வெறும் பேச்சோடு நிற்க எனக்கு விருப்பமில்லை. என்னால் ஆனதைத் தர ஆசை" என்றார்.

இளம் புன்முறுவல் முகத்தில் இழையோட, "என்ன தரப் போகிறீர்கள்?" என்றார் முன்ஷிஜி.

"பசுவுக்கு ஆறும் சம்ஸ்கிருதத்திற்கு இரண்டும் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் அவர்.

முன்ஷிஜி சிரித்தே விட்டார். ஆறு ரூபாயும் இரண்டு ரூபாயும் தர இவ்வளவு நேரம் வேஸ்ட் செய்து, ஒரு லெக்சரும் தந்து…
"உங்களால்தான் இதைச் செய்ய முடியும். நீங்கள்தான் பசுவையும் சம்ஸ்கிருதத்தையும் காக்க வேண்டும்!"

அவரின் இதமான பேச்சைக் கேட்ட முன்ஷிஜி, "சரி! கொடுங்கள். வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.

பெரியவர் இரண்டு செக்குகளை எடுத்துத் தந்தார்.

அதை வாங்கிப் பார்த்தார் முன்ஷிஜி. ஆறு லட்சம் ரூபாய்க்கு ஒரு செக்; இரண்டு லட்சம் ரூபாய்க்கு இன்னொரு செக். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளில் அது எவ்வளவு பிரம்மாண்டமான தொகை!

மலைத்துத் திகைத்துப் பிரமித்தார் முன்ஷிஜி.

அவர் பெயர் மூங்காலால் கோயங்கா.

அவரின் நன்கொடையால் மலர்ந்தது பாரதீய வித்யா பவன். இன்று அவர் பெயரால் பாரதீய வித்யா பவனின் பல உயரிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகின்றன.

ராமகிருஷ்ண மிஷன்

மாமனிதர்கள் வெளி வேஷம் போடுவதில்லை; வெறும் பேச்சுப் பேசுவதில்லை.

சுவாமி விவேகானந்தர், ‘பாரதத்தின் இன்றைய நிலையில் மிக முக்கியமானது ஏழைகளின் துயர் போக்குவதே’ என்று நினைத்தார். அடித்தளத்தில் உள்ளோரின் துயர்களைத் துடைக்க வேண்டும் என்று எண்ணிய அவர், ஒரு பெரும் சேவை ஸ்தாபனமாக ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்தார். இன்றளவும் அது செய்து வரும் நல்ல தொண்டுகளை அனைவரும் அறிவர்.
ஆத்மனோ மோக்ஷார்த்தாய; ஜகத் ஹிதாய ச என்று ராமகிருஷ்ண மிஷனின் குறிக்கோளை அவர் பொறிக்கச் செய்தார்.
ஆத்மா மோக்ஷம் அடையட்டும்; பூவுலகு இதத்தை அடையட்டும்!

பாரத மக்களுக்கு அவர் தந்த உயரிய லட்சியம் இதுவே!

திருமூலர் காட்டும் வழி

என்னவெல்லாம் செய்யலாம் என்பதைத் திருமூலர் மிக எளிமையாகச் சுட்டிக் காட்டுகிறார்:

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன் மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே!

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே!

நாம் சாப்பிடுவதில் ஒரு கவளம் என்ற அளவில் தந்தால் கூடப் போதும். ஒன்றும் இல்லாவிடில் இன்னுரையாவது அருளுங்கள் என்பது அவர் காட்டும் வழி!

லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து என்ற லட்சியத்தை வேதம் முன் வைக்கிறது. அனைத்து உலகமும் சுகத்துடன் விளங்க ஆனதைச் செய்ய வேண்டும் என்பதே அற நூல்களின் முடிந்த முடிவுரை.

நம்மை வளர்க்கும் சமுதாயத்திற்கு நாம் செய்ய வேண்டிய சிறிய பணி பிரதிபலன் பாராத உதவியே. இது மனப்பக்குவம் சிறக்கச் சிறந்த வழி! அப்படிப்பட்ட உயரிய ஒரு லட்சியம் கொண்ட மனத்தைக் கொண்ட ஒருவனால் எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியும்.

ஆகவே, வெற்றி பெற விழையும் அனைவரும் சமுதாயத் தொண்டில் ஈடுபட்டால் தனது வெற்றியுடன் கூட ஒரு வெற்றிகரமான சமுதாயத்தையே உருவாக்க முடியும்!

–வெல்வோம்…

About The Author